பிரசன்னா
1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.
லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.
ஏழைபடும்பாடு
இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.
பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.
படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.
காஞ்சனா
லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)
இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.
பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.
கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.
"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.
காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.
படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.
பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.
இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.