திருவான்மியூரில் கடலைப் பார்த்தபடி, மூன்றாவது மாடியில் இருக்கும் அந்தபால்கனி-யில், சற்றே பிசிறடித்தாலும் அதே கரகர கம்பீரத்-தோடு காற்றில் மிதந்து வருகிறது குரல்... ‘சிவனே மந்திரம்... ஜெகமே தந்திரம்... மனிதன் யந்திரம்... சிவசம்போ...’
‘‘அப்பனே... முருகா!’’ என்றபடியே வந்தமர்கிறார் எம்.எஸ்.விஸ்வ-நாதன். வார்த்தைகளை வாத்தியங்களோடு பதமாக இழையவிட்டு மெட்டுக் கட்டும் மெல்லிசை மன்னர்.
‘‘எப்படி இருக்கீங்க?’’
‘‘ஜனவரி மாசம் ஒரு பைபாஸ் ஆபரேஷன் பண்ணாங்க அடியேனுக்கு! அதுக்குப் பிறகு ரொம்ப நல்லா இருக்கேன். அப்பப்ப லேசா மூச்சுத்திணறல் வருது. ‘தாசா! என் கண்ணதாசா! என்னை
ரொம்ப நாள் பிரிஞ்சு இருக்கோமேனு தேடுறியாப்பா!’னு சத்தமா ராகம் போட்டுப் பாடுவேன். ‘இப்பவும் உங்களுக்குப் பாட்டுதானா? கொஞ்சம் சும்மா இருங்க’னு என் சம்சாரம் அதட்டுவாங்க. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலை-யிலும் எனக்கு மரணமில்லை’னு என் நண்பன் பாடிட்டுப் போயிருக்காம்மா. அது எனக்கும் சேர்த்துதான். நான் இருந்தாலும் இல்லாட்டாலும் என் பாட்டு இருக்கும். அது போதும்மா எனக்கு!’னு சொல்வேன். சின்னதா கோபப்பட்டுச் சிரிச்சுக்குவாங்க. எம்பெருமான் முருகன் அருளால, இருக்குற வரைக்கும் நல்லா இருப்பேன்யா!’’ & கனிவாகச் சிரிக்கிறார் எம்.எஸ்.வி.
‘‘இசை இன்னமும் உங்கள் வசம் உள்ளதா?’’
‘‘இசை என் வசம் இல்லை; நான்தான்யா இசை வசம் இருக்கேன். நேரம் காலம் தெரியாம சினிமாவுல இயங்கிட்டு இருந்தப்ப எனக்கு உழைக்க மட்டுமே தெரிஞ்சுது; பிழைக்கத் தெரியலை! ‘நல்ல மெலடி, நல்ல மேட்டர், நல்ல மீட்டர்’னு இப்பத்தான் எனக்குப் புரியுது. ஆனாலும் அதுக்காக எனக்கு வருத்தமோ, ஆதங்கமோ துளி-யளவுகூட இல்லை. ரெண்டு நாள் முன்னாடிகூட ஒரே நாள்ல பத்து பக்திப் பாடல்களுக்கு ஒரே மூச்சா இசை அமைச்சேன். இப்ப புதுசா ஒரு படத்துக்கு இசை- அமைச்சிருக்கேன். ‘வாலிபன் சுற்றும் உலகம்’னு படத்தோட பேரு. வாலிதான் பாடல்கள். அஞ்சு பாட்டு போட்டிருக்கோம். தற்போதைய இளை ஞர்களுக்கு என்னோட இசை பிடிக்குமான்னெல்லாம் நான் யோசிக்கலை. வழக்கம் போல என்னோட பாணியில ‘லைவ் ரெக்கார்டிங்’ல சரசரனு பாட்டுக்கள் போட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்லாவே ரசிச்சாங்க! சந்தோஷம். என்னோட ஆர்மோனியத்துல இருந்து வர்ற இசை, முதல்ல எனக்குப் பிடிக்கணும். அதன் பிறகு அதைக் கேக்குறவங்களுக்குப் பிடிக்கணும். இதுவரை, எனக்குப் பிடிச்ச இசை மத்தவங்களுக்கும் பிடிச்சிருக்கு. அதனால, இனியும் என் இசைப் பயணம் தொடரும்!’’
‘‘சாதனைச் சிகரத்தில் எத்தனையோ உயரங்களைத் தொட்ட உங்களுக்கு விருது அங்கீகாரம் மட்டும் எட்டாமலே போய் விட்டதே!’’
‘‘இப்ப எனக்கு வயசு 78. இத்தனை வருஷம் நான் இசையமைப்பாளரா வாழ்ந்த-துக்குக் கொஞ்சூண்டு இசை கத்துட்டு இருக்கேன். அது போதும் எனக்கு. பாண்டிச்-சேரியில ஒரு கல்யாண வீட்ல கச்சேரி. ‘நீங்க வந்திருக்-கீங்கன்னு கேள்விப்-பட்டு ஓடி வந்திருக்கேன். எனக்கும் என் கணவருக்கும், ‘பால் இருக்கும், பழம் இருக்கும், பசி -இருக்காது!’ பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்கு வயசு 78. அந்தப் பாட்டை ஒரே ஒரு தடவை பாடுங்க’னு கேட்டு ஒரு சீட்டு வந்துச்சு. பாடி முடிச்சுக் கிளம்புறப்போ, முக்காடு போட்-டுக்கிட்டு ஒரு அம்மா கண் கலங்க என் பக்கத்துல வந்து நின்னாங்க. கையப் பிடிச்சுக்-கிட்டு அழுகைக்கு நடுவே திக்கித் திணறிப் பேசினாங்க. ‘அந்தப் பாட்டு வெளி-யான நாள்ல இருந்து, என் கணவர் இறக்கிற வரை தினமும் அந்தப் பாட்டைக் கேட்டுட்டுதான் தூங்கப் போவோம். பெரும்பாலான நாட்கள்ல ராத்திரி முழுக்க அந்தப் பாட்டு மட்டுமே ஒலிச்சுக்-கிட்டு இருக்கும். அவர் இறந்தப்-புறம் அந்தப் பாட்டை நான் கேட்கிறதில்லை. இன் னிக்கு என்னவோ கேட்கணும் போல இருந்துது. என் கணவ ரோடு நான் இருந்த ஒவ்வொரு நிமிடத்தின் சுவையையும் நீங்க பாடி முடிக்கிறதுக்குள்ள நான் கடந்து வந்துட்டேன். ரொம்ப நன்றி! இந்த நிமிஷமே நான் இறந்துட்டாகூட எனக்கு சந்தோ ஷம்’னு உருகினாங்க. எனக்கு அப்படியே சிலிர்த்துப்போச்சு. அந்தச் சிலிர்ப்பை எந்த விருதும் எனக்குக் கொடுக்காது!’’
‘‘தமிழே தெரியாத பாடகர்களைத் தமிழ்ப் பாடல்கள் பாட வைக்கும் கலா-சாரம் பற்றி...’’
‘‘தமிழர்கள்தான் தமிழ்ப் படத்துல பாட-ணும்னு கட்டாயம் எதுவும் கிடையாது. ஆனா, தமிழ் மொழியின் அழகும், வளமும் குறையாம பாத்துக்க-ணும். எஸ்.பி.பாலசுப்ர-மணியம், ஜேசுதாஸ் எல்லாம் தமிழர்கள் இல்லையே! ஆனா, அற்புதமான பாடகர்கள். இப்ப பாடுற சில பாடகர்கள் வார்த்தை-களைப் பயங்கரமா சேதப்படுத்துறதா என்கிட்ட வந்து பலர் வருத்தப்-படுவாங்க. இசை சம்பந்தப்-பட்ட நாங்க எல்லோரும் ஒரே குடும்-பமா வாழ்ந்துட்டு இருக்கோம். இதுல சிலர் பண்ற காரியங்-களுக்கு எல்லோரையும் ஒட்டு-மொத்தமா பொறுப்பாக்க முடி-யாது. ‘சில பாடகர்கள் பாடுறதைப் புரிஞ்சுக்கவே முடியலை’னு கேட்குறவங்களுக்கு, ‘பாட்-டைப் பல தடவை கேளுங்க! பாட்டுப்புஸ்த-கத்தைப் பக்கத்துல வெச்சுக்-குங்க’னுதான் என்னால சொல்ல முடியும். வேற்று மொழிப் பாடகர்கள் இந்தி-யில பாடும்போது வட இந்திய இசையமைப் பாளர்கள் ரொம்ப கவனமா இருப்பாங்க. ஒரு வார்த்தையைச் சிதைக்கிற மாதிரி பாடினாக்கூட, தொடர்ந்து அந்தப் பாடகரை மேற்கொண்டு பாட அனுமதிக்க மாட்-டாங்க. அந்தப் பண்பாடு இங்கேயும் இருந்தா நல்லா இருக்கும்!’’
‘‘பிரபலமான பழைய பாடல்களை ‘ரீ-&மிக்ஸ்’ செய்யும் போக்கு அதிகரித்துள்ளதே..?’’
‘‘ஒரே வார்த்தையில் இதுக்குப் பதில் சொல்லலாம். ஆனா, அது ரொம்பக் கொச்சையா இருக்கும். கே.பாலசந்த-ரோட ‘புன்னகை’ படத்துக்கு ஒரு பாட்டுபோட்டி-ருந்தேன். தன்னைக் கற்பழிக்க வர்றவனைப் பார்த்து ஒரு பெண் ஆவேசமா பாடுற பாட்டு அது. ‘ஆணையிட்டேன் நெருங்-காதே’னு ஆரம்பிச்சுப் போகும்! ரீ&மிக்ஸ் பண்ணப்படுற பாட்டுக்களே இசையமைப்-பாளர்களை நோக்கி ‘ஆணையிட்-டேன் நெருங்காதே’னு பாடுற காலம் ரொம்ப தூரத்தில் இல்லைனுதான் நினைக்கிறேன்!’’ என்று வெடித்துச் சிரிப்பவர்...
‘‘மனசுக்குள் எவ்வளவோ இருக்கு. ஆனா... சொல்லத்தான் நினைக்கிறேன்... உள்ளத்தால் துடிக்கிறேன்..!’’ என்று நெகிழ்ந்து பாட, அவரின் குரலுக்கு ஆதரவாக ஆர்மோனியப் பெட்டியில் இருந்து கசிகிறது இதமான இசை!
நன்றி ;விகடன்