Originally Posted by
esvee
திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).
இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.
ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.
நன்றி - சாரதா [ மையம் திரியின் அருமையான பட விமர்சகர் ]