4000 ஆவது சிறப்புப் பதிவு
ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)
பாகம் 1
http://i1.ytimg.com/vi/OkdMaHIL1Y8/hqdefault.jpg
1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்
மோகன புன்னகை
சத்திய சுந்தரம்
அமர காவியம்
கல் தூண்
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
மாடி வீட்டு ஏழை
கீழ் வானம் சிவக்கும்
என்று 7 படங்களைத் தந்திருந்தார் நடிகர் திலகம். இதில் டாக்டர் பாலகிருஷ்ணா தயாரித்த 'சத்திய சுந்தரம்', மேஜர் முதலில் இயக்கிய 'கல்தூண்', முக்தாவின் 'கீழ்வானம் சிவக்கும்' மூன்றும் மிகப் பெரிய ஹிட். விஸ்வநாதன் கம்பைன்ஸ் கோபியின் 'அமரகாவியம்', கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' இரண்டும் சுமாராகப் போன நிலையில் ஸ்ரீதரின் 'மோகனப் புன்னகை' நம்மை அவ்வளவாக புன்னகைக்க விட வில்லை. புஷ்பாராஜன் (அதான் சார்... நடிகை புஷ்பலதாவும், அவர் கணவர் நடிகர் ஏ.வி.எம்.ராஜனும்) தயாரித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பி,சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்தது.
ஆக நடிகர் திலகத்தின் வெற்றிக்கொடி 1952 இலும் சரி... 1981-இலும் சரி... அதற்குப் பிறகும் சரி... தமிழ்த்திரையுலக வானில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டே இருந்தது. அவரின் வெற்றியோட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. (அது என்றைக்கு நின்றது?)
இந்த நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' வெளிவந்தது. 1981 தீபாவளி வெளியீடாக வந்து வசூல் பிரளயம் நடத்திய டாக்டர் துவாரகநாத்தைத் தொடர்ந்து ('கீழ்வானம் சிவக்கும்' 26.10.1981) கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து ஹிட்லர் வந்தார்.
ஹிட்லர் என்றாலே விசேஷம்தானே! 1976 க்குப் பிறகு, அதாவது 'சித்ரா பவுர்ணமி' இயக்கிய பிறகு 5 வருட இடைவெளிக்குப் மேல் இயக்குனர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த விசேஷம், அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம், PVT புரடக்ஷன்ஸ் ('துணிவே துணை' புகழ்) தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் என்று விசேஷம், சுருளிராஜனின் தலைவர் புகழ் பாடும் வில்லுப்பாட்டு என்று சில விசேஷங்கள்.
சரி! நம் ஹிட்லர் உமாநாத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.
ஊட்டியில் வசிக்கும் உமாநாத் (நடிகர் திலகம்) தன் முறைப்பெண் லட்சுமியை (கே.ஆர்.விஜயா) மணந்து வாழ்க்கையை நடத்த கஷ்டப்பட்டு பல வித கூலி வேலைகள் செய்கிறார். உமாநாத் ஒரு அப்பாவி, அதிக படிப்பறிவில்லாதவர் என்று பலரும் அவரை ஏய்க்கிறார்கள். முட்டாள், கோழை என்று கேலி பேசுகிறார்கள். ஆனால் உமாநாத்திற்கு அதைப் பற்றி கவலைப்படக் கூடத் தெரியாது. உமாநாத்தின் சொத்து அவரது அருமை மனைவியும், அவர் மகளும், (பேபி சாரதாப்ரீதா. பின்னாட்களில் சில படங்களில் கதாநாயகியாகத் தலைகாட்டி பின் காணாமல் போனவர்) அவர் ஹிட்லர் மீசையும் மட்டுமே.
லட்சுமி ஓரளவிற்குப் படித்த அறிவாளி. சுய கௌரவம் கொண்ட துணிச்சல்காரியும்கூட. கணவனை கேலி பேசும் கூட்டத்தை அலட்சியப்படுத்தி கணவன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாள். தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் சென்று கணவனுக்காக உதவி கேட்கிறாள். 'முட்டாளை என்னை மீறி மணந்து கொண்டாயே' என்று அவள் தந்தை உதவி செய்ய மறுக்கிறார். தன் கணவனை பெரிய ஆளாக்கித் தீருவேன் என்று லட்சுமி சபதமெடுத்து தன்னுடைய பள்ளி வாத்தியார் (வி.எஸ்.ராகவன்) செய்த உதவி மூலம் கணவனை சென்னைக்கு அழைத்து செல்கிறாள். வாத்தியார் சென்னையில் தன் நண்பன் மானேஜராக வேலை செய்யும் கம்பெனி ஒன்றில் உமாநாத்தை சேர்க்க ஒரு சிபாரிசுக் கடிதத்தையும் லட்சுமியிடம் கொடுத்தனுப்புகிறார்.
