“சொல்லுங்க” என்று ஒரு முனையில்
"அப்புறம்" என்று மறுமுனையில்
எத்தனை தரம் அதையே சொல்லிட
செல்லிடைப் பேசியில் கடலை போட
வெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறை
விரயம் காலம் பொருள் வாலிப சக்தி
Printable View
“சொல்லுங்க” என்று ஒரு முனையில்
"அப்புறம்" என்று மறுமுனையில்
எத்தனை தரம் அதையே சொல்லிட
செல்லிடைப் பேசியில் கடலை போட
வெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறை
விரயம் காலம் பொருள் வாலிப சக்தி
சக்தி ஆகினை; சாந்தம் கொடுத்தனை;
..சலனம் தீர்த்தனை; சிரித்தே மகிழ்ந்தனை
பக்தி கொடுத்தனை; பாசம் காட்டினை
..பாழும் உளமதன் பிணியைப் போக்கினை
முத்தி நெகிழ்ந்தனை; மூர்க்கம் தகர்த்தனை
…மெல்லப் பேசினை; மேன்மை காட்டினை
நித்தம் வாழ்விலே ஒளிதான் கூட்டிய
..நீள்கண் பாவையே நீதான் நான் இனி....
இனி ஒரு விதி செய்ய
மனிதனின் மதி ஒளிர
இனிதாயவன் கதி மாற
கனிய வேண்டும் காலம்
காலம் களிகொள்ளும் கற்றவர்கள் இட்டவிதி
ஞாலம் செழித்தால் நலம்..
நலம் அறிய ஆவல்
அந்தக்கால மடல்
அவசரமான காதல்
அறிவது புது மாடல்
மாடல் தான் அம்மா..
அதிர்ந்து பேச்மாட்டாள்
படித்திருக்கிறாள்
பேசுவாள் மென்மையாக
நன்றாகச் சமைப்பாள்
கற்றும் கொடுப்பாள் தங்கைக்கு
உடையெல்லாம் சுரிதார்
அல்லது லெக்கின்ஸ் டாப்ஸ்..
ஆஃபீஸிற்குப் போட்டு வருவாள்..
இன்னும் எதுவும் லோன் எல்லாம் வாங்கவில்லை..
ம்ஹீம் வீட்டிற்குத் தான் தருவேன்
என்றெல்லாம் சொல்லவில்லை
சின்னப் புன்சிரிப்பு
சின்னச் சின்ன வாக்கியம்
குட்டி குட்டி மின்னஞ்சல்
ரொம்பக் குட்டியாய் எஸ் எம் எஸ்
இதான் அவளிடம் பிடிக்கும்..
அவளுக்கு ஒரே தம்பி
அவனும் படிப்பில் விளையாட்டில் சுட்டியாம்
பார்த்ததிலலை
பாசம் உண்டு..ஆனால் திட்டவெல்லாம்
செய்யமாட்டாள்
எப்படி த் தெரியுமா
சிலசமயங்களில் போனில் பேசுவாள்..
அதில் தெரியும்..
அனாவசியச் செலவெல்லாம்
நானும் செய்ததில்லை அவளும்..
சாதாரண ஹோட்டல் தான் காஃபி
சரவண பவன் கூட கிடையாது
உனக்குப் பிடிக்கும்..
மாடல்ங்கறயேடா
மாடல் என்றால் முன்னோடி
என்ற அர்த்தம் அம்மா..
