Originally Posted by
PG2010
உத்தம வில்லன் விமர்சனம்
படித்ததில் பிடித்தது.
உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.
அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத் தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன் சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.
தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம். அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.
அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.
தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.
கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.
மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.
இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.
ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.
கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப் பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.
பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.
கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.
மனோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !
எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.
கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும் துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.