கம்பெனியின் சேர்மன் ஜாபரி (என்.எஸ். ராம்ஜி) ஒரு ஜென்டில்மேன். வேலை தேடி வரும் உமாநாத்தை காக்க வைத்து, அவர் பொறுமையை டெஸ்ட் செய்து, உமாநாத் அதில் வெற்றி பெற்ற பின் அவரை தினக்கூலியாக பணியில் அமர்த்திக் கொள்கிறார். உமாநாத்தும் தன் வேலைகளைப் பொறுப்பாகப் பார்க்கிறார். தன்னுடைய படிப்பறிவின் மூலமும், திறமை மூலமும் கணவன் செய்யும் வேலைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறாள் லட்சுமி. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கணவனுக்கு ஊட்டி அவர் நிலையைப் படிப்படியாக உயர வைக்கிறாள் அவள். கம்பெனி பற்றிய விஷயங்களை அக்கறையோடு ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார் உமாநாத்.
லட்சுமியின் துணையோடு தன் நியாயமான உழைப்பையும் கொடுத்து தினக்கூலியில் இருந்து ஆபீஸ் பியூனாக இருந்த உமாநாத் இப்போது ஹெட் பியூனாகிறார். தன் உண்மையான உழைப்பால் சேர்மன் ஜாபாரியின் அன்புக்குப் பாத்திரமாகிறார் உமாநாத். பின் மற்றவர்கள் பொறாமைப்பட அசிஸ்டன்ட் மானேஜராகவும் பிரமோட் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் தொழிலாளர் சிலரின் பொறுப்பற்ற தன்மையினால் பேக்டரி இழுத்து மூடப்படும் நிலைக்கு நஷ்டத்தில் தள்ளப்பட, லட்சுமியின் சொல்படி கம்பனியை நஷ்டத்திலிருந்து தான் காப்பாற்றுவதாக சேர்மன் ஜாபரியிடம் கூறுகிறார் உமாநாத். கம்பெனியின் நஷ்டத்திற்கு காரணமானவர்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். சொன்னபடி ராப்பகலாக உழைத்து, மற்றவர்களையும் உழைக்க வைத்து கம்பெனியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறார். இதனால் அவருக்கு ஒர்க் மானேஜராக பதவி உயர்வு கிட்டுகிறது.
சுயநலப் பேய்களான தொழிற்சங்க தலைவர்களின் முகமூடியை தொழிலாளர்களிடம் தோலுரித்துக் காட்டுகிறார் உமாநாத். அது மட்டுமல்லாமல் தொழிலார்களின் குறையை அவர்களுடன் நேரிடையாகவே கலந்து பேசி அவர்களுக்குத் தேவையான போனஸ், மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தந்து அவர்களின் நன்மதிப்பையும் பெறுகிறார். இப்போது அவர் மேனஜிங் டைரக்டர்.
நடப்பு சேர்மன் ஜாபரி ரிடைர்ட் ஆகும் தருணம் வருகிறது. போர்டு ஆப் டைரக்டர்ஸ் முடிவின் படியும், ஜாபாரியின் ஆதரவுடனும் கம்பெனிக்கு சேர்மனாகவே ஆகி விடுகிறார் உமாநாத்.
இப்போது கம்பெனிதான் உமாநாத். உமாநாத்தான் கம்பெனி. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் கம்பெனி, பிசினஸ் என்று அதிலேயே மூழ்கி விடுகிறார் உமாநாத். இப்படியே காலங்கள் உருண்டோட மகள் சியாமளா (புதுமுகம் சரோஜா) வளர்ந்து பெரியவளாகிறாள். குடும்பத்தைக் கூட கவனிக்க நேரமில்லாமல் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மகளை கவனிக்க முடியாமல் மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். லட்சுமிக்கும் தன் கணவர் முன்னை மாதிரி இல்லையே என்ற பெரிய மனக்குறை.
