-
Re-Submission of post written in October 18, 2011
1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....
தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).
தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)
தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).
எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.
ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.
இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.
அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.
ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.
மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்காரனுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.
இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.
எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.
-
கோடை வெயில் கொளுத்தும் போது குளிர் மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அப்படி குளிர் மழையாய் மீண்டும் மீள் பதிவோடு அதுவும் எங்கள் பாபுவோடு மீண்டும் வந்த எங்கள் அருமை நண்பர் கார்த்திக் அவர்களே! வருக! வருக! உங்கள் எழுத்துக்களை அள்ளி தருக!
அன்புடன்
-
வாஞ்சையுடன் வரவேற்ற அன்பு சகோதரர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு,
அடுத்த மீள்பதிவு.....
ஆண்டவன் கட்டளை
முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.
மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?. 'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.
முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க, 'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.
நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.
'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.
ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.
ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.
அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".
என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை"..
-
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (3)
நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.
1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்
உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).
அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.
1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.
ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).
தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.
இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.
வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).
பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).
கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.
அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.
டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.
-
கார்த்திக்,
தங்கள் பதிவு மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. பார்த்த ஞாபகம் இல்லையோ என்பது தலைவர் நமக்கெல்லாம் அளித்த மிகப் பெரிய Tagline ஆகவே நான் நினைக்கிறேன். அந்த நாள் ஞாபகம் என்பதற்கும் பார்த்த ஞாபகம் என்பதற்கும் இடையே இருக்கும் வேற்றுமையை இத்திரி மிகச் சிறப்பாக காட்டுகிறது என்பதற்கு முரளி சாருடைய பதிவுகளும் தங்களுடைய பதிவுகளும் சான்றாகும். அந்த நாள் ஞாபகம் என கூறும் போது ஒரு மனிதனின் வயது முதிர்ச்சியை எடுத்துரைப்பாதக ஒலிக்கிறது. ஆனால் பார்த்த ஞாபகம் என்பது வயதையோ காலத்தையோ பருவத்தையோ தொடாமல் நினைவுகளை மட்டும் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
தங்களிருவருக்கும் நினைவிருக்கும் அளவிற்கு திரையரங்க நிகழ்வுகள் எனக்கு இல்லை என நான் உணர்கிறேன். ஆனால் தங்கள் எழுத்துக்களுக்கு உள்ள வலிமையினால் அங்கே நாங்களும் இருப்பது போல உணர்கிறோம்.
இன்னும் தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.
-
கார்த்திக் சார்.. வாங்க வாங்க ... சிக்கலாரே சுகமா இருக்கீயளா..என்ன ரொம்ப நாளா காங்கலை..நம்ம ஊர்ப் பக்கமும் வரலாமில்லை.. பரவால்லை.. நீங்க எந்த ஊர்ல எழுதினாலும் பார்க்க வருவோம்ல..அடிக்கடி வாங்க..வந்து தாங்க..உங்கள் உணர்வுகளை..
-
அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் சின்னக்கண்ணன் சார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ராகவேந்தர் சார் அவர்களின் விளக்கம் மிகவும் ஏற்புடையது.
சின்னக்கண்ணன் சார், சென்ற ஆண்டு நவம்பருக்குப்பின் (சரியாக சொன்னால் ஐட்டம் விஜயஸ்ரீயின் பதிவுக்குப்பின்) இப்போதுதான் திரியில் நுழைந்திருப்பதால், அதன்பின் வந்த பதிவுகள் அனைத்தையும் படித்து வருகிறேன். முடித்ததும் மெயின் திரியில் நிச்சயம் பதிவிடுவேன். சில முக்கிய தலைப்புகளுக்கு தனித்திரி துவங்கியதை நானும் வரவேற்கிறேன். (கோபால் சார் மன்னிக்க).
இனி முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (4)
'நீதி' நினைவுகள்
ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.
1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).
இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.
வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.
நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).
கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.
பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.
முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).
அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதாடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.
காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.