அம்மா அம்மம்மா இப்படியுமா
வியந்து மாளவில்லை இன்னும்
பாசப்போர்வையில் பணத்துக்கு
அளவில்லா சொத்துக்கு வைத்த குறி
தப்பியதே விலகி வாழ்ந்த மனைவி
பல்லாண்டு பிரிந்திருந்த (அப்)பாவி
படுத்திய பதியை சிதையில் வைத்ததும்
கணக்காய் சொத்துக்கு சொந்தமாகிட
கனாக்கண்ட சகோதரிகள் விடும் கண்ணீர்
இப்போது உண்மையானது நடிப்பில்லை
நடிப்பில்லை வயசாளி கண்ணின் ஓரம்
..நன்றாகத் துளிர்விட்ட ஈரச் சின்னம்
துடிப்புடனே ஓய்விற்காய்ப் பெற்ற காசை
..தெளிவாகப் பையினுள்ளே வைத்த பின்பு
படித்தாரே கம்பெனியில் தானும் நின்று
..பக்குவமாய் உழைத்திட்ட வருடம் தன்னை
விடியுமட்டும் பேசலாந்தான் ஆனால் வேண்டாம்
..விடைகொடுங்கள் எனச்சொல்லி முடித்தார் பேச்சை
பேச்சை மந்திரக்கோலாய் மாற்றி
வசியம் செய்யும் அரசியல்வாதி
சரித்திரம் நெடுக காணலாமே
வல்லவனுக்கு வல்லவனாய்
புரூடசும் ஆன்டனியும் பேச
மக்கள் மனத் தராசில் மாறிய
சீசரின் மதிப்பை மறப்போமோ
பேச்சுக்கலையை ரசிப்போமோ
ரசிப்போமா இவளே
வானத்தில் பெளர்ணமி நிலவின் ஒளி
மொட்டை மாடியில் வைத்திருக்கும்
டிஷ் ஆண்ட்டென்னாக்களைப் புறந்தள்ளி
மெல்ல மெல்ல
தண்ணீர்த் தோட்டிக்கு இந்தப்பக்கம்
சற்றே கொஞ்சூண்டு இருட்டிருக்கும்
அங்கே நின்று கொண்டு..
ஆமாம் குளிர் காற்று கொஞ்சம்
வீசத்தான் செய்யும்
வானிலை மையத்தில்
சொல்லியிருக்கிறார்கள்
எனில்
வருகிறாயா ஒன்பதரை வாக்கில்
மேலே துணி உலர்த்துகிறேன்
அல்லது
எதிர் ஃப்ளாட் ஹேமா கூப்பிட்டாள்
என ஏதாவது சொல்லி
நாம் சேர்ந்து ரசிப்போமா
தென்றலையும்
தெளி நிலவையும்
நீ ரசிக்க
அந்த வெளிச்சத்தில் நிழலாய்
அசைந்தாடும் உன் முன்னுச்சி முடியின் அழகையும்
உன் சிறு மின்னல் கண்களையும்
உன் உதட்டு நீரோட்டத்தையும் நான்
ரசிப்பேனே..
வருகிறாயா..
என
வரிந்து வரிந்து மின்னஞ்சல்
எழுதினால்
வந்தது பதில்
போரடிக்காதே..ச்சீ போடா..
போடா நீங்களும் உங்கள் அறிவுரையும்
புறந்தள்ளினேன் பல் பராமரிப்பு முறையை
மூன்று நாளாய் உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை போகும் நேரம்தான்
வந்துவிட்டது என்றெண்ணும் போதினிலே
வலியோடு ஏன் போக வேண்டும் என்றே
தள்ளிப்போட முடியாதினியும் சோதனை
தைரியமாய் சந்திப்பேன் பல் மருத்துவரை
மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்த நேரம்
..மங்கையவள் வந்தமர்ந்தாள் என்னிருக்கை ஓரம்
வருத்தமான முகத்தினிலே வாட்டமுற்ற கண்கள்
..வஞ்சியவள் நெஞ்சகத்து வேதனையின் பண்கள்
துருதுருப்பாய்த் தானலைந்த தாதியிடம் சொல்லி
..தூதுவிட அவளுக்கோ சீக்கிரமே அழைப்பு
சுறுசுறுப்பாய்க் கீற்றுமின்னல் புன்சிரிப்பைச் சிந்தித்
..துள்ளிசெல கண்டவெந்தன் உடல்வலியோ காணோம்..
