Originally Posted by
Yukesh Babu
திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.
அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.
அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.
அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.
அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-
'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.
ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.
அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.
'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.
'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.