-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
‘தர்மோ ரக்க்ஷதி ரக்க்ஷித’
சாலிவாஹனன் என்ற திரைப்படத்தில் தலைவருக்கு சிறிய வேடம். அதில் நடித்த கதாநாயக நடிகருடன் தலைவருக்கு கத்தி சண்டை காட்சி. கதாநாயகனை விட தலைவர் சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்திருக்கிறார் (தெரிந்ததுதானே?). இது குறித்து இயக்குநரிடம் கதாநாயக நடிகர் புகார் செய்துள்ளார். படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாக இருந்தார். இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டண்ட் நடிகரிடம் தலைவர் தனது நிலையைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அந்த ஸ்டண்ட் நடிகரும் தலைவருக்கு ஆறுதல் கூறினார். ‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள், வருந்தாதீர்கள்’ என்று அன்பாக பேசியுள்ளார்.
அதன்படியே, சில ஆண்டுகளில் தலைவர் கதாநாயகனாக உயர்ந்தார். தான் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தில் அந்த ஸ்டண்ட் நடிகருக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க தலைவர் உதவினார். தான் உயர்ந்தபோது தனக்கு ஆறுதல் கூறிய அந்த ஸ்டண்ட் நடிகரையும் படத் தயாரிப்பாளராக உயர்த்தி விட்டார். அந்த ஸ்டண்ட் நடிகர்......... இன்று நூற்றாண்டு காணும் சாண்டோ திரு.சின்னப்பா தேவர் அவர்கள். தலைவர் நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம் தாய்க்குப் பின் தாரம்.
இடையில் சில காலம் தலைவருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அந்த ஊடலால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் தலைவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது.
தலைவர் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். தலைவருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நல்ல உள்ளங்கள் ஏங்கித் தவித்த நேரம். அந்த நிச்சயமில்லாத நிலையில், தலைவரை மருத்துவமனையில் சந்தித்து ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்த நம்பிக்கையின் சிகரம் தேவர் அவர்கள்.
‘தலைவர் மீண்டும் நடிப்பது நிச்சயம் இல்லாத நிலையில், பணம் கொடுக்க வேண்டுமா? ’என்று சிலர் கேட்டபோது, ‘அவர் (தலைவர்) தாய்க்குப் பின் தாரம் படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுதாக சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக் கொள்கிறேன் போ..’ என்று கூறிய பெருந்தகையாளர் தேவர் அவர்கள். (இதுபற்றி திரையுலக அனுபவங்கள் பற்றிய தனது தொடர் கட்டுரையில் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் விரிவாக கூறியுள்ளார். அது விகடன் பிரசுரத்தின் சார்பில் ‘கோட்டையும் கோடம்பாக்கமும்’ என்ற புத்தகமாகவும் வெளிவந்துள்ளது) தலைவர் சிகிச்சை பெற்றுவந்தபோது சென்னை தியாகராய நகரில் உள்ள அகத்தியர் கோயிலில், தலைவர் பெயருக்கு தினமும் அர்ச்சனை செய்து கோயில் பிரசாதத்தை தலைவரை சந்தித்து கொடுத்து விரைவில் குணமடைய பிரார்த்தித்த நட்பின் இலக்கணம் தேவர் அவர்கள்.
முருகனுக்கு அமைந்தது ஆறுபடை வீடுகள் அல்ல, ஏழுபடை வீடுகள் என்று கூறுமளவுக்கு மருதமலை முருகன் கோயிலை ஏழாவது படைவீடாக மாற்றிய தேவர் அவர்கள், அக்கோயிலுக்கு மின்விளக்கு வசதிகளை தனது சொந்த செலவில் செய்து, அதை விளக்கேற்றி வைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான தலைவரை விட்டே தொடங்கச் செய்தார். (அப்போது மருதமலை கோயில் படிகளில் தலைவரும் தேவரும் இறங்கி வரும் படம் நமது திரியில் பதிவிட்டுள்ளோம்)
அந்த ஆழ்ந்த நட்புணர்வின் அடையாளமாகத்தான் தேவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் முதல்வர் என்ற பந்தா ஏதுமின்றி பிரிவைத் தாங்காது துயரில் ஆழ்ந்த ஆத்மார்த்தமான நண்பனாக தலைவர் நடந்தே சென்றார்.
இருவருக்கும் இடையிலான நட்பு, நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் உறுதியாக இருந்ததால்தான் தலைவரை வைத்து அதிக படங்கள் (16 படங்கள்) தயாரித்த தயாரிப்பாளர் என்ற பெருமையை தேவர் அவர்கள் பெற்றார்.
