நித்தமும்தான் சத்தம் கேட்குது
தத்தை கத்துது காலை மாலை
சுத்துது எங்க வீட்டு மாடியை
வைத்த அரிசியும் பிடிச்சிருக்கு
சுத்தமான தண்ணீரும் பருகுது
சொத்தும் சுகமும் இதுவல்லவோ
Printable View
நித்தமும்தான் சத்தம் கேட்குது
தத்தை கத்துது காலை மாலை
சுத்துது எங்க வீட்டு மாடியை
வைத்த அரிசியும் பிடிச்சிருக்கு
சுத்தமான தண்ணீரும் பருகுது
சொத்தும் சுகமும் இதுவல்லவோ
இதுவல்லவோ எனக்கென்றுதான் எழுந்தேகிளர்ந்த துவோ
பதுமையென பரிகாசமாய் பார்த்தேசிரித் தவரும்
புதுமையென புகழ்ந்தேமனம் மகிழ்ந்தேயவர் பரிசு
இதுதானென தரக்காரணி அழகானகற் பனையே..
கற்பனையே செய்யுதே வஞ்சனையே
பஞ்சகல்யாணியாய் பறக்கவில்லை
கழுதையாய் சண்டித்தனம் செய்ய
கதைப்போட்டி கடைசி நாள் நெருங்க
ஐயகோ என் செய்வேன் நான் தவிக்க
எங்கிருக்கிறாய் என் கதையின் கருவே
கருவே உருவாய் காலப் போக்கில்
…இளமைப் பருவம் எய்தும் போதில்
மருவாய் உளத்தில் மயக்கும் ஆசை
..மாற்றம் பலவைச் செய்யும் போதில்
நறும்பூக் கொண்ட நாரும் போலே
…நாலாய் மேலாய் இன்னும் இன்னும்
வருமே எண்ணம் நன்றும் நஞ்சும்
..வாகாய்த் தீமை தவிர்த்தால் நலமே
நலமே பெண்ணின் நலமே
நல் வாழ்வின் மையமே
நாகரிகத்தின் அடையாளமே
நிலைக்கட்டுமே நிரந்தரமாய்
நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..
கண்ணா நீ விழித்துக்கொள்ளடா
கதவுக்குப்பின் நின்று பேசியவள்
கடுகு தாளிக்க மட்டும் தெரிந்தவள்
காணாமல் போனாளடா இந்நாளில்
கச்சிதமாய் உன்னை மாதிரியே
கட்டவிழ்த்து வாழத் துணிந்தாளடா
துணிந்தாளடா தெரியுமா
உன் பாட்டி பட்ட கஷ்டம்..
என்பார் தாத்தா
ஆரம்பப் பேச்சுக் குழறிக் குழறி
வயதான தன்மையால்
பாட்டி இல்லாத் பேதமையால்..
உங்களைத் தைரியமாக வளர்க்கத்
துணிந்தாளா..
பக்கத்து ஊருக்குத் தனியாகப் போகத்
துணிந்தாளா எனப்
புரியாது..
பின் தான் புரிந்தது
என்னை எப்படி விட்டுப் போகத் துணிந்தாள் என்பது..
அதுவும்
தாத்தாவின்
கண்ணோரம் காய்ந்த
கறையைப் பார்த்தபிறகு..
பார்த்தபிறகு மனம் மாறுமா
கற்பனை பிம்பம் மறையுமா
வண்ணங்கள் தான் கரையுமா
கட்டிய கோட்டையும் சரியுமா
விபரீத பரிட்சை தேவையா
இப்படியே தொடர்வது நலமே
நலமே
எனச் சொன்னது
உன் வீட்டின் முன்னிருந்த
வேப்பமரக் கிளை,
அதை உரசிக்கொண்டிருந்த காற்று,.,.
நலமே எனச் சொன்னார்கள்
உன் வீட்டில்
உன் அப்பா,
உன் அம்மா,
உன் தங்கை
உன் பாட்டி..
ஆனால்
நலமே எனச் சொலவில்லை
உன்
மெலிந்த உடலும்,
வாடிய சருகான முகமும்,
கண்ணோரம் நீ வைத்திருந்த
என்னுயிரும்..
என்னுயிரும் கூட்டுப் பறவையோ
பாலூட்டி வளரும் சிறு கிளியோ
பறக்கத் தவிக்கும் ஓர் கைதியோ
கதவு திறந்திட காத்திருக்குமோ
காத்திருக்குமோ என்ற
உங்கள் கவிதை
மிகவும் கவர்ந்து
எங்கள் கவிதை வனத்தில்
பிரசுரிக்க நினைக்கையில்
வேறு பல
ஏற்கெனவே வாசலில் நிற்பதால்
உடனே பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம்..
வருந்துகிறோம் படம் வெளியிட தாமதமானால்
வருந்துகிறோம் வெயிலில் தலைவரை தரிசிக்க
அற்ப காரணங்கள் கவலையை குத்தகையெடுக்க
காத்திருக்கு பல அவசர முக்கிய நிவாரணங்கள்
நிவாரணங்கள் தருவதாகச் சொன்ன
அரசரைக் காணோமாம்..
