http://i501.photobucket.com/albums/e...psf0125896.jpg"]http://http://i501.photobucket.com/albums/e...psf0125896.jpg[/URL]
Printable View
என்றும் அழியாத கதாபாத்திரங்கள் -8
ரங்கன்
இந்த பதிவு ஸ்ரீரங்கத்தில் அனந்தசயனத்தில் இருக்கும் அந்த ரங்கனை பற்றியது அல்ல - பாண்டுரங்கத்தில் ருக்மணியுடன் நின்று அருள் பாலித்து கொண்டுருக்கும் அந்த பாண்டு ரங்கனை பற்றியதும் அல்ல - வேறு யாராக இருக்க முடியும் ? அந்த ஆலய ரங்கனைவிட அதிகமாக கருணை , பணிவு , அடக்கம் , பேசும் வார்த்தைகளில் ஒரு கண்ணியம் , நன்றியின் மொத்த இடமும் உள்ளவர்கள் இருக்க முடியுமா ? அப்படி இருந்த ஒரு நபரையாவது காட்ட முடியுமா ?
உங்கள் கேள்விகளுக்கு சற்று நேரத்தில் பதில் கிடைக்கும்
எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வெளியூரில் இருந்து வந்திருந்தார் - எல்லா உபசரிப்புகளும் முடிந்தபின் அவர் எனக்கு வைத்த கோரிக்கை என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது - துணைக்கு என் நண்பரும் என் நினைவளைகளுடன் கூடவே வந்தார் ---
அவர் எனக்கு வைத்த கோரிக்கை இதுதான் :
ஒரு அநாதை , நல்ல உடற்கட்டுடன் , அன்பே உருவமாய் , பணிவே அணிகலன்களாய் , குழந்தைகளை பார்த்துக்கொள்ள , அவருடைய வயதான தாயை கவனித்துக்கொள்ள , எல்லா வீட்டு வேலைகளையும் இன்முகத்துடன் பண்ண , வீட்டுடன் நிரந்தரமாய் இருக்கும் படி ஒரு நபர் தேவையாம் - சுருக்கமாக இதோ நாம் சந்திக்க இருக்கும் ரங்கனை போல ஒரு நபர் கிடைத்தால் , மிகவும் கடமை பட்டவனாக இருப்பேன் என்றார் ---
ஆமாம் - கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம் - உங்கள் மகள் உங்கள் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டாள் - உங்கள் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இதுவரை உங்களை பார்க்க வருவதில்லை - ஆனால் அவர்களிடம் எதிர்பார்க்காத குணாதிசயங்களை ஒரு அநாதை நபரிடம் எப்படி எதிர் பார்க்கிறீர்கள் ??
அவர் சொன்னார் -- நீங்கள் சொல்வது நியாமே ! அந்த அநாதை நபரிடம் அதிகமான எதிர்பார்ப்புக்கள் இருக்க முடியாது - கொஞ்சம் உணவுடன் நன்றி உள்ளவனாக இருப்பான் - மேலும் படிக்காமல் இருந்தால் அவன்தான் எண்கணிப்பில் ஒரு மேதை !!
அந்த மாதிரி ஒரு ரங்கனை இப்பொழுது பார்க்க முடியுமா ? இவருக்கு கிடைப்பானா ? - கண்களில் பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே என் ரங்கனை பற்றிய என் எண்ணோட்டங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள தயாரானேன்- உங்களுடனும் தான் ----
ஒரு மாறுதலுக்காக கதையை அலச போவதில்லை - அலச எதுவுமே பாக்கி இல்லையே - பலருக்கும் பிடித்த படம் - பலர் பல முறை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படம் - சரி கதையை அலசியுள்ளவர்கள் , பாத்திரங்களை அலசியிருக்க மாட்டார்களா - உங்கள் கேள்வி புரிகிறது - கதையை என்னால் இனி மாற்ற முடியாது - அலசிய பாத்திரங்களை புதிய முலாம் பூசி ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவிடுகிறேன்
ஒவ்வொருவரும் அலசம்போதும் , எழுதும் போதும், NT மட்டுமே ஒரு புதிய அவதாரம் எடுத்து ஒவ்வொருவரையும் ஒரு புதிய , இதுவரை அலச படாதவகையில் வெளிவந்து நம் எழுத்துக்களுக்கு ஒரு வலிமையையும் , உற்சாகத்தையும் சேர்ப்பார் .
