Originally Posted by
Yukesh Babu
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, "இதுதான் பதில்'' என்றொரு படத்தை அவரே தயாரித்து இயக்குவதாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்கச் சென்றேன்.
"படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை அமைக்கிறார். நாளை மறுநாள் பாட்டு எழுதவேண்டும். சத்யா ஸ்டூடியோவுக்கு காலை 8 மணிக்கு வந்து விடுங்கள்'' என்றார். அதன்படி நான் சென்றேன்.
எம்.எஸ்.வி. அவர்கள் போட்ட டிïனுக்கு நான் பல்லவி எழுதினேன்.
"வண்ணப் பூஞ்சோலை; வாழ்க்கை பொன் மேடை. வளமோடு நீ வாழலாம்'' என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டு.
சரணத்திற்கான டியூனை மட்டும் வாசித்துக் காட்டுங்கள், என்றார், எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். "இந்தப் பாடல் நாளைக்கு ரிக்கார்டிங் ஆகவேண்டும். அதனால் இன்று இரவு 10 மணிக்கே எனக்குப் பாடலை எழுதிக்காட்டு என்றார், எம்.ஜி.ஆர்.
இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ'', "விக்கிரமாதித்தன்'' முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்தாஸ் என் வீட்டிற்கு வந்து எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சரணங்களைப் படித்துக் காட்டினேன். நான் எழுதியது சரியில்லை என்று சொல்லி அவரே சில கருத்துக்களைக் கூறினார். அதற்கேற்ப சரணங்களை எழுதி அவரிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றபோது இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.
மறுநாள் பாடல் ஒலிப்பதிவின்போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்து ஒலிப்பதிவு முடியும் வரை இருந்து பாடலை மிகவும் பாராட்டினார்.
எம்.ஜி.ஆர். சென்ற பிறகு டைரக்டர் நீலகண்டனிடம், "இந்தப் பாடலை பதிவு செய்தது வீண் வேலை'' என்றேன். `என்னய்யா இப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டார், நீலகண்டன்.
"ஆம். தேர்தல் அறிவிப்பு நாளையோ நாளை மறுநாளோ வரப்போகிறது. தேர்தலில் ஜெயித்து மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அதனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. அதனால் பாடலுக்காக செய்யும் செலவும் வீண்'' என்றேன்.
அதை எம்.ஜி.ஆரிடம் அப்போதே போய் அவர் சொல்லிவிட்டார்.
"முத்துலிங்கம் அப்படியா சொன்னார்? தேர்தல் வரும்போது வரட்டும். இப்போது வேலையைப் பார்ப்போம். நாளை சந்திப்போம்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆனால், அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது!
படம் தயாரிப்பதை ஒத்திவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் சொன்னதைப் போலவே, அமோகமான வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் கம்பீரத்துடன் அமர்ந்தார். "இதுதான் பதில்.'' படம் கைவிடப்பட்டது.
அதற்குப் பிறகுதான், எனக்கு "கலைமாமணி விருது'', "பாரதி தாசன் விருது'' ஆகிய விருதுகளை வழங்கினார்.
அதற்குப் பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அதற்கடுத்து அரசவைக் கவிஞராகவும் என்னைப் பதவியில் அமர்த்தினார்.''
இவ்வாறு கூறினார், கவிஞர் முத்துலிங்கம்.