Originally Posted by
Murali Srinivas
என்றுமே மனம் வீசும் பாரிஜாத பாசமலர் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை வெகு கோலாகலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சத்யம் வளாகம் காலையிலே களைகட்ட தொடங்கி விட்டது. சாதரணமாக இது போன்ற விழாக்கள் சத்யம் வளாகத்தில் நடைபெறும்போது விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே அரங்கத்தினுள்ளில் ஆட்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் இன்று காலை 9 மணிக்கு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலையில் 8 மணி முதலே வந்து குவிந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 8.30 மணிக்கு முன்பே மக்களை அனுமதித்து விட்டனர். விழா தொடங்கும் முன்னரே அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்டன. மேலும் சாரி சாரியாக உள்ளே ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட அரங்கின் பல்வேறு பாகங்களில் சுமார் 200-250 பேர் விழா நடைபெற்ற நேரம் முழுக்க நின்று கொண்டே விழா நிகழ்சிகளை கண்டு களித்தனர். அதில் கணிசமான அளவு பெண்களும் இருந்தனர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
விழா மேடையை அல்லது மைக்கை அதிக நேரம் [தொகுத்து வழங்கிய ஒய் ஜி எம்மை விட] பிடித்துக் கொண்டது வழக்கம் போல் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசினார். பேச முடியாமல் இடையிடையே மூச்சு திணறல் இருந்த போதினும் அதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தார். ஒரு சில விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்த போதும் பெரும்பான்மையான விஷயங்கள் அவர் ஏற்கனவே தினத்தந்தியில் பாசமலர் பற்றி எழுதியவைதான். வசனங்களைப் பற்றி குறிப்பிடும் போது நான் வசனத்தில் compromise செய்துக் கொள்வதில்லை. அதுவும் சிவாஜிக்கு எழுதும் போது compounded மற்றும் double compounded sentences தான் எழுதுவேன் என்று குறிப்பிட்ட ஆரூர்தாஸ் அதற்கு உதாரணமாக தெய்வமகன் படத்தில் மகன் கண்ணன் தந்தை சங்கரை சந்திக்கும் காட்சியை குறிப்பிட்டார். வசனத்தை முழுக்க சொல்லி விட்டு அதை நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதையும் சொன்னார்.
"குட்டி விகாரமாக பிறந்தது என்பதற்காக அதை ஒதுக்கி விடும் மிருகத்தையோ" இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "மலர் அழகாக இல்லை என்பதற்காக அதை உதிர்த்து விடும் கொடியைப் பற்றியோ நான் கதைகளில் கூட படித்ததில்லையே." இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை ஒதுக்கி விட்டிங்களே நீங்களும் விகாரமாதானே இருக்கீங்க உங்களை உங்க அப்பா ஒதுக்கிட்டாரா" [இன்னும் ஒரு வரி இருக்கிறது] அப்படின்னு நீளமா வண்டி ஓட்றே என்று கேட்டாராம் நடிகர் திலகம். இதை குறிப்பிட்டு ஆரூர்தாஸ் சொன்னார் படிப்பறிவு இல்லாதவர்தான், ஆனா ஒரு தமிழாசிரியரான நான் எங்கே இடைவெளி விடுகிறேன் எங்கே நிறுத்தாமல் செல்கிறேன் என்பதை வசனத்தை ஒரு முறை கேட்டே சொன்னவர் அவர். அண்ணனுக்கு தமிழின் ஆழமும் தெரியும் அகலமும் தெரியும் என்று குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஆமோதித்தது.
தான் எழுதிய சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்ஜியம் புத்தகம் சிற் சில மாற்றங்களுடன் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு அதன் ஒரு பிரதியை கையொப்பமிட்டு நடிகர் திலகத்தின் புதல்வியார் தேன்மொழி அவர்களுக்கு வழங்கினார்.
ட்ரைலர் வெளியீடும் நிகழ்வாக ஒரு ரீல் சுருள் அடங்கிய பெட்டியை சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு வெளியிட சகோதரிகள் கமலா செல்வராஜ், விஜய சாமுண்டீஸ்வரி, தேன்மொழி மற்றும் பீம்சிங் அவர்களின் புதல்வி [சுசீ?] ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். [எங்கிருந்தோ ஒரு ரசிக கண்மணியின் குரல்" பாச மலர் பெட்டி வாழ்க", அரங்கம் சிரித்து கைதட்டி மகிழ்ந்தது].
