இருந்து கொண்டே இல்லை
குதிருக்குள் அப்பன் என்பான்
சோற்றுக்குள் முழு பூசணி
எல்லாம் என்றும் சாதாரணம்
Printable View
இருந்து கொண்டே இல்லை
குதிருக்குள் அப்பன் என்பான்
சோற்றுக்குள் முழு பூசணி
எல்லாம் என்றும் சாதாரணம்
சாதரணமாய்த் தான்
இணையத்தில்
ஆரம்பித்த
பழைய தொலைக்காட்சித் தொடரின்
முதல் அத்தியாயம்
சட்டென உள்ளிழுத்து
மீதி முப்பத்து நான்கையும்
பார்க்க வைத்தபின்
தான்
மிஞ்சியது வருத்தம்
அசாதாரணமாகக் கிடைத்த
விடுமுறை முடிந்தது என்பது..
ம்ம்
காலமும் நேரமும்
நிற்பதில்லை
சமயத்தில்
உட்கார்வது மனிதர்கள் மட்டுமே.
ம
மனிதர்கள் மட்டுமே
மாற்றம் விரும்புவது
புது உணவு ருசித்திட
புது இடம் வசித்திட
புது பொழுதுபோக்கு
புதுப் புது ஆராய்ச்சி
பொல்லாத ஜீவராசி
திருப்தியில்லா ஜாதி
ஜாதி தேர்தலிலே ஜாலமிடும் நல்வோட்டு
மீதி பிறவாம் அறி..
அறி என்றார் அரிய ஆசான்
தலையை சொறிந்தான் சீடன்
ஏறவில்லை எதுவும் என்றும்
என் செய்வான் பாமரன் பாவம்
பாவம்
என்ன ஆச்சோ தெரியலை
காலை மதியம் மாலை இரவு
என
தகவல் புகைப்படம் கேள்வி
என
சொல்லிக்கொண்டே இருப்பவன்..
கேள்வி கேட்டாலும்
மென்சிரித்துப் பதிலும் சொல்பவன்..
கோபமே வராது..
நேரில் பார்ப்பதை விட
கணினியில் அவனைப் பார்க்க
ரொம்பப் பிடிக்கும்..
தொலைபேசி, மின்னஞ்சல்
அனுப்பிப் பார்க்கலாமா..
மறுபடியும் முயன்று பார்க்க்லாம்
பார்த்தால்...
மூன்று நாள் தாடியுடன்
முகம்
கண் உள்ளே போயிருக்க
பார்க்கச் சகிக்கவில்லை..
ஜூரமாம்..
ம்ம்
உடன் உடன்
சீக்கிரம் குணமாகு டா
என எழுதிவிட்டேன்
என் முக நூல் தோழனுக்கு..
உடன் பதில்
எல்லாம் உன்னால் தான்
என பதில்..
கொஞ்சம் குழப்பம்
காதல் சொல்லப் போகிறானா..
படுபாவி..
நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே..
நேரில் பார்க்கவும் சுமாராகத் தான்
இருந்தான்..
அப்படி ஒன்றும் பெரிய வேலையில் இல்லை..
நான் 45கே அவன் 35கே தான்..
சுமாரான கம்பெனி தான்..
ஏதோ கொஞ்சம் சிலபல விஷயம்
ஒத்துக் கொண்டது தான்..
அதற்காக.. ம்ம்ஹீம்.. நோ காதல்..
பேசாமல் நண்பனில்லை
சொல்லி விடலாமா
என யோசிக்கையிலே
சிரிப்புப் பந்து போட்டு
பயந்துட்டியா என பதில் வர..
ம்ம்
விட்டேன் பெருமூச்சு..
ம்ம்
எதற்கும் இருக்கட்டும் என
துண்டித்தேன் நட்பை !
நட்பை சொல்ல மொழியில்லை
புரியாமல் போக வழியில்லை
பாராமலே பிணையும் மனங்கள்
பிசிராந்தையாரும் சோழனுமாய்
உயிரை கொடுப்பார்கள் சிலர்
வாழ்வை கெடுப்பார்கள் சிலர்
முகம் காணா இக்கால நட்பு
முகநூலின் முக்கிய சிறப்பு
சிறப்பு வரும்போது சீராய் இருந்தால்
திறக்கும் பலகதவு தான்..
