1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.
இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.
இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.
(தொடரும்)
அன்புடன்