-
Sivaji Ganesan - Definition of Style - 3
கடலில் படகு அல்லது கப்பல் கவிழ்ந்து அதிலிருந்து உயிர் பிழைத்து தனியே கரையில் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் மனிதன் Castaway எனப்படுவான் என அகராதி சொல்கிறது. அவ்வாறு வாழ்க்கை அலைகளால் ஒதுக்கித்தள்ளப்படும் மனிதனின் மனநிலையில் ஒரு Castaway யாக உணர்கிறான். குறிப்பாக இலக்கின்றி சுற்றித் திரிந்தவன் வாழ்க்கையில் திடீரென தென்றலாய் மலர்ந்த ஒரு காதல் உணர்வு அவனுள் ஒரு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த அதைப் பற்றிக் கொண்டு கரையேற முயலும் போது அந்தக் காதல் எனும் படகு கவிழ்ந்து அவனை மூழ்கடித்து கரையில் தனியே தள்ளி விடுவதாக உணரும் போது அதைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான். ஆனால் அந்தப் படகு கவிழவில்லை, அவன் காதலும் தோல்வியடையவில்லை, ஆனால் அவன் ஒதுக்கித் தள்ளப்படுவதற்கு அவனையும் அறியாமல் அவனே காரணமாயிருக்கிறான் என்பதாக அவன் காதலி உணர்ந்து அவனை சற்றே ஒதுக்கி வைக்கிறாள்.
இந்த மாதிரியான சூழலில் வரும் இப்பாடலில் புதுமையான காட்சியமைப்பில் நடிகர் திலகம் மிகவும் அனாயாசமாக நடித்திருப்பது அவருடைய ஆளுமையைக் காட்டுகிறது. பாடலின் துவக்கத்தில் அவர் கைககளைக் கட்டும் போதே அந்தப் பாத்திரத்தின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஸ்டைல் துவங்குகிறது. தன்மேல் தவறில்லை என ஆணித்தரமாக நம்பும் அந்தக் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வரிகளில் கவியரசரின் புலமையும் பாடகர் திலகத்தின் குரல் வளமையும் இளையராஜாவின் படைப்பில் மிளிர்கின்றன. இவர்கள் கூட்டணியில் மேலும் பல பாடல்கள் வந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இவர்கள் அனைவரது கூட்டணியில் உருவான அந்த அற்புதமான படைப்பைத் தூக்கி நிறுத்துவது நடிகர் திலகத்தின் ஸ்டைல், வழக்கம் போல.
இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்து நடப்பதை முன்பொரு பாட்டில் பார்த்தோம். அதே ஸ்டைல் இப்பாடலில் வேறு விதமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கைகள் முழுதும் பாக்கெட்டில் நுழையாமல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மிக இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக நிற்பதைப் பாருங்கள்.
நிற்பதில் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தரும் உலகப் பெரும் நடிகர், நடிகர் திலகம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் தோற்றம்
பாடல் முழுதும் நின்று கொண்டே அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும் விதம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என்பதற்கு அத்தாட்சி.
இப்பாத்திரத்தின் உடல் மொழியில் குறிப்பிடத்தக்க விஷயம் தோள்களைச் சிலுப்பும் முறையை நடிகர் திலகம் பிரயோகிக்கவில்லை என்பதே. பாத்திரத்தின் தன்மையறியாமல் பணக்காரன் ஏழை என யாராக இருந்தாலும் தோளை சிலுப்பிக் கொள்ளும் நடிகர்கள் இதைப் பார்க்க வேண்டும். இப்பாடலில் பல இடங்களில் இந்த உடல் மொழிக்கு வாய்ப்புள்ளது. வேறு யாராவது நடித்திருந்தால் பாடலில் பல முறை இரு தோள்களையும் சிலுப்பியிருப்பார்கள். ஆனால் ஒரு கடற்கரையோர கிராமத்து இளைஞனின் illiterate தன்மையைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் நடிகர் திலகம் மிகவும் எச்சரிக்கையாக அவ்வுணர்வைத் தவிர்த்திருப்பார்.
இவையெல்லாம் அவர் ஒருவர் மட்டுமே கொண்டுவரக் கூடிய ஸ்டைல்..
ஸ்டைல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நடிகர் திலகம்..
https://www.youtube.com/watch?v=3euUGyKp7_4
-
சிவாஜி பாட்டு-1
------------------
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய்
பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத்
தடை.
அந்தப் பெண் திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல், உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,
தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி
விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
-
சிவாஜி பாட்டு-2
-----------------
"ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச்
சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத
பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக்
கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும்
மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய
வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு
கிடக்கும் நமக்கு இப்படி நடிகர்
திலகம் போல் வேறு யாரும்
நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு
குளிர்வது போல,
பார்ப்பவர்களின் நெஞ்சு
குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய
வாரிய தலைமுடி பாதி வரை
மறைத்திருக்கும் நெற்றி.அதன்
கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன்
வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி
என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான
பெண்ணொருத்தியால் களை
கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை
வளர்க்குது.. சாதி சமய
பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர
கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி
விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும்
போது,பெண்கள் கூட்டமொன்று வந்து முறைக்க,"உங்களை இல்லம்மா"என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,
பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின்
நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
https://youtu.be/H8VkUxkMu8c
-
சிவாஜி பாட்டு- 3
------------------
05.09.2015.
இன்று-
கண்ணன் எனும் இதயத்
திருடனின் பிறந்த நாள்.
கவலை மறந்த உள்ளங்கள்
கண்ணனை மறந்து விட
முடியாது.
கிறுக்கனின் மேல்சட்டையாய்
கிழிந்து போயிருந்த மனித
நேயத்தை கிருஷ்ணனின்
கீதைதானே ஒட்டுப் போட்டது?
அவன் உலகத்தையே வாய்க்குள் காட்டிய பிறகுதானே நாம் உல்லாசப்
பயணங்களை ஒத்திப் போட்டது?
-------
நம் இதய சிம்மாசனத்தில்
வீற்றிருந்து நம்மை ஆளும்
நடிக மாமன்னன்,
கண்ணனுக்குக் கோயிலெழுப்ப
திருடப் போகும் மன்னனாக
வந்த "திருமால் பெருமை"
பாடலிது.
மூன்றே நிமிஷத்துக்குள்
முடிந்து போகிற பாட்டுக்குள்
மிகச் சில முறைகளே நடிகர்
திலகம் காட்டப்படுகிறார்.
அதற்குள்தான் எத்தனை
முகபாவங்கள்..?
எத்தனை அர்த்தமுள்ள அங்க
அசைவுகள்..?
நடிப்பில் எப்படியொரு
உயிர்ப்பு..?
-------
மனசு கவர்கிற மாயமெல்லாம்
அந்த சின்னக் கடவுளுக்குத்தான்
தெரியுமா..?
இந்த சினிமாக் கடவுளுக்குத்
தெரியாதா..?
https://youtu.be/qeOPR2QNVF8
-
சிவாஜி பாட்டு-4
-----------------
மனசு மறக்காத பாட்டு.
எண்பதுகளில் வீசிய
காற்றுக்கு இனிமை சேர்த்த
பாட்டு.
அமரர் மலேசியா வாசுதேவன்
அவர்களின் இனிய இசைக்குரல், நம் நடிகர் திலகத்தின் சிம்மக்
குரலோடு கச்சிதமாய்ப்
பொருந்தி வியப்பூட்டிய
பாட்டு.
தன்னுடன் பிறவாதவளை
தங்கையாக ஏற்றுக் கொண்டு,
அவளது பிள்ளைக்கு மாமனாக
தன்னை வரித்துக் கொண்டு,
அந்தக் குழந்தையின்
நல்வாழ்வைக் கனவு காணுகிற
ஒரு மாமனிதனின் பெருமை
பேசும் பாட்டு.
கருகருவென அடர்ந்து செரிந்த
இரு புருவங்களுக்கும் ஒரு
மெல்லிய இணைப்புக்
கொடுத்து ஒப்பனை செய்தால்
பளீரென்று ஒரு இஸ்லாமியர்
வந்து நிற்கிற அதிசயம்..
நடிகர் திலகத்தால் மட்டுமே
நிகழ்கிறது.
துவங்கிய பாடல் முடியும்
வரைக்கும் நடிகர் திலகத்தின்
முகத்தில் நீடித்துத் தொடரும்
கனிவு..
அழகோ அழகு.
"கருணை பொங்கி வரும் எனது
காவல் தெய்வம்"-என்று
தங்கைக்காரி பாடும் போது
புன்னகை முகம் காட்டும்
பெருமிதம்..
அதை விட அழகு.
"தீபம்" எனும் சிறு
வார்த்தையை சங்கதிகளோடு
பாடும் போது, நடிக
மாமேதை தோள் குலுங்கச்
செய்கிற
வாயசைப்பு..
அழகுக்கெல்லாம் அழகு.
ரவிவர்மன்தான் வரவேண்டும்..
அந்த அழகுகளையும் வரைய.
https://youtu.be/xgmURKkz_zE
-
சிவாஜி பாட்டு- 5
-------------------
( 08.09.2015 அன்று எழுதியது. )
வார்த்தைகளில் இருக்கிற
தெளிவை ஒரு வாத்தியத்தில்
கொண்டு வந்த இசை வித்தகர்,
வயலின் மேதை
அமரர்.குன்னக்குடி
வைத்தியநாதன்
அவர்களின் நினைவு நாள்
இன்று என அறிந்த நிமிஷத்தில்
பளீரென்று நினைவுக்கு
வந்தது
இந்தப் பாட்டு.
கம்பீரம்,கம்பீரம் என்கிறோமே..
அதன் பொருளை இந்தப்
பாடலில் அறியலாம்.
அதிரும் அந்தக் குரலில் கம்பீரம்.
தெளிவான பாடலின்
தெளிவான இசையில் கம்பீரம்.
நல்ல தமிழ் வரிகளில் கம்பீரம்.
நடந்தாலும்,
படி இறங்கினாலும்,
படி ஏறினாலும்,
கொஞ்சமும் சாதாரண
மனிதனின் தளர்வுத் தோற்றம்
காட்டாத அய்யா நடிகர்
திலகத்தின் அசைவுகளில் ராஜ
கம்பீரம்.
"நாட்டையும் தமிழையும்
வாழ வைத்தான்" என்று
அருகில் நிற்கிற தமக்கை பாட, உணர்ச்சிவசப்பட்டு,உதடுகள் சுழித்து,விழிகள் மலர்த்தி நம் நடிகர் திலகம் காட்டும் பாவங்களுக்கு புல்லரிக்காத உடம்புகளை..
கண்ணம்மாப் பேட்டைகளும்
மதிக்காது.
-------
நடிகர் திலகமெனும் மாபெரும்
கலைஞன், நாட்டையும்,தமிழ
ையும் வாழ வைத்து,
நமக்கென உள்ளதை வழங்கி
விட்டு,தலை நிமிர்ந்து
நிற்கிறான்..
தஞ்சை பெரிய கோயில் போல.
அவனுக்கென உள்ள
மரியாதையையும்,
கௌரவத்தையும்..
எப்போது,எப்படி
தரப்போகிறோம்..நாம்..?
https://youtu.be/0kFijxungwE
-
சிவாஜி பாட்டு-6
------------------
தாளமும்,வேகமுமாய்
மனுஷனை அசத்திய பாடலிது.
"லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள்
ஊரில் வந்த போது,
இதன் இயக்குநரான
அமரர்.ராஜசேகர் இயக்கிய
"மாவீரன்",இன்னொரு திரையரங்கில் ஓடிற்று.
ஒரே ஒரு தெரு தாண்டி
கொஞ்ச தூரம் நடந்தால் வந்து
விடுகிற திரையரங்கில் ஓடிய
மாவீரனுக்குப் போகாமல்
இரண்டரை கி.மீ.தாண்டி நான்
போய் லட்சுமி வந்தாச்சு
பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.
இந்தப் பாட்டு- கூடுதல்
சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
--------
மிகச் சிரமப்படுத்தும் நீளமான
ராகப் பாதையில் கவனமாய்ப்
பயணிக்கும் அமரர்.மலேஷியா
வாசுதேவன் அவர்களின்
கம்பீரக் குரல்..
மழைக்குப் பிறகான
மண்வாசனை தரும் இதத்தை
மனதுக்குத் தந்த ரவீந்திரன்
அவர்களின் இனிய இசை..
ஜெயசித்ராவும்,ரேவதியும்
பச்சை பரப்பிய புல்வெளியில்
சுழன்றாடும் நாட்டியம்..
நாயகராய் நம் நடிகர் திலகம்..
வெற்றிக் கூட்டணியில்
ஜெயிக்கிறது பாட்டு.
-------
குதிக்கும் உடம்பும்,கொத்து
முடி சதிராட்டமும், தாளம்
போகிற போக்கிற்குத் தானாய்
மாறும் முகபாவமுமாய்..
பின்னுகிறார் நம்மாள்.
"நீ ஒரு"-வலது கையால்
அழகான அபிநயம்.
"பிருந்தாவனம்"- இரண்டு
கைகளாலும் ஒரு
புல்லாங்குழலைக்
கற்பித்து,கிருஷ்ணன் போல்
வாசித்து, முகத்தில் ஒரு நடன அசைவு.
ஒரே ஒரு வார்த்தை.
ஒரு நூறு விளக்கம்.
அய்யன் தரும் ஆச்சரியங்கள்
எங்களுக்குப் பழக்கம்.
https://youtu.be/9f2zX0QWtAA
-
சிவாஜி பாட்டு- 7
-------------------
அந்த
எட்டையபுரத்தான் போல்
முறுக்கி விட்ட
மீசையில்லை.