படம் வெளியானது 1972 ஆச்சே.
-
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (5)
'ராஜபார்ட் ரங்கதுரை'
நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)
தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.
1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).
ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.
அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).
ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.
மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).
ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.
போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.
ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.
அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.
பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.
படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.
அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)
பாடல் காட்சிகளில் மட்டுமல்லாது வசனக்காட்சிகளிலும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்கள், கைதட்டல்கள். நடிகர்திலகத்தின் மற்றைய படங்கள் போலல்லாது இதில் பொடிவைத்த வசனங்கள் அதிகம். அவை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக்கொண்டு சென்றன.
குறிப்பாக சொன்னால், ராமதாஸிடம் "இது பனங்காட்டு நரி, உன் சலசலப்புக்கு அஞ்சுமா?"
கொடிகாத்த குமரன் நாடகத்தில் போலீஸாரிடம், "கூடிய சீக்கிரமே கோட்டையிலே எங்கள் மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப்பறக்கத்தான் போகிறது. அப்போது இதே கைகள் எங்களுக்கும் வெண்சாமரம் வீசத்தான் போகின்றன".
ஆர்மோனியத்தை அடகு வாங்க மறுக்கும் அடகுக்காரர் சொல்லும் வசனம் "உன்னை கோடி ரூபாய்க்கு மதிக்கிறேன்யா, எதுக்கு? உன்கிட்ட இருக்கிற நடிப்புக்கு"
இப்படி படம் நெடுக நிறைய இடங்கள். பாடல்களில் கண்ணதாசனும், வசனங்களில் பாலமுருகனும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டனர். ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இப்படியொரு படத்தை எடுத்ததற்கு குகநாதன் காலம் முழுக்க பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.
இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.
-
Mr Sindhanur Karthik,
Warm welcome after a long gap and your memories of watching NT's movies taking us to
those wonderful days. Pls do contribute regularly.
Regards
-
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (6)
'ஜஸ்டிஸ் கோபிநாத்'
1978-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களில் (தமிழ் 7, மலையாளம் 1) சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வெளிவந்தது 'தியாகம்' ஒரு படம் மட்டுமே. ஜெனரல் சக்ரவர்த்தி சாந்தி, மகாராணி, அபிராமியிலும், தச்சோளி அம்பு சாந்தியில் மட்டும் ரிலீஸ் ஆயின. மற்ற படங்கள் மற்ற தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. பட்டியல் போட்டால் தெளிவாகும். (1977 தீபாவளியன்று வெளியான 'அண்ணன் ஒரு கோயில்' மார்ச் 3 அன்று சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 114 நாட்களைக்கடந்த நிலையில், அதே அரங்குகளில் 'தியாகம்' திரையிடப்பட்டது).
அந்தமான் காதலி - லியோ/மிட்லண்ட், மகாராணி, ராக்ஸி
தியாகம் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
என்னைப்போல் ஒருவன் - தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா
புண்ணிய பூமி - சித்ரா, பிராட்வே, உமா
ஜெனரல் சக்ரவர்த்தி - சாந்தி, மகாராணி, அபிராமி
தச்சோளி அம்பு (மலையாளம்) - சாந்தி
பைலட் பிரேம்நாத் - அலங்கார், மகாராணி, ஈகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, பால அபிராமி, லிபர்ட்டி
இவற்றில் அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத் ஆகிய நான்கும் 100 நாட்களைக்கடந்து ஓடின. என்னைப்போல் ஒருவன் 10 வாரங்களும், மற்றவை 50 நாட்களும் ஓடின. தியாகம் சாந்தியிலும், புவனேஸ்வரியிலும் 104 நாட்களில் மாற்றப்பட, கிரௌனில் தொடர்ந்து ஓடியதும், அங்கே வெள்ளி விழாவைக்கடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு ஒரு வாரம் ஓடிய நிலையில் 111 நாட்களில் வேறு படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஏமாற்றினர்.