தான் தன் சுகம்
தாரக மந்திரம்
சுயநல இயக்கம்
சுருங்கிய உலகம்
உலகம் அறியாப் பெண்ணாய் இருந்தேன்
..உணர்வில் மாற்றம் பருவம் தரவும்
பழகும் பழக்கம் பலவாய் மாற
..பார்வை பேச்சில் பண்பைக் கற்றேன்
அழகாய் நடிப்பு ஆடல் பாடல்
..எல்லாம் வரவும் சினிமா ஆர்வம்
வழக்கம் போல நெஞ்சுள் வரவும்
..வாகாய்ப் படத்தில் நடித்தேன் வென்றேன்..
புதிய நடிகை சிரித்தே சொல்ல
..புருவம் நெறித்தே கெள்வி ஒன்று
பதில்தான் முடிந்தால் சொலவும் ஆனால்..
..பாவை உமக்குப் படிப்பும் பாட்டும்
புதிது என்றே இயக்குனர் சொன்னார்..
..பூவை சிலிர்த்தே எழுந்தாள் சொன்னாள்
விதிதான் இதுதான் போதும் பேட்டி..
..வணக்கம் சொல்லிச் சென்றாள் வெளியே..
வெளியே குளிருது
உள்ளே வேர்க்குது
கேள்வி கேட்குது
புதிய பெண்ணினம்
புரட்சி நடத்துது
கூடு கலையுது
பார்த்து கலங்குது
படர்ந்த ஆலமரம்
ஆல மரமென்பார் ஆசிரியர் தன்வித்தை
பாலகர்க்குச் சொன்னவர் தான்
சொன்னவர் தான் செய்யவில்லை
செய்தவர்தான் சொல்லவில்லை
வாய்ச்சொல் வீரரும் உண்டிங்கு
கர்மவீரரும் கண்டிருக்கிறோம்
கண்டிருக்கிறோம் நாங்கள்..
கூட்டமாகக் குரல்கொடுத்தார்கள்
வகுப்பு மாணவர்கள்
சரி, அந்தத் தலைவர் படத்தை விடுத்து
வேறு போடச் சொல்கிறேன்
என்ற விடுதித் தலைவரிடம்
வேண்டாம் என்ற கூச்சல் எழுந்தது..
அதுவே போடுங்கள்
அந்த மகாத்மாவின்
மனவலிமை எங்களுக்கு வரவேண்டும்..
மாணவர்கள் ஒன்றாய்ச் சொல்லிக் கூவ...
திடுக்கிட்டுப் படுக்கயில் விழித்தார் அவர்..
அடச் சே எல்லாம் கனவு..!
கனவு வரும் தூக்கத்தில்
கலைந்துவிடும் பகலில்
பகலில் காணும் கனவு
தூங்கவிடாது செலுத்தும்
தூங்கவிடாது செலுத்தும்
விஷயங்கள்
இளமையில் கல்வி
வேலை
காதல் மணம் குடும்பம்
பின்
வயதான
முதுமையில்
நினைவுகள் மட்டுமே..
நினைவுகள் மட்டுமே
தேளாய் கொட்ட
தேனாய் இனிக்க
தொலையும் காதல்
காதல் வெளிப்படுமே கண்ணீராய் நெஞ்சத்தில்
மோதல் வருகின்ற போது..
வருகின்ற போது வரட்டும்
திருமணமும் விலக்கும்
பதவியும் உயர்வும்
பிறப்பும் இறப்பும்
தடுத்தால் நிற்காது
அழைத்தால் வாராது
உழைத்தால் போதும்
உறங்கு நிம்மதியாய்
நிம்மதியாய் இருப்பதற்கு என்ன வேண்டும்
..நிறைந்தமனம் பணிவுகுணம் கூட வேண்டும்
வம்பெனவே எழும்பிவிடும் தீய சிந்தை
..வளமதையும் அழிப்பதென எண்ண வேண்டும்
விம்மிவரும் கற்பனையை வடிப்ப தற்கு
..விருத்தவகை நன்றாகக் கற்க வேண்டும்
கம்பனைப்போல் ஆகவெண்ணி ஆசை கொண்டால்
..கட்டாயம் சிலகவிதை வரைய லாமே..
வரையலாமே கன்னத்தில்
கண்ணீர் கோட்டு சித்திரம்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி
முடவன் கொம்புத்தேன் ஆசை
முகமறியா நட்பின் தப்புக்கணக்கு
ஏமாற்றத்தில் என்ன அதிசயம்
அதிசயமாய் இருப்பதெது என்று கேட்டால்
..அழகான மனிதரவர் வாழ்க்கை என்பேன்
நதிபோலே ஓரிடத்தில் ஆரம் பித்து
..நன்றாகப் பலவாறாய்ச் சுழித்து ஓடி
கதியில்லை என்பதுபோல் இன்னும் சுற்றி
..கடக்கென்றே நின்றுவிடும் செயல்தான் என்னே..