அந்தப்
பாட்டுக் கோயிலின் மேல்
வெண் கோபுரமாய் எழுந்த
முண்டாசில்லை.
அவனைப் போல்
எப்போதும்
கண்களில் கோபமில்லை.
கனல் பறக்க
அவன் எழுதிய காலத்தில்
இவரில்லை.
அவனைப் போல
கவியெழுதும் தொழில்
இவருக்கில்லை.
"சிந்து நதியின் மிசை"
பாடுவதாய்
சினிமாத் திரை காட்டிய
அந்த ஒரு பாடலன்றி,
வேறெந்தப் படத்திலும்
இவரை,
அவனாகப் பார்த்ததில்லை.
ஆனாலும்...
தேனிலுஞ் சிறந்த
தமிழை வளர்த்ததிலும்,
தேசத்தின் செழுமை காண
நெஞ்சு துடித்ததிலும்,
பசியை, வறுமையை
கலை கொண்டு
ஜெயித்ததிலும்..
மாசற்ற திறமைகளால்
மக்கள் மனம்
நிறைத்ததிலும்..
அந்த
மகாகவி போலத்தானே
எங்கள்
மதிப்புக்குரிய
அய்யாவும்..!?
https://youtu.be/AKLzxSGhVyw
-
சிவாஜி பாட்டு-8
-----------------
"ஆ..ஆஆ"...
சுசீலாம்மாவின் தேன் குரல்
செய்யும் ராக ஆலாபனையோடு துவங்கும்
இந்தப் பாடல்...
என் சிறு வயது ஆச்சரியம்.
பாட்டு,இசை, வரிகளின் அர்த்தம் என்று எதுவும் தெரியாது போனாலும், இனிமையால் மட்டுமே
இதயம் குடியேறிய ஆச்சரியப்
பாட்டு.
விபரமறிந்த வயசில் கேட்ட
போது, இன்னும் வியப்பு
கூடிற்று.
அருமையான இந்தக் காதற்
பாடலின் வரிகளில் சூசகமாய்
நுழைந்திருக்கிற காமம்,
காட்சிப்படுத்தலில் காணாமலே
போயிருப்பது வியப்பு.
"மாப்பிள்ளை,பெண்ணுக்கு"
என கண் சுழற்றி,கலைச்செல்வி
பாடிக் காட்ட அப்படியே ,அசத்தலான அதே பெண் பாவத்தில் நடிகர்
திலகம் செய்து காட்டுவது
வியப்பு.
காலங்களைக் கடந்து இன்று
வீசுகிற புதிய காற்றிலும்
இந்தப் பாடல் இனித்தொலிப்பது
வியப்பு.
ஆடிப் பாடித்தான் ஒரு
பாடலை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்பதில்லை.
கதாநாயகியுடன் செய்யும்
குறும்புகளைக் கூட ஒரு
பாடலின் வெற்றிக்குக்
காரணியாக்கலாம் என்று நம்
நடிகர் திலகம் நிரூபித்திருப்பது
வியப்பு.
ஒரு குழந்தையின் ஈரமான
முத்தம் போல காலகாலமாய்
இந்தப் பாடல் நினைவில்
நிற்பது வியப்பு.
https://youtu.be/PgBAx_bl1YE
-
சிவாஜி பாட்டு-9
-----------------
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".
-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி
மனைவியின் கண்ணீர் குறித்த
எனது பழைய கவிதை,அது.
---------
இதோ..
நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.
மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.
அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.
இந்தப் பாடலின் நாயகி சிந்தும்
கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------
நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத்
தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த
கணவனும்,மனைவியும்
தோன்றுமிந்தப் பாடல்..
ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------
"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"
-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா
எழுப்ப,
அதிர்ந்து போகும்அந்தக்
கிழவியின் முகத்தில்
தோன்றும் சோகக் குறிகள்
துடைத்து..
"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"
-என்று அவரே பாடி
முடிக்கையில், ஒரு நிம்மதிப்
பெருமூச்சுடன் அந்தக் கிழவி
சிந்தும் கண்ணீரை,
நம் இதயப் பாத்திரங்கள் இன்னும் சேமித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
https://www.youtube.com/watch?v=NC3Q...e_gdata_player
-
சிவாஜி பாட்டு-10
--------------------
ஆர்வமாய் தேடித் தேடி..
ஓடி ஓடி..
அய்யா நடிகர் திலகத்தின்
படங்களாய்ப் பார்த்த காலமது.
(இன்னமும்தான் என்பது
வேறு விஷயம்.)
வழக்கமாக, ஒரு படத்துக்கு
நான்கு இடைவேளைகள்
விடும் அந்த டூரிங்
திரையரங்கில், பழைய
படங்களெனில் ஏழெட்டு
இடைவேளைகள் விடப்படும்..
படம் அறுந்து போவதால்.
அங்கே அதிசயமாக
நல்லவிதமாக முழுசாய்ப்
பார்த்த படம் "தூக்கு தூக்கி".
பழைய பாடல்களே மூன்று
நிமிஷத்தில் முடிந்து
விடுபவை. மோசமான
பிரிண்டுகளாயிருந்தால், அந்த
ஒரு பாடலிலேயே முந்நூறு
வெட்டு விழும்.
இந்தப் பாடல் திரையில் வந்த
போதும், ஒரு ஓரத்தில் மின்னல்
போல் வெட்டத் துவங்கிற்று.
புள்ளிப் புள்ளியாய் மழை
போல, நட்சத்திரங்கள் போல பாடல்காட்சி முழுதும் படம்
அறுந்து விடுவதற்கான அபாய
அறிவிப்புகள் நிறைய
இருந்தாலும், தெய்வாதீனமாக
அறுந்து போகவில்லை.
"கண் வழி புகுந்து
கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?"
அய்யா மருதகாசியின் பாடல்
வரிகளில் மட்டும் கேள்வி
இல்லை.
இசை மாமேதை ஜி.ராமநாதன்
அவர்கள் அமைத்த இந்த மெட்டே ஒரு கேள்வி போல்
இருப்பதை உணர்ந்தேன்.
பாடல் பிடித்துப் போயிற்று.
அந்தப்புர நந்தவனத்தில் அன்பு
மனைவியைக் கொஞ்சிப்
பாடும் அழகுப் பேருருவமாய்
நம் நடிகர் திலகம்.
நடையிலும், பாடும்
பாணியிலும் புன்னகைப்பதிலும், கரும்பு,
குறும்பு என மனையாளைக்
கொஞ்சி விளையாடுவதிலும்,
அமுதமெனத் தான்
எண்ணியிருக்கும் இவள்
விஷம் என்பதறியாத அந்த
அப்பழுக்கற்ற முகம் அழகு
பாவங்கள் காட்டுவதிலும்
லயிக்காதிருப்ப்வனை அந்தப்
பாடலின் இரண்டாம் வரியே
கேலி செய்கிறது..
"வேறெதிலே உந்தன் கவனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?"
https://youtu.be/hadECUynFsE
-
சிவாஜி பாட்டு-11
------------------
அன்பு-
இந்தப் பாடலின்
ஆதார ராகம்.
பரிவு-
பாடலின் மொழி.
உள்ளம் புகும் பாட்டு
வெளிக் கொணரும்
உருக்கம்-
பாடலின் தாளம்.
நிமிர்த்தி வைத்த
துப்பாக்கி போல
கம்பீரமாயிருந்த கணவன்,
நேசமிகு மனைவியின்
நலிவு கண்டு
நனைத்த துணியாய்த்
தளர்கிறான்.
குடும்பம் விளங்க
வளைய வந்தவள்,
கை ,கால் விளங்காமல்
திண்டாடும் நிலை கண்டு
துயருறுகிறான்.
கலைந்த கூந்தல்
காணப் பொறுக்காமல்,
வாரி, பொட்டிட்டுப்,பூச்சூடி
பணிவிடை புரிகிறான்.
கணவனின் முகஞ்சுளியாப்
பணிவிடைக்குக் கூசிக்
குறுகும் நடிப்பில் புன்னகை
அரசியின் திறமை ராஜாங்கம்
விரிகிறது.
கடமையில் விறைத்த
மனசுக்குள்ளிருக்கும் கனிவு
அத்தனையும் வெளிப்படுத்தும்
நம் நடிகர் திலகத்தின்
கண்களுக்கு,இயற்றி,இசை தந்து,பாடவெல்லாம் தெரிகிறது.
ஆணென்கிற மமதை கொண்டு
பெண்ணை இம்சிக்கிறவர்களு
க்காக,இந்தப் பாட்டு ரகசிய சாட்டை வைத்திருக்கிறது.
அவர்களை..
இந்தப் பாட்டு, அடிக்கும்.
அன்பான ஆண்களுக்கும்,
கனிவு மிகுந்த பெண்களுக்கும் என்றும் இந்தப்
பாட்டு...
பிடிக்கும்.
https://youtu.be/9XIGbiMx0ck
-
சிவாஜி பாட்டு- 12
-------------------
"அம்மாவுடன்
கோயிலுக்குப் போனேன்.
கோயிலில் தெய்வம்
என் எதிரில் இல்லை.
என் கை பிடித்து
அருகில் நின்றது."
-அன்னையைக் குறித்த
என் கவிதை இது.
------------
"செக்கச் செவேலென
அழகான பெண் குழந்தை..
எங்கள் தெருமுனை
குப்பைத் தொட்டிக்கு."
-இதுவும் என்னுடையதுதான்.
-----------
ஒரு ஒப்புமைக்காகக் கூட இந்த
இரண்டையும் பொருத்திப்
பார்க்க மனம் அஞ்சுகிறது.
தன்னைத் தெய்வமென்று
பிள்ளையைச் சொல்ல
வைத்தவளும்,தொட்டிலிலிட
வேண்டிய செல்வத்தைக்
குப்பையில் வீசிப் போனவளும்
தாய்மை பொங்கும்
பெண்ணினத்தவர்தானே?
கோயிலுக்குப் போன
குழந்தைக்குக் கிட்டிய நல்ல
அன்னை,அந்த குப்பைத்தொட்டிக் குழந்தைக்கு
ஏன் கிடைக்காமல் போனாள்?
கேள்விகள்-
வேறு வேறு வடிவங்களில்
இறைவனை நோக்கிப்
போய்க் கொண்டே
இருக்கின்றன.
கோயில்களுக்கும்,
குப்பைத் தொட்டிகளுக்குமாய்
குழந்தைகள் போய்க் கொண்டே
இருக்கின்றன.
------------
குற்றமற்ற
குழந்தைப் பூக்களை,ஒரு
பாசத் தோட்டமமைத்துப்
பராமரிக்கிறவராய்
நடிகர் திலகம் தோன்றிப்
பாடுமிந்த "எங்க மாமா" பாடல்,
கவியரசர் வழியாக காற்றில்
வந்த கடவுளின் அறிக்கை.
அன்பென்கிற விஷயம் உள்ள
வரை யாரும் இங்கே
அனாதையில்லை என்கிற
நம்பிக்கை.
----------
இந்த
செல்லக் கிளிகளாம்
பாடல் கேட்டு,
குழந்தைகளோடு,
குழந்தைகளாய்..
நாமும் உறங்குகிறோம்-
நிம்மதியாக.
https://www.youtube.com/watch?v=SXyr...e_gdata_player
-
சிவாஜி பாட்டு-13
-------------------
கலையரசரும்,கவியரசரும்
கைகோர்த்து ஜெயித்த
எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
விறகுவெட்டியாக மாறி
வரும் இறைவன், வீதியில் வந்து பேசும் எளிமைத் தத்துவம் இப்பாடல்.
மனிதர்களை வாழ்விக்கிற
மகேசன், மனிதர்களின் உலகத்தில் கலக்கிற அதிசயம்
பேசுகிறது, இந்தப் பாடல்.
ஒன்றில் சந்தன வாசனை,
ஒன்றில் ஜவ்வாது வாசனை
என்று தலைவர் தலை சுமந்து
வரும் விறகுகள் போலே பாடல் வரிகளும், ஒன்றில் சிந்தனை வாசனை,ஒன்றில்
தத்துவ வாசனையென்று
மணக்கின்றன.
"பத்துப் பிள்ளை பெத்த
பின்னும் எட்டு மாசமா?
இந்தப் பாவி மகளுக்கெந்த
நாளும் கர்ப்ப வேஷமா?"
-பிரசவ வலி காணுதலே
தொழிலெனக் கொண்டோர்..
குறும்பான இந்தப் பாடல் வரிகள் தரும் ரகசிய வலியையும் தாங்கித்தான்
தீர வேண்டும்.
தன்னுடன் ஆடும் இளமங்கை,
பாடல் முடியும் தருவாயில்
கை பிடித்திழுத்து காதலுங்
காமமுமாய்ப் பார்க்க...
பாடல்வரிகளிலிருந்து கவனம்
மாறாமல், "எனக்கு மணமாகி
இரண்டு மனைவியருண்டு.
என்னை விட்டு விடம்மா" என
சைகையிலேயே நடிகர்
திலகம் சொல்வாரே..
அதற்காகவே இந்தப்பாடலை
ஆயிரம் முறை காண வேண்டும்.
இந்தப் பாடல் -ஆணி.
நம் இதயம்- பசுமரம்.
https://youtu.be/3Fu0546rs1g
-
சிவாஜி பாட்டு-14
-------------------
அகத்தின் சாயல் கொண்டு
அசத்தும் முகம்...
இந்த அழகு முகம்.
ஆயிரமாயிரம்
கதைகள் பேச வல்ல
அந்த விழிகள் இரண்டும்
ஆசைப்பட்டு வசிக்குமிடம்...
அந்த அழகு முகம்.