காட்சி 1 : மணிவிழா
அதோ 60வயது நிரம்பிய ஒரு இளம் வாலிபனுக்கு மணிவிழா - கல்யாணத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது கொண்டிருந்தது - இந்த படமும் பல மணிவிழாக்களை காணும் என்று முன்கூட்டியே சொல்வதுபோல் முதல் காட்சி - "ஆனந்த கண்ணீரும்" இப்படிதான் முதல் காட்சியில் மணிவிழாவுடன் ஆரம்பிக்கும் - ஆனால் அதில் இருக்கும் சிவாஜி , இந்த மணிவிழாவில் இருக்கும் SVR யை விட மிகவும் பொலிவுடன் இருப்பார் ( ரங்கனுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டால் என்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவான் )
மெதுவாக நானும் என் நண்பரும் மண்டபத்தில் நுழைகிறோம் - என் கண்கள் , ஏன் எல்லோர் கண்களும் அழகை முழுவதும் குத்திகை எடுத்து கொண்ட ரங்கனை தேடுகிறது - மனம் என்னமோ மணி விழாவில் நாட்டம் கொள்ளவில்லை - இதோ ரங்கன் வந்து விட்டான் - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - ஒரே ஒரு புன்னைகையில் கண்டுகொண்டோம் - அவனுக்கு திரிஷ்ட்டி சுத்தி போடுவதற்கு பதிலாக , மணிவிழா காணும் தம்பதிகளுக்கு பெரிய பூசணிக்காயை ரங்கன் திரிஷ்ட்டி சுத்துவதுடன் , எங்கள் எண்ணங்களிலும் ரங்கன் சுற்ற தொடங்கினான் - நான் ஒரு அனாதை என்று சொல்லுங்கள் மாமா என்ற வார்த்தையுடன் கலை கட்ட ஆரம்பிக்கும் படம் காலங்கள் பல மாறினாலும் அதே கலையுடன் இன்றும் மினிர்கின்றது - அந்த வார்த்தைகள் மனதில் தையித்த முட்களாக குத்தும் வண்ணம் இருக்கின்றன - ஒருவர் எதார்த்தமாகவும் , வெகுளியாகவும் , அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் சொல்ல முடியுமா ?? இதோ அவர் பேசும் விதத்தை பாருங்கள் :
"அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு !சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, நமக்கெல்லாம் அசாதாரணமாக இருக்கும் - உள்மனதில் தான் அநாதை என்ற ஒரு ஆதங்கம் - உடனே ஒரு தயிரியம் , நமக்குதான் மாமாவும் , அத்தையும் இருக்கிறார்களே , நாம் எப்படி அனாதையாக இருக்க முடியும் ? அந்த வீட்டில் தனக்கு இருக்கும் உரிமை - அதை இழக்க கூடாது என்ற எண்ணம் - தான் ஒன்றும் பெரியவன் அல்ல - சாதரணமானவன் - என்ற எண்ணம், எளிமையான , ஈகோ இல்லாத ஒரு ஏழையின் உரிமைக்குரல் ----- அப்பப்பா ஒரே வாக்கியத்தில் நம்மை எப்படி பைத்தியமாக்கி விடுகிறார் பாருங்கள் !!!
உண்மையில் ரங்கனின் குடும்பம் ஒரே விந்தையிலும் விந்தை
காட்சி 2 : போட்டோ session
ராஜம்மா , ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளையின் ( SVR ) மூத்த மகள் - ஒரு விதவை - வார்த்தைகளிலும் விதவைத்தனம் அதிகம் - "எங்காவது நின்று தொலைங்களேன் " என்று சொல்லும்போது, SVR சொல்லும் வார்த்தைகள் இன்றும் தேவைப்படும் - அப்படி பேசாதே ராஜம்மா - அவர்களுக்கு என் மீது இருக்கும் அன்பினால் தானே என்னுடன் சேர்ந்து நிற்க போட்டி போடுகிண்டார்கள் - எல்லோரும் மாதிரி என்றும் அன்புடன் இருக்க வேண்டும் என்று SVR சொல்லும்போதே அப்படி இவர்கள் இருக்க போவதில்லை என்று புரிந்து போய் விடுகின்றது - ரங்கன் ஒரு பாலம் என்பதை இங்கே NT எப்படி ஆழகாக புரிய வைக்கிறார் !!