காணோம் பண்பாட்டை
பழகும் பாங்கை
பொதுநல பொறுப்பை
பணிவான நாகரிகத்தை
பெண்மை போற்றும்
பெருமையான ஆண்மையை
பொருள் வேட்டையில்
மாக்களாய் மாறுபவர்க்கு
மேன்மையில்லா மூடர்க்கு
புத்தி புகட்டுவார் யாரோ
யாரோ பார்க்கக் கூடும்
...ஏதும் பேசக் கூடும்
ஊரோ ஏச்சு தந்தால்
..உளத்தில் கலக்கம் கூடும்
தேரோ என்றே இழுத்து
..திகைக்க முத்தம் தந்தாய்..
வேறாய் ஆன தெந்தன்
..விந்தை கொண்ட நெஞ்சம்..
நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்
கொஞ்சம் சொர்க்கம் அருகினில்
வெறுமையில் வாடிய என் கூடு
பிருந்தாவனமாய் மாறியதின்று
மக்களும் அவர் தம் மக்களும்
வந்திட்ட களிப்பதனால் உலகம்
உல்லாசமாய் தோன்றிடுதோ
உவகையில் ஊஞ்சல் ஆடுதோ
ஆடுதோ நெஞ்சில் இன்னும்
..அழகிய வீட்டின் எண்ணம்
ஊடியே முகத்தில் வாட்டம்
..உண்மையாய்த் தெரியு தென்றால்
மூடியே கண்சி மிட்டி
..முகமதில் சிரிப்பைக் கூட்டி
ஊடியே உள்ளே செல்வாள்
..உளமதைச் சொல்ல மாட்டாள்..
மெல்லவே அறையில் சென்று
..மேனியைத் தொட்டுச் சற்றே
வெல்லமாய் இதழில் கொஞ்சம்
..விரலினால் தீண்டப் பார்த்தால்
தள்ளியே விட்டு தூரம்
..தாண்டியே நின்று கண்ணில்
விள்ளலாய் ஈரம் காட்ட
..விழுமியே அணைத்துச் சொல்வேன்..
வஞ்சிநீ வாட வேண்டா
.வாய்மொழி சொல்ல வேண்டா
விஞ்சிடும் உன்னு ணர்வு
..விழியதும் காட்ட லாச்சே
துஞ்சியே எழுந்தால் நாளை
..செல்லலாம் என்று சொன்னால்
கொஞ்சலாய் மடிமேல் வீழ்வாள்..
..கோதையும் அதுஓர் காலம்!!!
..
காலம் செய்யும் தாமதம்
ஆனியில் சாரலில்லை
ஆடியில் காற்றில்லை
அக்கினி வெயில் தொடர
வாட்டம் சற்றே குறைய
வானிலை இன்று மாறிட
வருத்தம் கொஞ்சம் தேய
வசந்தம் போலொரு சுகமே
சுகமே என்றே இருந்துவிட்டேன்
..சூழல் தந்த மாற்ற்த்தால்
மிகவும் மனத்தில் உற்சாகம்
..மீண்டும் மீண்டும் உல்லாசம்
துகளாய் மாறிப் போகத்தான்
..துயரம் வந்து சேர்ந்திடவும்
அகத்தில் ஈசா உனைஅழைத்தால்
..அழகாய் சிரிக்கிறாய் தப்பில்லை..
தப்பில்லை வயதை மறப்பது
பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ந்து
ஊரை சுற்றி கண்டதை தின்பது
சர்ரென ஸ்ட்ராவில் உறிஞ்சுவது
காற்றுள்ள போது தூற்றுவது
மறு வசந்தம் வரை வாடுவது
வாடுவது எனுமுணர்வு வஞ்சியர்க்கு இளமை
..ஊக்கியதால் எழுந்துவிட்ட காதலினை எண்ணி
ஊடிடுமே அவர்தம்மின் உடலினையே சற்றே
...ஒவ்வாத மாற்றமதைக் கொண்டுவரும் அன்றோ
ஆடுவதும் பாடுவதும் துள்ளியோடி எங்கும்
..அங்கமெலாம் சிலிர்த்திடவும் இருக்கின்ற குணமோ
ஓடிவிட்ட காரணம்தான் என்னவென்று சொல்ல
..ஒளிந்திருந்து மலரம்பு பாய்ந்ததனால் தானே..
