-
எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை மற்றவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, திட்டமிட்டதற்கு முன்னரே முடித்துக் கொடுத்தார். சுருக்கமாகச் சொன்னால், என் சுமையை அவர் தன் சுமையாக்கிக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். ஏற்கெனவே "நாடோடி மன்னன்' படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்த போதிலும், அவர் சமூகப் படத்தில் மிகச் சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை'. எம்.ஜி.ஆருடைய மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' ஏழு திரையரங்குகளில் வெற்றி விழா கொண்டாடி வரலாறு படைத்தது.
எங்க வீட்டுப் பிள்ளையின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர். தனக்கு அதிக லாபம் வந்ததால் ஒரு தொகையை எங்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா இண்டர்நேஷனல் பெயரில் ஒரு லட்ச ரூபாய்க்கான செக் அனுப்பி வைத்தார். அத்துடன், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தொகையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.
ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை உங்கள் விருப்பப்படி தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள்' என்ற கடிதத்துடன் செக்கை திருப்பி அனுப்பிவிட்டோம்.
வாழ்வில் எவ்வளவோ பேரைத் தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தோளில் சுமந்தார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
"எங்க வீட்டுப் பிள்ளை' படம் எடுத்து முடித்த நேரம். தமிழகம் எங்கும் படம் வெளியிட்டாகி விட்டது. நாளுக்கு நாள் அதற்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம். மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க அவர் ஆசைப்பட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். சென்னையில் "எங்க வீட்டுப் பிள்ளை' நடைபெற்ற ஒரு திரையரங்குக்கு அவருடன் நானும் சென்றேன்.
சென்ற இடத்தில் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டார்கள். அவரைச் சூழ்ந்துவிட்டனர். கூட்டத்தில் நான் சிக்கிக் கொண்டேன். எம்.ஜி.ஆர். எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போய்விட்டார். நானோ, மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன். எளிதாக, அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர என்னால் முடியவில்லை. காருக்கு அருகே சென்றதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடிப் பார்த்தார். நான் அங்கு இல்லை .உடனே, அவர் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். என்னை அலக்காகத் தூக்கி தன் தோளிலே வைத்தார். ஒரு ஹீரோ மாதிரியே தூக்கி என்னை காரில் வைத்துவிட்டு "விர்'ரென்று நடந்தார் தன் காரை நோக்கி.
வேறு காரில் என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நம்பி வந்தவரை, காரியம் முடிந்தவுடன் நடுவழியில் விட்டுச் செல்லாமல் அவரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.
மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மகிழ்ச்சி உணர்வுடன் நான் இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆரோ ஏதும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக இருந்தார். இந்தப் பண்பு, தோழமை உணர்வுதான் அவரை தமிழகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.
-
ஏவி.எம். தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் `அன்பே வா'
ஏவி.எம். தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம், ஏவி.எம்.ஸ்டூடியோவின் முதல் கலர்ப்படம் என்ற பெருமைக்கு உரியது "அன்பே வா." எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்தார். நடிகர் அசோகன், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். ஏவி.எம். சரவணனுக்கும் நண்பர்.
"ஏவி.எம். பெரிய படக்கம்பெனி. அதில் நீங்கள் நடிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆரிடம் அசோகன் அடிக்கடி கூறுவார். அதேபோல் சரவணனிடம், "எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய நடிகர்! அவரை வைத்து நீங்கள் படம் பண்ண வேண்டாமா? என்று கேட்பார்.
அசோகன் முயற்சியால் "அன்பே வா" படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். மொத்தம் 72 நாள் "கால்ஷீட்" கொடுத்தார். "அன்பே வா" படத்திற்கான கதையை ஏ.சி.திருலோகசந்தர் எழுதினார். கதை, முழுக்க முழுக்க எம்.ஜி. ஆர். பாணியில் இருந்து மாறுபட்டது.
எஸ்டேட் ஒன்றின் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர், தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் எஸ்டேட் பங்களாவில் தங்குகிறார். அங்கு சரோஜாதேவியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் காதலையும், ஊடலையும் வைத்து, கதை சுவையாகப் பின்னப்பட்டிருந்தது. அரசியல் பிரசாரம் அறவே இல்லை.
இதற்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.விசுவ நாதன். பாடல்கள் வாலி. டைரக்ஷன் திருலோகசந்தர். சிம்லா, ஊட்டி முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
1966 பொங்கல் தினத்தன்று வெளியான "அன்பே வா" மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.
நடிப்பு, இசை, படப்பிடிப்பு எல்லாமே தரமாக அமைந்திருந்தன.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்", "புதிய வானம் புதிய பூமி", "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தி யைத்தான்", "அன்பே வா", "லவ் பேர்ட்ஸ்" முதலிய பாடல்கள் ஹிட்டாயின.
எம்.ஜி.ஆர். அதுவரை நடித்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் "அன்பே வா"வும் ஒன்று. இந்தப் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம். சரோஜா தேவிக்கு ரூ.90 ஆயிரம்.
-
‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.
இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.
முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.
ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.
கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.
அதனை இப்போது காண்போமா?
“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.
அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?
ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?
இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!
“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!
பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!
இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.
நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!
“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”
பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?
இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!
“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.
இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!
இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?
“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”
- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?
“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”
என்றும்,
“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”
என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.
-
உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.
‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.
தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.
கவிஞருக்கு, சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.
கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.
“என்……
கண்ணனுக் கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக் கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”
எனத் தொடங்கி,
“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”
என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.
இரண்டாவதாக,
ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!
பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”
என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’
“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”
என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.
மூன்றாவதாக,
பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன் கதை சொன்னான்!”
இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;
பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக் கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”
எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,
காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,
ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு!”
என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.
எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.
அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.
இப்படத்தில், இன்னும்,
பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே கை படலாமா?”
என்று தொடரும் பாடலில்,
பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”
என்றே எழுந்து வரும் வரிகளும்:
ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”
இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.
சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?
அதற்கும் கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!
“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”
பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!
வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.
காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.
உள்ளமெனும் தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.
வாழ்த்துவதைப் பாருங்களேன்!
வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை வென்றுவிடும்
படையைக் காட்டு!”
பார்த்தீர்களா?
பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!
அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?
வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!
சரிதானே! இவை போதுமா?
“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”
எப்படியாம்?
உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!
சிந்தையைத் தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!
அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.
இவையும் போதா? இன்னும்……
“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான்
சுயமரியாதை! – நல்ல
மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை!….”
ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.
அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.
இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?
படத்தின் உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;
“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல் நீ வாழலாம்!”
என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.
மற்றவரைப் பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.
அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.
“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”
‘இங்கும், மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.
மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!
மானத்தொடு, நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’
அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!
இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….
“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”
என்னே அருமை!
பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?
பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!
(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)
அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..
“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”
அடேயப்பா!
‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’
இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!
எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.
இவற்றிற்கெல்லாம் ஏதேனும் அடிப்படைக் காரணங்கள் இருக்குமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவற்றைக் கண்ணதாசனே சொல்லக் கேட்போமே! வாருங்கள்!
-
ஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் பாடல்களோடு, எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில், ஜெயலலிதா, லட்சுமி ஆகிய இருவரோடு நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ 14.1.1970 அன்று, தமிழர் திருநாளில் வெளியானது.
சென்னையில் ‘மாட்டுக்கார வேலன்’ திரையிடப்பட்ட பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி ஆகிய நான்கு திரையரங்குகளிலும், தொடர்ந்து தினமும் மூன்று காட்சிகளுக்குக் குறையாமல் நூறு நாள்கள் ஓடி சாதனைச் சரித்திரம் படைத்தது.
இத்தகு சாதனைக்குரிய படத்தில், நம் சாதனைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன.
டி.எம்.எஸ். குரல் கொடுத்து, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிக்காகக் கவிஞர் தந்த பாடல்… ஒன்று… இதோ!….
“ஒரு பக்கம் பாக்குறா!
ஒரு கண்ணெ சாய்க்குறா! – அவ
உதட்டை கடிச்சுக்கிட்டு – மெதுவா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா!….”
பாடலின் தொடக்கம் கண்டீர்!
நாற்பது வயதை எட்டி நிற்கும் பலருக்கும் பாடல் முழுமையும் நினைவுக்கு வரலாம்… இல்லையெனில் பாடல் காட்சியாவது நினைவுக்கு நிச்சயம் வரலாம்?
அடுத்து…
“தொட்டுக் கொள்ளவா… நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா!
பட்டுக் கொள்ளவா…மெல்லப்
பழகிக் கொள்ளவா!”
என்று தொடங்கி…..
“தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும்போது குலுங்கும் இசை ஆயிரம்”
என்றே வளரும் இனிய பாடலையும் கவியரசர் படைத்திட்டார்.
சத்தியம் நீயே! தர்மத்தாயே!
