யாரும் கேட்காத பாடல்... அப்படின்னு போடத்தான் ஒரு ஆசை. யாரும் கேட்காத ஒரு பாடல் எப்படி போட முடியும்-ன்னு சி.க. தெளிவா கேட்பார். யாரும் விரும்பி கேட்காத பாடல்-ன்னு சொன்னால் என்னை தொலைச்சிடுவாங்க. எல்லாரும் விரும்பிக் கேட்கும் பாடல்-ன்னு சொல்லவும் முடியலை. ஆஹா. இப்படி சொல்லிடலாம் - "எல்லோரும் விரும்பிப் பார்த்து கேட்க வேண்டிய பாடல்". இதுலயும் குறை கண்டுபிடிச்சா இந்த கல்நாயக் என்னதான் செய்வாங்க? பாவம். சரி அந்த பாடல் என்னன்னு பார்த்திடலாமா. பாட்டை பார்த்திட்டு எல்லோர் கிட்ட இருந்தும் லைக்ஸ் அள்ளிடலாம்னு இருக்கேன். ஏமாத்திடாதீங்க மக்களே.
நிலாப் பாடல் 70: "இரவும் நிலவும் வளரட்டுமே. நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார், ... ஆனால் நடிகர் திலகம் நடக்கிறார் பாருங்கள். சிறிது நேரம் விட்டு மறுபடியும் நடை. இந்த நடையைப் பத்தி நான் என்ன சொல்றது. வேகமாய் நடக்கும் அந்த கம்பீர நடையை பற்றி விளக்கமாக நடிகர் திலகம் திரிக்கு போய் தேடிப் படியுங்கள். இந்த பாடல் ஹிந்துஸ்தானி ராகமான சாரங்க தரங்கிணி-யில் அமைந்தது என்று சொல்கிறார்கள். கோபால் போன்றவர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. இந்த கோயில் கொனாரக் சூரியனார் கோயில் என்கிறார்கள். இல்லை கர்நாடகத்தின் பேலூர் மற்றும் ஹளேபீடு என்றும் சொல்கிறார்கள். பார்த்தவர்கள் சொல்லட்டும். (கல்நாயக்கிற்கு ஒன்றும் தெரியாது என்று இப்போதாவது மற்றவர்களுக்கு தெரியட்டும். ஒன்னும் தெரியாமலேயே எம்புட்டு நாளா தெரிஞ்சமாதிரி நடிக்கிறது? உண்மைய சொன்னாலும் இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே!!!)
பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள். பாடலைப் பாடியவர்கள் தமிழ்த் திரையுலகின் பெருமையான ஜோடிப் பாடகர்கள் டி.எம். சௌந்தர் ராஜன் மற்றும் இசையரசி பி. சுசீலா. பாடல் வரைந்தவர் கவியரசர் கண்ணதாசன். உருவாக்கியவர் B. R. பந்துலு.
கவியரசர் சொல்வது - இரவும் நிலவும் வளர்ந்தால் நம் இனிமை நினைவுகள் தொடரும். அடுத்த வரிதான் அவரோட தனித்தன்மை. "தரவும் பெறவும் உதவட்டுமே." இப்படியேதான் பாட்டு முழுக்க என்ன என்னமோ சொல்றாருங்க. உங்களுக்கு நல்லாவே புரியும். வேற வித்தியாசமா உங்களுக்கு புரிந்தால் இங்க சொல்லுங்க. சரி பாட்டு வரிங்களை பார்த்திடலாமோ.
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
-----------------------------------------------------------------------------------------------------------
சரி நடிகர் திலகத்தின் நடை அழகைப் பார்க்கலாமா இப்போது, அந்த அழகிய பாடலைக் கேட்டுக் கொண்டே.
https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs
கர்ணன் என்பதற்காக நடிகர் திலகத்துடன் எல்லோருமே இனிமையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.