Sivaji Ganesan - Definition of Style 15
http://i.ytimg.com/vi/_9urgglMP08/hqdefault.jpg
திரைப்படத்தில் ஒரு பாட்டிற்கு அடிப்படை ஓசை நயம்... தாள லயம்... இவை இரண்டையும் வாய்ப்பாட்டில், வார்த்தைகளில், இசைக்கருவிகளில் கொண்டு வந்து கேட்போரை சொக்க வைப்பது ஒரு இசையமைப்பாளருக்கு இறைவன் அளித்த வரப்ரசாதம்.. இது அமையப்பெற்ற ஏராளமான இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய பாடல்கள் நம்மையும் அறியாமல் நம்மை மயங்க வைக்க வல்லவை. நடிகர் திலகத்தின் படங்களிலும் அவர் இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை, கண்கள், மனோகரா, மருதநாட்டு வீரன், இரும்புத்திரை போன்றவை.
இதில் மருத நாட்டு வீரன் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் படங்களின் சுனாமியில் அமுங்கி விட்டது எனவே நாம் கூறலாம். தனியாக வேறோர் சந்தர்ப்பத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை இப்படம் அடைந்திருக்கும். முழுதும் நடிகர் திலகத்தின் கொடி பறந்த பல படங்களில் இதுவும் ஒன்று.
ராஜா ராணி காலத்திய கதை என்றால் திரைப்படங்களில் பொதுவாக நாயகர்களின் அழகு மற்றும் வீர தீர சாகசங்கள் பற்றியே அதிகம் அலசப்படும் காலத்தில், 60களிலேயே இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் ஆசா பாசங்களுட்பட்டவர்கள் தான் எனக் கூறி அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த கதைகளில் நடித்தவர் நடிகர் திலகம் முதன்மையானவர். அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களை வெகுதொலைவில் எங்கோ தேட வேண்டும். இந்தக் கோணத்தில் முன்னரே நாம் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தைப் பற்றிய ஆய்வில் பார்த்தோம்.
இப்படிப்பட்ட இயல்பான ராஜா ராணி கதையம்சம் கொண்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தவற்றில் மருதநாட்டு வீரன் குறிப்பிடத்தக்க படமாகும். ஒரு சிப்பாயின் கதை. இதில் வீரனாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.
இதில் இந்த வீரனின் காதலைப்பற்றிச் சொல்லும் போது சிறிதும் மிகையின்றி யதார்த்தமான ஒரு வீரனை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் காதலனும் காதலியுமே காதலின் ஒரு விளையாட்டாக வாட்போர் புரிவதாக ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்றிருக்கும். இதுவே இயக்குநரின் திறமைக்கு மிகச்சிறந்த சான்றாகும்.
அந்த மருத நாட்டு வீரனுக்குள் ஒளிந்திருக்கும் அந்த யதார்த்தமான மனித உணர்வை தத்ரூபமாகக் கொண்டு வரும் காட்சி தான் இப்போது நாம் காண இருக்கும் பாடல் காட்சி.
துவக்கமே சிறப்பாக இருக்கிறது.
அந்தப் புல்லாங்குழலின் பின்னணி இரவை உணர்த்த, காமிரா நடிகர் திலகத்தின் ஊடே அந்த நிலவைக் காட்டியவாறு திரும்புகிறது. கைகளைக் கட்டிக் கொண்டு நிலவின் குளுமையைப் புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருக்கிறார் தலைவர்.
சஞ்சரிக்கும் மேகங்கள் இப்போது நிலவை சூழந்து கொண்டவாறே நகர்கின்றன. ஓர் இருள் மெல்ல பரவுகிறது. அதன் நிழல் நாயகனின் முகத்தில் படர்கின்றன.
மேகங்கள் நிலவைக் கடந்து செல்கின்றன. இப்போது நிலவொளி முழுதம் வெளிப்பட்டு எங்கும் ஒளிமயமாகின்றது.
இதை கதையில் எழுதி விடலாம், வசனமாகவும் கூறி விடலாம். ஆனால் காட்சிப்படுத்தும் போது மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் இயக்குநர் எப்படிக் காட்சியமைத்திருப்பார்... அந்தப் பகுதியில் காமிரா அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்து நிலவொளி எங்கெங்கெல்லாம் படுமோ என யூகித்து அந்த அடிப்படையில் ஒளி யுமிழப்பட்டு அவ்விடமெங்கும் பிரகாசமாக்க் காட்டப்படும்.