‘கோமாதா எங்கள் குலமாதா’, எனப் பால் கொடுக்கும் பசுவின் பெருமையைப் பாடிப் புகழ்ந்தவரே கண்ணதாசன்.
அவர்தான் மாட்டுக்கார வேலன் மகிழந்து, பசுவைப் புகழ்ந்து பாடுவதற்காக அருமையான பாடலொன்றை ஆக்கித் தந்தார்.
அப்பாடல்தான்,
“சத்தியம் நீயே! தர்மத்தாயே!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!
குங்குமக் கலையோடு குலங்காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே!
காலையில் உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ்நாட்டுப்
பெண்ணே!”
இப்படித் தொடங்கும் பாடல்.
இப்பாடல் காட்சியில் ஆரவாரத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தோன்றிடும்போது, திரையரங்குகளில் எழுந்த கரவொலி ஒசைகள், ஆர்ப்பாட்ட ஆனந்தக் காட்சிகள் அப்பப்பா….! அந்தக் காலகட்டங்கள்…. இனி திரையுலகில் திரும்புமா?
இப்பாடல் முழுவதுமே கருத்துகளை அள்ளி அள்ளித் தரும் அழகோ, தனி அழகுதான்! கேளுங்களேன்!
“பால் கொடுப்பாய்! அது தாயாரைக் காட்டும்!
பாசம் வைப்பாய்! அது சேயாகத் தோன்றும்!
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ!…..”
கேட்டீர்களா?
என்னே விநோதம்!
‘அன்பான தமிழாம்….
அதற்கு ‘அம்மா!’ என்றழைக்கின்ற சொல்லைத் தந்ததே பால் கொடுக்கும் பாசமுள்ள பசுவாம்!’
இன்னும் பெருக்கெடுத்து வரும் இனிய வரிகளைத்தான் வாசிப்போமே….!
“வளர்த்தவரே உன்னை மறந்துவிட்டாலும்,
அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும்,
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்!
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்”
வாசித்தோம்….!
யோசிப்போம்!
‘நன்றி மறவாத, பேசும் வாய் இல்லாத செல்வம்… அந்தப் பசுவிற்குப் பேசும் வாய் இருந்தால்… அதுவே மொழிபேசும் தெய்வமாம்!’
‘கண்ணதாசா! கருத்துக் கவிக்கடலே! உன்னை எப்படியப்பா தன் எண்ணத்திலிருந்து எம்.ஜி.ஆரால் அகற்ற முடியும்?’ என்றல்லவா இக்கவிஞர், இன்றிருந்தால் நாமும் கேள்விதனைக் கேட்போம்! அப்படித்தானே!
பாடலின் முடிந்த முடிவு!….
“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு!”
சரிதானே!
‘நார், இலை, பூ, தண்டு, பழம் என அனைத்தையும் கொடுக்கும் வாழைக்கு ஈடே பசு…. குடும்ப வாழ்க்கை நடத்தும் சம்சாரிக்கு ஒரு பசுவே போதும். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பசுவுக்கு ஈடாகாது. எனவே அப்பசுவைப் பூப்போல வைத்துக் காப்பதே எனது பாடாகிய உழைப்பின் உயர்வாகும் என்று மாட்டுக்கார வேலனாய் நின்று எம்.ஜி.ஆர். சொல்லும் தத்துவம், என்றைக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவந்தானே’.
இந்தத் தத்துவத்தைப் படத்தில் கூறி நின்ற எம்.ஜி.ஆரும்; பாடலில் தந்த கண்ணதாசனும் என்றும் தமிழகத்தின் தத்துவ நாயகர்களே எனில் தவறாகா.
இப்படத்தின் பாடல்களைப் பாடிய டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும், ஒலித்த அவர்களின் குரல்க்ள மூலம் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் நிஜமே.
-
சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.
அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.
ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.
அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.
புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.
தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.
அவர் பாடும் திரைப்பாடல்:-
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
இந்தப் பாடல் பாடப் படும்போது இளவரசர் ராஜராஜரும் அரசப் பிரதிநிதி ஜயங்கொண்ட மாறவர்மரும் மேலும் மேலும் கோபப் படுகிறார்கள். இருந்தாலும் சாளுக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் என்பதால் முழுப் பாடலையும் அனுமதிக்கின்றனர்.
பாடல் முடிவடைந்ததும் பாடலை மெச்சி சாளுக்கிய இளவரசியே புலவருக்கு மாலை அணிவிக்கப் போகிறார். புலவர் அதைக் கையில் பெற்றுக் கொள்கிறார்.
-
-
-
-