Originally Posted by
RAGHAVENDRA
உள்ள(த்)தை அள்ளித்தா
டி.வி. ராஜு ... அந்நாளைய பிரபலமான இசையமைப்பாளர். தெலுங்கில் இவருடைய படங்கள் பல நல்ல வெற்றி பெற்றுள்ளன, அதில் இவருடைய இசைக்கும் பங்குண்டு. நம்முடைய வேதா அவர்களைப் போல் வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்களையும் அவ்வப்போது எடுத்து தன்னுடைய திறமையால் நன்றாகக் கொண்டு வருவார். தமிழில் கனிமுத்துப் பாப்பா, ராணி யார் குழந்தை போன்ற படங்கள் இவரை நமக்கு அடையாளம் காட்டும்.
இவருடைய இசையமைப்பின் சிறப்பு மெலோடி. இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் போதே நமக்குள் நம்மையும் அறியாமல் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு அந்தப் பாடலுக்குள்ளே நம்மை அழைத்துச் சென்று விடும். சாதாரணமாகத் துவங்கும் மெட்டில் அமைந்தாலும் போகப் போக நம்மை ஆகர்ஷிக்கும் சக்தி இவருடைய இசையில் வந்த பாடல்களுக்கு உண்டு.
அப்படி ஒரு பாடலை இன்று தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தஞ்சை ராமய்யா தாஸ் இயற்றி பி.லீலா பாடிய கண்ணான கண்மணியே என்ற இந்தப் பாடல் நல்ல தரத்தில் கேட்டால் தான் அதனுடைய சிறப்பை நம்மால் உணர முடியும். அதற்கேற்ப சி டி தரத்தில் இப்பாடல் இங்கு வழங்கப் படுகிறது. பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜ சேவை 1959
கேட்கக் கேட்கத் தங்களையும் அறியாமல் தாங்கள் இப்பாடலுக்குள் புகுந்து விடுவீர்கள் என்பது திண்ணம்.
பாடல் முடியும் போது அந்த கோரஸ் குரல் நம்மை மயக்கி விடும். சிந்து நதியின் மிசை பாடல் ஞாபகத்துக்கு வரும்