ஆனால் இப்பாடல் காட்சியிலோ நடிப்பது நடிகர் திலகமாயிற்றே. இயக்குநருக்கு தோன்றிய யோசனை பிரமிக்க வைக்கிறது. ஆசைப்பட்டார், அந்த நிலவொளி பிரகாசமாவதும், அது மேகத்தைக் கடக்கும் போது இருளாவதும் கடந்த பின் மீண்டும் பிரகாசமாவதும், நடிகர் திலகத்தின் முகத்திலேயே பிரதிபலிக்க விரும்பியுள்ளார் போலும். இந்த யுத்தியை மிகப் பிரமாதமாக்க் கையாண்டதன் பலன். ஈடு இணையற்ற ஒப்பற்ற நடிகரின் ஒப்பற்ற பரிமாணம் வெளிப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியில் இந்த சூழ்நிலை அப்படியே நடிகர் திலகத்தின் முகத்தில் பிரதிபலிப்பது பார்ப்போரை பரவசப்படுத்தும், வியப்பூட்டும். முதலில் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வதும், இருள் சூழும் போது முகத்தில் வாட்டத்தைப் பிரதிபலிப்பதும், மீண்டும் மேகங்கள் கடந்து நிலவொளி தவழும் போது முகத்தில் அந்த மந்தகாசப் புன்னகை படர்வதும்...
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரை விட்டால் நடிகரில்லை எனக் கட்டியமன்றோ கூறுகின்றது.
அது மட்டுமா.. பாடகர் திலகமும் தன் பங்குக்கு தன் ஈடு இணையற்ற திறமையைத் தன் குரல் வழி நிரூபிக்கிறார். நிலவு மேகத்தை சூழும் போது குரல் லேசாகத் துவங்கி ஒரு வித மந்தமான உணர்வை வெளிப்படுத்தி மேகங்கள் விலக விலக அந்த ஹம்மிங்கில் அதனை அப்படியே உணர்த்தியிருப்பது ... இவர்களல்லவோ கலைத்தாயின் தலைமக்கள் எனத் தோன்றுகிறது.
இப்போது பல்லவி தொடங்குகிறது..
பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...
அடுத்த வரியில் பாருங்கள்...
பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா ....
இப்போது மிகவும் ஒய்யாரமாக நடந்து வந்து கைகளை தன் கால்களின் பக்க வாட்டில் வைத்துக் கொண்டு நிற்கும் ஸ்டைல்... நின்றவாறே ஒரு மந்தகாசப் புன்னகை... ஆஹா.... பார்த்துக் கொண்டே இருக்கலாம்...
வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ ... இந்த வரிகளின் போது நளினமாக வந்து நிற்கும் ஜமுனா... பெண்மையின் பிரதிபிம்பமாய் அந்த நளினத்தை வெளிப்படுத்தும் போது.. சரியான தேர்வு என்பது நிரூபணமாகிறது..
அடுத்த வரி...
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ...
இந்த வரியின் போது கைகளை மெல்ல மெல்ல மேல் நீட்டி முன்பக்கம் கொண்டு வரும் அழகு...
அடுத்த சரணத்தின் முதல் வரி ஞாயிறு பெற்றவள் நீ தானோ...
இந்த வரியின் போது இடுப்பில் கை வைத்தவாறே மண்டபத்தை நோக்கி நடந்து வரும் அழகு.. நீதானோ என்று அந்த வரியை முடிக்கும் போது.. அந்த தானோ.. என்ற இடத்தில் இடுப்பை சற்றே இரு பக்கமும் மிக மிக நளினமாக அசைக்கும் அழகு... மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஸ்டைல்...
திங்கள் என்பதுன் பேர்தானோ எனக் கூறி விட்டு நகரும் போது... அந்த அலட்சியமான நடை...
இனி வருவது இன்னும் சூப்பர்...
நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு இந்த வரியின் துவக்கத்தில் திரையின் இடது ஓரத்தில் புன்னகைத்தவாறே நுழையும் வசீகரம்...
பின்னர் நடமாடும் தனி வைரச்சிலையோ என்றவாறே திரையில் முன்புறம் நோக்கி நகரும்.. ஸ்டைல்..
மேகம் வலைவீசி மணம் கொண்ட சுனையோ...இந்த வரிகளின் போது இன்னொரு ஒய்யாரமான நடை..
இப்போது அந்த சுனையின் மதில் மேல் அமர்ந்து புன்னகைத்தவாறே பல்லவியைப் பாடும் பாங்கு..
அடுத்த சரணத்தில் வரும் கண்களிலே மின்னல் பளீர் பளீரென என்ற வரிகளின் போது தன் கண்களிலே பளிச்சென்ற புன்னகையின் மூலம் அந்த மின்னலின் தாக்கத்தை பிரதிபலிக்கும் நேர்த்தி..
அந்த ஸ்டைலான போஸில் அமர்ந்தவாறே பல்லவியை மீண்டும் பாடி அந்தப் பாடலை முடிக்கும் போது..
உங்களையும் அறியாமல் உங்கள் கைகள் யூட்யூபில் Replay பட்டனைச் சொடுக்கும் என்பது உறுதியாகி விடும்...
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா.
https://www.youtube.com/watch?v=_9urgglMP08