http://i1065.photobucket.com/albums/...pstijitx5b.jpg
Printable View
http://i1065.photobucket.com/albums/...psbofoz5qa.jpg
எங்க ஊர் ராஜா
நடிப்பின் கோர தாண்டவம்
இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.
http://i1065.photobucket.com/albums/...psfamjbpft.jpg
யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.
http://i1065.photobucket.com/albums/...pseb2gpwvd.jpg
வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.
!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)
பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...
பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.
தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.
பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.
!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.
நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.
நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.
ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் நடத்தியிருப்பார்.
http://i1065.photobucket.com/albums/...psew786ezo.jpg
நடிகர் திலகம் அவரின் கலைப்பயணம், அரசியல் ஈடுபாடு, பெருந்தலைவருடனான அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் அவர்களுடன் உரையாடுவது வழக்கம், அப்படி ஒரு முறை அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் அதை நானும் கவனித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்வை ஆராயும்போது கிடைக்கும் பரிமாணங்கள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது.
மற்றொர்ன்றுமில்லை. 1977 ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. அதன் முடிவகள் இன்னும் சரியாக சொல்லப் போனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளையும் அதன் சதவீத கணக்கையும் உற்று நோக்கினால் கிடைக்கும் உணர்வுகளைதான் குறிப்பிட்டேன். நாம் குறிப்பிடும் தேர்தல் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தேர்தல் என்று எளிதாக சொல்லி விடலாம் என்றாலும் கூட பல்வேறு கட்சிகள் தங்கள் வலிமையை உரைத்துப் பார்க்கும் ஒரு களமாகவும் விளங்கியது.
அப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அன்றைக்கு நான்கு முனை போட்டி நடந்தது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சி.பா. ஆதித்தனாரை அதிமுக ஆதரித்தது..இந்திய கம்யூனிஸ்ட் [வலது] காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. ஜனதா கட்சியும் திமுகவும் தனியே போட்டியிட்டன.
ஜனதா என்பது பெயர் மாறிய ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் அன்று இயங்கிய கட்சியினரும் 95% ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்களே எனபதும் அனைவரும் அறிந்த விஷயம். பெருந்தலைவர் மறைவிற்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் விலகி இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இயங்கிய கட்சிக்கு சென்றனர். 1969-ல் காங்கிரஸ் இயக்கம் பிளவுப்பட்டத்திலிருந்து 1975-ல் பெருந்தலைவர் மறைவு வரை தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான், அந்த பிளவிற்கு பிறகு இந்திரா காங்கிரஸ் 1971 பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 மக்களவை தொகுதியில் மட்டும் போட்டியிட்டது. அந்த வெற்றியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பிறகு 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார் திரு கரு.சீமைச்சாமி. அதற்கு அடுத்த வருடம் 1974-ல் புதுவை சட்டமன்ற தேர்தலும் அதோடு சேர்ந்து கோவை மக்களவை தொகுதிக்கும், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்நேரம் தமிழக அரசியலில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 5 வருடங்களாக பிரிந்து இருந்த காங்கிரஸ் இயக்கங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.
பெருந்தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்தில் முழுமூச்சுடன் இறங்க, இந்திரா அம்மையார் மேல் தமிழகத்தில் நிலவிய நல்லெண்ணமும் ஒன்று சேர தேர்தல் முடிவுகள் அதேற்கேற்றார் போல் அமைந்ததன. கோவை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அரங்கநாயகம் வெறும் 531 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமதி பார்வதி கிருஷ்ணன் 1,71,000 + சொச்சம் வாக்குளை பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.வி. லட்சுமணன் [பின்னாட்களில் ஜனதா கட்சியின் தமிழக தலைவராகவும் செயல்பட்டவர்] 1,69,000 சொச்சம் வக்க்கள் பெற்று வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியபோது காங்கிரஸ் இயக்கங்களும் அதே போல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவையும் பெற்று அங்கே அதிமுகவின் முதல் அமைச்சரவை பதவியேற்க அதிமுகவின் முதல் முதலமைச்சராக திருஎஸ். ராமசாமி பொறுப்பேற்றார், . ஆனால் பட்ஜெட் பேப்பர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னரே வெளியாகிவிட சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசு தோல்வியை தழுவ 21 நாட்களில் அரசு கவிழ்ந்தது.