விதியென்பர் வேறென்பர் ஆனால் என்ன
..வாழ்வதனின் முடிவென்றும் அறிய மாட்டார்..
அறிய மாட்டார்
அகில மாந்தர்
இனிய சிரிப்பில்
கொடிய வன்மம்
சின்ன இதயத்தில்
பெரிய துரோகம்
எல்லாம் நாடகம்
பல வித வேடம்
வேடமிட்டு உள்ளமதை மூடிநிற்கும் மாது
...வேண்டுமென்றா செய்திடுவாள் காதலனின் மீது
பாடமெனச் சொல்லியது தந்தையவர் குணமே
...பாவையிவள் மயங்குகிறாள் பாவமவள் மனமே
தாடகமாய் சிற்றலைகள் எழும்பாத குளந்தான்
...தடக்கென்றே சிறுகல்லால் சுழல்வதுவும் நிஜந்தான்
ஊடலென நினைத்தவனும் போய்விட்டான் இன்று..
...உணர்ந்துவிட்டு மறுபடியும் வந்திடுவான் சென்று..
சென்று விட்டாள் நீதி மன்ற வாசலுக்கு
நான்காவது பிள்ளையையும் நாயக/வன்
விற்றுக் குடித்த கொடுமை தாளாமல்
வயலை உழுது உரமிட்டு வளர்த்த பயிரை
நீர் விட்டு காத்த மரங்களின் கனிகளை
விற்பது போல்தானே என்றான் அந்த பதர்
பதர் என்றால்..
அயோக்கியன்..
புரியலைப்பா..
ரோக் ஆ..
ஆமா..
ஏம்ப்பா தமிழே பேச மாட்டேங்கற
என்ற கேள்விக்கு
பதில் இல்லை என்னிடம்..
என்னிடம் இல்லை ஏக்கம்
குறையவில்லை ஊக்கம்
நன்மை செய்தல் நோக்கம்
ஆர்வம் காணாது தேக்கம்
விரும்பும் ஆழ்ந்த தாக்கம்
நடக்குமதிலேன் சந்தேகம்
சந்தேகம் கொண்டானா அண்ணல் அன்று
..சஞ்சலந்தான் கொண்டானா உளத்தில் இல்லை..
பந்தமென வந்தவந்தப் பாவை தன்னை
..பங்கமிடும் தழலினிலே புகத்தான் சொல்லி
சொந்தங்கள் நண்பர்கள் கலங்கி நிற்க
..சோகத்தால் கண்களுமே சற்றே மூட
நிந்தனைகள் உலகத்தார் பேசும் பேச்சு
..நிறுத்துதற்கு வழியாகச் சொன்னான் தானே..
தானே நடக்கும்
தடைகள் உடையும்
தக்க தருணத்தில்
தர்ம தேவன் விதி
விதியென்பீர் ஆனாலோ இலையென்பேன் கேளீர்
…வேண்டுமென இவ்வவையில் இழுத்துவெனைத் தள்ளி
சதிபலவே செய்துவிட்டு என்கணவர் தோற்க
..சங்கடங்கள் ஏதுமிலை என்பதுபோல் இவனும்
மதிமயங்கி என்சேலை கைவைக்கப் பார்க்க
…மாசற்ற அவையோரே நன்றாமோ சொல்வீர்..
பதைபதைக்கப் பாஞ்சாலி அழுதகுரல் தானே
..பாரதப்போர் வித்தாக அமைந்ததுவும் கண்டீர்..
கண்டீர் பல வித்தை
கயிற்றின் மேல் நடந்து
அந்தரத்தில் ஊஞ்சலாடி
நுனி விரலில் தாங்கி
சர்க்கஸ்தான் சம்சாரம்
சாதனைதான் எத்தனை
எத்தனை அழகு என்றால்
..என்னதான் நானும் சொல்ல
வித்தைகள் புரியும் கண்கள்
..விளக்கிடும் கள்ளப் பார்வை
நித்தமும் மலர்ந்த பூவாய்
..நெகிழ்ந்துதான் சிரிக்கும் தோற்றம்
சித்தமும் என்றும் உன்னைத்
..தேடியே திகைக்கும் பெண்ணே
பெண்ணே வளரும் பெண்ணே
தேவையுனக்கு நான்கு கண்ணே
பள்ளங்கள் பார்த்திடு முன்னே
ஆபத்துக்கள் தொடருது பின்னே
பிச்சியென்றடைக்கும் காப்பகம்
கற்பும் கிட்னியும் திருட மருந்தகம்
தூங்கும் போதும் நீ விழித்திரு
ஏழாம் அறிவுடன் செழித்திரு
செழித்திருக்கும் உடலுமது திமிறி நிற்கும்
..சிவந்தகன்னம் செம்மலராய் இதழும் மின்னும்
விழித்திருக்கும் போதுமெல்லக் கனவு தோன்றும்
..விந்தைகொளும் புன்முறுவல் உதட்டை மெல்லும்
களிகொள்ளும் தோற்றத்தில் அழகு கூட்ட
..கன்னியவள் பலவாறாய் அணிவாள் ஆடை
தெளிவாகத் தெரியுமிது இளமை செய்யும்
..தேன்பூச்சுப் ப்லகொண்ட கோலம் என்றே..
