அன்னமிட்ட கை
தலைப்பை பார்த்ததும் அன்னமிட்ட கை திரைப்பட விமர்சனம் போலிருக்கிறது என்று நினைக்காதீர்கள். சகோதரர் திரு.கலிய பெருமாள் அவர்கள் பதிவிட்டிருந்த இந்த புகைப்படத்தை பார்த்ததும் என் மனதில் அன்றே தோன்றியது. ஆனால், நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. சத்துணவு திட்டத்தை தலைவர் அறிமுகப்படுத்தியபோது அதை விமர்சித்தவர்களைப் பற்றி திரு.கலிய பெருமாள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே மதிய உணவுத் திட்டம் இருந்தது. அதை பெருந்தலைவர் காமராஜர் மாநிலம் முழுவதிலும் கொண்டு வந்தார். இப்போது நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவலால் நான் ஏதோ காமராஜரின் பெருமையை குறைக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதாக யாரும் தயவு செய்து தவறாக நினைக்கக் கூடாது. ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று தலைவரால் போற்றப்பட்டவர் தியாக சீலர் அவர். வரலாறு எப்படி மறைக்கப்பட்டு மகத்தான மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்பதே என் வேதனை.
இந்தியாவுக்கே மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை திராவிட இயக்கத்தை சேரும்.திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியை தொடங்கியவர் பிட்டி தியாகராயர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடந்த தேர்தலில் சென்னையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை பெற்றவர். தனது பதவிக் காலத்தில் சென்னையில் அரசு பள்ளிகளில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர். இவர் மேயராக இருந்தபோது சென்னை வந்த எடின்பரோ கோமகனை முதல் குடிமகன் என்ற முறையில் வரவேற்கவும் அதற்கு ஏற்றார்போல மேல்நாட்டு பாணி உடையணியவும் வெள்ளையர் அரசு சொன்னபோது எங்கள் கலாசார அடையாளமான வேட்டியுடனே வருவேன். இல்லாவிட்டால் விழாவுக்கே வரவில்லை என்று உறுதியுடன் நின்று, வேல்ஸ் இளவரசரை வேட்டியுடன் வரவேற்ற வெள்ளுடை வேந்தர் அவர்.
ஒருவரது பெயரில் மணிமண்டபம், சிலைகள், நினைவு இல்லங்கள் அமைப்பது, பெயர் சூட்டுவது அவர்களது நினைவைப் போற்றுவதற்கு மட்டுமல்ல, அதைப் பார்த்து நாம் உத்வேகம் பெறவும் அந்த பெரியார்கள் வழியில் நடக்கவுமே. சென்னையின் இதயப் பகுதியாக விளங்கும் தியாகராய நகருக்கு இவர் பெயரே சூட்டப்பட்டது. அதையும் மறைத்து இன்று தி.நகர் ஆகிவிட்டது கொடுமை. இன்னும் அண்ணா நகரை அ.நகர் என்று சொல்லாமல் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைவோம்.
திராவிட இயக்க சிற்பியான வெள்ளுடை வேந்தரையும் அவர் வழியில் பள்ளிப் பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கிய அன்னமிட்ட கைகளுக்கு சொந்தக்காரரான நம் தலைவரையும் போற்றுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்