கோடிக் கோடி
மனித முகங்களில்
மலர்ச்சியைக்
கொண்டு வந்த முகம்..
இந்த அழகு முகம்.
கொட்டி வைத்த வைரமென
மின்னும் முகம்...
இந்த அழகு முகம்.
காத்திருக்கும் கனவுகளை
அழகாக நிரப்புமிந்த
அழகு முகம்.
கண்ணாடிகள்
பெருமிதமாய்க்
காட்டும் முகம்...
இந்த அழகு முகம்.
பார்த்துக் கொண்டே
இருக்கச் செல்லும் முகம்...
இந்த அழகு முகம்.
பரம ஏழைக்கும்,
பணக்காரனுக்கும்
பிடித்த முகம்
இந்த அழகு முகம்.
இதயத்தோடு இன்பத்தை
இணைத்த முகம்...
இந்த அழகு முகம்.
இன்னும்...
இன்னும்...
இன்னும்...
பேச வைக்கும்
அழகு முகம்.
https://youtu.be/PECnWGMNa3A
-
சிவாஜி பாட்டு-15
-------------------
காதல் மட்டும்தான்.. எச்சிலை
முத்தமாக்குகிறது.
காதல் மட்டும்தான்.. நடக்கும்
போதே பறக்கிற பிரமையைத்
தருகிறது.
நம் காதலுக்குரிய நடிகர்
திலகத்தின் எண்ணற்ற காதல்
பாடல்களில்., எனக்கு மிகவும்
பிடித்த பாடல்களில் ஒன்று-
இந்தப் பாடல்.
அந்த மென்மையிலும்,
மென்மையான புன்னகை
ஒன்றை மட்டும் வைத்தே
உறுதியாகச் சொல்லலாம்..நம்
நடிகர் திலகம்.."ரோஜாவின்
ராஜா"தானென்று.
கனவுப் பாடலிது.
கனவுகள்,இங்கிதமில்லாதவை.
எப்போதும் கண்ணியமாகவே
இருக்கக் கூடிய உத்தரவாதம்
இல்லாதவை.
ஒழுக்கம் உணர்த்த வேண்டிய உலக நிர்ப்பந்தங்களுக்காக ஒளித்து வைத்திருந்த அடி மனசின் அழுக்கு எண்ணங்களையும் அதிரடியாய் வெளிப்படுத்த வல்லவை.
ஆனால்,இந்தப் பாடல் போல
கனவு வந்தால்..அது வரம்
நமக்கு.
பள்ளிக் குழந்தைகளை
ஏதேனும் நல்ல காரியத்துக்காக
ஊர்வலமாய் அழைத்துப்
போவார்களே..!? அந்த ஊர்வலக் குழந்தைகளின் ஒழுங்கில் காணும் அழகை..
நடிகர் திலகத்தின் பாவனைகளில் காணலாம்.
கனவுதானே என்று சும்மா
பிதற்றாமல் பாடலுக்குள் ஒரு
கவித்துவம் புகுத்தியிருக்க
ிறார்கள் ..பாடலோடு
சம்மந்தப்பட்ட எல்லோரும்.
சில நிமிடங்களில் பாடல்
முழுவதுமாய் முடிந்த
பிறகு..
மனசு பாடத் துவங்குமே..
அது..
பாமர ரசிகன், மெல்லிசை
மன்னருக்குச் செலுத்தும்
ரகசிய அஞ்சலி.
https://youtu.be/lORp7dvVNsg
-
சிவாஜி பாட்டு-16
------------------
*குழந்தைப் பேறில்லாதவள்
வருஷக்கணக்கில்
காத்திருக்கிறாள்..
மாசமாக".
* ஞாயிற்றுக்கிழமை
கடைவீதியாய் வெறிச்சோடிக்
கிடக்கின்றன..
குழந்தை இல்லாத வீடுகள்.
-இவையெல்லாம், ஒரு
குழந்தைக்காக ஏங்கிக்
கிடப்போரின் மனநிலையைக்
கற்பனை செய்து நான் எழுதிய
கவிதைகள்.
உலகத்திலேயே மிகக் கொடிய
சோகம்,குழந்தைப் பேறு
இல்லாதவளின் சோகமென்றால்..
உலகத்திலேயே மிக உயர்வான
சந்தோஷம்,
தாய்மையடைந்தவளின்
சந்தோஷம் எனலாம்.
போற்றி மதிக்கும் அன்புக்
கணவனிடம், மனைவி அவனது காதல்மிகு பரிசு
தன் வயிற்றிலிருப்பதைத்
தெரிவித்து மகிழ்வதாய் வரும்
"தியாகி" படப்பாடல் இது.
"வலது கையில் தாய்
படுத்தால் ஆம்பளைப் பிள்ளை.
மாங்காய் தின்னா,சாம்பல்
தின்னா பொம்பளைப் பிள்ளை.
இதில் சந்தேகம் இல்லை"
-என்று பாடுகையில்
குறும்பும்,தகப்பனான
பெருமிதமும் காட்டும் அந்த எழில் முகம்..
"அட..சும்மா போங்க
நீங்க ஒன்னும்
மருத்துவரில்லை.
தொட்டதுதான் உங்க சேவை..
மத்தது இல்லை".
-என்று மனைவியும்
குறும்பாய் மடக்க..
நாக்கு துருத்தி பொய்க் கோபம் காட்டும் அந்த திறமை முகம்..
நடிகர் திலகத்தின் அன்பு முகம்
கண்டு,தாம் மலர்ந்த
முகங்கள்தாம் எத்தனை கோடி?
"எப்போ..எப்போ?" என்று
ஆர்வமாய்க் காத்திருந்து..
தடைகளை நொறுக்கியெறிந்து விட்டு இந்தப் படம் வந்து
பார்த்த நிமிடம்..
நம் இதயமும்தானே
துள்ளலாய்ப் பாடிற்று..?
"இந்த யோகம்..
நல்ல யோகம்!"
https://youtu.be/Jl4O6bpklj0
-
சிவாஜி பாட்டு-17
------------------
அரங்கம் ஆலயமாக..
அன்றொருநாள் ஒலித்தது இந்த
ஆன்மிகக் குரல்.
கலை தெய்வத்தை தரிசிக்கப்
போன இடத்தில், காது
குளிர்வித்தது இந்த தெய்வீக
கானம்.
பாடும் திறமையுடைய என்
நண்பனுடைய பக்திப் பாடல்
தொகுப்பிற்காக நான் எழுதிக்
கொடுத்த ஒரு பாடலினூடே
எழுதியிருந்தேன்...
"கல்லுக்குள்ள சாமிய வச்சது
நம்பிக்கைதானம்மா!"-என்று.
ஆழ்ந்து மனம் ஒன்றி இறை
வணங்கும்போதெல்லாம்,
இந்த நம்பிக்கையை நான்
உணர்ந்தேன்.
..கிறேன்.
...வேன்.
------
"எங்கும் இனிதாக,
எல்லாமும் நலமாக,
பொங்கும் அருட்கடலே..
புண்ணியனே அருள்புரிவாய்.
கண்ணுள் ஒளியானாய்.
கனிவின் வடிவானாய்.
ஹரிசிவன் மகனே நீ
கரையேற வரம் தருவாய்."
-அருளே வடிவான அய்யப்பனில் கரைந்துருகி ஒரே ஒரு முறை நானும் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றதுண்டு.
களைக்கக் களைக்கக்
கல்லிலும்,முள்ளிலும் நடந்து
சென்று கடவுள் அய்யப்பனைக்
கண்ட போது அடைந்த
பேரின்பத்தை விட, மாலை
அணிந்த நாள்தொட்டு தினமும்
கோயிலில் மாலை நேரத்தில்
நடக்கும் பஜனையின் போது
நானடைந்த பரவசம் அதிகம்.
இறைவனை அடைய செல்லும்
வழிகளில் இசையின் வழியே
சிறப்பென்றுணர்ந்த சிலிர்ப்பான
தருணங்கள் அவை.
"வாழ்க்கை" திரைப்படத்தில்
வரும் இந்தப் பாடலைக்
கேட்கவும், பார்க்கவும் நேர்ந்த
தருணங்களிலும் அது
மாதிரியான சிலிர்ப்பை
உணர்ந்திருக்கிறேன்.
காவி வேஷ்டியும், கருப்புச்
சட்டையும், இடை இறுக்கிய
சிவப்புத் துண்டுமாய்..
நம் நடிகர் திலகம்-
கடவுளை வணங்கும் கடவுள்
போல் ஒரு கம்பீர அமர்வு.
முன்னே துணி விரித்து,
முடியாத பிள்ளையைக்
கிடத்தியிருக்க..
சேர்த்த கரம் பிரிக்காது
சேவித்திருப்போர் கூட்டத்தின்
இசை உருக்கம்...
இதயத்துள் இறை நிறுவும்
இசைஞானி...
பாட்டு வரிகளால் மனம்
நிறைகிற அய்யா.
பஞ்சு.அருணாசலம்..
அய்யா நடிகர் திலகத்தின் இசைக் குரலாகவே மாறி நின்ற
அமரர். மலேஷியா
வாசுதேவன்...
எல்லோரும்..
மறக்க முடியாதவர்கள்.
மறக்கக் கூடாதவர்கள்.
---------
"சும்மா ஒரு
வாயசைப்புதானே"
என்கிற அசட்டை கிடையாது.
கதைச் சூழலைத் தாண்டிய
சுய திறமை வெளிப்பாடு
கிடையாது..நம்மவரிடம்.
நன்றாகக் கவனித்தால்
தெரியும்.
கதைப்படி அத்தனை
மருத்துவர்களும் கைவிட்டு
விட்ட தன் பிஞ்சு மகனின்
உயிர் பிழைப்பை கடவுளிடம்
மட்டுமே எதிர்நோக்கியிருக்கிற
ஒரு அபாய சூழல். அம்மாதிரிச்
சூழலில் ஒரு அழுத்தமான
சோகம் ஒரு தகப்பனைக் கவ்விக் கொள்வது தவிர்க்கவே
முடியாதது.
பாடலை முழுமையாக
கவனித்துப் பாருங்கள்.
கண்களில் நிரந்தரமாய்ப்
படிந்திருக்கும் கவலையும்,
ஆண்டவனை இறைஞ்சிப்
பாடும் அவரது முகத்தில்
சூழலின் இறுக்கமும்..
அழுது வீறிட்டுக் குழந்தை
பிழைக்கும் வரைக்கும்
மாறவே மாறாது.
------
நமக்குப் பழகிய கலையின்
தெளிவு விரவிய முகம்
பக்கவாட்டில் பிரம்மாண்டமாய்
காட்டப்பட ..நம் நடிகர் திலகம்
வாயசைத்துப் பாடிக்
கொண்டிருக்கிறார்.
அவரை வியக்கும் நம்
உள்ளமோ..அந்தப் பாடலின்
வரிகளைக் கொண்டே அவரைப் பாடிக் கொண்டிருக்கிறது.
"உயிருக்குள் உயிராக
விளையாடும் ஜோதி.
உலகத்தின் அசைவுக்கு
நீதானே ஆதி."
(நல்ல சமயத்தில் பாடலை
நினைவூட்டிய, நட்புமிகு
திருச்சி.திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நன்றி.)
https://youtu.be/Bahd1mbA5SQ
-
சிவாஜி பாட்டு-18
------------------
படகு.
ஒரு சின்னப் பழுதுமின்றி பல
கோடி உள்ளங்களை
வெகுகாலமாய் சுமந்து
செல்லும் படகு.
இசைப் படகு.
ரசனை சமுத்திரம் தாண்டி
நம்மை இன்பக் கரையேற்றும்
படகு.
கொஞ்ச காலத்துக்கு முன்
மதுரையின் திரையரங்கொன்றில் மக்களின்
உற்சாக வெள்ளத்தில்
ஆர்ப்பாட்டமாய் நீந்தி வந்த
ஆனந்தப் படகு.
----------
நடந்து செல்லும் பொருட்டு
இறைவன் கொடுத்த கால்களின் கீழ் சக்கரம் கட்டிக்
கொண்டு விரைந்து வரும்
நடிகர் திலகத்தைப்
பார்த்தவுடன், வருஷத்துக்குப்
பத்துப்படம் நடித்து, காலில்
சக்கரம் கட்டிக்கொண்டு
வெற்றிப் பாதையில்
விரைந்தோடியவர்தானே இவர்
என்று மனதில் தோன்றுகிறது.
கண்கள் இடுக்கிச் சிரித்து
வரும் அந்தச் சிரிப்பு..
"படகு..படகு" என்று சொல்லச்
சொல்ல முகத்தில் காட்டும்
அந்தச் சிலிர்ப்பு..
இருக்கையை மறந்து எழுந்து
ஆட்டம் போட்டு, உடலில் உள்ள காற்றையெல்லாம்
சீழ்க்கையடித்துச் செலவழிக்கும் ரசிகனுக்கு
இது போதாதா?
---------
போதாது என்கிற முடிவெடுத்து
மஜ்னுவாக மாறுகிறார்
அடுத்த நிமிஷமே.
பாலைக் காற்றில் முடி பறக்க,
பல்லக்கில் அழுது செல்லும்
பிரியமானவளை நினைந்துருகிப் பாடுகையில்
அந்த காதல் பித்தனை கண்முன் நிறுத்துகிறார்.
காதலென்றால் இதுதான் என
நம் உள்ளம் உற்சாகமாய்
நிச்சயிக்கிறது.
---------
"இது மட்டுந்தானா காதல்..
இன்னும் பார் " என்று மெத்தை
யிட்ட கட்டிலில் அமர்ந்து
கொண்டு மேன்மைக்குரிய
காதல் இதுதானெனக்
காட்டுகிறார்..சலீமாக மாறி.
