நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 5
'ராஜபார்ட் ரங்கதுரை'.
நினைவிருக்கிறது.
அரைக்கால் சட்டைப்
பருவத்திலிருந்த அந்த
எண்பதுகளின் ஒரு தினத்தில்,
நெருங்கிய தோழர்கள்
இருவருடன், அப்போதுதான்
புதிதாக உருவாகியிருந்த,
ஊருக்கும்,தனக்கும் மிக நீண்ட
தூர இடைவெளி வைத்திருந்த
டூரிங் திரையரங்கத்திற்கு,
ஒரே மிதிவண்டியில்,அதுவும்
இரவு 10.30 மணிக் காட்சிக்குப்
போனது..
நினைவிருக்கிறது.
நாலு தெரு தாண்டினதும்
மிதிவண்டி திடுக்கிட்டு
வேகம் குறைந்தது.
அந்தத் தெருவிலிருந்து
திரையரங்கம் நோக்கிச்
செல்லும் ஒரு முக்கியச் சந்தில்
மனிதர்களை விட நாய்கள்
அதிகம் வசித்து வந்தன
பின்வாங்கவும் முடியாத
பாதிப் பயணத்தில்,மேலுமெங்களைத் திடுக்கிடச் செய்யும் விதமாக புஷ்டியான ஆறு நாய்கள் எங்கள் சதை பறித்து,எடை குறைக்க ஓடி வர..
மிதிவண்டியை ஓட்டிய
இரண்டு கால்கள் தவிர பாக்கி
நான்கு கால்களையும்,
நான்கு கால் பிராணிகளுக்குத் தரும் விருப்பமின்றி,அவரவர் நெஞ்சு வரைக்கும் தூக்கி வைத்துக்கொண்டு,
தப்பித்தோம்.
---------
ரங்கதுரை..
எல்லாவற்றையும் மறக்க
வைத்தார்.
நாடக நடிகராக, கண் நிறைந்த
கதாநாயகனாக வரும் நடிகர்
திலகம்,படத்தின் ஒவ்வொரு
அங்குலத்தையும் அழகுறச்
செய்திருந்ததில் ஆச்சரியம்
இல்லை என்பதால்,
இன்று வரை என்னால் மறக்க
முடியாத அந்தப் படத்தின்
ஒரு பாடலை மட்டும்
பகிர்கிறேன்.
"தில்லை அம்பலத்
தலமொன்றிருக்குதாம்" என்கிற
நந்தனார் பாடல்.
போய் வருவதற்குக் கேட்ட
அனுமதி மறுத்து எஜமானன்
போய் விட..
"நாளை போகாமல் நான்
இருப்பேனோ?"-என்று ஏங்கித்
தவித்துப் பாடும் பாடல்.
அவரே பாடியிருப்பாரோ
எனும் ஐயத்துடன் அந்தப் பதினாலு வயசில் எனக்கு வந்த மிரட்சி,
இதோ. .இப்போது பார்க்கும்
போதும் இருக்கிறது.
இத்தனை ஈடுபாட்டுக்கு, இது
ஒன்றும் அவருக்கு முதல்படம்
இல்லை.
இத்தனை தத்ரூபமான
வாயசைப்பிலிருந்தால்தான்
படம் ஓடுமென்கிற நிலை
இல்லை.
ஆனாலும்..
அய்யா, பாடலுக்கு உயிர்
ஊட்டுகிறார்.
உன்னதமாக்குகிறார்.
ஒரு தெய்வீக இசைஞரும்,
ஓர் தெய்வீகப் பாடகரும்
தன் பொருட்டுச் செய்த இசை
உதவிக்கு, அந்த மகா கலைஞன் செய்த பதில் மரியாதை இந்தப்
பாடல்.
செய்வதைத் திருந்தச் செய்வது
என்பார்களே..அதன் இரண்டு
நிமிஷ உதாரணம் இந்தப்
பாடல்.
--------
இரண்டரை மணி நேரம் தீர்ந்து,
இந்தப் பாடலின் ரீங்காரத்துடன் திரும்பும் வழியில்..
பத்து மணிக்குத் துரத்திய
ஆறில் இரண்டு நாய்கள் மட்டும் படுத்துக் கிடந்தன.
