எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.
இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.
தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.
இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.
- அரவிந்தன்,
நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான்.
படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!
சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!
அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!
அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!
அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க! இப்ப இந்த மாதிரி பொருட்காட்சி, தீம் பார்க்குல புடிச்சா அவ்வளவு சுவராசியம் இல்லை,ஏன்னா அந்த காலத்திலே ஜனங்க ஊரை விட்டு வெளியே போகலை, இது மாதிரி படக்காட்சிகளை 'பே'ன்னு விழிபிதுங்க பார்த்தாங்க, ஆனா இப்ப சும்மா நாலு கோடு எழுதப்போறேன்னு உலகத்தை சுத்தி வர்றவங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆச்சிரியமே இல்லை! முக்காவாசி பேரு பார்த்திருப்பாங்க! மேற்கொண்டு மக்கள் கையிலே காசு பொறள ஆரம்பிச்சிருச்சி, அவங்களே போய் பக்கத்திலே சிங்கப்பூரு, மலேசியா, ஹாங்காங்குன்னு பார்த்துட்டு இந்த அதிசியங்களை பார்த்துட்டு வந்துடறாங்க! அதனாலே தான் இப்ப வெளிநாட்டுல போயி படம் புடிச்ச நம்மூருல் இருக்கிற நெருக்கடியான ரோட்டை காமிக்கிற மாதிரி, 'நியூயார்க் நகரிலே'ன்னு தெருத்தெருவை காமிக்கிறாங்க!
அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு! கடைசியிலே அந்தம்மாவை தங்கச்சியாக்கிட்டு போயிடுவாரு!
பச்சைக்கிளி முத்துச்சரம்-
என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்!
இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.
இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!
இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு,
அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) ,
அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!
அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!
அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு! இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)
மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு காமிடி பண்ணி இருப்பாரு! முதல்ல காமடியா தான் தெரிஞ்சுது, அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! ஆனா அந்த இடி, மின்னல்லருந்து வரும் மின்சாரத்தின் அளவை கையாள நமக்கு எவ்வளவு பெரிய மின்தடை(Insulation) வேணும் தெரியுமா? சொன்னா ஆச்சிரியப்படுவீங்க , இப்ப இருக்கும் பீங்கான் போன்ற பொருட்களின் தடிமன் ஏழு கிமீ இருந்தா தான் அதை கையாள முடியும், 'Insulation'ஐ விடுங்க, அதை கையாள தேவையான மின்கடத்துவான்(Conductor), அதை விட அதிகம். ஆனா படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!
அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்!
முதல்ல அண்ணன் எம்ஜியாருக்கு மஞ்சுளா ஃபியான்ஸி, அவங்களை கூட்டிக்கிட்டு முதல்ல நம்ம தலைவர் போற இடம் ஹாங்காங்!அதாவது இந்த பாட்ல வர்ற கிளிப்பு பாருங்க, விக்டோரியா பீக்லருந்து ட்ராம்ல வர்ற மாதிரி! இதை நான் 92ல முதமுதல்ல போயி ஏறி பார்த்தப்ப நிஜமாலுமே இந்த படம் ஞாபகம் தான் வந்துச்சு, இங்கேருந்து சுத்துபட்டு கிராமம் எல்லாம் தெரியுதுன்னு சொல்றமாதிரி எல்லா தீவுகளும் தெரியும்! அது மாதிரி 'கோவலூன்' சொல்ற தீபகற்ப பூமி நல்லா தெரியும்! அப்படி ட்ராம்ல ஏறி மஞ்சுளா ஆன்ட்டியோட ஹனிமூன் ட்ரிப்பு போற மாதிரி போயி, அப்பறம் இந்த பக்கம் ஹிமாச்சல் வந்து 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்'ன்னு கொண்டாட்டம் போட்டா நமக்கு அப்படி கொண்டாட்டம் போடனும்னு தோணுமா தோணாதா?
இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது!நம்ம எம்ஜியாரு ஸ்டைல்ல தான் அப்புறம் போன ரஜினியும் செஞ்சாரு! அதுமட்டுமில்லை எல்லா பாடல் காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மனசை அப்படியே அள்ளூம்! மூணு கதாநாயகி, எல்லாமே காதல் பாடல்கள்னு போய்ட்டா கொள்கைப்பாடல்களுக்கு என்ன பண்றது, அதுக்குத்தான் 'சிரித்து வாழவேண்டும்' பாட்டு! இன்னும் இதை பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு! எழுதுனா பதிவு நீளமாயிடும்,
COURTESY NET
1940களில் தமிழ் திரையுலகம்
எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.
எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.
“கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.