"அனார் என்றால் மாதுளம்"
எனப் பாடுகையில்,
வலக்கையை ஒயிலாய் உயர்த்தி, தலையை ஒருபுறமாய் அசைத்து, வலது
தொடை மெல்ல உயர்த்தி,அதில் அழகாய்த் தாளமிட்டு
அவர் செய்யும் பாவனையைப்
பார்த்து பாடத் தோன்றுகிறது..
"உங்கள் அழகுக்கு சலாமு
அய்யா!"
---------
"அனார்.."
அடித்தொண்டையிலிருந்து
சலீமுக்காக எஸ்.பி.பி.
சொல்வதை, ஒலி வடிவமாய்க்
கேட்டாலும் மனக்கண்ணில்
ஒரு நொடி நடிகர் திலகம்
வந்து போவார்.
--------
படகு...
நம்மைச் சுமந்து கொண்டு
ஆனந்தமாய் மிதந்து கொண்டே
இருக்கும்..
ஆயுசுக்கும்.
https://youtu.be/ruUSzvl1TME
-
சிவாஜி பாட்டு- 19
-------------------
ஏற்றமிகு தமிழ்த் திரையுலகின்
எழுச்சிக் காலத்தில், எழுபதில்
வந்த இந்த "எங்கிருந்தோ
வந்தாள்" படப் பாடல், என்னைப்போன்ற கோடிக்கணக்கானோரின்
இதய சிம்மாசனங்களில்
நிரந்தர வீற்றிருப்பு
செய்கிறது.
இன்றும் கூட இந்தப் படம்
பார்த்து விட்டு வருகிற
முகங்களில் "பார்த்தோம்,வந்
தோம்" என்கிற அலட்சியத்தைப் பார்க்க முடியாது. ஒரு முழுமையான
கலைப்படைப்பு தந்த
பெருமிதத்தையும்,முதிர்ந்த
ரசனையையும் அந்த
முகங்களில் நாம் காண
முடியும்.
நாளைக்குப் பரீட்சையென்றால்
.. இன்றிரவு (நல்ல)மாணவன் படிப்பில் காட்டுகிற அக்கறையை, நாம் நடிகர் திலகத்திடம் காணலாம்..
எப்போதும் போல் இந்தப்
பாடலிலும்.
சிரிப்போடு தொடங்கும் இந்தப்
பாடல், நம் சிரிப்பை வாழ
வைக்கிற வேலையை
முப்பத்தைந்து வருடங்களாகத்
தொடர்கிறது.
தமிழ் சினிமாவில் காதல் எனில் இதுதானென நிச்சயிக்கப்பட்ட
விஷயங்களையெல்லாம்,
நம் நடிகர் திலகமும்,நடிகர்
திலகத்தின் படங்களுந்தான்-
அர்த்தமுள்ளதாய்.. அழகாய்
மாற்றி எழுதியிருக்கிறார்.
மாற்றி எழுதின.
சிரிப்புக்கு ஸ்வரம் பிரித்த
அமரர் எம்.எஸ்.வி, இசையாகவே சிரித்துப் பாடிய
சுசீலாம்மா, என் உயரம்
எனக்குத்தான் என்று ஓங்கி
ஒலிக்கும் குரலுக்குரிய
தெய்வீகப் பாடகர், அமரர் அய்யா டி.எம்.எஸ்., கதாநாயகியாய் சும்மா அழகு வலம் வராமல் தன் இருப்பைத் தெளிவாய்த் தெரிவிக்கும் கலைச் செல்வியின் அற்புத நடிப்புப் பங்காற்றல்..
சிறப்புக்கெல்லாம் சிகரம்
வைக்கும் நம் சிங்கத் தமிழன்..
வேறென்ன வேண்டும்?
பாடலுக்கு வயசு, வருஷக்
கணக்கில் இல்லை...யுகக்
கணக்கில் நீளும்.
காதலும்,கவிதையுமாய்
பழைய வருஷங்களிலிருந்தவன்,
காதலியைப் பிரிந்த சோகத்தில் பைத்தியமாய் மாறிப் போகிறான்.
அன்புடனும்,அக்கறையுடனும்
அவனைப் பராமரிப்பதற்காக
அமர்த்தப்பட்ட இளம் பெண்ணுடன் ஆடிப் பாட வேண்டிய கதைச் சூழல்.
கத்தி மேல் நடப்பது போல்
ஜாக்கிரதை காட்ட வேண்டிய
சூழல் இது.
கத்தி மேல் நடனமே ஆடுகிறார்..நம்மாள்.
நல்ல தமிழில் எழுதப்பட்ட
பாடல் வரிகளுக்கு
வாயசைப்பதற்குக் கூட ஏற்கனவே கவிஞனென்பதால்
தமிழ்ப் புலமை மிக்கவன்
என்கிற காரணத்தைச் சொல்லி
விடலாம்.
ஆனால், சுவாதீனத்துடன்
இருந்த பழைய கால
மேதமையை, நடிப்பில் எந்த இடத்திலும் காட்டி விடக்
கூடாது.
அதற்காக என்னென்னவெல்லாம்
செய்கிறார்..? தலைமுடி
கலைவது குறித்த அக்கறையே
இல்லாது,குதித்துக் குதித்து
முடி கலைக்கிறார்.
பளீரென்று சிரிக்கிற நாயகியின் இதழ்களின் கீழ் கையேந்தி புன்னகையைப் பிடிக்கிறார்.
பிடித்த புன்னகையை
பட்டாம்பூச்சி போல் பறக்க
விடுகிறார். கை நழுவிப்
பறந்த புன்னகைப் பூச்சியை
குதித்துப் பிடிக்கப் பார்க்கிறார்.
முயற்சி தோற்க "பொத்" என்று
புல்தரையில் விழுந்து
புரள்கிறார்.
கச்சிதமாயில்லாத காவி
ஜிப்பா,வெள்ளை பைஜாமா அணிந்த இருபது வயதுக் குழந்தையாய் ஓடுகிறார். ஆடுகிறார்.
சிரிக்கிறார். குஷியாட்டம்
போடுகிறார்.
முகத்தை முன் நீட்டி, கைகள்
இரண்டையும் பின் இழுத்து,
சின்ன வார்த்தைக்கும்
பெரிதாய் வாய் திறந்து,
மிக அகலமாய் கண்கள்
அகட்டி, குழந்தை போல் கைகள்
கொட்டி, சரிந்திறங்கும்
திண்டிலிருந்து, கால்கள்
மட்டும் "கிடு கிடு"வென இறங்க..
உடலின் மற்ற பாகங்களில்
ஒரு அசைவும் காட்டாமல்
வியப்பூட்டி..
என்னென்னவெல்லாம்
செய்கிறார்?
"நிலவென வளரட்டும் கவிதை
உள்ளம்" என நாயகி
பாடுகையில், ஒரு கட்டத்தில்
நமக்கு முதுகு காட்டித்தான்
நிற்கிறார். அப்போதும் அவர்
ஏதோ பாவங்கள் காட்டிக்
கொண்டுதானிருக்கிறார்
என்பதை அவரின் முதுகின்
அசைவுகள் உணர்த்துகின்றன.
அட..
முதுகையும் நடிக்க
வைத்தார்..
நடிகர் திலகம்.
( இந்தப் பாடலைப் பற்றி
எழுதுங்கள் என்று என்னை
அன்புடன் பணித்த அன்புமிகு
திரு.V.C.S அவர்கள்,
இந்தப் பாடலில் நடிகர் திலகம்
செய்யும் சில அற்புத
பாவனைகளை "சிப்பிக்குள்
முத்து" படத்தின்'துள்ளி
துள்ளி' பாடலில், கமல் அவர்கள் அப்படியே செய்திருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்.)
https://youtu.be/NSN1vlRGy6k
-
சிவாஜி பாட்டு-20
-------------------
கரும்பு தின்னக் கசப்பதில்லை.
'எனக்குப் பிடித்த இந்தப்
பாடலைப் பற்றி எழுதுங்கள்'
என்று என்னிடம் அன்பு
வேண்டுகோள் விடுத்திருந்த
அன்புமிகு திரு.பொன்.
இரவிச்சந்திரன் அவர்களின்
வேண்டுகோளுங்கிணங்கி
எழுதும் பொருட்டு,
"என் தம்பி"யில் வரும்
"முத்துநகையே" எனும்
இசைக் கரும்பை இரண்டு,
மூன்று முறை தின்றேன்.
--------
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
நடிகர் திலகத்துக்கு.. நம்மை
உணர்வுப் பிழம்பாய்
மாற்றுவதற்கு.
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
மெல்லிசை மாமன்னருக்கு..
ஒரு பாசக் கதையே பாட்டுவழி
சொல்வதற்கு.
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
தெய்வீகப் பாடகருக்கு..
காலமெல்லாம் நிலைத்து
நிற்கும் தன் குரலினிமையை,
இந்த கானத்தோடு
கரைப்பதற்கு.
---------
கவியரசரைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றுகிறது...
எளிமை சரித்திரமாய் நம்
முன்னே இந்தப் பாடல்
விரியும் பொழுது.
"தென்மதுரை மீனாள்
தேன் கொடுத்தாள்.
சித்திரத்தைப் போலே
சீர் கொடுத்தாள்.
என் மனதில் ஆட
இடம் கொடுத்தாள்.
இதுதான் சுகமென
வரம் கொடுத்தாள்."
ஒரு பாடலை நமக்குப் புரிகிற
மாதிரி அருமையாய் எழுதியது
மட்டுமல்ல.. அந்தக்
குழந்தைக்கே புரிகிற
மாதிரி எழுதிய கவியரசரை கும்பிடத்தானே வேண்டும்?
தென்மதுரை மீனாள்,நமக்குக்
கவியரசரையும்தான்
கொடுத்துப்
போயிருக்கிறாள்.
----------
தமிழ்த் திரைப்பாடல்களில்
ஒரு விஷயம்
கவனித்திருக்கிறேன்.
ஒலி வடிவிலே நாம் கேட்டு
மிகவும் ரசித்தவொரு
திரைப்பாடலைக் காட்சி
வடிவிலே காண நேர்கிற
போது, அந்தப் பாடல் மீதான நமது மதிப்பான அபிப்ராயம்
அப்படியே நீடிப்பது கிடையாது.
ஒலி வடிவிலே நாம் ரசித்த
அதே பாடலைக் காட்சி
வடிவிலே பார்க்கப்
பிடிக்காமல்கூட போவதுண்டு.
இந்தக் குறை வைக்காத
பாடல்கள்,நடிகர் திலகத்தின்
பாடல்களே.
இந்தப் பாடலையே எடுத்துக்
கொள்ளலாம்...
போற்றி வளர்த்த,தன் மீது மிகப்
பாசம் கொண்ட
பெண்குழந்தையைப் பார்த்து
அவளது உடன்பிறவாச்
சகோதரன் பாடுவதாய் அமைந்த பாசப் பாடல்.. இது.
கவித்துவம் மிகுந்த
எளிமையான பாடல் வரிகள்,
கனிவான இசை,இதமான குரல்
என்று ஒலி வடிவிலே நம்
நெஞ்சள்ளிப் போன இந்தப்
பாடலையே, காட்சி
வடிவிலே பார்க்கிற போது,
பாடல் மீதான நம் பெருமதிப்பு
நடிகர் திலகத்தால் அதிகமாகிறது.
திரைப்படத்தின் காட்சி
வரிசைப்படி படப்பிடிப்பு
செய்யப்படுவதில்லை என்பது
நாமறிந்ததே. ஊனமுற்ற அந்த
சிறுமி இளம்பிள்ளைவாதத்தால்
அவதியுறும்போது, அவளுக்குத்
தாய்க்குத் தாயாய் இருந்து
காத்தவன் கதாநாயகன்தான்
என்பது விளக்கப்படும்
பாடலுக்கு முந்தைய
காட்சியும், பாடற் காட்சியும்
அடுத்தடுத்து படம்
பிடிக்கப்பட்ட காட்சிகளல்ல.
இருப்பினும், தொடர்ச்சியாய்
எடுக்கப்பட்டது போல் ஒரு
தோற்றத்தை அழுத்தமாக
உருவாக்கி விடுவது, நம்
நடிகர் திலகத்தின் சிறப்பு.
---------
ஓடி,ஒளிந்து விளையாட்டுக்
காட்டும் குழந்தையோடு,
இதழ்களோடு சேர்ந்து
கண்களும் புன்னகைக்க
நம் திலகம் பாடும் அழகு,
கோடி பெறும்.
அவர் 'ஆஹா,ஓஹோ' சொல்லும் அழகு பார்த்தாலே..
நம் வருத்தங்கள் ஒடி விடும்.
-----------
கண்ணழகையும்,
கையழகையும் புன்னகையோடு
பாடிக் கொண்டிருப்பவர்,
அன்பின் வேகத்தில் "காலழகு"
என்று தவறிச் சொல்லி விட்டு,
சூம்பிய குழந்தைக் கால்கள்
பார்த்த முகத்தில் புன்னகை
துரத்தி, சோகம் சூடி..
நடிகர் திலகம்- எவராலும்
புறக்கணிக்க முடியாத
புனிதம்.
----------
"மலர்ந்தும் மலராத" போன்றே
மறக்க முடியாத வெற்றியைப்
பெற வேண்டிய இந்தப்
பாடல், அந்தளவுக்கு
பேசப்படாதது குறித்து
என்னிடம் வருந்திப் பேசினார்..
திரு.பொன்.இரவிச்சந்திரன்.
அன்பின் பொன்.இரவி...
இந்த இனிமைப்பாடல் வந்த
சமயத்தில்,நீங்கள் சிறு
குழந்தையாயிருந்திருப்பீர்கள்.
நான், கைக்குழந்தையாய்
இருந்திருப்பேன்.
நம்மைச் சூழ்ந்த காற்றோடு
கரைந்த இலட்சக் கணக்கான
பாடல்களில், இதைத் தேர்ந்து
நீங்கள் சொல்ல..நான் எழுத..
இந்தத் தலைமுறைக்கும்
இனிக்க,இனிக்கப் போய்ச்
சேர்கிற இந்தப் பாடல் -
எப்போதும்..எந்நாளும்
தோற்காது..நண்பரே!
https://youtu.be/f2gQqwbeJRM
-
சிவாஜி பாட்டு- 21
-------------------
வெறும் பாட்டல்ல.. இது!
அழகான வாழ்க்கைத் தத்துவம்
எளிதாக விளக்கப்படும் இசைப் பாடம்.
கற்றுச் சிறந்த ஞானத்திற்கும்,
கர்வத்திற்கும் நடக்கும்
சங்கீதச் சண்டை.
-----------
கர்வம் பொல்லாதது.
'என்னால் முடியும்' என்கிற
நம்பிக்கை, "என்னால் மட்டுமே
முடியும்" என்கிற நிலைக்கு
மாறும் போது, அங்கே கர்வம்
என்பது வந்து விடுகிறது.
எதிலும் தன்னையே
முன்னிலைப்படுத்தி, எப்போதும் தன்னையே
பெரிதெனச் சொல்லும்
மனிதரின் குடுமி,கர்வத்தின்
கையிலிருக்கிறது என்று
பொருள்.
----------
மற்றவரை மட்டம் தட்டி
இன்பம் காணுவோரின் கர்வம்
அடக்கப்படும் என்பதற்கு
உதாரணமாய் ஒரு கதை
கேட்டதுண்டு.
ஒடுங்கிய பாலமொன்றில்
நல்லவனொருவன் நடந்து
வந்து கொண்டிருந்தான்.
எதிரே, கர்வம் பிடித்தவன்
ஒருவன் வந்து
கொண்டிருந்தான்.
வந்தவன்,நல்லவன் செல்ல
வழியில்லாமல் பாதையை
அடைத்துக் கொண்டு நின்றான்.
நல்லவன் அமைதியாகக்
கேட்டான்.."எனக்கு வழி
விடுகிறாயா?"
கர்வி கொக்கரித்தான்.. "நான்
முட்டாள்களுக்கு வழி
விடுவதில்லை.."
நல்லவன் அமைதியாக..
"ஆனால்,நான்
முட்டாள்களுக்கு வழி
விடுவதுண்டு" என ஒதுங்கி
நின்றான்.
---------
கதையின் நல்லவனைப்
போலவே இந்தப் பாடலில்
நடிகர் திலகம், திறமையால்
கர்வம் அடக்கும் அழகை
சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.
மின்னும் ரோஸ் நிறச்
சட்டையும், மீசை இல்லாத
உதடுகளில் திறமைப்
புன்னகையும், அட்டகாசமான
அமர்வும், தோள்கள் உருட்டி,
திசைகள் அத்தனைக்கும் தன்
திருமுகத்தின் பாவனைகள்
காட்டும் பேரழகும்..
நடிகர் திலகம், வெகு சுலபமாய்
நம் நெஞ்சில் குடியேறுகிறார்.
உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.
"இதில் தேவை என்ன
பக்கமேளம்?" - ஆணவ த்வனியில் நம்பியார் பாட..
வாசிப்பை நிறுத்தி,
மிருதங்கத்தை நிமிர்த்தி
வைத்து விட்டு, வெற்றிலைச்
செல்லம் திறந்து சாவகாசமாய்
பாக்கு மெல்லும் அழகு..
வேறு யார் செய்தாலும்
வராது..
நடிகர் திலகம் தவிர்த்து.
---------
கர்வங்கள் ஒடுங்கிய நாளைய
சுத்தமான காலவெளியில்
கேட்கத்தான் போகிறோம்..
அய்யாவின் நம்பிக்கை
வாசிப்பை..நிரந்தரமாய்.
https://youtu.be/grg1KgK0r8I
-
சிவாஜி பாட்டு-22
-------------------
நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
மரத்தடி நிழலில் நின்று பருகும் இளநீர் தரும் ஒரு
குளுமையை...
சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
எல்லாமே கொஞ்சம் அதிகமாக
காணப்படுகிற கல்யாண வீட்டு
களேபரத்திலும், பெண்ணைப்
பெற்றவனின் மனம் காணும்
நிம்மதி மிகுந்த மௌனத்தை..
மடித்துக் கட்டிய வேட்டியும்,
பனியனை வெளிக் காட்டும்
மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சுமாய் நடிகர் திலகம்
வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
படத்தின் வேகப் போக்கினூடே
இந்த மென்பாடலைப் பார்த்த
போது உணர்ந்திருக்கிறேன்.
சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
"வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
சிறந்த உதாரணப் படமாய்
அமைந்த இந்தப் படம் ஏன்
அதிகமாகப் பேசப்படவில்லை..
போற்றப்படவில்லை..?
- என்கிற வருத்தத்தைப் போல.
ஒரு படம்.அதற்குள் பாடல்களைத்
திணிக்கிற கதைச் சூழல்கள்..
இதெல்லாம்
மீறி இந்தப் படத்தின் கதையோடு
ஈஷிக் கொண்டு
வருகிற இந்தப் பாடலின்
சூழல் அற்புதமானது.
சதையைப் போற்றும் சராசரிப்
பாடல்களிலிருந்து தூரமாய்
விலகிக் கொண்டு, காதலைக்
கண்ணியமாய்ப் பேசுகிறது..
இந்தப் பாடல்.
மெல்லிசை மாமன்னர் இந்தப்
பாடலின் மென்மையில்
வாழ்கிறார்.
அரிதான, இனிமையான
சசிரேகாவின் குரலை
நமக்கும், காற்றுக்கும் மிகவும்
பிடிக்கிறது.
"பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
அவர்களை அழைப்பது சரிதான்
என்று அழுத்தமாய்
நிரூபிக்கிறது இந்தப் பாடல்.
இசை வெளிச்சமற்று இருண்டு
கிடக்கிற நம் இதயங்கள்
ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.
ரௌடிக் கட்டு விடுத்து,
கண்ணியமான அந்த வேட்டிக்
கட்டல், அடர் நீலச் சட்டை
அணிந்து நடந்து வரும் அழகு,
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த அழகு.
" சந்தன மலரின் சுந்தர வடிவில்"என்று பாடத்
துவங்குகிற நிமிஷத்தில்,
மனைவியின் முன் நின்று
ஓர் வளர்ந்த குழந்தை போல்
சட்டையின் கீழ்ப்புறமாய்
நீவி விட்டுக் கொண்டு பாடும்
நடிப்பை இந்தத் தலைமுறை
நடிகர்களெல்லாம் பார்த்துப்
பார்த்துக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
ஊரையே பயந்து மிரள
வைக்கும் "தீனதயாளு" தன்
அன்பான மனைவிக்கு மட்டும்
தனது சுயரூபம் காட்டாது,
மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
அவர் வெளிப்படுத்துகிற
நடிப்பில் அசந்து போகிறோம்.
-----------
"மு த் து க் கி ரு ஷ் ணா.."
என்று விரல் சொடுக்கி
அழைப்பதிலும், சிரித்த முகம்
மாற்றாமல் கானம் பாடி
நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
நாமிருக்கிறோம்.
எது வேண்டுமென்று நாம்
நினைக்கிறோமோ.. அதை
அப்படியே தருவதற்கு அவர்
இருக்கிறார்.
பிறகென்ன..?
https://youtu.be/-FWGP3ubDus
-
சிவாஜி பாட்டு- 23
--------------------
கலைத் தாயே...!
கைகூப்பிச் சொல்வோம்..
நன்றிகளுனக்குக் கோடி.
நீ அருள் தந்தாய்.. உன்னதக்
கலைஞனே மகனாய் உனக்கு
வாய்த்தானடி.
அற்புத நடிப்பைக் கொடுத்துக்
கொடுத்து, அனைவரையும்
தன் பக்கம் சாய்த்தானடி.
சத்தியக் கலைஞனுக்குச்
சாவில்லையென்றிருந்தோம்.
ஒரு ஜூலை-21 ல் ,அதில்
மட்டும் ஏய்த்தானடி.
-----------
இதோ...
உன் தெய்வ மகன் வந்தாடும்
ஓர் திரைப்பாடல் கண்டோமடி.
திரைப்பிம்பம்தானே என
எண்ணாமல், தொட்டுக்
கண்ணிலொற்றிக்
கொண்டோமடி.
ஆயிற்று.. ஒரு நூறு முறை..
இந்தப் பாடலைப் பாடிப் பாடி.
எம் செவிகள் அலைகின்றன..
இப்பாடலையே தேடித் தேடி.
செந்நிற ஆடையில் சிரித்த
முகம் காட்டி,
வெண்ணிற ஆடையில் வந்து
எமது வேதனைகளை தூரம்
ஓட்டி,
கருப்புஞ் சிவப்புமாய் அணிந்த
உடையில் கண் நிறைந்த
எழில் காட்டி..
உன் மைந்தன் வந்தானடி.
இந்தப் பாட்டு போல்
இன்னும் பல பாடல்களில்
மஞ்சுளா ஜோடி.
மன்னவன் அவனுக்கு மயக்கும்
அவன் அழகுதானே
எப்போதும் ஜோடி?
காமமற்ற காதல் காட்டி,
கண் சுருக்கியும், விரித்தும்
கலைகள் காட்டி,
உதடு சுழித்து, உடலை
நிமிர்த்தி,
கைகள் முன்னே நீட்டி,
பூமுகத்துப் புன்னகையால்
நம் துயர்கள் விரட்டி,
புதிது புதிதாய் கலை
செய்து
எங்கள் அன்பைத் திரட்டி...
கலைத் தாயே..!
கைகூப்பிச் சொல்வோம்...
நன்றிகளுனக்குக் கோடி.
உன்னருளால் எங்கள்
சந்தோஷ பூமிக்கு...
தேவன் வந்தான்டி.
https://youtu.be/DngO2_1GL6M
-
சிவாஜி பாட்டு- 24
-------------------
பாடலென்கிற பேரில் வந்த ஒரு
கவிதைக்கு, நடிகர் திலகம்
என்கிற கவிதை வாயசைத்து
நடித்த அதிசயம் 1987-ல்
நடந்தது.
தந்தைக்கும்,மகளுக்குமான
அதீத பாச உணர்வுகளை
மையமாகக் கொண்ட படங்கள்
ஜெயிக்கிற காலத்தில்
இருக்கிறோம். ஒரே ஒரு
பாடலுக்குள்ளேயே அத்தகைய
உணர்வுகளை உள்ளடக்கி
நம் இதயம் வென்ற இப்பாடல்
வியப்புக்குரியது.
------------
நடிகர் திலகத்தின் மனத்தின்
நிறம் கொண்ட தூய வெள்ளைக் கால்சட்டை, அடர்சந்தன நிறத்தில் அதனுள்
நுழைத்த மேல்சட்டை, நடிகர்
திலகத்தின் துணையோடு
நடக்கும் அவரது வாக்கிங்
ஸ்டிக்...
மாறிக் கொண்டேயிருக்கிற
காலத்திற்கேற்றாற் போல்
தன்னைப் புதுப்பித்துக்
கொண்டேயிருந்திருக்கிறார்..
நடிகர் திலகம்.
அதனால்தான் கடினமான தமிழ்
மற்றும் இசை இலக்கணத்திற்கு உட்பட்ட
பழங்கால நாடக,திரைப்படப்
பாடல்களுக்கு வாயசைத்து
நடித்த அவரால், இந்தப்
புதுக்கவிதைக்கும் கூட
அழகூட்ட முடிந்திருக்கிறது.
--------------
இறந்த காலத்தில் இருந்ததாய்
கதையில் சொல்லப்படும் ஒரு
இறக்காத இல்லற வாழ்வின்
அன்பை ஒரு அழகான
கவிதைக்குள் சுருக்கி விட்ட
கவிப்பேரரசு வைரமுத்து,
இனிமையாய் இசையூட்டிய
சங்கர்-கணேஷ்,
அப்பாவும், பெண்ணுமாகவே மாறி விட்ட எஸ்.பி.பி-ஷைலஜா...
மகளாக நடித்த நதியா..
எல்லோரும் வியப்புடன்
வாழ்த்துவதற்குரியவர்கள்.
-----------
"அன்புள்ள அப்பா..
உங்கள் காதல் கதையைக்
கேட்டால் தப்பா?"
-தந்தையென்றாலும்
பண்போடு அனுமதி கோரும்
மகளை, கேட்பது காதல் குறித்து
என்பதால் "பொல்லாத
பெண்ணப்பா" என்று
செல்லமாகக் கடிந்து கொள்வது
ஒரு அழகு.
--------------
மகள் கேட்கிறாள்..
"அப்பா..
நீங்கள் அம்மாவைப் பார்த்தது
எப்போது?
ஞாபகம் உண்டா இப்போது?"
ஆர்வமாய் பதில் சொல்கிறார்
தந்தை...
"முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே..
அவளை நான் பார்த்தது
மலர்கள், வண்டுகளுக்குப்
பேட்டி கொடுக்கும்
ஊட்டியில்."
"அவளை நான் பார்த்தது.."
என்று துவங்கி, "ஊட்டியில்"
என்று முடிக்கும் வரைக்கும்
இடைவிடாமல் பாடல்
பாடப்படுகிறது.. ஆனால்..
அதிலும் 'எங்கே முதன்முதலில் பார்த்தோம்?'
என்று யோசிப்பதாய் அவர்
காட்டும் பாவனை ஒரு அழகு.
--------------
"அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டுந்தானே"
எனும் போது காட்டும்
பெருமிதம் ஒரு அழகு.
--------------
"பூக்களெல்லாம்
அவள் கனிந்த முகம் காண
நாணிக் கோணி
குனிந்து கொண்டன."
-எனப் பாடுகையில்
நாணியும்,
கோணியும் இவர் செய்யும்
அசைவுகள் அழகு.
-------------
"உங்கள் மணவாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா?"
-மகள், பழைய நினைவுகளைத்
தட்டி எழுப்பி விடுகிறாள்.
"நான் தாயிடம் கூட
பார்த்ததில்லை அந்தப் பாசம்.
அவள் நினைவுகளே
என் சுவாசம்."
-எனும் போது தனக்குள்
தானே கரைந்து போய்..
"அன்புள்ள அப்பா" எனும்
மகளின் குறும்புக் குரல்
கேட்டு சோகத்திலிருந்து உடனே தன்னை விடுவித்துக்
கொள்வது ஒரு அழகு.
----------------
"அப்பா..
அம்மா உங்களை
நல்லா கவனிச்சுக்கிட்டாங்களா?"
-மகளின் ஆசைக் கேள்வி.
துள்ளிக் குதித்து வரும்
பதில்..
"சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடி கொடுப்பாள்.
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்.
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்."
-சுளுக்கெடுப்பதையும்,
அழுக்கெடுப்பதையும் கூட
அந்தந்த வரிகளைப்
பாடுகையில் மகளிடம்
ஆர்வமாகச் செய்து
காட்டுவார்.
எப்படி சுளுக்கெடுப்பது,
எப்படி அழுக்கெடுப்பது
என்றெல்லாம் தெரியாத
வயதில்லை..மகளுக்கு.
இருப்பினும், மனைவியால்
தான் பெற்ற மகிழ்வான
அனுபவங்களை மகளுக்கு
விளங்கச் செய்வதில் இருக்கும்
குழந்தைத்தனமான வேகம்
ஒரு அழகு.
---------------
இரண்டே கண்கள்.
"தாயாய் அவளைப்
பார்த்ததுண்டு" -என்று
பாடினால், அவற்றில் தாய்மை
ததும்புகிறது.
"ஒரு தாதியாய் அவளைப்
பார்த்ததுண்டு"- என்று
பாடினால், அவற்றில் கருணை
கசிகிறது.
"ஒரு தேன் குடமாய்
அவளைப் பார்த்ததுண்டு"
-என்று பாடினால் அவற்றில்
இனிமை வழிகிறது.
ஆச்சரியத்துக்குரிய அந்தக்
கண்கள் அழகு.
---------------
அன்பான மனைவியைப்
பிரிந்த வேதனை தாங்காமல்
அவர் அழுதுகொண்டே பாடும்
பாடலின் கடைசி வரிகள்..
"என் வானத்தில்
விடிவெள்ளி எழுந்தது..
வெண்ணிலவு மறைந்தது."
இறைவா...!
நடிகர் திலகமென்கிற
வெண்ணிலவையும்
பறிகொடுத்து விட்டு
பரிதாபமாய் இருண்டிருக்கும்
எங்கள் வானத்தில்
எப்போது விடியல் தருவாய்?
https://youtu.be/yXnbMxFpT7A
-
சிவாஜி பாட்டு- 25
-------------------
* "அமாவாசை எப்போ.?"
என்று பாட்டி கேட்ட போது
உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நிலவே..!"
* " நேரங்கெட்ட நேரத்தில்தான்
வந்து தொலைக்கிறது
இந்தக் காதல்..
நூலக அமைதியில்
தும்மலைப் போல.
- இந்த மாதிரி நிறைய காதல கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள்.
" நீ போட்ட காதல் வகுத்தலில்
எனக்குக் கிடைத்த
ஈவு : கண்ணீர்.
மீதி : உயிர்."
-என்கிற என் கவிதையைப்
படித்து விட்டு, ஒரு சிலர்
"உனக்கு காதல் தோல்வியா?"
என்று கூடக் கேட்டிருக்கிறார்கள்.
காதலை எழுதி, எழுதி.. எனக்கும் காதலுக்குமான
காதல்தான் அதிகமாயிற்றே
தவிர, என் காதல் படித்துக்
கோபமுற்று "ராஸ்கல்" என்று
பல் கடித்து, செருப்பு கழற்றிக்
காட்டுவதற்குக் கூட ஒருத்தி
எனக்கு வாய்க்கவில்லை.
மென்மையும்,மேன்மையுமாய்..
இனிமையும், இதமுமாய்..
இந்தப் பாடல் பார்க்கக் கிடைத்த போது, இப்படிப் பாடிய
சந்தோஷிக்கவாவது ஒருத்தி
எனக்குக் கிடைத்திருக்கலாம்
என்று ஏக்கமாய்ச் சிந்தித்திருக்கிறேன்.
------------------------------
இருளில் மிதக்கும் இரவு.
இரவில் மிதக்கும் நீர்நிலை.
நீர்நிலையில் மிதக்கும் படகு.
படகில் மிதக்கும் காதல்.
காதலோடு அதில் மிதக்கும்
காதலர்கள்.
அழகே உருவாக கலைச் செல்வி.
அசத்துவதன்றி வேறொன்றறியாக் நடிகர் திலகம்.
கண்களைச் சிரிக்கச் செய்து
விட்டு, நம்மை வேடிக்கை
பார்க்கிற அவரது குறும்பு.
மெல்லிசை மாமன்னர் தந்த,
இனிப்புச் சாறு உள்வைத்த
பாட்டுக் கரும்பு.
இந்தப் படத்தில்தான் இந்தப்
பாடலென்பதறியாமல்
"தர்மம் எங்கே" படத்தினூடே
இந்தப் பாடல் பார்த்த சந்தோஷம்...
கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தபால்காரர்
"மணி ஆர்டர்" தந்தது போன்ற
சந்தோஷம்.
https://youtu.be/XiSD-cp9KgU
-
சிவாஜி பாட்டு-26
------------------------------
"என் மகன்" படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு.
படத்தின் கடைசியில், திரையை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் நடிகர் திலகம் அழகாய் "டாட்டா" காட்டிக்
கொண்டிருக்கையில், "வணக்கம்" என்ற வார்த்தை
வண்ணமாய் வந்து குறுக்கே நிற்கும்.
ஜெயிக்கிற விஷயத்தில் எனக்கு வணக்கமே கிடையாது என்கிற கருத்தில் நடிகர் திலகம்
அந்த வணக்கத்தை நிறுத்திப் பிடித்து வந்த வழியே தள்ளி விடுவார்.
ஆம்.
ஜெயிக்கிற விஷயத்தில் அவருக்கு வணக்கமே கிடையாது என்பதை இந்த "உத்தமன்'பாடலும் ஒரு முறை நிரூபிக்கிறது.
ஒடுங்கிய வாசலோடு உசரத்தில் இருக்கும் கோயிலின் படிகளில் இருந்து அழகுத் துணையோடு இறங்குவதில் துவங்கி, இன்னொரு அழகான இடத்தின் படிகளில் ஏறுவதோடு முடியும்
இந்தப் பாடலும் முடியும் நிமிஷத்தை வெறுக்க வைக்கும்.
பின்னங்கை கட்டிக் கொண்டு எந்தப் பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் ஒரு கால் உயர்த்தி நிற்பது அழகு.
கேமராவை நோக்கி சிரித்தபடி திரும்புகையில் கொஞ்சம் கூட செயற்கை சேர்க்காத அந்தப்
புன்னகை முகம் அழகு.
கொஞ்சம் பின் நகர்ந்தால் பாதாளம் காட்டுகிற உயரமான அந்த சதுரப் பரப்பில் காதலி
வெட்கத்தால் ஓடுகையில் குறுக்கே கால் நீட்டி மறித்து அவள் வேகம் மட்டுப்படுத்துகிற குறும்பு அழகு.
"பூமியெங்கும் பச்சைச் சேலை"பாடத் துவங்கும் போது தலை சிலுப்புவது அழகு.
கழுத்து சுற்றிய வெளிர் நீல நீள் துண்டு அழகுக்கு அழகு சேர்க்க, ஒயிலாய் உடல் வளைத்துக் குனிந்து காதலியின் கால், கையென தாளம் இசைப்பது அழகு.
வளைந்து, நெளிந்து நடந்து வந்து, தலை ஒருபுறமாய்ச் சாய்த்து, ஆளை அப்படியே
தூக்கிக் கொண்டு போகிற ஒரு சிரிப்பைத் தனது இதழ்களிலே தவழ விடுவதும்...
கழுத்துத் துண்டின் நீளமான ஒற்றை முனையைப் பற்றிச் சுழற்றிக் கொண்டு வேக நடை
நடப்பதும் அழகு.
அழகென்ற சொல்லுக்கு இலக்கணமாக அய்யன் நடிகர் திலகத்தை ஆண்டவன் படைத்தது அழகு.
அந்த அழகு முகத்தை ஆயுசுக்கும் ரசிப்பதற்கு அந்த ஆண்டவனே நம்மைப் படைத்ததும் அழகு.
http://youtu.be/yvf6SCQQA3A
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு- 27
-------------------------------
முல்லா கதைகளில் படித்த ஞாபகம்.
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவி,
வேலை முடித்துத் தினமும் மாலையில் வீடு திரும்பும் கணவனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கிறாள்.
அதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கக் கூடும் என்று தினமும் கணவன் கழற்றிப் போடுகிற உடைகளைக் கவனமாக ஆய்வு செய்கிறாள்.
கணவனுக்கு முடி கொட்டும் வியாதி உண்டு. அவனது வெள்ளைச் சட்டையில் விழும்
கறுப்பு நிற தலைமுடியை வைத்து சந்தேகத்தை உறுதி செய்து வசவு பாடத் துவங்கினாள்.
கணவன் ஜாக்கிரதையானான்.
தினமும் வேலை முடித்துக் கிளம்பும் போது சட்டையைக் கழற்றி கறுப்பு முடி ஒட்டிக்
கிடக்கிறதா என்று நன்கு பரிசோதனை செய்த பிறகே புறப்பட்டான்.
அவனுடைய போதாத வேளை,ஒருநாள் அவனது நரைமுடி ஒன்று அவனது வெள்ளைச் சட்டையில் விழுந்து, அவனும் கவனிக்காமல் வீடு வந்து சேர்ந்தான்.
மனைவிக்காரி பார்த்து விட்டுப் பத்ரகாளியானாள்.
"போயும் போயும் ஒரு வயதான பெண்மணியுடனா தொடர்பு வைத்திருக்கிறாய்...?"
கணவன் நொந்து போனான்.
மறுநாள் மிகக் கவனமானான்.
வெள்ளைச் சட்டையைக் கழற்றி அங்குலம், அங்குலமாய்ப் பரிசோதித்து,பத்து முறை சட்டையை உதறி, சட்டையில் கறுப்பு முடியோ,
நரை முடியோ இல்லையென்று உறுதி செய்த பிறகே வீடு திரும்பினான்.
மனைவி வழக்கம் போல சட்டையை ஆய்வு செய்தாள்.அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தாள். உன்னிப்பாய் உற்றுப் பார்த்தாள். சட்டையில்
எந்த முடியும் இல்லையென்று அறிந்தாள்.
கண்களில் கனல் தேக்கி கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கேட்டாள்.
"இப்போது ஒரு மொட்டைத்
தலைப் பெண்ணோடு உறவு
வைத்திருக்கிறாய்..இல்லையா?"
*******
சந்தேகம் மட்டுமல்ல, தவறான புரிதல், பிடிவாதம், கர்வம் என்று மோசமான குணமுள்ளவள் மனைவியாக வாய்த்தால், அந்த ஆண்மகனின் வாழ்க்கை அவலப்பட்டுப் போகிறது.
பெய்த பெருமழையில் கரையுடைத்து ஓடும் வெள்ளமாய் வாழ்வோடு ஓடிக் கொண்டிருந்தனை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தவள்
கதறக் கதறக் கலங்கடிக்கும் போது, காயப்பட்ட மனசிலிருந்து பீறிட்டுப் பாயும் கவலை ரத்தம் இந்தப் பாடல்.
ஏட்டுப் படிப்பில்லாத அப்பாவித்தனத்தையும், நற்குணங்களால் நல்லவற்றைப் படித்துத் தேர்ந்த
முதிர்ச்சியையும் ஒரே முகத்தில் பிரித்துக் காட்டுவதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
"காட்டு மானை வேட்டையாடத்
தயங்கவில்லையே..
இந்த வீட்டு மானின் உள்ளம்
ஏனோ விளங்கவில்லையே."
ஏகப்பட்ட பயங்கரங்கள் பல்லிளிக்கும் காட்டுக்குள்ளேயே சாதித்து வந்தவன், வீட்டுக்குள் ஒரு அழகான பெண்ணிடம் பயந்து, அவமானப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடக்கிற அவலத்தை ஒரு நான்கு நிமிஷப் பாடலுக்குள் விளக்கி விடுவது, நடிகர் திலகம் தவிர வேறு
யாராலும் சாத்தியமானதல்ல.
அந்த திறமை முகத்தில் மனைவியால் பட்ட அவமானத்தை அப்பட்டமாய்க் காட்டும் வருத்தமும் தெரியும்.
"அவள் மேல்தான் தவறு. நான் நல்லவன். கூனிக் குறுக எனக்கு அவசியமில்லை"- என்பதான ஒரு ஆண்பிள்ளைத் திமிரும் தெரியும்.
