Originally Posted by
kaliaperumal vinayagam
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.
அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு
ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அதை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடிதத்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.
எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.
புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.
மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!
குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித்தலைவர் கலந்துகொண்டார்.
மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!
புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.
ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.
கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித்தலைவரால் மறக்கவே முடியவில்லை.
மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அன்பையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;
”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”
இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”
இவ்வளவு தேசபக்தியுள்ள மொரீஷியஸ் நாட்டு மக்களிடமிருந்து பிரியா விடைப்பெற்றுக்கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் பாரிஸ் நகருக்குச் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பினார், புரட்சித்தலைவர்.
Courtesy Net
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்