ஆனால், மதுரை சிந்தாமணியில் தியாகம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளிவிழாப்படமாக அமைந்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது. (முரளி சாருக்கும் மதுரை ரசிகர்களுக்கும் நன்றி). ஜஸ்டிஸுக்கு வருவோம்...
அக்டோபர் 26 அன்று வெளியான பைலட் பிரேம்நாத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை பேப்பரைப் பார்க்கும் வரை பாரகன் தவிர மற்ற தியேட்டர்கள் முடிவாகாமலே இருந்தது. காலை தினத்தந்தியைப் பார்த்ததும்தான் சென்னையில் நான்கு தியேட்டர்களில் வெளியாவதாக விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஆச்சரியம், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த 'லிபர்ட்டி' தியேட்டரும் இடம் பெற்றிருந்ததுதான்.
ஆச்சரியத்துக்குக் காரணம் இருந்தது. லிபர்ட்டி தியேட்டரில் ஆரம்ப காலத்தில் புதுப்படங்கள் வெளியாகியிருக்கும் போலும். ஆனால் பல ஆண்டுகளாக புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல், பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தன. அந்த தியேட்டரில் ஜஸ்டிஸ் கோபிநாத் ரிலீஸாகிறதென்பது ரசிகர்களுக்கு அதிசயமாக இருந்தது. (இதற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதில் 'ஒருதலை ராகம்' திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி, லிபர்ட்டி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற விஷயமும் பின்னர் நடந்தது).
1971-க்கு முன்னர் நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, எங்க மாமா, குலமா குணமா போன்ற படங்கள் லிபர்ட்டியில் ரிலீஸாகின. ஆனால் அதன்பின்னர் நான்காவது ஏரியா தியேட்டர் என்றால் கிருஷ்ணவேணி, ராம், கமலா, நூர்ஜகான் என்றுதான் படங்கள் வெளியாயின.
ஜஸ்டிஸுக்குப்பின்னர், நடிகர்திலகத்தின் கவரிமான், நான் வாழ வைப்பேன் படங்களும் லிபர்ட்டியில் ரிலீஸானது
பேப்பர் பார்த்ததும் மண்ணடியிலிருந்த மளிகைக்கடையிலிருந்து தி.நகர் நண்பர் வீரராகவனுக்கு போன் செய்து விவரம் சொல்ல (அப்போது லோக்கல் கால் 15 பைசா) அவனும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், முதல்நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு லிபர்ட்டிதான் சரியான தியேட்டர், மற்றவைகளில் முதல்நாள் டிக்கட் கிடைக்காது என்று சொல்லி, என்னை கோடம்பாக்கம் வரச்சொல்ல, பீச் ஸ்டேஷனிலிருந்து புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் விரைந்தேன். சைக்கிளில் வந்த வீரராகவன் ஸ்டேஷனில் காத்திருக்க, இருவரும் லிபர்ட்டிக்கு விரைந்தோம். அப்போதுதான் ருசிகர சம்பவம் நடந்தது.
அந்த நேரத்திலும் (காலை 8 மணிக்கு) தியேட்டர் கேட் முன்னால் சுமாராக கூட்டம் கூடியிருந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தைப்பார்த்த தியேட்டர் சிப்பந்திகள் இருவருக்கு ஆச்சரியம். "எதுக்குய்யா எல்லாரும் வந்திருக்கீங்க?" என்று கேட்க, பலர் கோரஸாக "புதுப்படத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ண வந்திருக்கோம்" என்று சொன்னதும்...
"என்னது? புதுப்படமா? இங்கே புதுப்படமெல்லாம் போடறதில்லைங்க. நீங்க தியேட்டர் தப்பா வந்துட்டீங்க. போங்க... போங்க" என்று விரட்டினர். "இல்லேப்பா, பேப்பர்ல பார்த்துட்டுதாம்பா வந்திருக்கோம்" என்று (சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல) சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் வேடிக்கை "அப்படியா? அப்போ பேப்பர்காரங்க தப்பா போட்டிருப்பாங்க" என்று சொன்னார்களே தவிர கேட்டைத் திறக்கவில்லை.
