-
மலைக் கள்ளன் (1954) ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'.
l
-
நாடோடி மன்னன் (1958) எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'.
-
திருடாதே (1961) ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'.
-
தாய் சொல்லைத் தட்டாதே (1961) ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது.
-
எங்க வீட்டுப் பிள்ளை (1965) எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது.
l
-
ஆயிரத்தில் ஒருவன் (1965) எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். . எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
l
-
காவல்காரன் (1967) ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது.
-
குடியிருந்த கோயில் (1968) ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது.
-
ஒளிவிளக்கு (1968) எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'.
-
அடிமைப் பெண் (1969) எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள்.