ஒய்வு பெற்ற பழைய சேர்மன் ஜாபரி உமாநாத்தைப் பார்க்க ஒருநாள் ஆபீஸ் வருகிறார். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குதிரை ரேஸில் விட்டு விட்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுவதாகக் கூறும் அவர் உமாநாத்திடம் கம்பெனியில் தன் மகன் மதுவிற்கு ('கல்தூண்' சதீஷ்) ஒரு வேலை போட்டுத் தருமாறு கேட்கிறார். பொறுப்பற்றுத் திரியும் அவனை நல்வழிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறார்.
உமாநாத் அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாகவும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஜாபாரிதான் என்ற நன்றி உணர்ச்சியின் காரணமாகவும் அவர் மகனுக்கு கடைநிலை ஊழியராக வேலை போட்டுத் தருகிறார். (ஏனென்றால் அவன் பொறுப்பானவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக) ஆனால் மதுவோ திமிர் பிடித்தவன். தன் தந்தையால் முன்னுக்கு வந்த உமாநாத்தின் வளர்ச்சி பொறுக்காமல் உமாநாத்தின் பழைய எதிரிகளுடன் (சத்யராஜ்) கைகோர்த்து யூனியன் லீடராகி, அவருக்கு பிரச்சனைகள் தர ஆரம்பிக்கிறான். அதுமட்டுமல்ல. மது உமாநாத்தின் மகள் சியாமளாவை காதலிக்க அவளும் மதுவை விரும்புகிறாள்.
குடும்பத்தை கவனிக்க நேரமில்லாத உமாநாத் ஒருமுறை மகள் சியாமளா காலேஜ் முடிந்து லேட்டாக தன்னுடைய தோழியின் அண்ணனுடன் வீட்டுக்கு காரில் வந்து இறங்குவதைப் பார்த்து கண்டிக்கிறார். அவரை எடுத்தெறிந்து பேசும் மகள் தூக்க மாத்திரைகளை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள். அதைத் தடுக்கும் உமாநாத் மகளின் செய்கை கண்டு நிலை குலைந்து போகிறார்.
ஆபீஸ் வேலைகள் ஒருபுறம், கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவி லட்சுமி ஒருபுறம், அடங்காத மகளின் திமிர்த்தனம் ஒருபுறம், ஆபீஸ் எதிரிகள் ஒருபுறம், தனக்குத் தொல்லை கொடுக்கும் மது ஒருபுறம், சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆட்டுக் கூட்ட, கேட்பார் பேச்சை கேட்கும் தொழிலாளிகள் ஒருபுறம் என்று பல சிக்கல்களுக்கிடையே மாட்டி நிம்மதி இழந்து தவிக்கிறார் உமாநாத். ஆனால் நம்பிக்கையையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மட்டும் அவர் விடவே இல்லை.
இறுதியில் உச்சக்கட்டமான அதிர்ச்சி உமாநாத்துக்கு. மகள் சியாமளா உமாநாத்துக்குத் தெரியாமலேயே மதுவை கோவிலில் வைத்து மணந்து கொள்கிறாள். தாய் லட்சுமியும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கிறாள். உமாநாத்துக்கு எல்லை மீறப் போன இந்த விஷயத்தை தெரியப்படுத்த லட்சுமி எவ்வளவோ போராடுகிறாள். ஆனால் சதா ஆபீஸ் வேலையில் மூழ்கியிருக்கும் உமாநாத் இந்த விஷயத்தைக் கேள்விப்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார் வேலைப்பளுவின் காரணமாக.
பின்னர் உமாநாத்துக்கு விஷயம் தெரியவர, கல்யாணத்தை தன்னிச்சையாக முன்னின்று நடத்திய தன் மனைவி லட்சுமியை கடுமையாகக் கோபிக்கிறார். விஷயம் விபரீதமாகப் போனது உமாநாத்திற்கு மட்டுமே தெரியும்.(ஒருமுறை மது தன்னை அவமானப் படுத்தும்போது அவனை அடித்துவிடும் உமாநாத் அவனை ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்க்க அவன் வயிற்றில் கட்டி வளர்வது அப்போது டாக்டர்கள் மூலமாக அவருக்குத் தெரிய வரும்) ஆமாம். மது வயிற்றில் ஒரு கட்டி வளர்கிறது. அவன் ஒரு கேன்சர் பேஷன்ட். தன் மகள் கூடிய விரைவில் விதவையாகப் போகும் அவலத்தை நினைத்து மனைவியிடம் கூறிக் கதறுகிறார் உமாநாத். அதனால்தான் அந்த திருமணத்திற்கு தான் சம்மதம் தரவில்லையென்றும் எடுத்துரைக்கிறார் அவர்.
