-
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
courtesy.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்
GOLDEN LINES.
-
-
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஜியாவுத்தீன்.
எம்ஜிஆர்:
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!
ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
திரைப்படங்களில் கதாநாயகிகளைக் காப்பாற்றிப் பழக்கப்பட்ட இவரது கரங்கள், நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக் கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக விளங்கிய இவரின் அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்குள் போவதற்கு முன் …
பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!
இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள்தான் பண்டிகை நாட்களாகக் கருதப்பட்டன.
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.
அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!
திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.
மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.
எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.
எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் [கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
[color="#008000"]புரட்சித் தலைவர்:[/color]
தன் திரைப்படங்களை தான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்குப் பயன்தரும் வகையில் அந்தந்தக் காலகட்டங்களில் அமைத்துக் கொண்டார். அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் மேடைகளுக்கு கலைஞர் கருணாநிதியையும் திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் துப்பாக்கியின் இரு குழல்களாக்கி கட்சியை வளர்த்தார், கொள்கைகளைப் பரப்பி வந்தார். அண்ணாவின் தொண்டனாகத் தொடங்கிய அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியுயர்வு பெற்றார். 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்க, எம்ஜிஆர் கட்சியின் பொருளாளர் பொறுப்பேற்றார். சிறிது காலத்திலேயே கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலக்கப்பட்டு தனிக்கட்சி கண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தப் பெயரும் மாறிவிடக் கூடாது, கருணாநிதியும் தன் கட்சிப் பெயரை தவறாக விமர்சிக்கக் கூடாது என்று யோசித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவுபூர்வமாகத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டினார். அவரது செல்வாக்கால் தனிக்கட்சி துவங்கி ஒரு ஆண்டுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகத் தன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை வெல்ல வைத்தார். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆளும் கட்சிக்கு எதிராக இவரது கட்சியை கோயம்புத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்தனர். கட்சி துவங்கி 5வது ஆண்டிலேயே தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சரானார். நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு நாடாள வந்து ஒரு புதிய புரட்சியைத் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்தே நடிகராக இருந்த பலரும் அரசியலில் ஈடுபட தைரியம் பெற்றனர். இரு துறைகளிலும் தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற பேராசை, கர்வம், ஆணவமின்றி, அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய நிலை வந்ததும் தானாகவே திரையுலகை விட்டு விலகி, இளைய தலைமுறைக்கும் புதுமைக்கும் வழிவிட்டு ஒதுங்கினார்.
நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.
அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.
மக்கள் திலகம்:
எம்ஜிஆரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு யாரும் உணவருந்தாமல் திரும்பமுடியாது. தாய்மைப் பண்புக்குதாரணமாய், வயிற்றுப் பசிக்கு உணவிட்டு அனுப்புவது அவரது தலையாய பண்பு. அதேபோல், ஏழைகள் யாரும் உதவி என்று அவரது வீட்டுப் படியேறினால் வெறும் கையுடன் திரும்புவதும் நடக்காத ஒன்று. கேட்டு செய்த உதவிகள் ஒருபுறம், வெளியுலகுக்குத் தெரியாமல் கேளாமலே செய்த உதவிகள் எண்ணிலடங்கா.
எம்ஜிஆரை நாடி, அவரது ஆதரவை நாடி, அவரது புகழெனும் ஆலமரத்தினடியில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் வந்தனர். ஆனால் யாரிடமும் கையேந்தி நிற்க ஆண்டவன் அவரைத் தாழ்த்தியதுமில்லை, அந்நிலைக்கு அவரைத் தள்ளியதுமில்லை. தன் இறுதி மூச்சுவரை வாரி வாரி வழங்கினாரே தவிர, தனக்கு வேண்டும் என்று வாரி வைத்துக் கொண்டதில்லை. ஏழைக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, ஏழையின் சாபத்திற்கு என்றும் ஆளானதில்லை. தமிழ் மக்கள்மீது பாசத்தைப் பொழிந்தாரேயன்றி, அரசியல் வேசத்தைக் காட்டி ஏமாற்றியதில்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை, வள்ளல் என்றே பெயர் பெற்றார். யார் குடியையும் கெடுத்ததில்லை, பலரின் குடி உயர காரணமாய் இருந்திருக்கிறார். தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழருக்கே துரோகமிழைக்கும் பலருக்கு நடுவில், மலையாளி என்றாலும் தன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த தமிழ் மக்களுக்கு உண்மையானவராக இருந்தார். தமிழரெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த நாகரிகத்திற்கு மாற்றாக, தமிழில் கையெழுத்திட்டு தன்னை வளர்த்த மண்ணுக்கு மாண்பைக் கூட்டினார், நன்றியைக் காட்டினார்! பொழுதுபோக்காக மட்டுமே இருந்த திரைப்படம் என்னும் சாதாரண ஊடகத்தை, கருத்துக்களை விதைக்கவும், கொள்கைகளை முழங்கவும், தத்துவங்களை உரைக்கவும் விழிப்புணர்வை வெளிப்படுத்தவும் கூடிய பலமான ஆயுதமாக மாற்றிக் காட்டினார். மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால் போதும், உலகையே வெல்லலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டினார்.
பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு போக மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.
1950களில் தொடங்கி 1977 வரை தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாய் வலம் வந்த மக்கள் திலகம், அதன்பின் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக மாறி, தமிழ் மக்களின் இதயங்களில் முதல்வராய் வலம் வந்தார். உடற்பயிற்சி, தங்க பஸ்பம், ஆரோக்கியம் என்று அனைவருக்கும் போதித்த அந்தத் தேக்குமர தேகத்தை, பொன்னொத்த பளிங்கு மேனியை, வெற்றிகளால் வேயப்பட்டிருந்த அந்த நிழல்தரும் குடிலை, கதாநாயகிகள் ஊஞ்சலாடிய அந்தக் கட்டுடலை, நோய் என்னும் சாத்தான் ஏதோ ஒரு துரதிர்ஷ்ட சமயத்தில் ஏமாற்றி உள்நுழைந்து, உருக்குலைக்கத் துவங்கினான். அந்தச் செய்தி கேட்டு, அகில உலகமும் அதிர்ச்சியடைந்தது, அல்லாடித்தான் போனது, ஆறுதல் கொள்ள வழியின்றி கதறித் துடித்தது. அவரது அருமையும் தேவையும் தெரிந்த அன்னை இந்திராகாந்தி, தனி விமானம் தந்து உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.
சிகிச்சை முடிந்து திரும்பியவரை வரவேற்க தமிழகமே விமான நிலையத்தில் திரண்டது. தன் வலிமை குறைந்து விடவில்லை என்பதை அதன்பின் பல நிகழ்ச்சிகளில் அவர் நிரூபித்திருக்கிறார். ஆனாலும் விதி வலியது என்னும் சொல்லுக்கேற்ப காலன் அவர்மீது காதல் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து போய்விட்டான்.
அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்த சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அவர் குணம்பெறவேண்டி, காட்சி தவறாமல் ஒளிபரப்பப்பட்ட ‘ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’ மற்றும் ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற’ ஆகிய பாடல்கள் திரையில் இடம்பெற்ற போது அவருக்காக கண்ணீர் சிந்திய மனங்களில் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தமிழ் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.
மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.
வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!
Courtesy - vallamai
-
-
-
-
-
-
-
makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.
படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்
புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.
பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.
எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.
குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.
சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.
நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.
எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.
வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.
“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”
படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !