-
*
கடல் மைனா..
சின்னக் கண்ணன்..
20 பெயர், பிரமை, பேச்சு.
தூக்கத்தில் ஏதோ கனவுகண்ட சின்னக் குழந்தையானது தூக்கம் விலகாமல் தூளியிலேயே கெஞெ என மென்மையாகச் சிணுங்கும் ஒலி போல் இருந்தது அந்தக் கொலுசொலி.. சற்றே திரும்பிப் பார்த்தால் இருட்டினில் பாதை தெரிவதற்காக ஒரு சற்றே பெரியதான மண் அகல் விளக்கினில் காற்றில் அணையக் கூடாது என்பதற்காக சுற்றியும் ஓலையால் கட்டி கொஞ்சம் வெளியே தெரிந்த சுடர் மூலம் வழி தெரிந்து வந்து கொண்டிருந்தாள் எழில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அந்த வேப்பமரத்தின் வேர் ப் பகுதியில் அந்த விளக்கை வைத்து விட்டு கொஞ்சம் தெரிந்த நிலவொளியில் அவன் அருகிலேயே அமர்ந்தாள். “என்ன செய்வதாக உத்தேசம்” என வினவவும் செய்தாள்..வீரனுக்கு பதிலுக்குப் பதில் காற்று தான் வந்தது..
ஏனெனில் அந்த அகல் விளக்கை எடுத்து அவள் மெல்ல அன்னத்தை விட அழகாக நடந்து வருகையில் இளங்கோவடிகள் தான் நினைவுக்கு வந்தார்..*”உன் தகப்பன் என்னடாவென்றால் மீன் பிடிக்கும்கொடுமையான வலையால் உயிர்களைக் கொல்லுகிறான்..நீ என்னவென்றால் கண்வலையால் உயிர்களைக் கொல்லுகின்றாய்” என நினைத்த போதே அடுத்த வரியும் நினைவுக்கு வந்து திகைத்த போது தான் எழிலின் கேள்வி அவன் காதுகளுக்கு எட்டியது.. “பராவாயில்லை..இந்தப் பராந்தக சோழர் காலத்தில் பெண்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்!” என நினைத்து “ நீ சொல் எழில் என்ன செய்ய வேண்டும்” என்று சொல்லி மென்சிரித்தான்.. அருகில் நகரவும் செய்தான்..எழில் முறைத்தாள்.. ” வீரரே..என்னை என்ன செய்வதாக உத்தேசம் எனக் கேட்கவில்லை.. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டேன்! அது சரி முதலில் சொல்லுங்கள்..உங்கள் பெயர் இளவீரன் தானா..இல்லை வேறு ஏதாவதா.. நானும் முதலிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்” என்றாள்.
சற்றே மெளனித்த வீரன், “ பெயரில் என்ன இருக்கிறது எழில்..வாழும் வாழ்க்கையில் பெயர் வரவேண்டும் அது தானே முக்கியம்.. இருப்பினும் இளவீரன் என்பது நான் வைத்துக் கொண்ட பெயர்..என் சிற்றப்பா ரங்கனாதப் பிரம்ம மாராயர் அரிஞ்சய சோழர் படையில் ஒரு சிறு பிரிவுக்குத் தளபதி.. நான் வேறு ஒரு பிரிவில் உப தளபதியாக இருக்கிறேன். எனது பெயர் **ராமபத்ரப் பிரம்ம ராயர் என்பார்கள்..ஓலை அனுப்பவேண்டுமென்றால் கையெழுத்துக்கு மட்டும் தனி ஓலை தேவைப்படுவதால் இளவீரன் எனச் சுருக்கி வைத்துக் கொண்டேன்!..மேலும் பெயரைக் கேட்டால் அந்தணனுக்கு எதற்குப் போர்த்தொழில் என சில தளபதிகள் நகைச்சுவைக்காகக் கேட்கிறார்கள்.. போர்த்தொழில் புரிய ஆசைப்படுபவனுக்குக் குலமா முக்கியம்..போரிட்டு வெற்றியடையத்தெரிந்தால் போதாதா..எனில் கூடிய வரை வீரன் என்றே அனைவரையும் அழைக்கச் சொல்லுவேன்” என்றான்..
எழிலுக்கு உடலெல்லாம் நடுங்கியது.. சற்றே பிரமை பிடித்தவள் போலானாள்..ஏற்கெனவே மாலையில் பார்த்த நபர் ராஜாதித்யர் எனத் தெரியவந்தது, மாதவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறார். நாம் சாதாரண மனிதன் ஹே சும்மா அரண்மனைக் காவலன் தானே எனக் கடிந்து பேசிய இவன்..இவரோ அரிஞ்சய சோழரின் படை உபதளபதியாம்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா இள நெஞ்சே தாங்கு..ஸ்ரீராமா எனக்குத் தைரியம் கொடு” என மனதில் சொல்லிக் கொண்டு “ வீரரே..நீர் சொல்வதெல்லாம் உண்மையா.. இருப்பினும் உங்களிடம் சற்றே கடிந்தாற்போல் பேசிவிட்டேன்.. மன்னிக்க” எனச் சொல்ல அவன் மெல்ல அவளது செந்தாழம் மடலொத்த கைகளில் வ்லது கையைப் பற்றப் பார்த்தான்..அவள் உதறினாள்.. “ நன்றாக இருக்கிறதே.. சந்தித்து நிறைய நேரம்கூட ஆகவில்லை..அதற்குள் காதல் என்றெல்லாம் சொல்லாதீர்கள்..எனக்கெல்லாம் காவியங்களில் வருவது போல சட்டெனக் காதலெல்லாம் வராது..அதற்கு நிறையப் போக வேண்டும்..சரி.. நீங்கள் இங்கு வந்த காரணம்..கண்டிப்பாய் பெரிதாகத் தான் இருக்கவேண்டும்..சொல்லுங்கள்” எனக் கேட்டு அவன் விழியூடிப் பார்க்க, அவனோ கலகலவென நகைத்தான்..
(தொடரும்)
***
* கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் – (சிலப்பதிகாரம்)
*
** பிரம்ம மாராயர் என்பவர்கள் அந்தக் காலத்தில் சோழர் படையில் பெரும்பதவி வகித்திருந்தார்கள்..இந்த ராமபத்ர பிரம்ம மாராயர் – ராசராச சோழனின் அமைச்சர் அனிருத்தப் பிரம்ம ராயரின் பாட்டனார் ஆவார்.
”எண்டிசை நிகழும் இருபிறப் பாளன்
கொண்டல் அன்ன குவலய தந்திரன்
ஓங்கு புகழான் உதயமார்த் தாண்ட
பிரம்ம ராயன் தேம்கமழ் தாரோன்
செழுமறை வாணன் தன்திருத் தமையன்.
என கர்னாடக மானிலத்தில் கொள்ள ஹல்லியில் பைரவன் நிலத்துக் கல்லில் குறிப்பிட்டிருப்பது இவராகக் கூட இருக்கலாம்!
**
ஹையா.. சரித்திரக் கதை சம்பிரதாயம் மாறாம * போட்டுட்டேனே!
-
-
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
21 எதிரும் புதிரும்.
*
காதலைப் பற்றிப் பலர் எந்தக் காலத்திலும் நனைத்து துவைத்து அலசி காயப் போட்டு உலர்த்தியிருந்தாலும் கூட அந்த மூன்றெழுத்தில் எந்தப் பருவத்தினருக்கும் மூச்சுமிருக்கிறது.. பேச்சுமிருக்கிறது..அதுவும் கனவுகள் கண்களில் மின்னி வரும், வேதியியல் மாற்றங்களை உடல் கொள்ளக் கூடிய யெளவனப் பருவமென்றால் கேட்கவே வேண்டாம்..
அதுவும் வீர நாராயணரின் திரு நிறைச் செல்வி, கருவேப்பிலைக் கொத்தைப் போன்ற ஒரே மகளான எழில் பிறந்தது சிறு கிராமமான புன்னை பூதங்குடியில் என்றாலும் வளர்ந்தது கற்றது எல்லாம் சிறு நகரமான குடந்தையில் தான்.. வீர நாராயணரின் தங்கையின் கணவர் குடந்தையில் மருத்துவத் தொழில் புரிந்து வந்ததனால் அங்கேயே தங்கிப் படிக்கவும் செய்தாள் அவள். .வீர நாராயணரின் தங்கைக்கோ மகவேதும் இல்லையாதலின் எழிலையே தன் மகளாய் வளர்த்து வந்திருந்தாள்...சிறுபருவத்தில் இருந்து பூத்துக் குலுங்கும் இளமைப் பருவமான தற்சமயம் வரை பல மாணவ மாணவிகளிடம் கற்பதற்காகவோ, விளையாடலுக்காகவோ பழகியதால் கொஞ்சம் எதையும் வெளிப்படையாகப்பேசும் சுபாவம் கொண்டு தானிருந்தாள் எழில். .அப்படிப் பல தரப்பட்ட மாணவர்கள், ஆதுர சாலைக்கு வரும் நோயாளிகள், காயம் பட்ட வீரர்கள் எனப் பலரிடம் பேசிப் பழகியிருந்த தனக்கு இந்த வீரனிடம் ஏன் கொஞ்சம் நெருக்கமாகவே கோப தாபத்தைக் காட்டுகிறோம் என அவளுக்குப் புரியவில்லை.காதலென்றால் அதற்கெல்லாம் வெகு நாளாகும்என வீரனிடம் சொன்னாலும் கூட அது தவறோ என உள்ளூரக் குழம்பவும் செய்தாள்..அந்தத் தருணத்தில் தான் நகைத்தான் வீரன்..
சிரித்தவன் தொடர்ந்தான்..” அதெப்படி நான் உன்னிடம் எல்லாவற்றையும் சோல்ல வேண்டுமென எதிர்ப்பார்க்கிறாய்..அதுவும் காதலில்லை காதலில்லை என நீ செந்நிறக் குயிலாய்க் கூவுவது ஏதோ என் மீது மையல் கொண்டாற்போலத்தான் தெரிகிறது” எனச் சொல்லிக் கொஞ்சம் அவளருகில் உட்காரப்பார்க்க அவள் மரத்தின் மீது சாயப் பார்த்தாள்..அது முடியாமல் போகவெ கொஞ்சம் எசகு பிசகாக காலை மடக்கி உட்கார்ந்து கொண்டதில் முழங்காலில் பற்றியிழுத்தாற் போல் வலி வர கொஞ்சம் முகமும் சுளித்தாள்..அதைக் கண்ட வீரன் “சாய் மானம் வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.. நானும் நீயும் எதிரும் புதிருமாய் முதுகுகாட்டி அமரலாம்..என் முதுகில் சாய்ந்து கொள்..உன் கேள்விகளுக்கு விடையிறுக்கிறேன்” எனச் சொல்ல கொஞ்சம் யோசித்து சரியென எழில் சொல்ல அப்படி முதுகும் முதுகும் சாய்ந்து கொண்டு முழங்கால்கள் கட்டிய வண்ணம் அவர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தான் மேலிருந்த வான்மதி வியந்து போனாள்..வீரன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தான்-.ரேணுகா தேவியை ராஜாதித்தர் பார்க்க வந்திருப்பதை.;,அவள் வந்திருக்கிறாள் என அறிவிக்க அவருடைய ஒற்றன் எய்த மோதிர அம்பு (தன்னைக் கொல்வதற்கு இல்லை);, பள்ளத்தில் தள்ளிவிட்டுத் தப்பியோடியதும் அவனே (அவனுக்குக் கொடுத்திருந்த உத்தரவு அப்படி),; .அப்படியே பகைவரின் நடமாட்டமிருப்பதாக வந்த தகவல் பற்றி; ,, ரேணுகாவிற்குத் தஞ்சைவர இஷ்டமிருப்பின் அழைத்துச் செல்லலாமா என ராஜாதித்தர் யோசிப்பது பற்றி; எனச் சொல்லிக் கொண்டே போனான் வீரன்.
அவன் பேசிக்கொண்டு தான் போனானென்றாலும் இந்தப் புறம் திரும்பியிருந்த மங்கையின் முகத்தில் வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் அவன் முதுகில் முழுக்கச் சாயவில்லை என்றாலும் அவளது கூந்தல் அவனது தலைமுடியில் உரசவே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாள் அவள். அவன் பேச்சும் அவள் காதில் அரை குறையாகத் தான் விழுந்தது. .கடைசியில்“உங்களுக்கு என் உதவி எதுவும் வேண்டுமா” எனக் கேட்டாள் எழில். .”கண்டிப்பாகத் தேவைப் பட்டால் சொல்கிறேன் மருத்துவ மாணவியே” என வீரன் சொல்ல அது கூடத் தெரியுமா உமக்கு” என்றவள், ”சரி திண்ணையில் ஒரு படுக்கை கொடுக்கிறேன். சென்று சற்று உறங்குங்கள்..விடிகாலை பூஜையில் கோவிலில் சந்திக்கலாம்” எனச் சொல்லி டபக்கென விலகி எழ, ஒரு ஷணம் விழ இருந்த வீரன் சமாளித்துத் தானும் எழுந்தான்.. மறு நாட்காலை கோவிலில் அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.. கோவிலுக்கு ரேணுகா தேவியும் பூதுகனும் வந்திருந்தனர்!
*(தொடரும்)***
-
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
22. நினைப்பும் பிழைப்பும்.
சில சமயங்களில் வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ ஏதாவது செய்து கொண்டிருப்போம்.. மனம் வேறு எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும்.. செய்யும் காரியம் செவ்வனே செய்யும் படி கண் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் இறக்கை கட்டிப் பறந்துகொண்டே இருக்கும்.. எழிலுக்கும் அப்படித் தான் இருந்தது.. வீட்டினுள் நுழைந்த அவள் வீரனையும் அழைத்துக் கொண்டு உள்ளே ஒரு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாதவரையும் தந்தையையும் தொந்தரவு செய்யாமல் பொற்பதம் பதித்து விழிகளில் எச்சரிக்கையுடனும் வீரனின் கரம் பற்றி காற்றினால் விழிகளில் பேசி எல்லா கட்டுக்களையும் கடந்து ஒரு படுக்கையை எடுத்து வாசலில் திண்ணை வந்ததும் அதில் சற்றே உதறி விரித்துப் பின் கண்களால் விடை பெற்று வீட்டிற்குள் வந்து உள்ளே இருந்த ஒரு அறையில் அன்னை உறங்கிக் கொண்டிருக்க அவள் அருகில் ஓசையுறாமல் படுத்துக் கொண்டாலும் கூட நினைப்பென்னவோ வீரனின் மேலேயே இருந்தது..
*
இவன் மேல் தான் கொண்டது என்ன..என நினைத்தவண்ணம் மேலே கூரையில் கட்டியிருந்த சிறு பானைகளை மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்..உறக்கம் வரத் தான் இல்லை.
. நெஞ்சில் நுழைந்த நெடுவுருவம் செய்ததுவோ
பஞ்சில் சிறுநெருப்பாம் பார்
என யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது..புரண்டு படுத்தாள்.. அன்னையின் மீது கை வைக்க தூக்கக் கலக்கத்திலும் ‘எழில்..தூங்குடி.. உடல் அசதியா’ என்ன” என அவளன்னை கேட்டு பதில் எதிர்பாராமல் தூங்கிவிட, எழிலும் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்..உறக்கம் வருவதற்காக எண்களைச் சொல்லாமல் வ, வா வி வீ எனத் தமிழ் எழுத்துக்களைச் சொன்னவள் தன் செய்கையின் தன்மையை உணர்ந்து வெட்கம் முகத்தில் ஏற அப்படியே உறங்கியும் விட்டாள்..
*
திண்ணையில் படுத்த வீரனுக்கு உடல் அசதியாகத் தான் இருந்தது..இருப்பினும் இளமையின் காரணமாக உறக்கம் வர மறுத்தது..கண்ணை மூடிக்கொண்டான்..இஃதென்ன..எழில்.. மாலையில் பார்த்த சிவந்த சேலையன்று.. இரவில் வேப்ப மர நிழலில் அவள் இரவாடையாக மாற்றி அணிந்திருந்த பச்சை வண்ண சேலையுமன்று.. .தெளிவான வான நிறத்தைப் போன்ற நீல நிறம்..காதுகளில் அது என்ன நீலக்கல் பதித்த அணிகலன்..எங்கு கிடைத்திருக்கும்..ம்ம் கழுத்தில் இருக்கும் நகை.. ஏன் முறைக்கிறாள்.. ஏன் பெண்ணே எனக் கேட்க அவளும் சொல்கிறாள்..அட என்ன இது..அவள் குரல் இப்படிக் கரகரப்பாய் மாறியிருக்கிறது..இல்லை இல்லை..ஒரு பெருமூச்சாய் வருகிறதே..
*
சட்டென்று கண்விழித்த வீரன் பார்த்தால் எதிர்த்திண்ணையில் ராஜாதித்யர் உட்கார்ந்தபடிஉறங்கிக் கொண்டிருந்தார்..களைப்பில் அவரிடமிருந்து தான் கொஞ்சம் ஒலி வந்து கொண்டிருந்தது.. தன் விதியை நொந்த படி கண்ணை இறுக்க மூடிக் கொண்டான் வீரன்..சற்று நேரத்தில் உறங்கியும் விட்டான் அவன்.. மறு நாட்காலை அவர்களுக்கு ஏற்படப் போகும் அனுபவங்களை நினைத்து சற்றே கவலை கொண்ட நிலா, விடிவதற்கு இன்னும் இரு ஜாமம் தான் இருக்கிறது என எண்ணியதாலோ என்னவோ தானும் தூங்க நினைத்து அருகிலிருந்த மேகத்தினுள் சென்று புதைந்து கொண்டது
..
(தொடரும்)
-
-
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
23. வல் வில் ராமன்
*
“என்னைக் கொன்ற பின்பு தான் உன் ஆசை நிறைவேறும்” சொல்வது யார் ஒரு அதி அதி கிழடான பறவை.. யாரிடம்.. தன்னிடம்.. நான் யார்..இலங்கை மன்னன்.. என்னிடமா இந்த எள்ளல் தொனி..
கண்சிவந்த ராவணன் சூலாயுதத்தை எறிந்தான்..அந்த சூலாயுதம் என்ன ஆனது..ஜடாயுவின் மார்பிற்கருகே போய்த் ஒரு நிமிடம் தயங்கிப் பின் திரும்பி வந்தது..எப்படி வந்ததாம்..
தாசி வீட்டுக்குச் சென்ற ஒருவன் கையில் சிறிதே பணமிருப்பதை உணர்ந்து அவள் வீட்டருகில் தயங்கிப் பின் திரும்புவது போல; வாருங்கள் வாருங்கள் எனப் பலமுறை வருந்தி அழைத்ததால் சென்ற போது அங்கு சரிவர உபசாரங்கள் நடக்காததால் மனம் நொந்து திரும்புபவர் போல; துறவியிடம் ஆசிவாங்கச் செல்லும் ஒரு நங்கை அந்தத் துறவியின் அழகில் காதல் வயப்பட்டு மதி மயங்க, அந்த மதியே விழித்துக் கொண்டு ஹேய் நீ நினைப்பது தவறு என இடித்துக் காட்ட வருத்தத்துடன் திரும்புவது போல அந்த வேலானது ராவணனிடமே திரும்பி வந்ததாம் எனக் கம்பன்** சொல்கிறார்..
அப்படிப் பட்ட ஜடாயு போராடி மரணிக்க, அவருடைய ஈமக் க்ரியைகள் செய்து விட்டு ராமன் இளைப்பாறிய இடமான திருப் புள்ள பூதங்குடி என்ற புன்னை பூதங்குடி கோவிலில் அந்த அதிகாலையில் வானம் சிச்சிறிதாய் வெளிர் நீல வண்ணமாய் வெளுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தது.*.
கோவில் பிரகாரத்தினுள் இருந்த சில பணியாளர்கள் குளித்து முடித்தும் கூட துடைப்பத்தை எடுத்து அழகுற பெருக்கிக் கொண்டிருந்தனர்.. சில நடுத்தர வயது
நங்கைகள் குடங்களில் தண்ணீர் வாரி தரையில் தெளித்து வரைந்திருந்த அழகிய கோலங்களில் சிக்கிய புள்ளிகள் பெருமையுடன் சிரித்துப் பார்ப்பவரைக் கவர்ந்து கொண்டிருந்தன.. நான்காம் ஜாமம் முடிய * இரண்டரை நாழிகைகளே இருப்பினும் கொஞ்சம் வெளிச்சமாய்த் தான் இருந்த்து அந்தக் கோவிலின் பிரகாரம்..*
உள்ளே இந்தக் கோவிலில் யாரிருக்கிறார் என அலட்சியமாய்த் திருமங்கை ஆழ்வார் சென்றுவிட, “அன்பா..இங்கு இருப்பவனும் நான் தான்” எனச் சங்கு சக்ர தாரியாய்க் காட்சி அளித்து அவரை மங்களாசாசனம் பாடவைத்த புஜங்க சயனத்தில் இருந்த வல்வில் ராமன் தன் காலருகில் இருந்த பூமா தேவியைப் புன்சிரித்துப் பார்த்திருந்தான்…
மூலவராம் ராமனுக்கு ஒரு படி கீழே ஐம்பொன் சிலையில் வார்க்கப் பட்ட வல்வில் ராமன்,கூட இருக்கும் பொற்றாமரையாள் ஆகியோருக்குத் திருமஞ்சனமும் பூஜைகளும் பயபக்தியுடன் செய்து கொண்டிருந்தார் வீர நாராயணர்..
அருகில் பளபளக்கும் தேகத்துடன், அதே பளபளப்பான கண்கள் மூடியவண்ணம் மாதவ ஆச்சார்ய்ர் ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்..மற்றவர்கள் பார்க்கவொண்ணாமல் திரையும் போடப் பட்டிருந்தது.. மெல்ல மெல்ல நந்தவனப் பூக்களை எடுத்து அலங்கரிக்கவும் ஆரம்பித்தார் வீர நாராயணர்.
.*
திரைக்கு வெளியில் பெருமாள் தரிசனத்திற்கான கூட்டம் அவ்வளவாக இல்லை..பூஜைக்காக அதிகாலையிலே எழுந்து நீராடி இருந்த ராஜாதித்யர் தனது பொய்த் தாடியினைக் களைந்திருந்ததால் அவர் முகம் சற்றே பிரகாசமாக இருந்தது..அருகில் வீரனும் அமர்ந்து இருந்தான்..
சற்றுத் தொலைவில் எழிலும் இன்னொரு இள நங்கையும் கருவறை நோக்கி வந்து கொண்டிருந்தனர்..கண் மூடியிருந்ததால் ராஜாதித்யர் பார்க்கவில்லை.. வீரனுக்குத் தெரிந்தது..கொஞ்சம் எழுந்தும் நின்றான்..இங்கு இவர் எதற்காக வர வேண்டும் என் எண்ணவும் செய்தான்.
(தொடரும்)
• காலை ஐந்து மணி
**கம்ப ராமாயணம்
*
பொன்நோக்கியர்தம் புலன்
நோக்கிய புன்கணோரும்,
இன் நோக்கியர் இல் வழி
எய்திய நல் விருந்தும்,
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர்
தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும், ஆம்
என மீண்டது, அவ்வேல்.
****
-
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
24. தரிசனங்கள்
*
ராஜாதித்யரின் காதலைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்ததாலும் அவர் சொன்ன நடை உடை பாவனைகளை வைத்து எழிலுடன் நடந்துவருவது ரேணுகா தேவியாய்த் தான் இருக்கும் என வீரன் நினைத்தான்..
ரேணுகா ராஷ்டிர கூடர் வழக்கப்படி கரு நீல வண்ண சேலை அணிந்திருந்தாள்..கழுத்தில் குட்டிக் குட்டியாய் செம்பழுப்பில் அழகிய முத்துமாலையும் அணிந்திருக்க மெல்ல எழிலைப் பார்த்தபடி பேசியவண்ணம் நடந்துவந்து கொண்டிருந்தாள்..எழிலின் சேலையோ வான நீல நிறம்.. கழுத்தில் இது என்ன..கனவில் கண்டது போல நீலக் கல்லினால் கோர்க்கப்பட்ட மாலை.. இருவரும் இணைந்து நடந்து வருவது காலையும் காரிருளும் இணைந்து வருவது போல அழகாக இருந்தது..
அது சரி எழிலுக்கு எப்படி ரேணுகா தேவியைத் தெரியும்.. வந்தவுடன் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் வீரன்..
வீரன் நினைத்த படி எழிலுக்கு ரேணுகாவைத் தெரியாது.. கோவில் வாசலில் காலணிகளைக் கழட்டும் போது சற்றுத் தள்ளி ஒரு புதிய பெண் தனது காலணிகளை நளினமாக விடுவதைக் கண்டாள்..அது மட்டுமன்றி தோலினால் செய்யப் பட்ட அந்தப் பெண்ணினுடைய காலணிகளின் நடுவில் அழகாய் ஒரு பூ கரு நீல வண்ணத்தில் வரையப்பட்டு அதன் நடுவில் ஒற்றை முத்துசிரித்துக் கொண்டிருந்தது..
ம்எங்கு வாங்கியிருப்பாள்..பாண்டிய நாட்டு விலையுயர்ந்த முத்துப்போலத் தெரிகிறதே…
ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் பேச்சைத் துவக்க பெரிதாக அறிமுகம் ஏதும் எக்காலத்திலும் வேண்டியிருப்பதில்லை போலும்..
அவளைப்பார்த்து எழில் மென்னகை புரிய அவளும் சிரித்தாள்..இருவரும் இணைந்து நடக்க ஆரம்பிக்க, “நீங்கள்” எனக் கேட்ட எழிலை “இந்த ஊரில்லை.. ராஷ்டிர கூடம்..நீங்கள் இந்த ஊர் தான் போலும்” எனப் பதில் கேள்வி கேட்டாள்.. எழிலும் சிரித்து பதிலிறுக்க,”உங்கள் *நீலக் கல் மாலை அழகாய் இருக்கிறது.. எங்கு வாங்கினீர்கள்..” “ நாகையில் தான்.. யவனக்கப்பலில் வந்த ஒரு யவனரிடமிருந்து..உங்கள் முத்து மாலையும் வெகு அழகு” என்ற கேள்வி பதில்களுடனும் மெல்ல மென்மையான நளின நடைகளுடனும் இருவரும் கருவறையை நெருங்கி நுழைந்து திரை மூடியிருப்பதைப் பார்த்ததும் அமைதியாய் நின்றனர்..
எழிலின் கண்கள் வீரனின் கண்களைப் பார்த்துச் சிரித்து காலை வணக்கம் சொல்லின..கண்மூடியிருந்த ராஜாதித்யரைப் பார்த்ததும் ரேணுகாவின் கண்கள் நாணின.
திரை விலகி பெருமாளுக்கு நெய் தீப ஆராதனை செய்தார் வீர நாராயணர். ராஜாதித்யரும் கண்களைத் திறந்து ராமனின் திருக்கோலத்தைக் கண்குளிரதரிசித்தார்.. வீர நாராயணர் அனைவருக்கும் தீர்த்தமும் திருத்துழாயும் தர, அதை வாங்கிக் கொண்ட ராஜாதித்யரின் கண்கள் எதிரில் நின்றிருந்த ரேணுகாவையும் கண்டு கொண்டன..கூடவே கருவறை வாசலுக்கருகில் கை கூப்பி நின்றிருந்த பூதுகனையும்..!
(தொடரும்)
• Turquoise stones என இந்தக் காலத்தில் வழங்கப் படுகிறது!
-
கம்பன் கவிநயத்தையும் திருத்தலப் பெருமையையும் விளக்கியதற்கு நன்றி!
-
-
*
கடல் மைனா..
சின்னக் கண்ணன்..
25. விதியின் ரேகைகள்
*
கோபம், துக்கம், மகிழ்ச்சி, காதல் எல்லாம் மனித வாழ்வில் ஏற்படுகின்ற உணர்ச்சிகள் தான். ஆனால் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பவனும், தன் இஷ்டப் படி எல்லாரையும் ஆட்டி வைப்பவனுமான இறைவன் சன்னிதானத்தில் அவனைத் தவிர மற்றதை நினைக்கக் கூடாது என்பதை வீர நாராயணரும் உணர்ந்தே தான் இருந்தார்..
ஆனாலும் வரிசையாக ஒவ்வொருவருக்கும் தீர்த்தமும் திருத்துழாயும் கொடுத்த வண்ணம் வந்த அவர் ஆண்களில் கடைசியாக நின்றிருந்த கருவண்ண பூதுகனின் கையில் பொற்பாத்திரத்திலிருந்த தீர்த்தமிட்டுப் பிறகு அதை பொற்தட்டில் வைத்து திருத்துழாயாகிய துளசியைக் கொடுத்து நிமிர்ந்த போது அவனைக் கண்டதும் கொஞ்சம் சலனமுறவே செய்தார். சற்றே அங்கு சில நொடிகள் செய்வதறியாமல் நின்றும் விட்டார்..அவர் அப்படி நின்றதைப் பார்த்த எழில் குயில் இருமுவது போல கக் என ஒலியெழுப்ப சுதாரித்து பெண்களுக்குக் கொடுக்கத் திரும்பினார்..
