Originally Posted by Murali Srinivas
அந்த நாள் ஞாபகம்
இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்