காட்சி 3 : ரங்கனுக்கு இன்னுமொரு மகனுக்கு பார்த்திருந்த பெண்ணை நிச்சியம் செய்தல்
இங்கே வசனங்கள் NTயிடமிருந்து தேனாக வெளிவரும் - மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும். - வெறும் பிள்ளையை மாப்பிளையாக்கி விடு என்று சொல்வதாகட்டும் , கல்யாணம் என்றால் என்ன ஒரு சாதாரண விஷயமா - அந்த பெண்ணை நீ வைத்து காப்பாத்த வேண்டாமா என்று தாய் கேட்க்கும் கேள்விக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காமல் ஒப்புரானை என்ன பேச்சு பேசற - மாமா - இவ்வளவு நாள் நீங்கள் என்னை வைச்சு காபாத்தல ( நாம் இங்கு ஒரு நிமிடம் நினைப்போம் -- இனி காப்பாத்தினது போதும் என்று சொல்வாரென்று - NT யின் சொல்வளம் இங்கு கொடிகட்டி பறக்கும் ) அதே மாதிரி அந்த பொண்ணையும் வைச்சு காப்பாத்துங்க - என்ன நான் சொல்வது - SVR இங்கு இதை கேட்டுவிட்டு ஒரு பூம் பூம் மாட்டு காரன் போல தலையாட்டுவதை காண கண் கோடி வேண்டும்
காட்சி 4 : E .V சரோஜாவும் NT யும்
EVS , NT யுடன் நடித்த வெகு சில படங்களில் சிறந்த படம் இது - ரங்கனுக்கும் பெண் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் ரங்கனை கலாய்ப்பதை பாருங்கள் - இவ்வளவு உயிரோட்டம் உள்ள சீனை வேறு எவர் படத்திலாவது பார்க்க முடியுமா ? அந்த கலாய்ப்பை ரங்கன் எப்படி தன்நம்பிக்கையுடன் தளர்த்து எறிவான் பாருங்கள்
மாப்பிள்ளை மாமா , மாப்பிள்ளை மாமா ,
மாப்பிளேனா மாப்பிளேனா , மண்ணாங்கட்டி தோப்பிலே
பூ போட்ட சாக்கிலே போடப்பா இரட்டிலே ---------
மாமா இனி தவில் எல்லாம் உன் இஷ்ட்டதிர்க்கு வாசிக்க முடியாது , உன் பொண்டாட்டி உன் காதை திருகி இழுத்துக்கொண்டு போயிடுவாள்
உடனே ரங்கன் - நம்ம பொண்டாட்டியா - யாரு பயில்வான் பொண்டாட்டியா - என்னை தொடுவாளா ??? - அவர் உடற்கட்டில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அப்படி அவரை தன்னை மறந்து பேச வைக்கின்றது
காட்சி 5 : திருமணம்
அந்த முக்கியமான தருணத்திலும் , கனவில் மிதக்க வேண்டிய தருணத்தில் தன் மனைவியையும் சேர்த்து மாமா காப்பாற்றினால் மட்டுமே குடத்தில் கைவிட்டு வைர மோதிரத்தை எடுப்பேன் என்று ரங்கன் சொல்லும்போது நம் இரு கைகளும் பலத்த கரகோஷம் செய்கின்றன - வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாளே தன்னை நம்பி வந்த பெண்ணும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவனே மனிதன் என்று NT இங்கே அற்புதமாக விளக்குவார் - SVR உடன் சேர்ந்து நாமும் அந்த தம்பதிகள் பல வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு வெளி வருகிறோம்
காட்சி 6 :முதல் இரவு
எல்லாம் லக்ஷ்மிக்கு சொன்னபின் ரங்கனை அவளிடம் அனுப்ப வருகிறாள் - இங்கு நடைபெறும் உரையாடலை கேட்க , அன்புவிக்க பலகோடி காதுகளும் , கண்களும் தேவை ---
அத்தை : என்னங்க உங்களைத்தானே ! - அவன்தான் அசடு என்றால் , அவனை அங்கு அனுப்பாமல் இங்கு வைத்து கொண்டுருக்கிண்டீர்கள்
மாமா : oh அதுவா - டேய் , போடா போடா
அத்தை : ரங்கனிடம் - டேய் அங்கு லக்ஷ்மி தனியாக இருக்கிறாள் - உன்னிடம் ஏதோ விஷயம் சொல்ல வேண்டுமாம் -
ரங்கன் : என்னடா அக்கிரமாக இருக்கிறது - இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகி இருக்கிறது - அதற்குள் என்ன தனியா பேச வேண்டி கடக்கிறது - அவளுக்கு வெட்கமா இருக்காது ? போய் படுத்து தூங்க சொல்லு - எல்லாம் காலையில் பேசிக்கொள்ளலாம் - போ போ ---
ஒரு வழியாக ரங்கனை அனுப்பிவிட , மீண்டும் அவன் மாமாவிடம் வந்து - எழுந்திருங்கள் உடனே என்பான் - முதல் இரவுக்கும் , அவன் மாமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் குழம்பும் போது அவரை எழுப்பி விட்டு , அவர் பின்னால் இருக்கும் தன் சட்டையை எடுத்துக்கொள்வான் - சட்டையிலும் மாமாவின் அன்பை தேடும் அந்த பண்புக்கு வார்த்தையேது வர்ணிக்க ---
முதல் இரவில் வர்ணிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமே , மாமாவையும் அத்தையையும் பின்னணியாக வைத்து கொண்டுதான் - ரங்கனின் உடலில் இருந்து இரத்தத்தை பிரித்துவிடலாம் - ஆனால் அவன் வணங்கும் மாமாவையும் அத்தையையும் அவனிடமிருந்து பிரிக்கவே முடியாது என்பதை NT எடுத்து சொன்ன விதம் இன்றைய தலை முறைக்கு ஒரு வரப்பிரசாதம் !!
