கட்டுரையின் பாகம் 1க்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post357900
15th January 2009, 02:01 PM
ஆண்டவன் கட்டளை - Part I
தயாரிப்பு - பி.எஸ்.வி. பிக்சர்ஸ்
இயக்கம் - கே. சங்கர்
வெளியான தேதி - 12.06.1964
கொண்ட கொள்கையில் உறுதியாக, கடமையே வெற்றிக்கு வழி என்று வாழும் ஒரு மனிதன் உணர்வுகளுக்கு அடிமையானால் அவனது வாழ்க்கை எந்தளவிற்கு திசை மாறி, நிலை தடுமாறி போகும் என்பதை திரையில் வடித்த படம்.
கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழ்பவர். டிசிப்ளின் என்ற வார்த்தையின் மறு உருவம். அவர் கடையை கடந்து போகும்போது கடை முதலாளி கடிகாரத்தில் நேரத்தை சரி பண்ணி வைத்து கொள்ளக்கூடிய அளவிற்கு, அவர் சாலையை கடக்கும் போது போக்குவரத்து போலீஸ் டிராபிக்-ஐ நிறுத்த கூடியளவிற்கு பெர்பெக்ட்.
தான் மட்டுமல்ல தன் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். திறமையுள்ள மாணவன் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாமல் ஹோட்டலில் வேலை பார்ப்பதை பார்த்து விட்டு தானே பணம் கட்டி படிக்க வைக்கும் அளவிற்கு நல்ல மனம் படைத்தவர். அவரின் குணங்களினால் கவரப்பட்ட பெரும்பான்மை மாணவர்கள் அவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
ஊரில் அவரது தாய் மட்டும் தன் பேத்தியுடன் வசித்து வர, மாதம் ஒரு முறை தன் தாயை பார்க்க செல்வார் கிருஷ்ணன். செல்லும் போதெல்லாம் முறை பெண்ணை மணந்து கொள்ள சொல்லும் தாயை சமாளிப்பதே பெரிய வேலை. பிரம்மச்சரியத்தை முழுமையாக கடைப்பிடித்து கடமையே வெற்றிக்கு வழி என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ நினைக்கும் கிருஷ்ணன் திருமணத்தை விரும்பவில்லை. முறைப்பெண்ணும் (கோமதி) நகரத்தில் சந்தித்த ராமு என்ற இளைஞனை (கிருஷ்ணன் படிக்க வைக்கும் அதே இளைஞன்) காதலிக்கிறாள்.
அதே கல்லூரியில் படிக்கும் பெண் ராதா. அவளின் தாய் மாமன் மணி அந்த கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர். அவர் தன் பதவியை பயன்படுத்தி சில பல ஊழல்கள் செய்கிறார். ஆனால் தாய் மட்டுமே உள்ள ராதாவிற்கு தாய் மாமன் தயவில் வாழ வேண்டிய நிலைமை. மணிக்கு, கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியிலும் கிருஷ்ணனுக்கு இருக்கும் நல்ல பெயரை பார்த்து பொறாமையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரின் சில தவறுகளை கிருஷ்ணன் பப்ளிக்காக சுட்டிக்காட்டுவதால் அந்த வெறுப்பு கூடுகிறது.
