இளம் கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்த வசந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்குத் தங்கையாக நடித்தார்.
இதுபற்றி வசந்தா கூறியதாவது:-
'நான் தங்கை வேடத்தில் நடித்தாலும், நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் இரவு -பகலாக மூன்று ஷிப்டில் விடிய விடிய நடித்திருக்கிறேன்.
'எங்க ஊர் ராஜா' படத்தில், சிவாஜியுடன் நடித்தேன். அப்போது ஒரு நாள் வேறொரு படத்தில் அதிகாலை 4 மணி வரை நடிக்க வேண்டியிருந்தது. அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், வீட்டுக்குச் சென்று, ஓய்வு கூட எடுக்காமல், 6.25 மணிக்கு அவசரம் அவசரமாக 'எங்க ஊர் ராஜா' படப்பிடிப்புக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்த சிவாஜி, 'ஏம்மா! கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே' என்று அன்புடன் கூறினார். சக கலைஞர்கள் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர் அவர்.
சேவா ஸ்டேஜில் நான் நடித்த `பாஞ்சாலி சபதம்' நாடகத்தை பார்க்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார். இந்த நாடகத்தில் நான் பாஞ்சாலி. நடிகர் முத்துராமன் துரியோதனனாக நடித்தார்.
நாடகம் முடிந்ததும், 'உன் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்' என்று என்னை தேடிவந்து பாராட்டி விட்டுப்போனார், எம்.ஜி.ஆர். அதுதான் அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு.
'கணவன்' என்ற படத்தில் நான் அவருக்குத் தங்கையாக நடித்தேன். இந்தப் படத்துக்கான முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஒரு பிரச்சினை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. மேக்கப் போட்டுக்கொண்டு நான் சத்யா ஸ்டூடியோவுக்கு போனபோது, சீனியர் நடிகை ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் 'வாம்மா! படத்தில் நீயும் இருக்கிறாயா? உனக்கு என்ன வேஷம்?' என்று கேட்டார்.
'படத்தில் எனக்கு தங்கை வேடம்' என்றேன்.
பதிலுக்கு அவரும், 'எனக்கும் தங்கை வேடம்தான்' என்றார்.
கதைப்படி ஒரு தங்கை கேரக்டர்தான். தங்கை வேடத்தை எனக்கு அளித்தவர் எம்.ஜி.ஆர். இது தெரியாமல், அதே வேடத்துக்கு அந்த சீனியர் நடிகையை படத் தயாரிப்பாளர் வரச்சொல்லிவிட்டார்.
ஒரு வேடத்துக்கு 2 நடிகைகள் வந்திருக்கும் விஷயம் எம்.ஜி.ஆர். காதுக்கு எட்டியது. இரண்டு பேரில் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, டைரக்டரும், கதாசிரியருமான சொர்ணத்தை அழைத்து, நானும், அந்த சீனியர் நடிகையும் இடம் பெறுகிற மாதிரி கதையில் சிறு மாறுதல் செய்யச் சொன்னார். அதன்படி கதையில் மாற்றம் செய்யப்பட்டு, அன்று நடந்த படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் நடித்தோம்.'
இவ்வாறு வசந்தா கூறினார்.
1981-ல் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதைப் பெற்றவர் வசந்தா. அப்போது முதல்- அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.
இந்த விருது வாங்கியபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சி பற்றி வசந்தா கூறியதாவது:-
'1981-ல் ஒருநாள் தயாரிப்பாளர் கோவிந்தராஜுலு நாயுடு என்னை சந்தித்தார். 'உனக்கு கலைமாமணி விருது தர முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்திருக்கிறார்' என்றார்.
அப்போது அண்ணன் எம்.ஜி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் கோவிந்தராஜுலு நாயுடுவிடம், 'கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா?' என்று கேட்டேன்.
'சிகிச்சைக்கான நாட்கள் அதிகரித்தால், நிகழ்ச்சி நாளன்று அவர் வராமல் கூடபோக நேரலாம்' என்றார், கோவிந்தராஜுலு.
'அண்ணன் வருவார் என்றால், என் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், விட்டு விடுங்கள். அவர் வராமல் நடக்கிற விழாவில், விருது வாங்க நான் தயாரில்லை' என்று கூறிவிட்டேன்.
ஆனால், விழா நடந்த நாளில் கலைவாணர் அரங்கத்துக்கு வந்துவிட்டார், எம்.ஜி.ஆர்! விழாவில் அவரை பார்த்ததும் வணங்கினேன்.
அவர் என்னை அழைத்தார். போனேன்.
என் காதோரமாய், 'நான் வந்தால்தான் விழாவுக்கு வருவேன் என்று சொன்னாயாமே?' என்று கேட்டார்.
நான் புன்சிரிப்புடன், 'ஆமாம்' என்றேன்.
'இப்போது நான் வந்துவிட்டேன். சந்தோஷமாக விருது வாங்கிக்கொள்வாய் அல்லவா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன்.
'நான் இப்போது அரசாங்கத்தில் இருக்கிறேன். நான் நடிக்க முடியாது. நீ தொடர்ந்து நடிக்க வேண்டும்' என்றார்.
பிறகு ஒரு அதிசயம் நடந்தது. விழா முடிவதற்குள் சத்யா மூவிஸ் படத்தில் நடிக்க அண்ணன் ஆர்.எம்.வீ. என்னை ஒப்பந்தம் செய்தார். அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். அண்ணன் எம்.ஜி.ஆர்.தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். மனம் நெகிழ்ந்தேன்.
ஒரு முறை நான் காரை ஓட்டிக்கொண்டு போனேன். மிக அதிக வேகம் அல்ல என்றாலும், ஓரளவு வேகம்தான்.வேறு காரில் போய்க்கொண்டிருந்த அண்ணன் எம்.ஜி.ஆர், இதை கவனித்திருக்கிறார்.
வீடு திரும்பியதும் ஒரு போன் வந்தது. உடனே காரை எடுத்துக்கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்கு வந்து எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்றும், ஆனால் காரை நான் ஓட்டாமல் டிரைவர்தான் ஓட்டிவர வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதன்படி போனேன். அப்போது மணி மாலை ஆறரை. என்னைப் பார்த்த அண்ணன் எம்.ஜி.ஆர், 'இதோ பாரும்மா! உன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் சொந்தப் பணம் போட்டு படம் எடுக்கவில்லை. சிலர் கடன் வாங்கியும் படம் எடுப்பார்கள். நீ பாட்டுக்கு இவ்வளவு வேகமாக காரை ஓட்டி, உனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், உன்னைவிட அதிகமாக பாதிக்கப்படப்போவது அவர்கள்தான். அதனால், இனிமேல் நீ கார் ஓட்டுவதாக இருந்தால், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது' என்றார்.
சினிமா நன்றாக இருக்க வேண்டும், சினிமா கலைஞர்கள் நன்றாக இருக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அக்கறையை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.'