ப்லவிதமாய்த் தேடிப் பார்த்து
அலுத்து சலித்து
பின் ஒருவழியாய்க்
குட்டி இளவரசனை
அரியணை ஏற்றி உதவிக்கு
அமைச்சரைக் கொடுத்தால்..
அமைச்சர் வழ்ங்கினார் உரை..
புது மன்னர் உங்கள்
துன்பங்களுக்கு கண்டிப்பாய்
வழங்குவார் நிவாரணம்
என்றவர்
நினைத்துக் கொண்டார் மனதில் இப்படி..
வளர்ந்த பின்
ஓடும்வரை
ஓடும்வரை ஓடிய நதி
அடங்குவது கடலுக்குள்
சுயம் தொலைக்கும்
உத்தம ஜாதி பெண்
உப்புக்கரித்தாள்
செம்புல பெய் நீர் போல
நீர்போல இருப்பதுதான் வாழ்க்கை போல
..நிறைவாக அலசிடலாம் அதனை இன்று
தேர்போல அசைந்தோடி மெல்லச் செல்லும்
..தெளிவான நதியோதான் சுழலில் சுற்றும்
பார்த்தநிறம் தன்னுள்ளே வாங்கும் போல
...பலருக்கும் வாழ்க்கையிலே ஆசை தோன்றும்
ஆர்ப்பாட்ட அருவியொலி அடங்கல் போலே
..அடங்கிடுமே மனிதவாழ்வு ஓர்நாள் தானே..
ஓர்நாள் தானே என்றாலும்
மணித்துளிகள் ஒன்றல்லவே
பிரியமானவர் உடனிருக்க
குறையுமோ எண்ணிக்கை
பிரிவினில் வாடுகையில்
கூடுமோ நாளின் நீளம்
நீளம் எனப் பலதடவை
சொல்லியிருக்கிறேன்
உன் கூந்தல்
உன் கண்கள்
உன்னை ப் பார்க்க வரும்போது
பேசும்
உன் பாட்டியின் பேச்சு
என..
அவையெல்லாம் பொய்..
இதோ இப்போது
வெகு நீளமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த
இந்த
இருபத்து நான்கு மணி நேரம்...
நேரம் காலம் பார்க்காமல்
நாளை என தள்ளாமல்
நல்லதை செய் இன்றே
நன்றாய் சொன்னாரன்றே
சொன்னாரன்றே பெரியவர்கள்
வினை விதைப்பவன் வினை அறுப்பான்
என
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் எனினும்
இந்தக்காலத்தில் மிகப் பொருத்தம்
அறுவடை ஆகிறது
விரைவாக..
விரைவாக விரட்டினேன்
வென்றேன் முடித்தேன்
சிக்கெனப் பிடித்தேன்
ஒளிந்து விளையாடிய
கற்பனையைத்தானே
முடிந்தது கண்ணாமூச்சி
கிடைத்தது பட்டாம்பூச்சி
கிறுக்கி முடித்த என் கதை
கதையொண்ணு சொல்லப் போறேன் செல்லாத்தா – இந்தக்
கதையினிலே கருத்தில்ல சின்னாத்தா
சதைபோட்ட பையனவன் செல்லாத்தா – பேரு
சதாவுன்னு சொல்லுவாங்க சின்னாத்தா
வதைபட்டான் நெஞ்சுக்குள்ள செல்லாத்தா – ஒருத்தி
வஞ்சனையாப் புகுந்ததால சின்னாத்தா
பதைபதைப்பா இருந்ததால செல்லாத்தா – அவனும்
பக்குவமா காதலத்தான் சொன்னாத்தா
குண்டுகுண்டா இருக்கறடா நீதானே – பின்ன
குடித்தனத்த எப்படித்தான் பண்வேடா..
கண்ணழகா கட்டழகா வாடாநீ – பின்ன
கட்டுறதும் காதலையும் வச்சுக்கலாம்..
வண்ணமெனப் பொண்ணுசொல்ல செல்லாத்தா – பயபுள்ள
ஒடற்பயிற்சி செஞ்சிளைச்சுப் போனாந்தா
பொண்ணவளோ யார்டாநீன்னு கேட்டாத்தா – பயபுள்ள
படக்குன்னு மனசுடைஞ்சான் செல்லாத்தா! :)
செல்லாத்தா பழகின பாதையில
சொல்லாத்தா பழைய பொன்மொழி
நில்லாத்தா நிலையா ஒழுக்கத்துல
நல்லாத்தான் இருக்கும் உலகம்
உலகம் சுற்ற ஒருபிள்ளை
..ஊர்மேல் போகா ஒருபிள்ளை
கலகம் நடக்கக் கனலுடனே
..ககன வெளியில் பறந்தேதான்
பழனி மலையில் நின்றந்தப்
..பாலன் கோபம் கொண்டதனால்
இளமை என்றும் அடைந்தததுவே
..எல்லாக் குன்றும் அவன் இடமாய்..
