இன்றைய ஸ்பெஷல் (86)
'இன்றைய ஸ்பெஷலி'ல் ரொம்ப ரொம்ப கேட்க முடியாத அனைவரும் மறந்தே போய்விட்ட ஒரு காவியப் பாடல்.
'இன்றைய ஸ்பெஷல்' பாடலை கோபால் அவர்களுக்கு டெடிகேட் செய்கிறேன். (இது அவருக்கு மிகவும் பிடித்த பாடல்)
https://encrypted-tbn2.gstatic.com/i...-l0QZuAClqDZUg
படம்: பந்தயம்
தயாரிப்பு: எம்.கே. மூவீஸ் பாலன் பிக்சர்ஸ்
நடிகர்கள்: ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், விஜய நிர்மலா, சைலஸ்ரீ, எம்.ஆர்.ஆர். வாசு
இசை: என் பிரியத்துக்குரிய டி.ஆர்.பாப்பா
பாடல்கள்: கண்ணதாசன்
கதை, வசனம்: மதுரை திருமாறன்
ஒளிப்பதிவு: துரை, விஜயம்
இயக்கம்: A.காசிலிங்கம்
இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் ரகம்.
'நாலா புறமும் கோடு கட்டி'
'ஒருவர் பின்னாலே ஒருவர்'
'பார்த்தால் போதுமா... பழக வேண்டாமா' (ஆஹாஹா! என்ன ஒரு பாடல்! எனக்குப் பிடித்தமான சைலஸ்ரீ கிளப் டான்ஸ்)
சுசீலா அம்மாவின் காலத்தால் அழியாத பாடல்கள். ஆனால் மிக நல்ல முத்தான பாடல்கள் கிளப் டான்ஸ் பாடல்களாகப் போனதுதான் கொடுமை)
'தென்றல் வந்து தொட்டதனாலே' பாடகர் திலகமும் சுசீலாவும் பாடும் டூயட்.
இரு நண்பர்கள். முத்து, சோமு. ஏழைகள். ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடி இருக்கின்றனர். முத்து பொறுமைசாலி. சோமு கொஞ்சம் கோபக்காரன். சோமு ஒரு ஆபீஸில் பணி புரிகிறான். நியாயமானவனும் கூட. அங்கு நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்டு வேலை இழக்கிறான். வாடகை கொடுக்கக் கூட வழியில்லாமல் போகிறது. வேலை இழந்த சோமுவை முத்து கடிந்து கொள்கிறான். இதனால் கோபம் கொண்ட சோமு வீட்டை விட்டு வெளியேறுகிறான். முத்து அவனைக் கண்டுபிடித்து சமாதானப்படுத்த முயன்று தோல்வியுறுகிறான்.
இருவருக்கும் வாதம் முற்றி இறுதியில் பந்தயத்தில் முடிவடைகிறது..சோமு முத்துவை விட்டு பிரிவதாகக் கூடுகிறான். 'உன் குணத்திற்கு உன்னால் தனியாக இந்த சமூகத்தில் வாழ முடியாது' என்று சோமுவிடம் முத்து கூறுகிறான். சோமு தன்னால் தனித்து 'என் குணத்திற்கேற்ப வாழ முடியும்' என்று முத்துவிடம் பந்தயம் கட்டுகிறான்.
5 வருடங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள். அப்போது இருவரின் நிலைமை என்ன என்று பார்ப்போம் என்று பந்தயம் கட்டுகிறார்கள். 5 வருடம் சென்று பிரிந்த அதே இடத்தில் சந்திக்க முடிவு செய்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி, கண்ணீர் மல்கியபடி பிரியாவிடை பெறுகிறார்கள்.
சோமு விதி வசத்தால் ஒரு பெரிய திருடனாகிறான். ஒரு கொள்ளைக் கூட்டத்தையே நடத்தும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான். ஆனால் முத்துவோ கஷ்டப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியாகி விடுகிறான்.
5 வருடங்கள் ஓடி விடுகின்றன. இப்போது இருவரும் சந்திக்கும் வேளை வரப் போகிறது. இருவருமே ஒருவரை ஒருவர் சந்திக்கும் மன நிலையில் சந்தோஷமாக தாங்கள் பிரிந்த இடத்திற்கே கிளம்புகிறார்கள். 'என் பாதைக்கு நீ வருவாய்' என்று இருவருமே தன்னம்பிக்கையுடன் பாடுகிறார்கள் தனித்தனியே.
இந்த சிச்சுவேஷனில் அமைந்த அற்புத பாடல்.
இருவரும் சந்திக்கின்றனர். ஒருவன் போலீஸ் அதிகாரி. இன்னொருவன் திருடன். இருவரும் நெருங்கிய நண்பர்கள். போலீஸ் நண்பன் திருடனை சரண் அடையச் சொல்லுகிறான். திருட நண்பன் முடியாதென்கிறான்.
முடிவு என்ன? என்ன? என்ன?
'பந்தயம்' படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்லும்.