கோலம் என்றே சொல்வதோ
எழில் விஞ்சும் கலையிதுவோ
கற்பனை வண்ணக்கிண்ணமோ
கைவிரலும்தான் தூரிகையோ
தூரிகையோ காரிகையின் கற்பனைக்கு ஏற்றே
..தொடுத்திருக்கும் வண்ணமலர்க் கொத்துகளின் எழிலாய்
வாரிவிடும் வள்ளலலென அழகுடனும் இங்கே
..வழங்கிவிட்டான் பிரம்மனவள் கற்பனைக்குத் தானே
ஏறிவிடும் அவள்வரைந்த ஓவியத்தின் காட்சி
..எண்ணவெண்ண நெஞ்சகத்தில் அமர்ந்திருக்கும் என்றும்
ஊரிலொரு பெண்ணுமில்லை அவளுடைய வார்ப்பாய்
..உணர்வுகளை காட்சிகளை காகிதத்தில் தரவே..
தரவே வந்துவிட்டு
தராமலே சென்றுவிட்டு
தவியாய் தவித்து
திக் திக் நெஞ்சம்
தித்திக்கும் அனுபவம்
தினமொரு நாடகம்
தனியுலக சஞ்சாரம்
தணிந்த பின் சம்சாரம்
சம்சாரம் கிட்டிவிட்டால் என்ன ஆகும்
..சங்கடங்கள் தீருமென்றாய் இல்லை அண்ணா
விம்மிவரும் அழகெல்லாம் வசமாய் ஆகும்
..வேடிக்கை பொறுப்பெல்லாம் கிடைக்கும் என்றாய்
திம்மென்றே கல்லான வயிறு போகும்
.திகட்டாத நல்லுணவு கிடைக்கும் என்றாய்
சிம்மினிலே தோசைக்கல் வைத்து தோசை
..அவளுக்கும் தருகின்றேன் நிலையைப் பாராய்..!
பாராய் பாரில் பல முன்னேற்றம்
பவுசான அதிசயம் பல்லாயிரம்
நொடியில் வரும் தொடர்ப்பின்று
நோயை வென்று நீண்ட ஆயுள்
சொகுசும் சுகமும் அணைக்குது
அறிவின் ஆட்சிமைதனை தாண்டி
அழியாமல் ஆடுது ஆதிவாசியின்
ஆண்குறி காட்டுமிராண்டித்தனம்
காட்டுமிராண்டித் தனம்
இப்படியா மனைவியை அடிப்பது
பொங்கினார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
பிரபல மாது
செல்லிடைப் பேசி ஒலிக்க
எடுத்து
“சரி சரி..
நிகழ்ச்சி ரெகார்ட் ஆகிட்டிருக்கு..
ம்ம்
என்ன இன்னிக்கும் அவ வரலையா
இப்படி லீவ் போட்டா
வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பா..
சரி அவளை நாளைக்கு வச்சுக்கறேன்..
வந்தா காலை ஒடிச்சுடுவேன்..ம்ம்
நீங்க பாத்திரம் மட்டும்
சுத்தம் பண்ணிடுங்க…
ஏன் முடியாது..
பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாதா..
என்ன தலைவலியா..ஜூரமா..
எல்லாம் பெனடால் போட்டுக்குங்க..
சரியாய்டும்..
ஆஃபீஸ் வேலை இருக்கா..
அடப் போய்யா..கொஞ்சம் வீட்டு வேலையும் பாரு..
நான் இப்ப வந்துடுவேன்
இரண்டுமணிக்குள்ற”
என்றவர் தொடர்பைத் துண்டித்து
பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம்
சொன்னார்..
“சொல்லுங்க”