பாடலின் இடையில் ஒரு முறை எழுந்து நின்று "ஆ..ஆ" என்று சோம்பல் முறித்து, கைகள் நீட்டி வளைத்து, உடம்பை நெளித்து...
இது போன்ற பாவனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பின்புறத்தை கேலியாக ஆட்டிச்
செல்வது...
அவரைப் பிடிக்காதவர்கள் அவர் மேல் வைக்கும் விமர்சனங்களுக்கு, அவர் காட்டும் பழிப்பு.
கலையுலகில் படிந்த இருட்டையெல்லாம் அவரது
திறமை வெளிச்சம் பாய்ந்து செய்யும் அழிப்பு.
அய்யா நடிகர் திலகம் சார்ந்த அத்தனை உன்னதங்களையும் விளக்கி விட...
"நான் கவிஞனுமில்லை.
நல்ல ரசிகனுமில்லை."
http://youtu.be/o17JQ6TWP30
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-28
------------------------------
இதோ...
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
கண்ணன் என்கிற கிருஷ்ணன் என்கிற கோவிந்தன் என்கிறகோபாலன் என்கிற மாதவன்
என்கிற முகுந்தன் என்கிற ரமணன் என்கிற மதுசூதனன் என்கிற...
அந்த மாயவன்-
யுகம் யுகமாய் நீண்டு கொண்டே போகும் கடவுளுக்கும்,மனிதருக்குமான இடைவெளியை இல்லாதொழித்தவன்.
அவனது திருக்கரங்கள் சும்மா மாய மந்திரம் செய்து கொண்டிராமல், தன் பாதத்தில் விழுந்து வேண்டியவனின் தோளில் சிநேகமாய் விழுந்தவை.
மற்ற கடவுளரெல்லாம் வேதப் புத்தகம் போல்,பாடப் புத்தகம் போல் மிரட்டலாய் நின்றிருந்து பயங்காட்ட, இவன் சுவாரஸ்யமான கதைப் புத்தகம் போல் எல்லோருக்கும்
பிடித்துப் போனான்.
கண்ணன்-
குழந்தையாய்க் குறும்பு, வாலிபனாய்க் காதல் சேட்டைகள், அகம்பாவங்களை அறிவாயுதம் கொண்டு சாய்க்கிற புத்திசாலித்தனம் என்று இயல்பு விலகாமல், யதார்த்தம் சிதையாமல், வித்தை காட்டாமல் நம் மனம் நிறைந்த கடவுள்.
வாயெல்லாம் வெண்ணெய் வழிய தவழ்ந்த நிலையில் இவன் சிரிக்கும் படம் பார்த்தால் கும்பிடக் கூடத் தோணாது மனம் நிறையும்.
அவன் சிரிக்கிற சிரிப்பே நம்
மனக்கஷ்டங்களை "லபக்"
என்று விழுங்கி விடும்.
******
'தெய்வமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நாம் கண்ணனைக் கொண்டாட...
'நடிகனென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்பதான அடையாளமாயிருக்கிற நம் நடிகர் திலகம், கண்ணனைக் கொண்டாட...
அழகான பாசுரம், அருமையான பாடலாயிற்று.
நிமிர்ந்து அமர்ந்திருக்கிற அமர்வே கம்பீரந்தான். பலகையிட்டு அமர்ந்ததில் இன்னும் கொஞ்சம் உயரப்படும் போது.. கம்பீரமும் உயர்கிறது.
நடு நெஞ்சில் கைகள் குவியும் கும்பிடல், அய்யனுக்கொன்றும் புதிதில்லை. "வெற்றி வடிவேலனே" பாடும் கட்டபொம்மன் கிட்டத்தட்ட
இப்படித்தான் கும்பிடுகிறார்.
ஒரே விதமான கும்பிடலை கட்டபொம்மனுக்கு வீரமாகவும், விப்ர நாராயணருக்கு பக்தியாகவும்
வித்தியாசப்படுத்தி செய்வது நடிகர் திலகத்தால் மட்டுமே ஆகிற காரியம்.
அழகென்பது ஒப்பனையால் மட்டும் உண்டாவதா? இல்லை என்கிறது அள்ளி முடித்த கொண்டைச் சிகை விட்டுத் துள்ளி நெற்றியில் சுருளும்
ஒற்றைக் கொத்து முடி.
"ஆ..ஊ" என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினால்தான் ஒரு நடிகன், பல கோடி ரசிகர்களைத் தன் வசம் ஈர்க்க முடியுமா? இல்லை.. ஒரு ரெண்டு நிமிஷப் பாசுரத்துக்கு அமைதியாக, அம்சமாக வாயசைத்தே ஈர்க்கலாம் என்கிறார் அய்யன்.
ஆண்டவன் அடியவர்களின் நடையழகும் அழகு மங்கையரை வியந்து வணங்க வைக்குமா..? 'வைக்கும்' என்கிறது... "காரொளி வண்ணனே" என்று பாடி வருகையில் அய்யன் புரியும்
நளினத்தையும், ராஜம்பீரத்தையும் சமவிகிதத்தில் கலந்து செய்த அந்த அழகு நடை.
******
இதோ..
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
அன்பு தெய்வமவன், துணைக்கொரு கலை தெய்வத்தையும் கூட்டி வந்து, பாடலென்கிற பேரில், வைகுண்ட ஏகாதசி இல்லாமலே சொர்க்க வாசல் திறக்கிறான்.
http://youtu.be/Pfgfff_MZ00
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-29
------------------------------
இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு "இனிப்புக் கடை"என்றே பெயரிருப்பதை எங்கோ பார்த்தேன்.
அழகான ஒரு திரைப்பாடல் "அழகே வா" என்றே துவங்குவதை "ஆண்டவன் கட்டளை"யில் கேட்டேன். பார்த்தேன்.
******
ஒரு இளம் பெண், அந்த வயதிற்கே உரிய வேக, தாகங்களோடு பாடும் மென்பாடல்களென்றால் எழுபதுகளின் இறுதியில் உருவான இசைஞர்கள் உருவாக்கிய பாடல்கள்தாம் என்கிற கருத்தே என் காலத்தில் ( வதந்தியாய் ) பரவியிருந்தது.
அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டிய பாடல்களில் மெட்டும்,இசையும் என்னவோ
பிரமாதப்பட்டாலும், பாடலின் காட்சிகள் சகிக்க முடியாமலே இருந்தன.
குளத்தோரமாய் ஒரு குடம் தண்ணீர் மொள்ள வந்தவள் காரணமே இல்லாமல் கவர்ச்சியாயிருந்த கண்றாவித்தனங்கள் ஒரு இனிமையான மெட்டைப் போர்த்தி மறைக்கப்பட்டன.
காற்றை விட மென்மையான ஒரு சங்கீதக் குரல் பின்னொலித்த பாடலில், கணவனை விடுத்து கண்டவனோடு காட்டுக்குள் அலையும் ஒரு அபத்தப் பெண்ணே காட்சிப்படுத்தப்பட்டாள்.
ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்காக, கதையும், காட்சிகளும் பாடலின்
போக்கில் திசைமாறி அலைந்த கொடுமைகளும் நிகழ்ந்தன.
அப்படிப்பட்ட பாடல்களுக்கெல்லாம் பழிப்புக்
காட்டியது... இந்த "அழகே வா" பாடல்.
******
பசித்த பின் உணவருந்துவது போன்ற ஒரு முறையும், ஒழுங்கும்... கதைக்கேற்றபடி
பாடல் உருவாக்குகிற மெல்லிசை மன்னரிடமே இருந்ததென்பேன்.
கதாநாயகன் வாலிபன். என்றாலும் ஒழுக்கசீலன்.
கற்றறிந்த பண்டிதன். நிறைய மாணவர்களுக்கு பாடம் போதிக்கிற ஆசிரியன்.
கதாநாயகி இளம்பெண். கல்லூரி மாணவி. ஆசிரியராயிருக்கிற நாயகனிடமே பயில்கிறவள்.
ஒழுக்கக் கட்டுப்பாடுகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழும் நாயகன், தன்னிடம் பயிலும் மாணவியின் வசம் தன்னை கொஞ்சம், கொஞ்சமாய் இழப்பதை அழகாகச் சொல்கிறது இந்தப் பாடல்.
கொஞ்சம் அசந்தால் நாயகியை அலைகிறவளாகவும், நாயகனை வழிகிறவனாகவும் காட்டி விடுகிற கதைச் சூழல்.
காட்சிச் சூழல்.
காவியமாக்குகிறார்கள்...நடிகர் திலகமும், தேவிகாவும்.
கடற்கரையைக் கல்லூரியாக்கி மாணவி, ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாள்.
"அழகே வா" என்று தேன் தடவி நீளும் குரலில்தான் இறைவன் வாழ்கிறான்.
வேறு விதமாய் கண்ணியமாய் வாழ்ந்தவனை இன்றைய காதல் பாடாய்ப் படுத்துவதை
அப்பட்டமாய்க் காட்டுவதற்கு நடிகர் திலகத்தின் கண்களைத் தவிர வேறு கண்களுக்குச்
சக்தி கிடையாது.
ஒரு உயரமான பாறை. அதன் பின்னே உயர்ந்து வளர்ந்த தென்னை மரம். பாறையில் இறுகிய, குழம்பிய நடிப்பு பாவங்களுடன் நடிகர் திலகம்
நிற்கிறார். சட்டென்று தென்னை மரத்தை விட அவரே உயர்ந்து தெரிகிறார்.
பழைய ஒழுக்கமான வாழ்க்கையா..? பாழாய்ப் போன காதலா..? என்று மனம் கொள்ளும் தடுமாற்றமென்பது பாவனைகளால் விளக்கி விட
முடியாத உணர்ச்சி.
பூதம் பார்த்து மிரண்ட ஒரு குழந்தையின் பயந்த பார்வை, பின் திரும்பி நின்று முதுகு காட்டி நிற்கையில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாததை வெளிப்படுத்தும் விதமாய் வலது கையை மூடி
இறுக்கி தன் தொடையில் குத்திக் கொள்வது, அழகானவள் அழகாய்ப் பாடிக் குளித்துக்
கொண்டிருக்க, விலகி நடக்க முன் வைத்த காலும், தயங்கி மீண்டும் பின் திரும்பும் காலுமாய் ஒரு பாவனை...
இப்படி சின்னச் சின்ன பாவனைகள் கொண்டே அந்த உணர்ச்சியை விளக்கி விடுவது... நடிகர் திலகத்தின் மூலமாக நமக்குக் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்பது..
ஆண்டவன் கட்டளை.
http://youtu.be/3lIpebdRTw0
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-30
-------------------------------
என்னை அழ வைத்த கவிதைகள் ஏராளமாயிருக்கின்றன.
என் கவிதை, நண்பரொருவரை அழ வைத்தது.. எனக்கே வியப்பு.
என் தந்தை மறைந்து ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
அவரைக் குறித்த என் நினைவுகளோடு நீண்ட அந்தக் கவிதையை இப்படி முடித்திருந்தேன்...
"ஜென்மமெனும் பாத்திரத்தில்
ஒரு பிச்சையாய் விழுந்தது
உன் மரணத்தின் கௌரவமாயிருக்கலாம்.
ஆனாலும்..
அப்பா..!
இன்று... இப்போது
நீ
ஒரு விதவையின்
புருஷன்தானே..?"
-கவிதை எழுதிய காகிதத்தை அந்த நண்பரிடம் வாசிக்கக் கொடுத்த போது, உள்ளூர எனக்கு "திக் திக்".
காரணம்... அந்த நண்பர் நல்ல கவிஞர். மிகச் சிறந்த இலக்கியவாதி. தேர்ந்த விமர்சகர். என்னத்தையோ எழுதி அவரிடம் பாராட்டெல்லாம் வாங்கவே முடியாது.
நீண்ட நேரமாக கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் படித்துக் கொண்டிருந்தவரை குனிந்து உற்றுப் பார்த்தேன். அதிர்ந்தேன். அவர் அழுது
கொண்டிருந்தார்.
அழுது முடித்து ஆசுவாசப்பட்ட பிறகு அவரே அழுகைக்குக் காரணம் சொன்னார்.
"உங்கள் கவிதையின் ஏக்கத்தில், கோபத்தில் இருக்கிற நிஜம்தான் என்னை அழ வைத்தது."
நிஜமான கலைவடிவங்களுக்கு கிடைக்கிற மரியாதை அலாதியானது.
நிஜத்தைப் பாடல் வடிவமாக்கிக் கொண்ட இந்த
"முத்துக்களோ கண்கள்" அதற்கு ஒரு உதாரணம்.
******
"டிங்.. டிங் டிங்..டிங்
டிங்.. டிங் டிங்..டிங்"
- ஒரு சின்ன எதிரொலியோடு இனிமையாய் வந்து விழும் துவக்க இசையே, காதலில் வீழ்ந்த ஒரு ஆடவனின் கனவுத் துவக்கம் என்று நிச்சயப்படுத்த மெல்லிசை மாமன்னரால் முடிகிறது.
இரவில் இந்தப் பாடலோடு தூங்கினால், காலைப் பொழுதும் இந்தப் பாடலுடனேயே விடிகிறது.
*******
கனவு காணும் நாயகன், ஏழை. சாதாரணனுக்கும் கீழான சாதாரணன். வாழ்க்கை, வறுமைக் கரங்கள் கொண்டு அவனது உடைகளைக் கிழித்தாலும், அவனது உடைக் கிழிசல்களுக்கூடாக அவனது நம்பிக்கை சிரித்தது.
அவன் நல்லவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன். கனவில் வரும் நாயகி இவனுக்கு மாலை சூட்டுகிறாள். அவள் தோளில் கிடக்கும் மாலையை அவளேதான் சூடிக் கொண்டிருக்கிறாள்.
