Originally Posted by
g94127302
கண்ணன் என் காதலன்
இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........
அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு
கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது
நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .
முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .
வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்
JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு
பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .
படத்தில் சில குறைகள் :
1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன
பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---
இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்
அன்புடன்
ரவி