பெண் வாசனையே இல்லாமல் வாழும் கிருஷ்ணன் ஒரு முறை லேடீஸ் ஹாஸ்டலுக்கு போக அங்கே விளக்கு அணைக்கப்படுவதால் நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் ராதா, கிருஷ்ணனை கட்டிப்பிடித்துக்கொள்ள முதல் முதலாக அனுபவிக்கும் பெண் ஸ்பரிசம் கிருஷ்ணனை சிறிது நிலை குலைய வைக்கிறது. கிருஷ்ணனை எந்த பெண்ணாலும் வீழ்த்த முடியாது என்று சக மாணவிகள் சொல்ல அதை ஒரு சவாலாக எடுத்து கொள்கிறாள் ராதா. அதன் பிறகு அவளது நடவடிக்கைகளில் மாற்றம். கிருஷ்ணனை கவர அவள் பல வழிகளை பயன்படுத்த அவர் மனதில் ஏற்படும் சலனம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை மாற்றி இறுதியில் அவரும் காதலிக்க தொடங்கி விடுகிறார். இது தெரிந்து மணி அவரை கல்லூரியில் அனைவருக்கும் முன்பில் அவமானப்படுத்தி விடுகிறான். அதுவரை கௌரவமாக வாழ்ந்த கிருஷ்ணன் வாழ்க்கையில் சறுக்கல்கள். ராதாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்பி வீட்டிற்கு வரும் கிருஷ்ணனிடம் சரி என்று ஒப்பு கொள்ளும் ராதாவின் தாயார் ஆனால் மனதுக்குள் வேறு திட்டம் போடுகிறாள்.
இதனிடையே ராதாவிற்கு வேறு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்யும் குடும்பத்தினர் ஒரு சுரங்கத்தில் என்ஜினீயர் வேலை செய்யும் சங்கர் என்பவரை தேர்வு செய்கிறார்கள். அவர் மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். கல்யாணத்திற்கு ஒப்பு கொள்ள மறுக்கும் ராதா, கிருஷ்ணனை சந்தித்து கல்யாணம் செய்து கொள்ள போகும் நேரம் ஏற்படும் படகு விபத்து அவர்களது வாழ்க்கையை திசை திருப்புகிறது. ராதாவை கொன்று விட்டதாக கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மகன் கொலை குற்றவாளி என்று தெரிந்ததும் அவரை காண வரும் தாயும் அங்கே உயிரை விட அனாதை ஆகிறார் கிருஷ்ணன்.
தண்டனை காலம் முடிந்து வரும் கிருஷ்ணனை வரவேற்க யாரும் இல்லை. அவர் வளர்த்த நாயும் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறந்து போக கிட்டதட்ட ஒரு துறவு நிலைக்கு போய் விடுகிறார். அப்படியே அலைந்து திரியும் அவரை அவரது பழைய மாணவன் சந்திக்கிறான். இப்போது அவருடன் அவரது அக்கா மகள் கூட இருக்கிறாள். அவர்கள் சென்று வேலை தேடும் இடம் ஒரு சுரங்கம். அங்கே தலைமை பொறுப்பில் இருப்பவர் சங்கர்.
இதனிடையே தண்ணீரில் வீழ்ந்த ராதா காப்பாற்றப்பட்டு, அந்த எஞ்சினியர் சங்கர் வீட்டில் இருக்கிறாள். ஆனால் அம்னீஷியா பாதிக்கப்பட்ட அவளுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் இல்லை. இந்த நிலையில் ராதா - கிருஷ்ணன் சந்திப்பு நிகழ்கிறது. ராதாவை பார்க்கும் கிருஷ்ணனுக்கு திகைப்பு, ஆச்சர்யம், கோவம் எல்லாம் ஏற்படுகிறது. ஆனால் ராதாவிற்கு எதுவும் நினைவில்லை. இதனிடையே ராமு அந்த சுரங்கத்திற்கே எஞ்சினியராக வந்து சேருகிறான். எப்படி அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வருகின்றன என்பதே கிளைமாக்ஸ்.
(தொடரும்)
அன்புடன்
பாகம் 2க்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post357902
15th January 2009, 02:05 PM
ஆண்டவன் கட்டளை - Part II
இந்த படத்தை பொருத்த வரை ஆலய மணி என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் - பி.எஸ்.வீரப்பா - கே.சங்கர் கூட்டணியில் வெளி வந்த அடுத்த படம்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மாறும்போதெல்லாம் அவரின் கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறுவது குறிப்பிட வேண்டிய விஷயம். கடமை உணர்வோடு வாழும் புரொபெஸராக வரும் போது நடு வகிடு எடுத்த ஹேர் ஸ்டைல். காதல் வயப்படும் போது அழகான ஹேர் ஸ்டைல் (புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வரும் அதே ஸ்டைல்), குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் போது நெற்றியில் முடி வழியும் ஸ்டைல், துறவு போன்ற நிலையில் மொட்டை அடித்தது போன்ற ஸ்டைல். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் போன்றவையே இப்படி என்றால், நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?
