அன்புள்ள ராகவேந்தர் சார்,
முதலில் தங்களின் புதிய தொடருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஏற்கெனவே பம்மலாரின் ஆவணப்பதிவுகள் தொடர், வாசுதேவரின் 'நடிகர்திலகத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தொடர்', மற்றும் 'நடிகர்திலகத்தின் நாயகியர் தொடர்', இப்போது தங்களின் 'நடிப்புக்கு இலக்கணம் தொடர். தொலைக்காட்சி சேனல்களில் அடுத்தடுத்து சீரியல்கள் வருவது போலிருக்கிறது. நமது திரி அறுசுவை உணவு என்பதையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து, ராயப்பேட்டை மணிக்கூண்டு 'போஸ்ட்டர்' முதியவரின் ஈடுபாடு கண்களில் நீரை வரவழைத்தது. நடிகர்திலகத்துக்கு எப்பேற்பட்ட ரசிகர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றெண்ணும்போது நானெல்லாம் என்ன சுண்டைக்காய் என்ற உணர்வுதான் வருகிறது. நான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் பட்டப்படிப்பு படித்ததால், நீங்கள் சொல்லும் அந்த இடம் எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். அந்த சர்ச்சின் காம்பவுண்ட் மீது கண்ணாடிப்பெட்டியினுள் ஒரு பைபிள் புத்தகத்தை திறந்து வைத்து தினமும் இரண்டு பக்கங்கள பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்கள். கல்லூரிக்கு மாலை வகுப்பை கட் அடித்து விட்டு, மவுண்ட் ரோடு தியேட்டர்களுக்கு படம் பார்க்க அந்த வழியே நடந்துதான் நாங்கள் செல்வது வழக்கம். கட் அடிக்காத காலங்களில் மாலை வகுப்பு முடிந்து நண்பர்களுடன் 'சாந்தி தியேட்டர் சங்கமத்துக்கு' நடந்து செல்வதும் அந்த வழியேதான். சென்னைக் கல்லூரிகளிலேயே 'தியேட்டர் வளம் செறிந்த இடம்' புதுக்கல்லூரிதான் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.
அந்த இடத்தில் ஒட்டப்பட்டிருந்த தெய்வமகன் போஸ்ட்டரை அந்த முதியவர் இறக்கும் வரை பாதுகாத்து, இறந்த பின்னும் எடுத்துச்சென்றார் என்பது உண்மையிலேயே அதிசயிக்கத்தக்க ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இதுபோல இன்னும் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ, இருக்கிறார்களோ.