தேவர் - தலைவர் காம்பினேஷனில் படங்களை நாம் ரசிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், குடும்பத் தலைவன், நல்ல நேரம், சாதி வேறுபாடுகள் இன்றி ஊரே ஒற்றுமையாக ஒன்றுகூடி தேரிழுப்பதை நினைவூட்டும் தேர்த்திருவிழா, காதல், மானம், வீரம் என்று வாழ்ந்த தமிழனின் கண்ணியமான காதல் கலாசாரத்தை விளக்கும் தலைப்பான காதல் வாகனம், போன்ற வீட்டுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்டும் அந்த தலைப்புகளையே ரசிக்கலாம். அதுபற்றியே தனியாக ஒரு திறனாய்வு செய்யலாம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியை மீறாமல் மற்ற உயிர்களுக்கு உதவி வாழ்வதுதான் தர்மம். யாசகம் கேட்போருக்கு தட்டில் பத்தோ, இருபதோ போடுவது மட்டுமே தர்மம் அல்ல. இலட்சியத்தில் தெளிவு, அதை அடைவதற்காக ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி, தனிவாழ்வில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை, பணியில் வாய்மை, உற்றார், உறவினரை கைவிடாமல் ஆதரிப்பது, முடிந்த வகையில் சமூகத்துக்கு சேவை செய்வது, நல்ல குடும்பத் தலைவனாகவும் நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் இருந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தருவது எல்லாமே நமக்கு விதிக்கப்பட்ட தர்மம்தான். இந்த தர்மத்துக்கு எதிராக செயல்பட்டால் அது அதர்மம்.
மேலே குறிப்பிட்ட இந்த தர்மங்களை காப்பாற்றினால் வீடும் நாடும் செழிக்கும். அப்போது நாம் எல்லாருமே நன்றாக இருப்போம். இதைத்தான் பெரியவர்கள் ‘தர்மோ ரக்க்ஷதி ரக்க்ஷித’ என்று கூறினார்கள். தர்மத்தை நாம் ரட்சித்தால் தர்மம் நம்மை ரட்சிக்கும் என்பது பொருள். இதுதான் தேவர் - தலைவர் காம்பினேஷனில் வெளியான வெற்றிப் படத்தின் தலைப்பு.
தர்மத்தை நாம் ரட்சித்தால் அதாவது காப்பாற்றினால்....... நம்மை
‘தர்மம் தலைகாக்கும்’.
இதை உணர்ந்தால் எல்லாருக்கும் என்றும் எப்போதும்...
‘நல்லநேரம்’.
இதை தங்களது சொல்லால், செயலால், வாழ்வால் நாட்டுக்கு உணர்த்திய பெருமகனார்களான....
தீவிர முருகபக்தராய் விளங்கி சந்தனத்தையே சட்டையாய் அணிந்த தேவர் அவர்களின் புகழ் வாழ்க.
தேவரைப் போல வாழ்வில் பலரையும் உயர்த்திய தலைவரின் புகழ் ஓங்குக.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
விவசாயி படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடல் வரிகள் .
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
விவசாயி ..மட்டுமல்ல சினிமா
நமது இந்திய திரைப்படங்கள் , குறிப்பாக தமிழில் ... மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய நடிப்பில்
சாதித்த சாதனைகளை மறக்க முடியுமா ? எத்தனை ஹாலிவுட் நடிகர்கள் , படங்கள் அவர்கள் பட்டங்கள்
நம் ரசனைக்கு ஒத்து வராத மேற்கத்திய படங்கள் பற்றி கவலை இல்லை .மக்கள் திலகம் -இந்த பட்டத்திற்கு
ஈடு இணையேது ?
-
எம்ஜிஆர், நாகிரெட்டியார், சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் மூவருக்குமான நேரிய உறவை பற்றி சொல்லி சிலிர்க்க வைத்தார் ” ஆரம்ப காலத்தில் கோவையில் எம்ஜிஆருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சினிமா எடுக்க ஆசைப்பட்ட தேவர் தனது ஊரில் பலரிடமும் ஆயிரம் ஐநூறு என்று காசு வாங்கி ஒரு லட்ச ரூபாய் திரட்டி, நேராக வந்து நாகிரெட்டியாரை பார்த்து ‘இந்தாங்க . இதை வச்சு ஒரு படம் தயாரிக்க போறேன். மேற்கொண்டு காசுன்னு எதுவும் கேட்கக் கூடாது. நீங்கதான் எல்லாம் பாத்துக்கணும்’ என்று கொடுக்க, அதன்படியே தேவரின் தயாரிப்பில் வந்த படம்தான் தாய்க்குப் பின் தாரம். படம் சூப்பர் ஹிட். பிறகு எம்ஜிஆருக்கும் தேவருக்கும் மனஸ்தாபம் வந்து பிரிந்து தேவர் எடுத்த பல படங்கள் தோற்றுப் போக, எம்ஜிஆர் நாடகத்தில் நடித்த போது கால் உடைந்து அவருக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது இருவரும் மீண்டும் சேர்வதற்கும் காரணம் நாகி ரெட்டிதான்.அதன் பிறகு எம்ஜிஆரும் தேவரும் இணைந்து 15 படங்களை உருவாக்கினார்கள்.
courtesy - net
-
இரங்கல் செய்தி.
--------------------------
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களின் தாயார் இன்று மாலை
சென்னை சைதாபேட்டையில் காலமானார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக தன் தாயாரை இழந்து வாடும்
திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் மற்றும் ஆசி கிடைக்கட்டும்.
ஆர். லோகநாதன்.
தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.
-
-
-
-
-
-
MGR's Grandson MGCB Pradeep informed me about the demise of B.S.Raj's mother, my heartfelt condolences for his loss. May her soul rest in peace.