"இது ஏதுடா வம்பா போச்சு, பேசாம வேறு தியேட்டருக்குப்போயிடலாம் போலிருக்கே. போயும் போயும் இந்த தியேட்டரை புக் பண்ணியிருக்காங்க" என்று ரசிகர்கள் முனகியபடி நிற்க (இத்தனைக்கும் நடிகர்திலகமும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் முதல்படம்), அப்போதுதான் தியேட்டர் மேனேஜர் பைக்கில் வந்தார். அவருக்கு மட்டும் சிறிதாக கேட்டை திறந்து விட்ட சிப்பந்தி, "சார், நம்ம தியேட்டர்ல புதுப்படம் ரிலீஸாகப்போறதாக எல்லோரும் தப்பாக வந்து நிற்கிறாங்க" என்று சொல்ல,
"இல்லேப்பா ஜஸ்டிஸ் கோபிநாத் படம் நம்ம தியேட்டர்லதான் ரிலீஸாகுது. நேத்துராத்திரிதான் நம்ம தியேட்டர் கன்பர்ம் ஆச்சு. அதுனாலதான் இன்னும் போஸ்ட்டர்கள் வரலை. நீ மெயின் கேட்டையும் கவுண்ட்டர் கேட்டையும் திறந்து எல்லாரையும் உள்ள விடு" என்று சொல்லிவிட்டு உள்ளே போக, எல்லோரும் சரியான நகைச்சுவை கிடைத்து போல 'ஓ'வென்று கூச்சலிட்டு சிரித்தனர். தியேட்டர் சிப்பந்திகள் முகத்தில் அசடு வழிந்தது. அவ்வளவு சீக்கிரம் போயும் முதல்நாள் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது. மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து ஆறு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். இந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.
என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஒருமுறை மாலைக்காட்சி பார்த்தபின் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை இன்றுவரை மறுமுறை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலமுறைகள் பார்க்க முயன்றும், வேறு சில தடங்கல்கள் வந்து இடையூறு செய்து பார்க்கமுடியாமல் போனது. வீடியோ கேஸட்டிலும் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் படத்தின் கதை சரியாக நினைவில்லை. ஆனால் படம் நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்தின் ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், ரஜினிகாந்த்தின் ஜோடியாக சுமித்ராவும் நடித்திருந்தனர். சி.ஐ.டி.சகுந்தலா ஏதோ கிராமத்துப்பெண் ரோலில் ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார். Heron ராமசாமிதான் பிரதான வில்லன். "நானா சொன்னேன் தீர்ப்பு" பாடல் T.M.S. இன் கணீர்க் குரலில் அட்டகாசமாகவே இருந்தது. இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைல் செம கலக்கல். வயதான ரோலில் வரும் போது நடிகர் திலகத்தின் அந்த குறுந்தாடி அவருக்கு கன கச்சிதம். அந்த குறுந்தாடி அவர் மேல் ஒரு கம்பீரமான மரியாதையை ஏற்படுத்தும்.
படத்தில் நடிகர்திலகம் மற்றும் ரஜினியை விட தேங்காய் சீனிவாசனுக்கு அதிக சீன்களில் வரும் வாய்ப்பு. அவருக்கு ஒரு பாட்டு கூட இருந்தது. தேங்காய் ஸ்ரீனிவாசன், அவர் ஜோடியாக வரும் அபர்ணா காட்சிகளில் கொஞ்சம் கத்தரி வைத்து கதையிலும், காட்சி அமைப்புகளிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நல்ல வெற்றி கண்டிருக்கும். ரஜினிக்கும் சுமித்ராவுக்குமான ஒரு டூயட் பாட்டு "நமது காதல் என்றும் என்றும் மாறாதது" வாகினி ஸ்டுடியோ புல்வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. சுமித்ரா ரோஸ்கலர் பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணுவார். அந்தப்பாடலை மட்டும் சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்ததால் நினைவிருக்கிறது.
இப்போது மீண்டும் 'ஜஸ்டிஸ் கோபிநாத்' முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.