போலீஸ் அதிகாரி முத்துவாக ஜெமினி கணேசன், திருடன் சோமுவாக ஏ.வி.எம்.ராஜன். லட்சாதிபதியான திருடன் தன் ஆருயிர் நண்பனை சந்திக்க புறப்படுகிறான் 5 வருடங்களுக்குப் பிறகு அவன் சந்திக்கப் போகும் நண்பன் போலீஸ் அதிகாரி என்று தெரியாமலேயே.
ஜெமினிக்கு பாடகர் திலகமும், ஏ.வி.எம்.ராஜனுக்கு 'சீர்காழி' கோவிந்தராஜனும் குரல் தந்திருப்பார்கள். கதைக் களத்திற்கேற்ற அருமையான வரிகளைக் கொண்ட பாடல்.
சீர்காழி அடிக்குரலில் அதிக வல்லின உச்சரிப்புகளுடன் 'இறவு நடக்கின்றது' என்று பாடும் பாணியே அலாதி. அதே போல உச்சஸ்தாயியில் பாடகர் திலகம் பாடலின் இறுதில் 'நண்பனைத் தந்துவிடு' என்று கெஞ்சிப் பாடும் போது 'நானும் கொஞ்சமும் உனக்குச் சளைத்தவன் அல்ல' என்று சீர்காழியாரிடம் 'பந்தயம்' கட்டுகிறார்.
போலீஸ் நண்பனின் மன நிலைமையையும், திருடனின் மன நிலைமையையும் வெகு அழகாக நமக்கு உணர்த்தும் பாடல்.
இரவு வேளையில் அமைதியாக ஒலிக்கும் பாடல். அற்புதமான ட்யூன். நல்ல நடிப்பு. ராஜன் அப்படியே நடிகர் திலகத்தை ஜெராக்ஸ் எடுக்க முயல்வார். ஜெமினி அமைதியாக நடித்திருப்பார்.
கண்ணதாசன் கருத்தாழமிக்க இப்பாடலை இயற்றியுள்ளார். இரு நண்பர்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்திக்கப் போகும் போது இருவர் மனநிலைமையையும் அவர் விளக்கும் வரிகள் அற்புதம். 'சீக்கிரமாக நண்பனை சந்திக்க வேண்டும்... பொழுதே ஏன் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாய்? விரைவில் சென்று விடு' என்று காதலன் காதலி ரேஞ்சுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு சந்திக்கத் துடிக்கும் வேகத்தை அற்புதமாக நமக்கு வரிகள் மூலம் உணர்த்துகிறார் கவிஞர். அப்படி அவர்கள் சந்திக்க ஆர்வம் கொள்வது மட்டுமின்றி அவரவர் கருத்தில் அவரவர் ஸ்ட்ராங்காய் இருப்பதையும் எடுத்துக் காட்ட கவிஞர் மறக்கவில்லை.
இந்தப் பாடலை எப்போதும் நானும் கோபாலும் சேர்ந்தே பாடுவோம். எங்கள் இருவருக்கும் அவ்வளவு பிடித்த பாடல்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/bfzFIFcd8BI/hqdefault.jpg
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
சாலைகள் இரண்டும் பிரிந்து
மீண்டும் சந்திக்கும் வேளையிலே
சாலைகள் இரண்டும் பிரிந்து
மீண்டும் சந்திக்கும் வேளையிலே
அவை தனக்குள் பேசும் ஆயிரம் பேச்சு
ஆனந்த போதையிலே
நாளைப் பொழுது யாருக்கு விடியும்
இருவரின் வாழ்க்கையிலே
நாளைப் பொழுது யாருக்கு விடியும்
இருவரின் வாழ்க்கையிலே
இந்த நாடகத்தில் வெற்றி யாருக்கென்று
தெரியும் சேர்க்கையிலே
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
வஞ்சக உலகை வஞ்சகத்தாலே
வென்றது என் மனமே
வஞ்சக உலகை வஞ்சகத்தாலே
வென்றது என் மனமே
என் வாழ்க்கையைக் கேட்டால்
இதுதான் சரியென வருவாய் என்னுடனே
நீ வருவாய் என்னுடனே
சட்டம்.. தர்மம்.. நீதி
சட்டம் தர்மம் நீதிக்கு
என்னைத் தந்து விட்டேன் மனமே
சட்டம் தர்மம் நீதிக்கு
என்னைத் தந்து விட்டேன் மனமே
நாம் சந்தித்வுடனே இதுதான் சரியென
வருவாய் என்னுடனே
நீ வருவாய் என்னுடனே
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
பொழுதே பொழுதே போய்விடு போய்விடு
ஏன் இன்னும் தயங்குகிறாய்
பொழுதே பொழுதே போய்விடு போய்விடு
ஏன் இன்னும் தயங்குகிறாய்
அன்பு பொங்கும் எங்கள் இதயத்தைக் கண்டு
நீ ஏன் மயங்குகிறாய்
விடியும் பொழுதே விடியும் பொழுதே
விரைவில் வந்துவிடு
விடியும் பொழுதே விடியும் பொழுதே
விரைவில் வந்துவிடு
எங்கள் பிரிவின் துயரைப் பேசி முடிக்க
நண்பனைத் தந்துவிடு
நண்பனைத் தந்துவிடு
https://www.youtube.com/watch?v=fI2-...yer_detailpage

