காதல் &
மக்கள் கலைஞரின் மிகவும் அபூர்வமான படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீ ஸ்ரீ ஃபிலிம்ஸின் காதல் பறவை. கிட்டத்தட்ட குமரிப் பெண் படத்தில் ரவிச்சந்திரன் வரும் கிராமத்தான் கெட்டப்பில் ஜெய்சங்கர் வருவார். ஜெய்சங்கருக்காக நிச்சயிக்கப் பட்ட பெண்ணாக பாரதி (மறைந்த விஷ்ணுவர்த்தன் அவர்களின் மனைவி) நடித்திருந்தார். நாகரீகத்தின் உச்சியில் திளைக்க விரும்பும் பாரதி, ஜெய்சங்கரை வெறுப்பார். அவருடைய நாகரீக மோகமே அவருடைய பெண்மைக்கு சவாலாக மாறி அதனின்று அவரால் எப்படி மீள முடிகிறது என்பதே கதை. ஆர் எஸ் மனோகர், மேஜர் சுந்தர்ராஜன் - இப்படத்திலும் அவர் மேஜராக வருவார் என்று நினைவு, மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன், ரேணுகா, பாரதி, சுந்தரிபாய், மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.எல்.நாராயணன் வசனம், வேதா இசை, இயக்கம் ஏ.வி.எஸ்.ராவ்.
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில், அந்தக் காலத்தில் ஹிட்டான பாடல் வேத கால பிராணியைப் பாரு என்பதாகும். பி.சுசீலாவின் குரலில், படத்தில் ஜெய்யைக் கிண்டல் செய்து பாரதி பாடுவதாகவும், மற்றொரு முறை ஜெய்சங்கர் பாடுவதாகவும், குரல் டி.எம்.ஏஸ். இடம் பெற்றிருக்கும். மற்றொரு இனிமையான பாடல் பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா, கொட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா, என்ற பாடல் டி.எம்.எஸ்.சின் குரலில் அருமையாக இருக்கும். அது மட்டுமன்றி எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ஜிக்கியின் குரலில் ஓஹோ இளைஞனே பார் பார் எனத் துவங்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது. இவையாவற்றுயும் விட காதல் பறவைகளே கானம் பாடுங்கள் என்ற மென்மையான மெட்டில் அமைந்த பாடலே அனைவரையும் முதலிலேயே ஈர்த்து விடும்.
சராசரியான ஒட்டம். இனிமையான பாடல்கள்.
காதல் பறவை ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம்.
ராகவேந்திரன்