அருமையாக சென்று கொண்டிருக்கும் கதையின் கருவில் சற்றே மாறுதல்கள் - கதைக்கு ஒரு சகுனியாவது அல்லது ஒரு கூனியாவது வேண்டுமே - ராஜம்மா மூலம் அந்த குறை தவிர்க்க படுகின்றது
காட்சி 7 :கீதாவிற்கு , பெண் பார்க்கும் படலம்
யார் வேண்டுமானாலும் கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு அழகு அவள் - "என்ன சார் - வைத்த பலகாரங்கள் அப்படியே இருக்கின்றது என்று SVR கேட்க , அவர் நண்பர் அதற்க்கு பதில் சொல்லும் விதம் - இவைகள் KSG பட்டறையில் இருந்து தான் வெளி வரும் என்பது மறைக்க முடியாத உண்மைகள்
நண்பர் : நல்லா சொன்னிங்க போங்க - உங்களுக்கு பயந்து கொண்டு நான் சாப்பிடலாம் , என் வயிறு இடம் கொடுக்க வேண்டாமோ ???
பெண் பார்த்தவிதத்தை யார் ரசித்தார்கள் ?? - NT அவர் நடிக்கும் போது வேறு யாரை ரசிக்க விட்டார்? - கண்ணை கண்டான் - கண்ணையே கண்டான் என்று சொல்வது போல NT யையே விழி கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கும் இன்னுமொரு காட்சி இது : அந்த மாப்பிள்ளை பலசாலியா என்று சோதிப்பதும் , வந்தவர்களை , பண்ணிய உணவு வீணாக போகாமல் சாப்பிட்டு விட்டு போக சொல்வதிலும் , மாமா - டேய் - கீதாவிற்கு பயில்வானை தேட வில்லை , மாப்பிளையை தேடுகிறோம் என்று சொல்லும் போது , தனது தொழில் மிகவும் முக்கியம் என்பதுபோல் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் - காண கண் கோடி வேண்டும் !!
மனதை மயக்கும் மதுர கானம் - சீவி முடித்து சிங்காரித்து - செவந்த நெற்றியில் பொட்டும் வைத்து -ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளி பருகிய கன்னி பெண்ணே !! ------- இங்கு ஆரம்பம் !!
காட்சி 8 - திருப்புமுனை
கதை நம் திரி மாதிரி பல twists களை சுமந்துகொண்டு படு வேகமாக இங்கிருந்து செல்ல ஆரம்பிக்கும் - நம்மை seat உடன் கட்டிபோடும் காட்சிகள் ஏராளம் - ஆயிரம் வாட் பல்பில் ஒரு fuse போனதுபோல் முத்துராமன் முகமும் , அசோகனின் முகமும் , NT என்ற சூரிய ஒளி முன் பொலிவு இழந்து - அந்தோ பரிதாபம் என்றிருக்கும்
கனவுகள் கட்டும்போது கூட step by step ஆகத்தான் கட்டவேண்டும் என்பார்கள் - கனவுதானே , வேகமாக கட்டினால் என்ன என்று நினைத்தால் இங்கு நடக்கும் மாதிரி தான் பலூன் ஊதி வெடி படும்
ஒரே தபாலில் ராவ்பகதூர் 25 இலக்க்ஷம் பங்கு சண்டை மார்க்கெட்டில் இழந்து விடுகிறார் - அதை இனி சம்பாதிக்க முடியவே முடியாது என்றும் புலம்புகிறார் -------- ஏகப்பட்ட கடன் தொல்லைகள் புற்றீசல் போல புறப்படுகின்றன - இதன் நடுவில் - கீதாவை பிடிக்க வில்லை என்று நிச்சியம் பண்ணிய திருமணம் நின்றும் விடுகின்றது --------
கீதா இத்தனை துரதிஷ்ட்டமும் தன்னால் தானே வந்தது என்று தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டத்திற்கு செல்கிறாள் ----
இங்குதான் NT பேசும் வசனங்கள் நம் நெஞ்சையெல்லாம் ஒட்டு மொத்தமாக பிழிந்து எடுக்கும் - ரங்கன் வாழ்கிறான் இங்கே
- நீ படித்து என்ன உபயோகம் - இடி விழுந்த மாதிரி மாமா இருக்கிறார் - நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல அந்த இரண்டு தடி பசங்களுக்கும் புத்தி இல்லே - நீ வேற இப்பவா மாமா மனதை புண் படுத்தனும் ----?