இப்போது..
நாய்களிடமிருந்து ஒரு
குரைப்பு கூட இல்லை.
துரத்தியடிக்கும் வேகம்
இல்லை.
நிறைந்த மனசோடு திரும்பும்
எங்களுக்கும் பயமில்லை.
-------
மகிழ்வும், நிம்மதியுமாய்
நெஞ்சு நிமிர்த்தி வரும்
சிவாஜி ரசிகர்களை,
எந்த நாய்தான் என்ன செய்து
விட முடியும்?
https://www.youtube.com/watch?v=mUs_...e_gdata_player
நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 6
"சாந்தி" திரைப்படத்தில் வரும்
இந்தக் காட்சிக்காகவே,
தினமும் திரையரங்கத்தை
நோக்கிப் படையெடுத்திருக்
கிறேன்.
-----------
கனவு-
எல்லோருக்கும்தான்
வருகிறது.
அபிமான நடிகரோ,நடிகையோ
அருகில் வந்து சிரித்துப் பேசுவார்கள்.
மிக விரும்பும் விளையாட்டு
வீரர்கள் தோளில் கை போட்டுக்
கொள்வார்கள்.
கைப்பிரம்பைமுறித்துப் போட்டு விட்டு,ஆசிரியர் அன்பு
பாராட்டுவார்.
மிகப் பெரிய பள்ளத்தில் சினிமா
பாணியில் ஸ்லோ மோஷனில்
விழுவோம்.
எருமை மாடு விரட்டும்.
பக்கத்தில் போய் நின்றாலே
முறைக்கிற பேருந்துப் பெண்,
என்றைக்குமில்லாத அதிசயமாய் தன் பக்கத்திலேயே அமரச் சொல்வாள்.
-99% நம் கனவுகளெல்லாம்
இப்படித்தான் போகும்.
----------
"சாந்தி" கதையின்
நாயகனுக்கும் ஒரு கனவு
வருகிறது,பாருங்கள்..
வண்ண வண்ணமாய்ப் புகை
சூழ, காதலியோடு ஆடிப்
பாடுகிற கனவல்ல இது.
தனது பரிசுத்தமான மனதுக்கும் தன் வடிவத்தையே தந்து, யாருமற்ற தனிமையில்
தன்னுடன் தானே உரையாடும்
கனவு.
உறக்கத்தில் காணும் கனவல்ல.
விழிப்புக்கு ஏங்கும் கனவு.
தனது நண்பனின் மனைவிக்குத்
தானே கணவனாக நடிக்க
வேண்டிய கொடுமையின்
வெம்மையில் வெடிக்கும்
கனவு.
நட்பின் புனிதத்தைப் போற்றி
மதிக்கும் நாயகன், தன்னைக்
கணவனென்று கருதி அந்தப்
பெண் அருகில் வரும்
போதெல்லாம் கூசிக் குறுகும் ஒழுக்கத்தின் உயர்வுத்தன்மை காட்டும் கனவு.
----------
இந்தக் காட்சி மட்டும் கனவல்ல.
யாருமற்ற இருட்டு
மண்டபத்தினுள் " வருகிறேன்"
என்று சொல்லியபடியே
இறங்கி..
மொத்தக் கதையின்
விளக்கத்தையே மூன்று
நிமிஷத்தில் காட்டி..
வாய் பேசும் வாசனைத்
தமிழில் ஏற்ற இறக்கங்கள் கூட்டி..
கலைந்த தலை விட்டுப் பிரிந்த
ஒற்றைக் கொத்து முடியையும்
தனது நடிப்பிசைக்குப் பக்க
வாத்தியமாக்கி..
ரசனைக் குளத்தில் நம்மை
மகிழ்வோடு நீந்தச் செய்து..
சிந்தை பதியச் சிரித்து..
விழி சிவக்க வைத்து அழுது..
-இந்த கனவுக் காட்சியில்
காவியம் படைக்குமெங்கள்
நடிகர் திலகத்தை மிஞ்ச ஒரு
நடிகர் வருவாரென யாரேனும்
நினைத்தால்...
அதுவும்-
கனவு.
https://www.youtube.com/watch?v=yUvE...e_gdata_player