நடிகர் திலகத்தின் சாதனை பட்டியலை எழுதிக்கொண்டிருக்கும் போது கட்டபொம்மன் படத்திற்கு இரண்டு தினங்களை தனியாக ஒதுக்கி எழுத வேண்டிய அளவிற்கு முதன் முதல் சாதனைகளை புரிந்திருந்தது அந்த படம். சாரதா அவர்கள் அந்த படம் சந்தித்த எதிர்ப்புகளை பற்றி எழுதியிருந்தார். அதை பற்றிய சில செய்திகளை அண்மையில் பழைய பேசும் படம் இதழ்களை புரட்டிய போது காண நேர்ந்தது.
1959 வருடம் செப்டம்பர் மாதம் பேசும் படம் இதழில் ஒரு கேள்வி பதில்.
சங்.பழனியப்பன்,மதுரை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹாலிவுட்டில் பிறந்திருந்தால்---?
அவரது உருவத்தை தாங்கி வரும் சுவரொட்டிகளில் சாணம் வீசப்பட்டிருக்காது.அவரது படத் தலைகள் கிழிந்திருக்காது. தமிழர் வாழ்வதை தமிழரே பொறுக்காத விசித்திர நாடு இது.
அதே இதழில் வாசகர் கடிதம் பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டு கடிதங்கள்.
தகுமா இந்த செயல்?
தமிழகத்தின் தலை சிறந்த நடிகர் நடிகர் திலகம் கட்டபொம்மன் மூலம் உலகிலேயே சிறந்த நடிகர் எனப் பாராட்டப்படுகிறார். அழியா புகழ்ப் பெற்ற கணேசனிடம் பொறாமை கொண்டு வெதும்பி தவிக்கும் புல்லுருவிகள் கட்டபொம்மன் சுவரொட்டிகளை கிழிப்பதும் அவற்றின் மேல் சாணமடிப்பதுமான இழிசெயல் புரிந்து வருகின்றனர். சிவாஜிகணேசன் படமுள்ள சுவரொட்டிகளில்தான் இந்த அநியாயம் நடக்கிறது.ஆனால் தமிழர்கள் கலையைப் பாராட்டும் பெரும் மனப்பான்மையை இன்னும் இழந்து விடவில்லை என்பது இந்த புல்லுருவிகளுக்கு தெரியுமா? நடிகர் திலகம் நம்மிடையே இருப்பதே நமக்கு பெருமை தருவதாகும் சுவரொட்டிகளை பாழ்ப்படுத்தி விட்டால் அவர் புகழ் அழியாது; மாறாக உயரும் இதை இந்த பச்சோந்திகள் உணர வேண்டும்.
அ. சம்பந்தன்
சென்னை
இதுதான் கண்ணியமா ?
சென்ற 16.05.1959 அன்று சயானியில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" முதற் காட்சிக்கு சென்றிருந்தேன். அன்று மாற்றுக் கட்சி தோழர்கள் பலர் வந்திருந்தார்கள். பட ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்கள் சிவாஜிகணேசனின் நடிப்பை கிண்டல் செய்து கொண்டும் தங்கள் கட்சி நடிகரைப் பாராட்டியும் பேசிக் கொண்டிருந்தனர். படம் முடிந்து வெளி வரும்போது, மாலைக் காட்சிக்கு வந்திருந்தவர்களிடம்,"படம் மிகவும் மோசம். போரடிக்கிறது, நடிப்பும் மோசம்" என்று பொய்ப் பிரச்சாரம் செய்தனர். உண்மையில் ஒப்பிட்டுப் பார்க்கப் போனால், அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தயாரித்த அவர்கள் குறிப்பிட்ட ----- படமும் நடிப்பும் கட்டபொம்மனுக்கு எங்கோ ஒரு மூலை.கட்டபொம்மனில் சிவாஜி கணேசனின் நடிப்பு பிரமாதம் என்று படம் பார்க்கும் நடுநிலையாளர் கூறும்போது, இவர்களுக்கு ஏன் இந்த பொறாமை? இப்படி துஷ்பிரசாரம் செய்வது தான் இவர்களது கண்ணியமா, கடமையா,கட்டுப்பாடா?
ச. குமரகுரு
பெரம்பூர் பாரக்ஸ்.
ஆனால் இந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி கட்டபொம்மன் பெற்ற வெற்றி மகத்தான ஒன்றாகும்
அன்புடன்
PS: இந்த பழைய பேசும் படம் இதழ்களில் வெளியாகி இருக்கும் இந்த செய்திகளை எனக்கு அனுப்பி தந்த நண்பர் பாலகிருஷ்ணன் (abkhlabhi) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.