position போயிட்டா possession உம் போய் விடும் என்று சொல்வார்கள் - ராவ் பகதூர் காரும் அவரிடம் விடை பெறுகிறது -
காட்சி 9: வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள்
வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள் - கை இழந்த வீட்டில் உடைந்த பானையாக இருக்கும் ராவ் பகதுரை யாருமே அங்கு கண்டுகொள்ளவில்லை - வேலைக்காரனை - அவன் மற்றவர்களிடம் அவமானப்படுவதை தாங்க முடியாமல் ராவ் பகதூர் வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்
திரும்பி மார்க்கெட்டில் இருந்து வருவது ஒரு புயலா அல்லது ரங்கனா ?? நடிப்பு இங்கே ஊர்த்தவ தாண்டவம் புரியும் - எருமை இறங்காமல் குட்டை கலங்காதே என்று ஆரம்பித்து பேசும் வசனங்கள் - KSG யே சந்தேகப்பட்டாராம் , அவருடைய வசனங்களா இவைகள் - இவைகளுக்கு ஒருவர் இவ்வளவு உயிர் கொடுக்க முடியுமா என்று - KSG யே தன்னை மறந்து கை தட்டின வசனங்கள் இவைகள் - முத்துராமனை ஒரு தூசியாக - ஏ சின்ன பயலே - நீ சும்மா இரு --- என்று சொல்வது - முத்துராமனின் மீது கர்ணனில் போட முடியாத பிரம்மாஸ்திரத்தை இங்கு போட்டு விடுவார் NT
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"),- இப்படி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ரங்கன் - இப்பொழுது சொல்லுங்கள் பாண்டுரங்கத்தில் இருக்கும் அந்த விட்டலை விட ஒரு படி இந்த ரங்கன் உயர்ந்துவிட வில்லை ???
காட்சி 10 : ரங்கனால் பிணைக்கப்பட்ட பாச கயிறு
ரங்கனால் இதுவரை வசதி என்ற போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் தலை காட்ட ஆரம்பித்தன - பணம் இல்லை - சரியாக பிள்ளைகள் வளர்க்க படவில்லை - அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பணம் இருந்தும் குடும்பம் கஷ்ட்டம் படும்போது முன் வந்து கொடுத்துதவ மனமும் இல்லை - ஒருவர் நோய் வாய்ப்பட இவ்வளவு காரணங்கள் போராதா ??
கூத்தும் நடனமும் இருக்கும் வீட்டில் , பவர் கட் ஏது ? -- ராவ்பகதூர் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிண்டார் என்பதை எவ்வளவு அழகாக கதையாக பிண்ணி இருப்பார்கள் - அவருக்கும் வேண்டாத பாலை ரங்கன் அருந்தும் வேலையில் ராஜம்மா பேசும் துடுக்கான வார்த்தைகளால் அழும் ரங்கனுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம் - வீட்டில் கடுபிடி அதிகமாக ராவ்பகதூர் தன்னுடைய பிடித்தமான balck & white சிகரெட்க்கும் விடுதலை கொடுக்கிறார் ----
அப்பாவிதனத்திலும் , வெகுளி தனத்திலும் phd யே வாங்கிவிடுவார் NT - அந்தநாள் ராஜனா இது - திரும்பி பார் வில்லனா இது ? துளி விஷம் வாசுவா ( மன்னிக்கவும் வாசுவின் ஆழ்ந்த பதிவுகளின் தாக்கம் இன்னும் என்னை விட வில்லை ) இது - இப்படி கேட்டுக்கொண்டே போகலாம் - பதில் ஒன்றுதான் - அதுதான் NT .