புரொபஸர் வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனி. ஜுலியஸ் சீசர் பற்றி அவர் விளக்குவது, எப்படி came, saw, conquered ("vili,vidi,vitti "- Prabhu, correct-aa?) சீசருக்கு மட்டுமே பொருந்தும் அதை ஆண்டனிக்கு உவமைப்படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதம், சாக்ரடீஸ் பற்றி எடுக்கும் லெக்சர், (Those who cannot obey cannot command என்று மாணவனை அடக்குவது) எல்லாமே ஒரு கண்டிப்பான புரொபஸரை கண் முன்னே நிறுத்தும். அதே மனிதன் மெல்லிய ஆனால் வலிமையான உணர்வுகளால் சலனப்படும்போது எப்படி மாறுவான் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். ஹாஸ்டல் நிகழ்ச்சி மனதை அலைக்கழிக்க, வீட்டில் இருக்கும் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் படங்களை பார்த்தும், புத்தகத்தை படித்தும் மனத்தை அமைதிப்படுத்துவது, மழை காரணமாக ராதாவுடன் ஏற்படும் ஒரு நிமிட நெருக்கம், அதை உணர்ந்தவுடன் curse the rain என்று கத்தி விட்டு பிறகு தவறு தன் மீது தான் என்று உணர்ந்ததும் bless the rain என்று சொல்லி விட்டு போவது, வகுப்பறையில் பாடம் எடுக்க முடியாமல் திணறுவது, ராதாவின் தாயார் கேட்கும் பணத்திற்காக சேட் கடையில் பணம் வாங்கும் போது அங்கு வேலை செய்யும் தன் ஊர்க்காரனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திரும்பவது, கடைக்கு வெளியே சந்திக்கும் ராமுவையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பது, எல்லாம் துறந்த மன நிலையை வெளிபடுத்தும் அந்த நடை, அந்த பாடி லாங்க்வேஜ், வேலைக்கு சென்ற இடத்தில் சந்திக்கும் ராதாவிற்கு தன்னை தெரியவில்லை என்றவுடன் ஏற்படும் அந்த ஷாக், இவை எல்லாமே ஒன்றை ஒன்று வெல்லக் கூடியவை.
ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு நுட்பமாக கவனித்து செய்வார் நடிகர் திலகம் என்பதற்கு இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகள் போதும். பூங்காவில் மழையில் திடீரென்று ஏற்படும் இடி மின்னல் காரணமாக தன்னை அணைத்து கொள்ளும் ராதாவை அவரும் அணைத்து கொள்ள தேவிகா சொல்லும் வசனம் "மழை அழகா இருக்குலே". அதற்கு அவர் சொல்லும் பதில் "வானம் என்ற தந்தை பூமி என்ற அன்னையை அணைக்கும் காட்சி தானே மழை". இதை இரண்டாம் முறையும் சொல்லுவார். வசனத்தை அவர் சொல்லும் போது சிறிது blurred ஆக கேட்கும். அதாவது மழை கொட்டிக்கொண்டிருக்கும் போது நாம் ஏதாவது பேசினால் அது தெளிவாக அடுத்தவர் காதுக்கு விழாது. அதை அத்தனை நுட்பமாக செய்திருப்பார். [நண்பர் பிரபு ராம் பாணியில் சொல்வதென்றால் நேரொலியில் பேசியிருந்தால் அற்புதம். டப்பிங்கில் பேசியிருந்தால் அதி அற்புதம்]. மற்றொன்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆறு மனமே ஆறு பாட்டின் முடிவில் கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே வரும் நடை (அந்த நீளமான நடையை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள்). அது போல அழகே வா அருகே வா பாட்டில் அவர் முகத்தை பார்த்தாலே அந்த பாத்திரம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளும் அப்படியே வெளிப்படும். ரசிகர்களுக்காகவே சில ஸ்டைல் நடைகள், அமைதியான நதியினிலே ஓடம் பாட்டிலும் அது தூக்கலாக இருக்கும்.