பாய்ந்ததனால் தானே வயல் விளைந்தது
தொடாமல் கொடாமல் வம்சம் வளராது
இடம் கொடாமல் மாது தவிர்க்கும் போது
இனிக்கும் இல்லறம் பாலைவனமானது
பாலைவனமானது வாழ்வு
என நினைத்த போது
நீரூற்றாய் நீ வந்தாய்..
சரி என சந்தோஷித்தால்
ஊருக்குப் போய் வருகிறேன் என்கிறாய்..
சீக்கிரம் வந்து சேர்..
இல்லையெனில் என் இடை குறையும்
உன் செல்லிடைப் பேசிக் கட்டணம்
கூடும்..
கூடும் உடலில் துன்பம்
வாதம் பித்தம் கபம்
வினை தவறான விகிதம்
நில் கவனி அது உசிதம்
உசிதம் என்பதை மட்டும்
அழுத்தி அடிக்கோடு போட்டுட்டியா
என்பார் தாத்தா
எல்லா கல்யாணங்களுக்கும்
பத்திரிகையுடன்
கடிதம் எழுதும்பொழுது..
நீங்கள் வந்து நடத்திக் கொடுத்தால்
என முன்வரியையும் அவரே சொல்வார்..
எல்லா உறவுகளும்
கண்டிப்பாய் வருகை தருவார்கள்
எல்லாக் கல்யாணங்களுக்கும்..
கடைசிக் காலத்தில்
பெரியப்பாவுக்கும் சித்தப்பாவிற்கும்
சண்டை வந்த போழ்தில்
திடீரென வந்த நெஞ்சு வலியில்
தாத்தா மரிக்க
வந்த உறவுகள் சொற்பமே..
என்னிடம்
மற்றவர்களுக்கு
உசிதமாயில்லை போலும்
என
அவர் சொல்வது போல பிரமை
பிரமை நிறைந்த கண்கள்
குழந்தைப் பருவ நாட்கள்
நடுவில் பல வருடங்கள்
தெளிவான உண்மைகள்
மறுபடியும் மயக்கங்கள்
அவை அந்திம காலங்கள்
காலங்கள் செய்கின்ற மாயம்தான் என்னே
..கடகடத்துச் சக்கரமாய் ஓடிவிடும் நாட்கள்
ஓலமிடும் உள்மனசு ஓடிவிட்ட வயதை
..உளத்தினிலே குழவியென இருந்தவற்றை எண்ணி
பாலமிடும் நினைவுகளோ இளவயதுக் காதல்
..பகிர்ந்தவளைச் சுமந்துவந்து கரைதனிலே கொட்டும்
தாளமிட்டுத் தாளமிட்டுக் கூவிஅழைத் தாலும்
..தயங்காமல் இனிவருமோ இளமையது தானே..
இளமையது தானே என்றும் இருக்கும்
தளர்ந்து மூன்று காலால் நடந்தாலும்
உலர்ந்து பல்லும் சொல்லும் போனாலும்
மனதால் வாழலாம் மார்க்கண்டேயனாய்
மார்க்கண் டேயனாய் இருக்க வேண்டாம்
..மாறா இளமை மயக்க வேண்டாம்
வேர்க்கும் படியே உழைத்தே என்றும்
..வியப்பாய் ஊரும் பார்த்தால் போதும்
கோர்க்கும் எண்ணம் சிந்தை யுள்ளே
..கோமகன் ராமனை எண்ணி எண்ணி
வார்த்தே இறுதிவரை நின்றால் போதும்
..வருடம் பலவாய் ஆக வேண்டா..
..
