Originally Posted by
KALAIVENTHAN
ஆடாத மனமும் உண்டோ?
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த உரையை ஒலிநாடாவாக வெளியிட்டு காசு பார்த்தவர் தலைவரை சீண்டியும் மறைமுகமாக தனது பத்திரிகையில் விமர்சித்தும் வந்தவருமான எதிர் முகாமைச் சேர்ந்த மதிஒளி சண்முகம். கல்வீசுவோருக்கே கனியைத் தரும் மரம் போல தலைவர் எப்படியெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள். அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டவர், இப்போதும் தலைவர் பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் எதிர் முகாம் நடிகர் பெயரில் பத்திரிகை நடத்தியவர் என்பதாலோ என்னவோ அந்த பழைய பாசத்தில் எப்படி எல்லாம் நடிக்கக் கூடாது என்று தலைவர் பேசியிருந்த பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...
அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கும்............கலைவேந்தன்.