லட்சுமி இதைக் கேட்டு துடித்துப் போகிறாள். உமாநாத் எல்லாவற்றையும் மறந்து விட்டு, ஆபீஸ் வேலைகளையும் துறந்து விட்டு, மதுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்து, வெளிநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து, இரவு,பகல் அவன் கூடவே இருந்து, மதுவை கவனித்து, அவன் உயிரை காப்பாற்றி, தன் மகளுக்கு மாங்கல்ய பலத்தைத் தருகிறார். மதுவும் தன்னை உயிர் பிழைக்க வைத்த உமாநாத்தின் அன்பால் திருந்துகிறான். மகளும் அப்பாவை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறாள்.
இப்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வருகிறது. உமாநாத் கம்பெனிக்காக வாங்கிய புது சரக்குக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து வரும் போது மூழ்கி விட்டது என்பதுதான் அது.
இப்போதுதான் பெருத்த அடியிலிருந்து மீண்ட உமாநாத்திற்கு அதற்குள் மேலும் ஒரு அடி. உமாநாத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்கிறார். அதைப் பார்த்து மனைவி லட்சுமி பதறுகிறாள். உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கதவு திறக்க உமாநாத் ஹிட்லர் போல இறுதி முடிவெடுக்க தான் ஒன்றும் கோழையில்லை என்று சொல்வதைப் போல ஹிட்லரின் புகைப்படத்தை சுட்டுத் தள்ளி விட்டு வெளியே வருகிறார்.
கப்பல் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தொழிலாலர்களிடையே செய்தி பரவுகிறது. உமாநாத்துக்கு ஏற்பட்ட இந்தப் பேரிடியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைத் தூண்டி விடுகின்றனர் உமாநாத்தின் பழைய விரோதிகள். தொழிலாளிகள் உமாநாத்தை தாக்க வீட்டுக்குக் கிளம்ப, உமாநாத் தான் தொழிலாளிகளுக்காக தன் குடும்பத்தையே மறந்து உழைத்ததை அவர்களுக்கு நினைவு படுத்துகிறார். கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் பட்ட துன்பங்களைக் கூறுகிறார்.
கவிழ்ந்து போன கப்பலை தான் வாங்கவில்லை என்றும், கப்பலை வெள்ளோட்டம் பார்த்த பின்தான் அதை வாங்க ஒப்பந்தம் செய்ய இருந்ததாகவும், அதற்குள் கப்பல் மூழ்கி விட்டதால் ஒரு நஷ்டமும் கம்பெனிக்கு இல்லை என்றும் தொழிலாளிகள் வயிற்றில் பால் வார்க்கிறார். உமாநாத்தின் சாதுர்யமான புத்திசாலித்தனத்தைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். தொழிலாளர் கூட்டம் மீண்டும் உமாநாத் புகழ் பாடுகிறது. தொழிலாள விரோதிகளை விரட்டுகிறது.
உமாநாத் ஹிட்லர் போல தைரியமாக தனக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் தன் மனோதிடத்தால் நேர் கொண்டு போராடி அத்தனைகளிலும் வெற்றி வாகை சூடுகிறார். அடால்ப் ஹிட்லர் போல இறுதியில் நம் உமாநாத்திற்குத் தோல்வி இல்லை. ஹிட்லர் போல கொடுங்கோலனும் இல்லை. ஹிட்லர் மீசையை மட்டுமே வைத்த உமாநாத் ஹிட்லரின் குணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஹிட்லரின் கண்டிப்பு மட்டுமே உமாநாத்திடம் இருந்தது. ஆனால் நல்லது நடக்க மாத்திரமே அது பயன்பட்டது. அதனால் நம் உமாநாத் ஹிட்லரையே வென்றவராகிறார்.
குடும்பத்தை சரிவர கவனிக்காத மன உறுத்தல் இருந்த உமாநாத் இறுதியாக தன் வாழ்நாளை தன் குடும்பத்தினருடன் கழிக்க முடிவெடுத்து கம்பெனியிலிருந்து ஒய்வு பெறுகிறார். இப்போது பழைய ஊட்டி உமாநாத்தாக அவரைப் பார்க்க முடிகிறது. பாசமுள்ள உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. நிம்மதியான உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. சந்தோஷமான உமாநாத்தாக திரும்பவும் தன் மனைவியுடன் ஊட்டிக்கே கலகலப்புடன் திரும்புகிறார் அவர்.
முடிவு சுபமே!
இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.