ஆக வேண்டா கேலிக்கூத்தாய்
அழகிய பாரம்பரிய பழக்கங்கள்
கண் முன் தொலைய வேண்டாம்
பீடுடை பரவச அடையாளங்கள்
அன்னியரெல்லாம் ரசித்து நாடும்
உடையும் கலையும் எழிலும்
தூக்கியெரியலாச்சே சோதனையே
பட்டுடுத்தி பூ சூடி அணிகலனுடன்
மணமேடை ஏறிய மங்கல மங்கை
தலைவிரி கோலத்தில் மேல்நாட்டு
பெண் போல நீள் கவுன் அணிந்து
புது விஷ விதை விதைத்தாளே
குலப்பெருமையை புதைத்தாளே
புதைத்தாளே கன்னியவள் காதலையே ஆழப்
…பூக்குழியாம் நெஞ்சகத்தில் மண்ணெடுத்துப் போட்டே
கதைகதையாய்ப் பரம்பரையின் பெயர்பற்றிச் சொல்லிக்
…கண்டித்தே மறுதலித்த தந்தையவர் சொல்லால்
பதைபதைத்துப் பாவையவள் காதலனின் உயிரை
…பாதுகாத்து வைத்திடவே உணர்ச்சியிலா வார்த்தை
வதைபட்டுச் சிதைந்தபடி அவனிடமே சொன்னாள்
…..வஞ்சியெனை மறந்திடுவீர் வாழ்ந்திடுவீர் நன்றாய்..
நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறது
நன்றாய் நடக்கும்
நன்றுரைத்தது கீதை
கீதையைப் பத்தி அந்தப்
பிரபலமான உபன்யாசகர்
ஆரம்பிக்கறார் சார் 5.30க்கு
அப்புறம்
ஏழாவதுமனிதன்
கப்பலோட்டிய தமிழன்
கைகொடுத்த தெய்வம்னு
முழுக்க பாரதியார் பாட்டு..
வீரபாண்டிய கட்ட பொம்மன்
வேறசானல் போடறாங்களாம்
ராஜ பார்ட் ரங்கதுரை
கப்பலோட்டிய தமிழன்
காந்தி தமிழ் நு பேசியிருக்கேன்
இந்தக் கால இளைஞ இளைஞிகளின்
சுதந்தரம் பத்தி சாலமன் பாப்பையாவ
வச்சு ஒரு பட்டி மன்றம்
பரவாயில்லையா சார்:
யோவ் லூசு
வயசு என்ன ஆவுது உனக்கு
அதானே பார்த்தேன்..
இந்த கீதைலாம் வேண்டாம் தூக்கு
காலைல அந்த ப்ரபல நடிகை
அந்தக் காலத்தில
சுதந்திரப் பாடல்கள்னு
ஒரு வெஸ்டர்ன் சாங்க்ஸ் ஆல்பம்
பாடியிருக்காங்கள்ள..யா
மேட் இன் இண்டியா அதப் போடு
இப்போ ரெண்டு மூணு படத்துல
நல்ல குத்துப் பாட்டுல்லாம்
வந்திருக்குல்ல
அந்தப் படங்கள்ளயே போட்டுடலாம் பேசு
ஃபண்ட்ஸ் நோ ப்ராப்ளம்யா..
இந்தப் பட்டிமன்றம்
யூத் தோட ஃப்ரீடம் நல்ல டாபிக்
நடுவரா
அவங்க யாரு நாலுவாட்டி டைவர்ஸ் ஆன நடிகை
ஓ அவங்களையே நடுவரா போட்டுடு
நீ சொன்னமாதிரி போட்டா அட்ஸ்லாம்
கிடைக்காது..