" சந்தோஷமாக இருந்தால் ஒருவர் ஓடுவாங்க , ஆடுவாங்க , இல்ல பாடுவாங்க - எங்கே நீ ஓடு பார்க்கலாம் என்று SJ விடம் சொல்லும் போது - திரை அரங்கே இரண்டாக பிளக்கும் அந்த நகைச்சுவையை தாங்க முடியாமல் ------
இதற்க்கு அப்புறம் தான் காலத்தால் அழிக்க முடியாத அந்த மயக்கும் மதுர கானம் வெளிவரும் - ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ---
--------------------
-------------------
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் .
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் -அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு தேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
துணை இல்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை - நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி
கெட்ட மகனை விட நாய்கள் மேலடா - தம்பி நாய்கள் மேலடா ----
என்ன வார்த்தைகள் - என்ன பாடல் - இன்றும் இந்த பாடல் பல குடும்பங்களில் தேவை ---------
சௌகார் நடிப்பை பற்றி நாம் ஒன்றும் சொல்ல தேவையே இல்லை - ரங்கனே ஒரு இடத்தில் சொல்லுவான் -- " சதா அழுதுண்டே இருக்கும் வேலை தானா உனக்கு - தனி குடுத்தினம் - தனி குடுத்தினம் என்று ஓயாமல் புலம்புவதை நிறுத்து
SVR - NT யை கூப்பிட்டு வீட்டை விட்டு போக சொல்லும் அந்த இடம் - இது ஒன்று போதும் - ஆஸ்காருக்கு இல்லாத பெருமை , பாரத ரத்தின்னாவுக்கு இல்லாத பெருமை அனைத்தும் இவரை தேடி இங்கு வந்துவிடும் இந்த பட்டங்கள் எல்லாம் இவருக்கு ஒரு ஜுஜிபி - இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்
உரையாடலை கவனிப்போமோ :?
ரங்கன் : மாமா கூப்டீங்களா ? ---- என்ன நான் கேட்கிறேன் நீங்க பாட்டு உலாத்திகொண்டு இருக்கிண்டீர்கள் ? நான் வேலை செய்துகிட்டிருகிறேன் தெரியுமில்ல ? ஆமாம் அந்த சின்ன பையன் நீங்க கோபமாக இருப்பதாக சொன்னானே ! ஏன் கோபமாக இருக்கீங்க ? யார் உங்களை என்ன சொன்னா ?
ராவ்பகதூர் : டேய் நான் ஒன்னு சொல்றேன் செய்வீயா ?
ரங்கன் : இப்படின்னு சொல்லரதற்குள்ளே செய்ஞ்சு விடுகிறேன்
ராவ்பகதூர் : நீ உடனே வெளியே போ
ரங்கன் : இதோ போயிட்டேன்
ராவ்பகதூர் : : டேய் எங்கடா போறே ?? நீ மட்டும் இல்லேடா , உன் மனைவி லக்ஷ்மியையும் அழைத்து சென்று விடு
ரங்கன் - ஒரு சிரிப்பு சிரிப்பார் இங்கே பாருங்கள் - எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும் - ஐயையோ அவளை தனியா அழைத்துக்கொண்டு வெளியே போய் பழக்கம் கிடையாது - அத்தையோடுவாது போகட்டும்
ராவ்பகதூர் : அத்தையா - நீயே அழைச்சுண்டு போடா - கொஞ்ச நாளைக்கு என் கண்ணில் படாமல் இரு
ரங்கன் - இதுவரை குழந்தையாக பேசினவர் முகத்தை 360 டிகிரி மாற்றிக்கொண்டு - அப்படின்னா மாமா என்னை வீட்டை விட்டே போக சொல்லுறீங்களா?
ராவ்பகதூர் போய் குடுசையில் இரு என்றவுடன் ரங்கனுக்கு வரும் கோபம் , உரிமை எதையுமே அளவிடமுடியாது - நீ சம்பாதித்து அவளுக்கு சோறு போடு என்றதும் - ஏன் இங்கு என்ன குறைச்சலு ? சோறுக்கு பஞ்சமா என்ன - இங்குதான் ஒவ்வொன்னும் மூணு வேளைக்கு ஆறு வேளையா தின்னுட்டு பெருத்து இருக்கே என்பான்
ராவ்பகதூர் : அடடா நான் என்ன சொல்லவறேன் என்று உனக்குபுரியல்ல - உன் உடம்பிலே நல்ல இரத்தம் ஓடலே - ரங்கன் : "ஆமாம் ஓடுது" -
ராவ்பகதூர் : நீ ஆம்பிள்ளை இல்ல ---
ரங்கன் : "ஆமாம் ஆம்பிள்ளைதான் " -
ராவ்பகதூர் : "அவளை உன்னால் காப்பாத்த முடியாது??
