வியட்நாம் வீடு (2)
தங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பதமனாபன் - சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக்காட்டும் அந்த வசனம். ரிட்டையாராகி வீடு வந்த பத்மனாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் "சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா?" என்று கேட்க "என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு...", முடிக்கும் முன்பாகவே அவர் "இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்" என்று பதறும் இடம்.
பார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், "நாளைக்கு இந்நேரம் நான் பிரிஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்" என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், 'நீயாடி இப்படி' என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு... நூறு பக்க வசனங்களுக்கு சமம்.
மனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஷ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடாநட்புகளின் காரணமாக மதுவருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப்பார்த்து பதறிப்போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பந்த்மனாபன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.
அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கைநீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப்பார்த்து பதமனாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).
கோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஷ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா?. பிரிஸ்டிஜ் பத்மனாபனின் சம்மந்தியாயிற்றே. வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மனாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் "ஏன் இன்னும் நிக்கறேள்?. மேலே போங்கோ" என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்சஒழிப்புத்துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்துவீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மனாபன் அதிர்ந்து போகிறார். ஷ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப்பார்த்து, "சம்மந்தி, பாத்தேளா.. இந்த வீட்டோட பிரிஸ்ட்ஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து" என்று பத்மனாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய் விடுவார்.