ஜெயிலில் நடக்கும் தாய் மகன் சந்திப்பையும் சொல்ல வேண்டும். தன் மகன் கொலைகாரன் என்று கேள்விப்பட்டவுடன் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் போய் அவனை சபித்து உயிர் விடும் தாய், தான் நிரபராதி என்பதை தன் தாய் கூட நம்பவில்லையே என்று கதறும் மகன், கல்லூரி மைதானத்தில் அனைத்து மாணவர்களுக்கு முன்பில் அவமானப்படும் புரொபஸர், இந்த இரண்டும் குறிப்பிடத்தக்க காட்சிகள்.
தேவிகாவிற்கு ரொமான்ஸ் நன்றாக வரும் என்பது தெரியும். [பாலிருக்கும் பாடல், நான் என்ன சொல்லி விட்டேன் பாடல்,மடி மீது தலை வைத்து பாடல், கர்ணன் படத்தில் முதல் சந்திப்பு, கண்கள் எங்கே மற்றும் இரவும் நிலவும் பாடல், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் மற்றும் நீலவானம் படம்].
ஆனால் இந்த படத்தில் தேவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதலில் சாதாரணமாக வருபவர் ஒரு seductress பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார். கிளாஸில் பாடம் நடத்தும் புரொபஸரை பார்க்கும் அந்த பார்வை, நமது மனதில் இருக்கும் நமது எதிரிகளான நுட்பமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று சொல்லும் புரொபஸரிடம் தனியாக வந்து அது என்ன என்று அப்பாவி போல கேட்பது, அழகே வா பாடலில் அந்த கடலில் குளித்து கொண்டே அவர் செய்யும் movements, புரொபஸர் தன்னை அனைத்துக்கொண்டதை ரசித்து கொண்டே கையை எடுக்கிறீங்களா என்பது, I am sorry என்று சொல்பவரிடம் But,I am not sorry என்று சொல்வது, what do you mean என்று அவர் கோபப்பட, இதுக்கெல்லாம் எப்படி சார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் நீரை அவர் மீது செல்லமாக விசிறி விட்டு செல்வது - தேவிகாவிடம் இவ்வளவு காதல் குறும்பு நரம்புகளா என்று வியப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வேலை இல்லை.
மற்ற காரக்டர்கள் எல்லாம் படத்திற்கு உதவி செய்பவை. ஆனால் முழு நீள பாத்திரங்கள் அல்ல. சந்திரபாபு முற்பகுதியில் கொஞ்சம் அதிகமாக வருவார். ஆனால் காமெடி குறைவு தான். நடிகர் திலகம் படிக்க வைக்கும் மாணவனாக மற்றும் அவரது முறை பெண்ணை காதலிப்பவராக ராஜன், as usual. இளமையான புஷ்பலதா, மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் மெஜெஸ்டிக்கான பாலாஜி, இரண்டு மூன்று காட்சிகளிலே பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி விடும் சுந்தரி பாய் (ஏன் ஒரு பணக்கார மாப்பிளையை தேடுகிறேன் என்பதற்கு அவர் தேவிகாவிடம் விளக்கம் சொல்வது, பிறந்தது முதல் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியின் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்), வழக்கம் போல அசோகன் (இந்த வருடத்தில்[1964] தான் அசோகன், நடிகர் திலகத்தோடு நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. கர்ணன், ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து], கௌரவ தோற்றத்தில் ஜாவர், வீரப்பா, நாகையா ஆகியோர்.