ரங்கன் : முடியாது ---- முடியாது மாமா -- இங்கு நிற்பார் NT - அவர் நிற்கும் இடம் இமயமலையின் உச்சி
அடுத்தது கண்ணகி கண்ணாம்பாவை நிற்க வைத்து சிலையாக்கும் காட்சி
ரங்கன் : இப்படி அவளை வெளியே போக சொல்வதற்குத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்களா? - எனக்கு என்ன தெரியும் - கையலே காசும் இல்லை - உன் மகன்களை போல என்னை படிக்க வைச்சியா - என்னை மக்கு பயல் மாதிரித்தானே வளர்த்தே நீ - கண்கள் குளமாகும் காட்சி இது
வீட்டை விட்டும் செல்லும் காட்ச்சியில் தபலா சண்டை வரும் - அசோகன் , NT யிடமிருந்து தபலாவை பிடுங்கி கொள்வான் - அப்பொழுது கண்ணாம்பா சொல்லும் வார்த்தைகள் - இன்று நாமெல்லாம் புலம்பும் வார்த்தைகள்
" கேவலம் தபலா இல்லையடா - இந்த வீட்டிலிருந்து விலை மதிக்க முடியாத அன்பு , பாசம் , பண்பு " இவைகளை எடுத்துண்டு போறியேடா - அதற்க்கு நாங்க எங்கடா போவோம் ?????
அவர்களை ராவ்பகதூர் தனியாக சந்தித்து அறிவுரை சொல்லும் காட்சி - ரங்கராவ் நடிப்பின் உச்சம் - ஒரு நிமிடத்தில் NT தான் என்று பண்ணிவிடுவார் நமது ஆள்
காட்சி 11 : ரங்கனின் புதுவாழ்வு மாமாவின் வட்டத்தின் வெளியே
வெளியில் வந்த ரங்கன் அவன் நண்பர் மூலம் வேலை ஒன்றில் சேருகிறான் - அங்கே மீண்டும் மனதை மயக்கும் மதுரகானம் -
உள்ளதை சொல்வேன் - சொன்னதை செய்வேன் - வேறோன்றும் தெரியாது --உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது - NT தன்னை பற்றி இப்படி சொல்லிகொள்வார் - எவ்வளவு உண்மை
" பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது - நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது " ------
---------------------------------------------
நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் -பார்வையில் நெருப்பாவேன் -நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன் -காலுக்கு செருப்பாவேன் -------------------
வேலையை முடிந்து மாமாவையும் , அத்தையையும் பார்க்கவரும் ரங்கனுடன் நாமும் கொஞ்சம் ஒட்டி கொள்கிறோம் - அந்த வீட்டில் மகிழ்ச்சியை மீண்டும் காண !!
அத்தை ரகசியமாக ரங்கனிடம் - டேய் லக்ஷ்மி - மாங்கா , புள்ளிப்பு ஏதாவது கேட்கிறாளாடா ? என்று வினவும் போது ஒரு நகைச்சுவையில் படத்தை நிரப்பி விடுவார் - ஆ-- அதெல்லாம் இல்லை நான் தான் ஒரு மாதத்திற்கு மளிகை சாமான் வாங்கி போட்டுவிடுவேனே !! ---------
முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ்ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casual ஆக சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது - ரங்கன் ஒரு அவதாரம் - அந்த விஷ்ணு - நம் NT
அடுத்த மனதை மயக்கும் மதுர கானம் - "எங்கிருந்தோ வந்தான் "
சீழ்காழியின் இனிய குரலில் - காலம் காலமாக இன்னும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது ----- இதே பாணியில் மற்றுமொரு விடிவெள்ளி -- இன்றும் என்றும் கேட்கலாம் - கண்ணனை ரங்கனாக்கிய பாடல் -------
கண்ணனின் வேணுகானத்துடன் ராவ்பகதூரின் ரங்கனுக்காக வைத்திருந்த உயிர் பிரிந்து கரைகின்றது -------------
காட்சி 12 : ரங்கனின் விஸ்வரூபம்
மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது,
அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, - ரங்கன் வாழும் இடம் இது -----
இங்கே இன்னுமொரு மனதை மயக்கும் மதுர கானம் -
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு -------
கொடுப்பதற்கும் , சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா ? என்றும் குழந்தையை போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா ?
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா ?
வான்முகிலும் கற்றதில்லை - மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா ?
சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா ??
--------------------------------------
மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு
சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), - ரங்கன் வாழாத இடமே இல்லை
கீதாவை தட்டி கேட்பது - அவள் வேலைக்கு தான் செல்கிறாள் என்று தெரிந்துகொண்டவுடன் குரலில் அன்பை கலப்பது , இதுவரை கோயிலுக்கு செல்லாமல் மாமாவும் அத்தையும் தான் தெய்வம் என்றிருந்தவன் - அத்தையை கடவுள் தான் காப்பார்த்தவேண்டும் என்று சொன்னவுடன் ரங்கன் துடிக்கும் துடிப்பு , நம் நரம்பெல்லாம் புடைக்கும் - வேண்டாம் என்று வெறுத்த மாப்பிளையை ஒரு பெரிய விபத்திலிருந்து ரங்கன் காப்பாத்துகிறான் - பிறந்த உறவு ரங்கனால் மலர்கின்றது - அங்கு பணம் ஒருவனை காப்பாற்றவில்லை - ஒரு மனித நேயம் தான் - இதை நம்மில் எவ்வளவு பேர் உணர்கிறோம் ??
ஒவ்வொருவரும் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்கிறார்கள் - திருந்திக்கொள்ள ரங்கன் ஒரு பாலமாக இருக்கிறான் –
வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த ரோட்டில் நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, இப்படி நவரச நடிப்பை மேதைகளாக இருந்தால் தான் ரசிக்க முடியும்.
திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமாவின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?
மருதூருக்கு தாயத்து அத்தைக்காக வாங்கவேண்டி 15km ஓடும் வேகம் - நடுவில் அனாதையாக திரியும் ராவ்பகதூரின் மகள் ராஜம்மாவிற்கு அடைக்கலம் - ஓடும் இடமில்லாம் புண்ணியத்தை சம்பாதித்துகொண்டே ஓடுகிறான் ரங்கன் - அவன் பின்னால் நம் மனமும் ஓடுகின்றது - தாயத்தில் குணம் ஆகிறதோ இல்லையோ , ரங்கனின் அன்பில் வியாதி குணமாகும் என்கிறாள் அந்த தாயத்தை கொடுக்கும் தாய்
பிறகு பல திருப்பு முனைகள் - தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?") - ஒருவரியில் சொல்லவேண்டுமானால் ரஹீமாக வந்து அன்பை போதித்தான் - இதில் ரங்கனாக வந்து - போதித்ததை நடைமுறையில் நடத்தி காட்டினான்
படம் மீண்டும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற வரிகளுடன் இன்பமாய் முடிவடைகின்றது - உண்மை என்று நம் மனம் உரக்க கத்துகின்றது - இந்த ஊரில் மட்டும் எங்கள் இந்த தங்க ராஜா வாழவில்லை - உலகம் முழுவதும் இன்றும் , என்றும் வாழுகிறார் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு முடிசூடா மன்னனாக NT !!
----
நினைவலைகள் திரும்பின - என் நண்பரை காணவில்லை - ரோடில் பார்த்த பலர் என்னிடம் ஓடி வந்து , சார் உங்கள் நண்பர் , ரங்கா ரங்கா என்று சொல்லிகொண்டே போகிறார் -- ஒருவேளை அவருக்கு ஒரு ரங்கன் கிடைக்கலாம் - யார் கண்டது??
---சுபம்----:)
ஒரு சின்ன வேண்டுகோள் - மிகவும் நேரம் எடுத்துகொண்டு ரங்கனை எனக்கு முடிந்த அளவில் அலங்காரம் செய்திருக்கிறேன் - பிழைகள் அதிகம் இருக்காது என்றும் நம்புகிறேன் - தயவு செய்து சற்றே டைம் space கொடுத்து மற்ற பதிவுகள் இங்கு வந்தால் என் பதிவை ஒருவராவது முழுமையாக படித்திருப்பார் என்று எண்ணி எனது அடுத்த முயற்ச்சியில் இறங்குவேன் - நன்றி
நடிகர்திலகத்தின் 12-ஆம் திரியை வெற்றிகரமாக நிறைவு செய்து, கோபால் சொல்லியது போல், 14-ஆம் திரியை இனிதாக துவக்கி வைக்க மற்றவர்களைப்போல் நானும் ரவிகிரண் சூர்யாவை பரிந்துரைத்து வாழ்த்துகிறேன். அதே சமயத்தில், மற்ற திரிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கும் சீனியர்கள் யாவரையும் அழைத்து தங்கள் வழக்கமான சிறந்த பதிவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.