நமக்கு சேலரி போனஸ்லாம்
வேண்டுமில்லையா
நான் சொன்னதைச் செய்டா செல்லம்
சரி என்று சொன்ன
டிவி நிகழ்ச்சிப் பொறுப்பாளர்
நொந்து கொண்டார் மனதுள்தன்
அடிமைத் தனத்தினை
அடிமைத் தனத்தினை அணைத்துக்கொள்
ஆசையாய் அதிவிரைவாய் அட்டையாய்
ஆதி அடையாளம் அனைத்தும் அழித்துவிடு
ஆடு ராமா ஆடு குரங்கு போல மாறிவிடு
மாறிவிடு என்றுசொன்னாய் மாற்றிவிட்டேன் நானும்
..மனமொப்பி வளர்த்திருந்த தலைமுடியை வெட்டி
வாரிவிட ஒன்றுமில்லா சிறுபையன் போலே
..வாகாக வளையாமல் நிற்கிறது தானே.
ஸாரிடியர் என்கின்றாய் உனக்கென்ன ராணி..
..சங்கடங்கள் அலுவலகம் செலும்போது தெரியும்
ஊறுகின்ற கொழுப்புடனே கேட்பார்கள் என்னை..
..உண்மையைச்சொல் தள்ளுபடி கிடைத்ததா என்றே..:)
கிடைத்ததா என்றே தெரியவில்லை
கள்ள விழியும் சொல்லவில்லை
கடித்த இதழும் இயம்பவில்லை
காதலுக்கு சம்மதம் அறிவதெப்படி
அறிவதெப்படி..
தாத்தாவின் அப்பா
பெயர் தெரியும்..
தாத்தாவின் தாத்தா பெயர்..
ம்ஹீம் தெரியாது
அப்பா சொல்லவில்லை
அம்மாவின் வழியும் அப்படியே..
யாராவது வயதான உறவுமுறை
உயிருடன் இருந்தால் தெரியலாம்..
முயன்றதில் ஒரு தொண்ணூறு
வயது உறவினரிடம்
பதில் கிடைத்தது….
அறிவதெப்படி..
என்ற கேள்வியே
காலம் காலமாக
தேடலுக்கு வழிவகுத்து
கண்டுபிடிப்புக்கும் வழி வகுத்திருக்கிறது..
பார்த்தாயா என்றேன் சகோதரியிடம்…..
போடா போ
வாழ்க்கையே ஒரு தேடல் தானே
கண்டு பிடிப்புக்கள் குறைவு
ஏமாற்றங்கள் அதிகம்
எனச் சொல்லி மென்சிரித்துச் செல்ல
நான் நின்றேன் உறைந்து..
உறைந்து கிடக்குது பனிக்கட்டி
உருகவில்லை கரையவில்லை
சூரிய ஒளியில் வெப்பமில்லை
வீரியத்தை ஏற்று ஆண்மகனே
ஆண்மக னென்று உன்னை
..அணங்குநான் எங்கு சொல்வேன்
ஊண்தனை மட்டு மல்ல
…உணர்வுகள் கொண்ட என்னை
தீண்டினாய் ராவ ணாவுன்
..திமிரினை என்ன சொல்வேன்
வீண்மக னென்று நீயும்
…விந்தையாய் ஆன தென்ன
கால்களை இறுக்க வைத்துக்
..கவலையில் உடலும் வாட
நீள்விழி உயர்த்தி சீதை
..நின்றவந் தரக்கன் மீது
வேல்களாய்க் கூர்மை யான
..வென்றிடும் சொற்கள் எய்ய
ஊழ்வினை பற்ற பின்னாள்
…உயிரினை விட்டா னன்றோ..
விட்டானன்றோ பற்றினை
பெற்றானன்றோ பேற்றினை
புத்தன் சொன்ன கூற்றினை
போற்றிட தீரும் தீவினை
தீவினை என்ன செய்யும்
…தினமுமே நல்ல எண்ணம்
மேவியே செயல்கள் செய்தால்
…மேதினி வசமும் ஆகும்
பூவிழிப் பார்வை தன்னை
..பூமகள் முழுதும் வைக்க
வாவியாய் மகிழ்ச்சி பொங்கி
…வளமுமே பெருகு மன்றோ..