ஜாவர் திரைக்கதை வசனம் பல இடங்களில் அவரது புத்தி கூர்மையை பறை சாற்றும். ஒரு குறை என்னவென்றால் கொஞ்சம் தூய தமிழ் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றிருக்கிறது. அது இயல்பான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தம்புவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். ராஜன் புஷ்பலதா டூயட் பாடலான கண்ணிரெண்டும் மின்ன மின்ன- வின் போது திரை முழுக்க அருவி, அதற்கு முன்னாள் ராஜன், புஷ்பலதா, அழகே வா பாடலின் போது வர்கலாவில் (கேரளா) தென்னை மரங்களோடு கடல் வந்து பேசும் காட்சிகள், அதன் சுற்று வட்டாரத்திலே எடுக்கப்பட்ட அமைதியான நதியினிலே ஓடம் (அந்த படகு காட்சிகள் எவ்வித ஜெர்க்மின்றி இருக்கும்), இதை தவிர படம் முழுக்க கண்ணை உறுத்தாத காமிரா.
இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் வந்த மிக சிறந்த பாடல்களாக இந்த படத்தின் பாடல்களை குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். அமைதியான நதியிலே ஓடம் பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணில் கண்ணீர் அரும்புவதையும் பார்த்திருக்கிறேன். கண்ணதாசனின் மிக சிறந்த தத்துவ பாடலாக ஆறு மனமே ஆறு பாடலை சொல்லுவதையும் கவனித்திருக்கிறேன். [நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்]. இந்த பாடல் அறுபடை வீடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் . குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர் சோலையிலும் (அழகர் கோவில்) ஷூட்டிங் நடக்கும் போது கட்டுகடங்காத கூட்டம் என்று சொல்வார்கள். பாடல் பார்க்கும் போதே Frame- ல் மக்கள் கூட்டம் கூட்டமாக தெரிவார்கள். அதை கஷ்டப்பட்டு மறைத்து எடுத்திருப்பார்கள். அதுவும் அழகர் கோவிலில் விவேகானந்தர் உடையில் வெளி பிரகாரத்தில் நடிகர் திலகம் நடக்கும் ஸ்டைல் (பின்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும் கணேசன்), தியேட்டரில் மட்டுமல்ல, நேரில் பார்த்தவர்களும் கை தட்டியது சரித்திரம்.
இது தவிர சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில் அழகே வா (சாதாரணமாக ஈஸ்வரி பாடும் சூழ்நிலை), பி.பி.எஸ் - ஈஸ்வரியின் கண்ணிரெண்டும் மின்ன மின்ன, சந்திரபாபுவிற்காகவே அமைக்கப்பட்ட சிரிப்பு வருது பாடல் எல்லாமே ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகவே குடியிருப்பவை.
இவை எல்லாம் அமையப் பெற்றதால் இயக்குனர் சங்கரின் வேலை எளிதானது. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் நூறு நாட்கள் என்ற வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனது வருத்தமான விஷயம். எனக்கு தோன்றுவது இரண்டு காரணங்கள். படத்தின் முடிவுக்கு இட்டு செல்லும் இடங்களில் அது வரை இருந்த இயல்பு போய் சிறிது செயற்கை நுழைந்து விட்டது ஒரு காரணம். இரண்டு, வெளியான வருடம் -1964. இந்த படத்திற்கு முன் கர்ணன், பச்சை விளக்கு, இந்த படத்திற்கு பின் கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி. ஆக இப்படிப்பட்ட படங்களுக்கு இடையில் வெளி வந்ததால் இந்த படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனதோ என்று தோன்றுகிறது. 70 நாட்கள் ஓடியது இந்த படம்.
1964 மே 27 அன்று ஜவகர்லால் நேரு மறைந்து போனார். 1964 ஜூன் 12 அன்று வெளியான இந்த படத்தின் இறுதி காட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வகுப்பறையில் நடிகர் திலகம் பேசுவது போல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
பல முறை பார்த்திருந்தும் இப்போது பார்த்த போது தோன்றிய எண்ணங்களை இங்கே எழுதியிருக்கிறேன்.
அன்புடன்
.