எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-hrnjsna1-8...y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
8
'நீராழி மண்டபத்தில்'
http://padamhosting.me/out.php/i1333...aivancover.jpg
அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.
பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.
எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.
வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.
சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)
முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.
மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.
வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.
'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.
[பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?
அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.
'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'
கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.
'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...
என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!
இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)
கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து
எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆ..........ஆ
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்