நடிகர்திலகத்தின் உடல்மொழி.
சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.