புதுவை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்தபோதுதான் பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் இருபுறம் நிற்க நடுவில் நடிகர் திலகம் நிற்கும் அந்த famous புகைப்படம் எடுக்கப்பட்டது
நாம் குறிப்பிட வந்தது அதல்ல. காங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் இந்த இணைப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கோவை மற்றும் புதுவை வாக்காள பெருமக்கள் அளித்துள்ள ஆதரவையும் சுட்டிக்காட்டிய நல்லோர்கள் இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். .
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவரின் கருத்து உறுதியாக இருந்தது. இணைவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் அந்த இணைப்பு அகில இந்திய அளவில் இருக்க வேண்டும். ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களின் ஒப்புதலோடு அது நடைபெறவேண்டும் என்பதுதான் அது.
ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ அதற்கு தயாராக இல்லை. காரணம் மற்ற மாநிலங்களில் அவர் கட்சிக்கு செல்வாக்கு நிறைய இருந்தது. அங்கெல்லாம் ஸ்தாபன காங்கிரஸ் தயவு தேவையில்லை என்று அவர் நினைத்தார். மேலும் ஸ்தாபன காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சியால் வேரூன்ற முடியவில்லை என்பதனாலும் பெருந்தலைவர் மேல் இருந்த சின்ன கரிசனத்தினாலும் தமிழகத்தில் மட்டும் இணைப்பு அல்லது கூட்டணி எனபதற்கு இந்திரா தயாராக இருந்தார். தமிழகத்திற்கு மட்டும் என்ற நிபந்தனையை பெருந்தலைவர் ஏற்க தயாராக இல்லை. எனவே அந்த முயற்சி முழுமை பெறாமல் போனது. அதற்கு அடுத்த வருடம் [1975-ல்] இந்திரா கொண்டுவந்த அவசர நிலை சட்டம், எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது என்ற நடவடிக்கைகள் பெருந்தலைவரை மனதளவில் பெரிதும் பாதித்து அந்த இணைப்பு முயற்சி அடியோடு கைவிடபப்ட்டது. .
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் உடல்நிலை மோசமடைந்து அவர் காலமானதும் அவர் தலைமையில் இயங்கியவர்களில் ஒரு பிரிவினர் இந்திராவின் தலைமையை ஏற்று அங்கே பொய் சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த பலமுறை இங்கே விவாதித்த விஷயங்கள்தான்
இப்போது நாம் முதலில் பேசிய 1977 தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது காங்கிரஸ் 27 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக சின்னத்தில் 130 பேர் வெற்றி பெற்றிருக்க [அதில் அதிமுக மட்டும் 126 என்பது என் நினைவு] திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றது.
வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரஸ் சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 29,94,535 வாக்குகள், 17.5 சதவீதம்]. ஜனதா பெற்றிருந்த வாக்குகளோ 28,51,884. 16.7 சதவீதம். பெருந்தலைவரின் இரண்டு தொண்டர்படைகளும் இணைந்து பெற்ற வாக்குகள் 58,46,419. சதவீத கணக்கில் சொன்னால் 34.2%..அன்றைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அதிமுக பெற்ற வாக்குகளே 51,94,876.தான். [30.4%].
ஒரே இயக்கமாக இருந்திருந்தால் யார் கண்டது? 1967-ல் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் திலகத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. [இந்திரா பிராச்சரதிற்கு வரவில்லை]
ஜனதா கட்சிக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமான தலைவர்கள் [பா.ரா., குமரி அனந்தன்] இருந்தார்களே தவிர கரிஸ்மாடிக் தலைவர்கள் கிடையாது.
1977 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவெங்கும் ஜனதா கட்சி வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டபோது தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸின் ராட்டை சுற்றும் பெண் சின்னத்தை பயன்படுத்தினர். எனவே மூன்று மாதங்களில் வந்த சட்டமன்ற தேர்தலில் ஏர் உழவன் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே ஒரு சவாலாக இருந்தது.
முக்கியமான விஷயம் பெருந்தலைவர் உயிருடன் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல்.
அவர் தேர்தல் களத்தில் இல்லாமலேயே இத்தனை லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னால் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் அவர் தலைமையேற்று தேர்தலை சந்தித்திருந்தால் மீண்டும் அந்த பொற்கால் ஆட்சி மலர்ந்திருக்கலாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை.
