1965-ல் "இதய கமலம்", "எங்க வீட்டு பெண்", "காக்கும் கரங்கள்",
"கன்னித்தாய்", "படித்த மனைவி", "சுமங்கலி". "தாழம்பூ". "திருவிளையாடல்", "வீர அபிமன்யு" போன்ற தமிழ் படங்களிலும், "Anthasthulu", "illalu", " kanne manasulu", "Raja drohi", "Sumangali", "tene manasulu", "todu needa", "veerabhimanyu" போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம்மின் இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.
இதய கமலம் படத்தில் எல்லா பாடல்களும் காலத்தால் அழியாதவை. "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல" பற்றி சொல்லவே வேண்டாம். 50 வருடங்கள் ஆகியும் அழியாமல் நிற்கும் பாடல் இது. "மலர்கள் நனைந்தன பனியாலே" பாடலை காலையில் எழுந்ததும் கேளுங்கள். அன்றைய தினம் மனம் அமைதியாகவும், பிரெஷ் ஆகவும் இருக்கும். அத்தனை இனிமையான பாடல். "என்ன தான் ரகசியமோ இதயத்திலே" பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இரு பெண்களுக்கும் பி.சுசீலாவே பாடி இருக்கும் பாடலில் இரு பெண்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி குரலால் நடித்திருப்பார் பி.சுசீலா அவர்கள். கே.ஆர்.விஜயாவுக்கு காதல் மனைவியின் வேடமும், ஷீலாவுக்கு மனைவியை பிரிந்து வாடும் கணவனை அவர் பக்கம் இழுக்கும் வேடமும் கிடைத்தன. இருவருமே குடும்பப்பெண்கள் என்றாலும் ஒருவர் குரலில் காதலும், நிறைவும் ஒலிக்க இன்னொருவர் குரலில் கொஞ்சம் ஆசையும் கலந்து ஒலிக்க வேண்டும். காதலில் குழைந்து கே.ஆர்.விஜயா "நினைத்தால்....." என இழுக்க, "எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" என ஷீலா துவங்கும் இடத்தில் குரலில், எக்ஸ்ப்ரஷனில் அப்படி ஒரு துரிதமான மாற்றம். Hats Off Susheelamma !! பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடல்களும் ஹிட் ஆகின.
காக்கும் கரங்கள் படத்தில் "திருநாள் வந்தது, தேர் வந்தது", "ஞாயிறு என்பது கண்ணாக", "அல்லித்தண்டு கால் எடுத்து" "அக்கா அக்கா அக்கா அக்கக்கா " பாடல்கள் சிறப்பாக அமைந்தன. "திருநாள் வந்தது" பாடல் சோகம் ததும்பும் அருமையான பாடல். கன்னித்தாய் படத்தில் "மானா பொறந்தா", "என்றும் பதினாறு வயது பதினாறு", "வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது" போல சில குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன. படித்த மனைவி படத்தில் "அப்பா ஒரு கண்ணு", "அந்த முகமா இந்த முகம்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. "எங்க வீட்டுப்பெண் படத்தில் "தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்", "கால்களே நில்லுங்கள்" "கார்த்திகை விளக்கு " போன்ற பாடல்கள் பிரபலம் ஆயின.
திருவிளையாடல் படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல்கல். இப்போது வெளியிட்டாலும் ஹிட் ஆகும். அப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சிறப்பானவை. பி.சுசீலா பாடிய "தேவா மகாதேவா", "நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு" பாடல்களும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தன. தாழம்பூ படத்தில் "தாழம்பூவின் நறுமணத்தில்", "வட்ட வட்ட பாத்தி கட்டி", "தூவானம் இது தூவானம்", "ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலம்", "பங்குனி மாதத்தில் ஒரு இரவு" பாடல்கள் ஹிட் ஆனவை. "வீர அபிமன்யு" படத்தில் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" பாடலை யாரால் மறக்க முடியும்? தேன் தேன் என ஒவ்வொரு வரியையும் கவிஞர் முடிக்க, தேன் குரலாள் சுசீலாவும், மதுரக்குரலோன் பி.பி.எஸ்சும் குழைந்து பாடியிருக்கும் பாடல். இப்பாடல் தவிர "வேலும் வில்லும் விளையாட", "நீயும் ஒரு பெண் ஆனால்", "போவோம் புது உலகம்", "தொட்ட இடம் குளிருது" போன்ற பாடல்களும் இடம் பெற்றன.
COURTESY - THIRU KALAIKUMAR