இனி ட்ரைலர் பற்றி. வெளிவந்த போது 35 mm-ல் வெளியானதை சினிமாஸ்கோப்-ற்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் மாற்றியிருக்கிறார்கள். அந்த restoration வேலையை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். Black அண்ட் White படத்தின் depth மற்றும் quality சற்றும் குறையாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகவே உழைத்த பிரசாத் லேப் technicians இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தனர். அதே போன்று படத்தை master copy யிலிருந்து re-edit செய்த பீம்சிங்கின் மகனும் எடிட்டருமான B.லெனினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
படத்தின் காட்சிகளை அவர்கள் கோர்த்திருக்கும் விதமே லெனினின் வித்தையை பறை சாற்றியது. உதாரணமாக சிவாஜி ஜெமினியிடம் அவளுக்காக நான் என்னவெல்லாம் கனவு கண்டிடிருக்கேன் தெரியுமா என்று சொல்ல என்னவெல்லாம் என்று ஜெமினி கேட்க உடனே மலர்களை போல் பாடல் காட்சியில் ஒரு சில வரிகள், நான் உன்னை லவ் பண்றேன் என்று ஜெமினி சொல்ல அப்படினா என்று சாவித்திரி கேட்க உடனே யார் யார் யார் அவள் யாரோ வரிகள்.நான் உன் மேலே நிறைய அன்பு வைச்சிருக்கேன் என்று சொல்லும் ஜெமினியிடம் எங்கண்ணனை விடவா என்று சாவித்திரி கேட்க இப்படி ஒரு தங்கைகாக ஒரு அண்ணன் என்ன வேண்டும்மானாலும் செய்யலாம் என்ற வசனம், சிவாஜியிடம் அவர் கல்யாணத்தைப் பற்றி சாவித்திரி பேச நமக்கு வரும் பட்டத்து ராணி யாரோ என்று அவர் கேட்க உடனே பாட்டொன்று கேட்டேன் M .N.ராஜம், இந்த கல்யாணம் நடக்காது என்று சிவாஜி சொல்ல இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் என்று நம்பியாரிடம் சாவித்திரி சொல்லும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.
பாக்டரி காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். இருவருக்கும் இடையே நடக்கும் வாதப் பிரதிவாதக் காட்சியை நாம் முழுமையாக காணும்போது ரசித்திருப்போம். ஆனால் இந்த ட்ரைலரில் சடாரென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழும் ராஜசேகரன் I am the sole proprietor of this concern. I can do whatever I want என்று முழங்கும்போது அரங்கம் ஒரு வினாடி ஸ்தம்பித்து பின்னர் அதிர்ந்தது.
துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, வாராய் என் தோழி பாடலில் வரும் அந்த வெட்கம் கலந்த ஒரு அண்ணனின் தலை குனியல், தன் முதலிரவன்று தங்கை அவள் கணவன் போட்டோவை திருப்பி வைத்து விட்டு வரும் அந்த சிங்கத்தின் காதல் பார்வை, நம்பியார் வீட்டு பார்ட்டியில் cool drink கிளாஸ்-ஐ எடுத்துக் கொண்டு thank you சொல்லும் அந்த sophistication, இவை எல்லாமே வினாடி நேரத்தில் மின்னி மறைந்தாலும் கண்ணிலேயே இன்னும் நிற்கிறது.
பிறகு மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. முதலில் எங்களுக்கும் காலம் வரும் பாடல். அதில் இறுதியில் "நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சம் இல்லா வாழ்வினிலே தோல்வியும் இல்லை" என்று டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட இங்கே நடிகர் திலகம் காலை அகற்றி கை இரண்டையும் விரித்து வாயசைக்க காது செவிடாகும் கைதட்டல். அடுத்த பாடல் பாட்டொன்று கேட்டேன். நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு கேட்க வேண்டுமா? அதிலும் அந்த பியானோவில் கைகள் விளையாட அவர் காட்டும் முகபாவங்கள், இங்கே ஆரவார அலப்பரைகள்.
இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத. இதை பற்றி நான் விவரிக்க தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான் அத்தை மகளை மணம் கொண்டு வரி, நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படத்தின் முன்னே நின்று சாவித்திரி பாடும் மாமன் தங்கை மகளான வரி, தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பெரிய கார்பெட்டில் படுத்துக் கொண்டே கண்ணின் மனி போல வரியின் போது காட்டும் போஸ். ஒரே அமர்க்களம்தான்.
மனதுக்கு நிறைவான ஒரு காலைப்பொழுது. மற்ற சில மனதுக்கு நிறைவான விஷயங்கள், தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதை, ட்ரைலரில் யாரையும் விட்டு விடாமல் [K.P.கொட்டராகராவின் கதை, ஆரூர்தாசின் வசனம், கண்ணதாசன் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை] என்று டைட்டில் போட்டது.
வெளியே வந்தபோது எப்போது ஆகஸ்ட் 15 வரும் என்றுதான் அனைவரின் மனத்திலும் சிந்தனை ஓடியிருக்கும்.
அன்புடன்