இடமாய் வலமாய் தலையை ஆட்டி
வேண்டாம் என்று சொல்லிடுவேன்
வேண்டாத புது சுகங்கள் வேண்டேன்
வினைகள் விதைக்காமல் விடுவேன்
விடுவேன் என்றே சொல்லிவிட்டு
...வெறுமை முகத்தில் காட்டிவிட்டு
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்தேதான்..
..கண்ணன் பின்னல் இழுத்தாலும்
விடுடா என்றே கத்திடுவேன்
..வேண்டும் என்றே கூவிடுவேன்
கடுக்காய்க் கொடுக்க ஏனோதான்
..கன்னி நெஞ்சம் மறுத்திடுதே..
மறுத்திடுதே நம்ப மறுத்திடுதே
கணிப்புகள் தவறிட கனக்குதே
குமைந்து மனம்தான் மருகுதே
பிழையை எண்ணி வருந்துதே
வருந்துதே உள்ளம் என்று
..வண்ணமாய் நினைத்தி டாமல்
திருத்தியே விற்றார் அன்று
..தீர்க்கமாய் கிரஹாம் தானே
அருமைகள் அந்தக் காலம்
..அளவிலே தெரிய வில்லை
பெருமையாய்ப் பேசு தய்யா
..செல்லிடைப் பேசி இன்று..
இன்று விளக்காமல் புரிவதில்லை
மூத்தோர் அனுபவம் தெரிவதில்லை
இளந்தலைமுறை நுனிப்புல்லில்
பசியாறுவது பழக்கமானது பாரில்
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்
ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்கு
சட்டைப் பையில் எடுத்தது முன்பு
வங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடு
வீட்டிலிருந்தே எண்ணை அழுத்தி
இணைய சந்தையில் வாங்க இன்று
இன்றிருக்கும் ஆனந்தங்கள் எப்பொழுதும் இல்லையென
பின்வந்த பிஞ்சுகள் சொன்னாலும் - எண்ணத்துள்
ஆமென்று சொல்வதற்கு ஆசைதான் ஆனாலும்
நாமென்ன சொல்வ திருக்கு..
சொல்வதிருக்கு ஆயிரம் உண்மைகள்
சொல்லாமல் விளங்கும் அதிசயங்கள்
மௌனமாய் உணர்த்தும் அர்த்தங்கள்
சொல்லொணா இனிய அனுபவங்கள்
அனுபவங்கள் பற்றித்தான் சொல்வ தற்கு
...அசந்திடவே மாட்டாளே செல்லாப் பாட்டி
அனுஅம்மா உங்களுக்குத் தருவ தற்கு
..அவஸ்தைபல நான்பட்டேன் அறிவீர் நீவிர்..
துணுக்குறவே வைத்திடவே கேட்போம் நாங்கள்
..தோராயம் எட்டுபெற்ற காரணம் என்ன?!
முணுக்கென்றே நாணமுடன் கோபம் கொண்டு
..முனகித்தான் சென்றிடுவாள் கொல்லைப் பக்கம்!!
கொல்லைப் பக்கம் வழியுண்டு
நுழைந்திடுவர் பசை கொண்டு
தகைமை இல்லா பேராசையே
நாட்டை உலுக்கும் பைசாசமே
பைசாசமே பூதமே
பேயே என்றெல்லாம்
திட்டு வாங்கினாலும்
தயங்காமல்
நாற்காலியைப் போட்டு
உயர ஏறி
கோலமாவு டப்பாவைத் தரையிலும்
தலையிலும் தள்ளி
பே என்று சொல்லிச்
சிரிக்கிறது
குட்டிப் பிசாசு..
பிசாசு உலாவுமோ பனங்காட்டு இருட்டில்
சலசலக்கும் ஓலைகளும் அதன் ஓலமோ
சிறு நரிகளுக்கு பழகிவிட்டது பயமில்லை
சட்டத்தின் வெத்து சத்தமும் அப்படியே
அப்படியே நில்லென்றால் நிற்க மாட்டாய்
..அழகாக வக்கணைகள் முகத்தில் காட்டித்
துப்புவதாய் வாய்கோணி இருக்கும் போது
..தொடர்ந்துவரும் படமெடுக்கும் கருவி ஒலியில்
குப்பென்றே சிரித்துவிட்டு எடுத்துப் பார்த்து
..கோணலான படமப்பா என்றே எள்வாய்
இப்போதோ மணவறையில் தலையைச் சாய்த்து
..இருக்கின்ற உனைப்பார்த்தோ எனக்கேன் கண்ணீர்..!
கண்ணீர் கரைக்கும் பாவத்தை
மறந்துவிடும் பயங்கர குற்றம்
தண்ணீர் கரைக்கும் உப்பை
மறைந்துவிடும் நீர் தன்மை
தன்மை ஒருமை தன்மை முன்னிலை
என்பது
நான் நீ நாமாக
இருந்த போது எனக்குத் தெரிந்தது
இப்போது
தெரிகிறது படர்க்கை
நேரமாகிவிட்டது
அவரும் குழந்தையும்
காத்திருப்பார்கள் என நீ
கிளம்பியதில் இருந்து..