முதலில் பார்த்தது ரேணுகாதேவியின் கைகளை.. செம்பஞ்சுக் குழம்பினால் கையின் மறுபுறமும்,கையின் மேற்புறங்களிலும் வெகு அழகாக குட்டிக் குட்டி பூக்கோலங்கள் வரையப்பட்டிருக்க, எல்லா விரல்களிலும் கால்பாகம் வரையிலும் செவ்வண்ணமாய் ஆகியிருக்க உள்ளங்கையில் சூரிய சந்திரரைப் போல வட்டமாய்ச் சிவந்த நிறம் பதிந்து இடது கையின் மேல் வலது கையைக் குவித்து தீர்த்தம் வாங்குவதற்காக இருந்த கையைப் பார்த்தவர் சற்றே அதிர்ச்சியின் வசமும் பட்டார்..
செக்கச்செவேல் கையில் கர்வமாய் இருந்திருந்த ரேகைகள் அவரைப் பார்த்து மென்னகை புரிந்தன..நிமிர்ந்து தலை குனிந்திருந்த அவளது முகத்தைப் பார்த்துவிட்டு அவளது கையில் தீர்த்தம் வார்த்து திருத்துழாய் கொடுத்து விட்டு புஜங்க சயனத்தில் படுத்திருந்த ராமனைப் பார்த்தார்..அவன் முன்னால் கையேந்தி கண்மூடிவேண்டிய வண்ணமிருந்த மாதவரையும் பார்த்தார்..
பிறகு ராமனிடம் மனதிற்குள் ”ராமா.. எனக்கு எதற்கு அந்தப் பெண்ணின் விதியின் ரேகைகளைக் காட்டினாய்..ம்ம் அதைத் தவறாக மாற்றவேண்டியது உனது பொறுப்பு” என வேண்டியும் கொண்டார்..
எழிலுக்கும் பிரசாதம் வழங்கி, பின் அனைவருக்கும் சடாரி வைத்து முடித்ததும்,மாதவர் கண்விழித்தார்.. வீர நாராயணருக்கு சற்றே தெம்பு வந்து “மாதவரே..வராதவர்கள் வந்திருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும் கோவிலின் பின்னால் இருக்கும் சிறு மண்டபத்தில் அமர வைக்கிறீர்களா.. அடியேன் மடப்பள்ளிக்குச் சென்று பிரசாதம் ஆகிவிட்டால் பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டு அங்கு வருகிறேன்” என்று கெஞ்சல் குரலில் சொல்ல மாதவரும் சரியெனத் தலையசைத்தார்..
பின்னர் மாதவர் அங்கிருந்த அனைவருக்கும் பொதுவாக, “வாருங்கள்..மண்டபத்திற்குச் சென்று பேசலாம்..அதற்குள் பெருமாள் பிரசாதமும் வரும்..பசியாறலாம்” எனச் சொல்ல மறுபேச்சுப் பேசாமல் ராஜாதித்யர், வீரன்,எழில், ரேணுகா பூதுகன் ஆகியோர் அவரைப் பின் தொடர்ந்தனர்..அவர்கள் மண்டபம் சென்று அடைவதற்கு முன்னமேயே கோவில் பரிசாரகர்கள் இருவர் அந்த இடத்தைச் சுத்தம் செய்து அங்கு மிகப் பெரிய ஜமுக்காளத்தை விரித்திருந்தனர்..
ஆண்கள் எல்லாம் ட வடிவில் அமர, எழிலும் ரேணுகாவும் ஒரு மூலையில் நின்றனர்.. மாதவர் அவர்களையும் அமரும் படி பணிக்க அமர்ந்தனர்.. முதலில் குரலெழுப்பியவன் பூதுகன் தான்..அதுவும் அந்தக் கேள்வி மாதவரிடமே கூர்மையாக வந்து விழுந்தது..”ஆச்சார்யரே, என் மைத்துனி விஷயமாக சோழ இளவரசர் என்ன உத்தேசித்திருக்கிறார்..கொஞ்சம் அறிந்து சொல்லுங்கள்” என்றான்..ஆச்சார்யர் முறுவலித்தார்..
(தொடரும்)