அவர் மறைந்து விட்டார் என்ற யதார்த்ததை மனதில் கொண்டால் கூட இத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்தது என்பது மெய்தானே. அவர் மறைவிற்கு பின்னால் யாரும் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறாமல் கட்டுக்கோப்பாக நடத்தி சென்றிருந்தால் 1977 மீண்டும் தேசிய ஆட்சியை கொண்டு வந்திருக்கும். இதைதான் பலமுறை நான் எண்ணி பார்ப்பது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது.
அவர் மறைவிற்கு பின் காங்கிரஸ்-ஐ தமிழகத்தில் வழி நடத்தி சென்றவர்கள் பல சமரசங்களை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமை.
ஒப்பற்ற ஆட்சி வழங்கிய பெருந்தலைவரின் பிறந்தநாளான இன்று இதையெல்லாம் நினைத்து வேதனைதான் பட முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு மனிதனை காலம்தான் நமக்கு கொடையாய். தர வேண்டும்.
இந்த முடிவுகள் அடங்கிய விக்கி பக்கத்திற்கான சுட்டி
https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1977.
அன்புடன்
http://1.bp.blogspot.com/_dnbppqPd8v...ajiganesan.jpg
முரளி சார்
பெருந்தலவைர் காமராஜருக்கு தாங்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளது அவர் மேல் தங்களுக்கிருக்கும் அபிமானத்தைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.
ஆனால் கசப்பான உண்மைகளைத் தாங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் அல்லது தெரிந்தும் தவிர்க்கிறீர்களா என்பது தான் எனக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
முதலில் பெருந்தலைவர் மறைவிற்குப் பின் ஒரு பிரிவினர் ஸ்தாபன காங்கிரஸை விட்டு விலகினர் என்று கூறுவதன் மூலம் தாங்கள் யாரை சிறுமைப்படுத்தியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தீர்களா.
பெருந்தலைவர் மறைவிற்குப் பின் ஸ்தாபன காங்கிரஸை விட்டு விலகியது நடிகர் திலகமும் அவருடன் லட்சக்கணக்கான தொண்டர்களும்.
இதன் பின்னணியை நான் பல முறை இங்கு கூறியிருக்கிறேன். இருந்தாலும் இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் என்னைத் தள்ளுகிறீர்கள்.
தாங்கள் அந்த சமயத்தில் களத்தில் இருந்திருக்க முடியாது. கள நிலவரத்தை நேரில் அறியாமல் பரவலாக பத்திரிகை மற்றும் போஸ்டர் செய்திகளை வைத்து ஒரு அனுமானத்தின் அடிப்படையில் நடிகர் திலகத்தின் அரசியல் நிலைப்பாட்டினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயம் பரப்பப்பட்டு அதில் தாங்களும் மயங்கி, அவரை மறைமுகமாக ஒவ்வொரு முறையும் விமர்சிக்கிறீர்கள். எனவே என்னால் இதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
அன்றைய நிலையில் ஸ்தாபன காங்கிரஸில் நடிகர் திலகத்தை எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது. இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு நிர்வாகியும் அவருக்கு ஒத்துழைக்காத சூழல் நிலவி வந்தது. அவர் ஸ்தாபன காங்கிரஸில் தொடர முடியாத சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்ட்தெல்லாம் தங்களுக்குத் தெரியாது. எத்தனையோ மனப் போராட்டங்கள், ஆலோசனைகள் இதையெல்லாம் செய்தே அவர் இந்திரா காங்கிரஸில் இணைந்தார். 1977ல் ஸ்தாபன காங்கிரஸ் தான் ஜனதா என்று கூறப்படும் அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் கூட, தவறான பிரச்சாரத்தில் மயங்கி அங்கேயே தங்கி விட்ட சிவாஜி ரசிகர்களின் வாக்குகள் தான். அவர்கள் அனைவரையும் திரிசூலத்தின் வெற்றியின் மூலம் நடிகர் திலகம் மீண்டும் தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். அது மட்டுமல்ல அந்த பழைய காங்கிரஸோ அல்லது ஜனதாவோ யாருமே காமராஜரின் புகழைப் பாடவில்லை. அவரை நினைக்கவும் இல்லை பெரும்பாலானோர் இந்திரா காங்கிரஸ் எனப்படும் காங்கிரஸிலேயே ஐக்கியமாகி விட்டனர். எனவே நடிகர் திலகத்தின் மேல் எந்தத் தவறுமில்லை என்ப்தும் அவரால் தான் தேசியம், காங்கிரஸ் என்கிற வார்த்தைகளும் இயக்கமும் தமிழ்நாட்டில் இன்று வரை உயிருடன் இருந்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்த அடிப்படையில் பார்த்தாலும் கூட 1977 தேர்தல் மட்டுமல்ல அதற்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி, தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்றால் அது நடிகர் திலகம் மட்டுமே. காங்கிரஸ் பெற்ற வாக்குகளில் பெரும் சதவீதம், கிட்டத்தட்ட 90 சதவீதம் நடிகர் திலகத்தின் செல்வாக்கிற்குக் கிடைத்த வாக்குகள் என்பது வரலாறு. நான் பல முறை சொல்லி வந்தது போல் தனிக்கட்சியைக் கண்டு தேர்தலில் நடிகர் திலகம் தோற்றாலும் அது அவருடைய அரசியல் தோல்வியல்ல, ஒரு தேர்த்ல் தோல்வி மட்டுமே. இன்னொருவருக்கு அவர் ஆதரவு கேட்டு அவர்களை மக்கள் நிராகரித்ததன் பிரதிபலிப்பு.
