http://i1170.photobucket.com/albums/...ps3cfa706a.jpg
Printable View
ஹோட்டல் துசிதானி
நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.
உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.
பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.
நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.
சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.
அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.
பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.
அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.
அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.
சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.
பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.
பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...
‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’
எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.
நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.
சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
EXCELLENT WRITE UP KALAIVENTHAN SIR
RECOLLECTING YOUR WRITE UP THRO THIS VIDEO CLIP.
MAKKAL THILAGAM MGR'S TALENT AND SUPERB ACTING PROVES...
THANKS KALAIVENTHAN SIR
http://youtu.be/ZYoxS95LRhQ
நமது திரியில் புதிதாக வர்ணனை செய்து விவரணை -யும் பிரமாதமாக பதிந்து பட்டையை கிளப்பும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... திரு எஸ்வி கூறியபடி நாடோடிமன்னன்- முழு நீள கலர் செய்யப்பட்டு வெளியாக - திறன்பட வேலைகள் நடைபெறுவதாக விநியோகஸ்த நண்பர்கள் தெரிவித்தனர்...மற்றும் sv அவர்கள் பதிவிடும் மக்கள்திலகம் - தெலுகு dubbing விளம்பரங்கள் அரிதான விவரங்கள் ...