பெருந்தலைவர் காமராஜர் சிறந்த முதலமைச்சர் என்பதும் அவருடைய ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம் என்பதும் எவ்வாறு மாற்றுக் கருத்தில்லாத உண்மையோ அதே போல் தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸாகட்டும், இந்திரா காங்கிரஸாகட்டும் அது நடிகர் திலகத்தால் மட்டுமே சார்ந்து, அவரால் மட்டுமே உயிர்ப்புடன் இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நடிகர் திலகத்தை சரியான முறையில் பெருந்தலைவர் பயன்படுத்தாததினால் தான் தமிழகத்தி்ல் தேசிய இயக்கம் இழந்த தன் முதல் இடத்தை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
தாங்கள் எப்போது பெருந்தலைவரைப் பற்றிக் கூறினாலும் இந்த 1975ம் ஆண்டினை மட்டுமே வைத்து சொல்வதால் நானும் இந்த பதிலை சொல்ல வேண்டி வருகிறது.
என்னைப் பொறுத்த மட்டில் மட்டுமல்ல, இந்த தமிழகத்தைப் பொறுத்த மட்டில் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி, தேசிய இயக்கங்கள் மீண்டும் துளிர் விட வேண்டுமென்றால் வெறுமனே காமராஜர் புகழ் பாடிக்கொண்டிருந்தால் கனவில் கூட நடக்காது. நடிகர் திலகம் என்ற மிகப் பெரிய தேசியவாதி, பெருந்தலைவரின் உண்மையான ஒரே வாரிசு, அவருடைய ரசிகர்களால் மட்டுமே நடத்திக் காட்ட முடியும்.
கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது. அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும் என்கிற என் கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கர்ணன் பெற்ற மகத்தான வெற்றியே சாட்சி. அது மட்டுமல்ல சந்திப்பு, வெள்ளை ரோஜா போன்ற படங்களின் சமீபத்திய வெளியீட்டு வசூலே இதை நிரூபித்து விடும்.
செந்தில்வேல்
அபாரம்.
என்ன அருமையான எழுத்து, எவ்வளவு ஆழமான கவனிப்பு..
யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலை, தங்கள் பதிவைப் படித்த பின் பார்க்கும் போது இதன் பரிமாணமே முற்றிலும் வேறாக இருக்கும்.
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மக்கள் தலைவரின் தொண்டர் என்பதை அழகான அற்புதமான எழுத்தின் மூலம் நீரூபித்து விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எழுத்திலும் வல்லவர்கள் என்பதை அன்றைய நாள் தொட்டு இன்று வரை முரளி சார், சாரதா, நவ், கார்த்திக், கோபால், பம்மலார், நெய்வேலி வாசு சார், சின்னக்கண்ணன், காவிரிக்கண்ணன் மட்டுமல்லாது பெயர் விட்டு்ப் போன பலரும் தங்களுடைய பாணியில் அவருடைய சிறப்பை எழுதி வந்துள்ளார்கள், எழுதுகிறார்கள். அந்த வரிசையில் தாங்களும் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதைத் தங்களின் இந்தப் பதிவில் ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள்.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
திரு.ராகவேந்திரா அவர்களுக்கு
தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு
நன்றிகள் சார்...