நாயகன் கண்ணியமானவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன்.
******
சர்க்கரை டப்பா காலியாய்ச் சிரிக்க, கசப்புக் காப்பி குடித்து முடிக்கும் தருவாயில், தம்ளர்
விளிம்பில் ஒட்டிக் கிடந்த ஒரு சீனித் துணுக்கு நாக்கில் பட்டு கொடுக்கிற இனிப்பாய்..
நாயகனின் நீளமான கசப்பு வாழ்க்கைக்கூடே இந்தக் கனவுக் காதல்... கொஞ்சமாய்த்
தித்திப்பு.
******
வியர்வை மினுக்கும், யதார்த்த வாழ்வின் அடையாளங்களாய் நமக்குப் புலப்படும் இந்த இருவரின் ஒப்பனையற்ற முகங்கள்... வழமையான தமிழ் சினிமா கனவுப் பாடல்களை
விட்டு வெகுதூரம் தள்ளி நின்ற
அறுபதுகளின் ஆச்சரியம்.
******
ஒரு நல்ல நடிப்புக்கலைஞனின்
கலையொழுக்கத்திற்கு எல்லையோ, முடிவோ இல்லை என்பதற்கு இந்தப் பாடலில் ஒரு உதாரணம் வைக்கிறார்... நடிகர் திலகம்.
பாடலின் துவக்கத்தில் ஒரு முறை மல்லாந்து படுத்துக் கொண்டு, புன்னகை அரசியின்
பக்கம் முகம் திருப்பி "முத்துக்களோ கண்கள்" என்று பாடுகிறார்.
படுத்துக் கொண்டு பாடும் போதும் அத்தனை தத்ரூபமான வாயசைப்பு.
******
பாடல் முழுதும் நடிகர் திலகம் காட்டுகிற உற்சாக முகபாவங்கள், இதழ் விட்டு நீங்காத அற்புதப் புன்னகை...
எல்லாமே, நம்மையும் ஒரு காதல் உலகம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்பவை.
******
புன்னகை அரசியை முன் நிறுத்தி, இழுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு இறுக்கிக்
கொள்கிற நடிகர் திலகத்தின் நடிப்பு வெளிப்பாட்டில், வாராது வந்த மாமணியான தன் காதலை நழுவ விடப் பிரியமில்லாத ஒரு எளியவன் நமக்குக் காட்சிப்படுகிறான்.
******
கனவுக் காதலியின் தாவணி உருவிய வெற்றி மதர்ப்புடன் கூடிய நடிகர் திலகத்தின் புன்னகைக்கும், ஒரு தேர்ந்த மீனவனின் லாவகத்துடன் தாவணியை வலை போல் வீசுகையில் அவர் புரியும் ஆனந்தப் புன்னகைக்கும்..
குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள்.
******
பாடலின் நடுவே, தன் நெஞ்சோடு கவிழும் புன்னகை அரசியின் பூவிருக்கும் கூந்தலில் அழுந்த ஒரு முத்தம் தருகிறார்... நடிகர் திலகம்.
அந்த கூந்தல் பூ வாடியிருக்கலாம்.
ஆனால்... அந்த வாசனை முத்தம் மணத்திருக்கும்...
இந்தப் பாடல் போலப் பல நூற்றாண்டுகளுக்கு.
https://youtu.be/ED0bwUuSQMg
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு- 31
------------------------------
ஆணுக்கு பெண் மீதான மோகமும், பெண்ணுக்கு ஆண் மீதான அளவு கடந்த காதலும்..
கிட்டத்தட்ட விஷம் போலத்தான்.
அப்படியே உறைந்து போக வைக்கிற விஷம்.
தன்னைத் தவிர அத்தனையும் மறக்கடிக்கிற விஷம்.
ஆபத்து, அபாயங்களை எல்லாம் அலட்சியம் செய்யும் இரண்டு அன்புள்ளங்களுக்குள் ஒரு பாம்புக் கொத்தலுக்குப் பிறகானது போல் "சுர்" என்று ஏறுகிற விஷம்.
கொல்லாமல் கொல்லுகிற விஷம்.
அதனால்தானோ என்னவோ விஷத்தோடு தொடர்புடைய பாம்போடு தொடர்புடைய ஒரு
இசையின் சாயலோடு இந்தக் காதல் பாடல் துவங்குகிறது.
*******
"இதை ஆனந்தன் கடைல குடுத்துடு. இந்தா.. இதை ஜாஹிர் உசேன் கடைல குடுத்துடு. பாக்கியில்லே.. முழுசாக் குடுத்தாச்சுன்னு அப்பா சொல்லச் சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துடு."- என்னுடைய சின்ன வயசில் வந்த சில முதல் தேதிகளில் பணத்தைக் கட்டுக் கட்டாய்ப் பிரித்து, ரப்பர் பேன்ட் போட்டு அப்பா என்னிடம் கொடுத்து விட்டதுண்டு.
சின்னதான சட்டை பணக்கற்றைகளால் நிரம்பி வழிய, கடைகளை நோக்கி தார்ச்சாலையில் நடந்து போக.. அத்தனை பெருமை..அந்த வயசில்.
பிறகு, வருஷங்கள் உருண்டோடி, நானும் வேலைக்குப் போய், முதல் சம்பளம் வாங்கின சாயங்காலம் வீடு திரும்பும் போது மனசில் வந்த கர்வமிகு சந்தோஷம்,சின்ன வயசுச் சந்தோஷத்தை சின்னதாக்கி விட்டது.
ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒரு ஆண், அழகான பெண்ணொருத்தியுடன் அறிமுகமான கையோடு அன்பு கொண்டு காதலாவது... அப்பன் காசோடு ஆனந்தமாய் நடப்பதைப் போல.
ஆசையாய் நேசித்தவள் தனக்கே தனக்கென்று வந்து விட்ட பொழுதில், மகிழ்வான மகிழ்வாய் காதலாகிக் கசிந்துருகும் சந்தோஷம்... சுயமாய் உழைத்துச் சம்பாதித்த காசோடு கர்வமாய் நடப்பதைப் போல.
இந்தப் பாடலில், சுய சம்பாத்தியத்தோடு நடந்து
போகிற சந்தோஷத்தைப் பார்க்கலாம்... நடிகர் திலகத்தின் முகத்தில்.
******
பிரமிப்பாகத்தான் இருக்கிறது...
சோகப் பாடல்களென்றால், இரும்பாய்,பாறையாய் இறுகிப் போகிற அதே முகத்தில், இந்த மாதிரி காதல் பாடல்களுக்கு நந்தவனத்தையே உருவாக்குகிற நடிகர் திலகத்தை.. நினைக்க, நினைக்க.
அய்யா நடிகர் திலகத்தின் புன்னகை ஒரு புது மொழி.
மரபுக் கவிதை போல் இலக்கணமாகவும், புதுக்கவிதையாய் கட்டுடைத்த வடிவமாகவும் அந்த மொழி நம்மை இனிதே சேர்கிறது.
"பெண்ணே... நீ தலை முதல் கால் வரை பரவ விட்ட அழகை, நான் உதட்டின் மேலேயே உட்கார வைத்து விட்டேன்..பார்த்தாயா?" - என்று அந்தப் புன்னகை மொழி, நாட்டியப் பேரொளியிடம் கேலி பேசுகிறது.
அந்த மொழி மௌனப்படும் வேளையிலும் ஆயிரம் அற்புதங்களைப் பேசுகிறது.
******
நடிகர் திலகத்திற்காகப் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவற்றை தெய்வீகப் பாடகர் அமரர் அய்யா டி .எம் .எஸ். அவர்களே பாடி விட்டதால், வேறு குரலை அய்யனுக்குப் பொருத்திப் பார்க்க மறுப்போர் உண்டு.
அது,நியாயம்.
வேறு எந்தப் பாடகர் நடிகர் திலகத்துக்குப் பாடினாலும், அநியாயத்துக்கு மறுப்போர்
கூட்டமும் உண்டு.
அப்படிப்பட்டோரின் வாயடைத்த அற்புதப் பாடல்களின் பட்டியலில் ஆரம்பத்திலேயே வருகிற பாடலிது.
பாடல் வரிகளுக்கு மிகச் சரியான உதட்டசைவு மட்டுமே நடிப்புப் புலமையாகாது என்பதை நடிகர் திலகம் கற்றுக்கொடுக்கிறார்..இந்தப் பாடலில்.
"பொன்னே சொல்..ஏன் த்யானம்?" என்று பாடினால் வாயசைப்பில் ஒரு கேள்வி வந்து நிற்கிறதே... அது புலமை.
நிலவடிக்கும் மொட்டை மாடியில் தன்னை விட்டு நழுவி ஓடும் மனைவியிடம், "வெட்கம் ஏனோ.. வா என் பக்கம்."-எனப் பாடுகையில் ஒரு ஏக்கம் த்வனிக்கிறதே... அது புலமை.
தென்னங்கீற்றுகளை வகுந்து கொண்டு, அந்த மொட்டை மாடியின் இன்னொரு நிலவு போல புன்னகை முகம் நீட்டி, "போனால் வராது... இது போலே காலமினி" என்று பாட..
'உண்மைதான். உங்கள் காலம் இனி வேறு யாராலும் வராது' என்று எங்களை அந்த "தெய்வப் பிறவி" எதிர்ப் பாட்டு பாட வைத்தாரே... அது புலமை.
https://youtu.be/shPRgjoiJhw
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-32
-------------------------------
கண்ணம்மாள் என்று பெயர் என் பாட்டிக்கு. என் அம்மாவின் அம்மா. கண்ணுப் பாட்டி என்போம் நாங்கள். பாசக்காரி.
பள்ளி விடுமுறையில் அவளிருந்த கிராமத்துக்குப் போனால் சற்றே பருமனாக்காமல் ஊர் திருப்ப
மாட்டாள். வயிற்றுக்கோ, பிற மனிதர்களுக்கோ வஞ்சகம் நினைக்காத நல்ல மனசுக்காரி.
காது சுத்தமாகக் கேட்காது. வாய்ப் பேச்சும் வராது.
மிகச் சிரமப்பட்டுப் பேசினாலும் வார்த்தைகள் சரியாக வந்து விழாது.
ரொம்பவும் கஷ்டப்பட்டவள். அவள் கணவர், என் தாத்தா.. எங்கள் காலத்தில் என்னவோ கண்ணுப் பாட்டியை சீரும், சிறப்புமாய் வைத்துக் காப்பாற்றினார்தான். ஆனால், என் அம்மா,சித்தி, மாமாக்கள்எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்,சொல்லாமல், கொள்ளாமல் சில
வருடங்கள் தன் பிழைப்பைப் பார்த்துக் கொள்ள
ஒடி விட்டாராம். அந்தக் காலகட்டத்தில் அவள் பட்ட வேதனையும், அவமானங்களும் தந்த நெருப்பு
கடைசி வரை அவளிடமிருந்தது.
அந்த நெருப்பில், தன்னிடம் எந்தக் குறைபாடுமில்லாமல், கணவன் என்ன தவறிழைத்தாலும் பொறுத்துப் போகும் சராசரிப் பெண்களுக்கான சூடு இருக்கும்.
மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளோடு அவள் வாழ்க்கையை ஜெயித்த
கதையை, அவளது தத்துப் பித்துப் பேச்சிலேயே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
"ச", "ர".. இப்படி என்ன எழுத்தானாலும் அவள் உச்சரிப்பில் "க" என்றே ஒலிக்கும்.
நான் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. " நான் இப்பகொஞ்ச நாளாத்தான் கவிதைல்லாம் எழுதுறேன்.ஆனா..நான் பொறந்ததுல இருந்தே என்னை "கவி"ன்னு சொல்றது (ரவி -கவி) கண்ணுப்பாட்டிதான்".
அம்மா கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
******
ஒரு அலுவலகத்தில், ஒரு விண்ணப்பம் எழுத வேண்டிய சூழலில் ஒரு வெள்ளைக் காகிதம் தேவையாயிருந்தது.
அருகிலிருந்த மேஜைக்குப் பின்னே இருந்தவரிடம் கேட்டேன். இரண்டு காகிதங்கள் இணைந்த ஷீட் ஆகக் கொடுத்தார்.
"ஒரு பேப்பர் போதும் சார்" என்றவுடன் அவர் சிரித்த போதுதான் கவனித்தேன்... அவரது இடது தோளுக்குக் கீழ் கையே இல்லை என்பதை. ஒரு
கையே இல்லாதவர் காகிதத்தை எப்படி ஒற்றையாகக் கிழிப்பார்?
கேள்வியோடு நான் தவித்தேன். அவர் ஷீட்டை எடுத்து மேஜை மீது வைத்து, வலது கை விரல்களால் அதன் மடிப்பில் கூராக நீவிய பின், வெள்ளை ஷீட்டை விரித்து, கூராக நீவியதின் முனையில் லேசாக கிழித்து விட்டுக் கொண்ட பின், இரண்டு விரல்களால் காகிதத்தை அழுத்தி நகர்த்திக் கொண்டே வந்தார்... தையல் இயந்திரத்தில் ஒரு துணி நகர்வதைப் போல.
மிகச் சில நொடிகள்...
அவர் என்னிடம் தந்த ஒற்றை வெள்ளைத்தாளில் கிழிக்கப்பட்ட ஓரம் எது என தேடுகிற மாதிரி அந்தக் காகிதக் கிழிப்பில் ஒரு இயந்திர நேர்த்தி.
இரண்டு கைகள் கொண்ட நாமெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாய் காகிதம் கிழித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் கோணலாய்க் கிழிகிறது.
இவரால் எப்படி முடிகிறது என்கிற என் அன்றைய ஆச்சரிய விழி விரிப்பு இன்னமும் நீடிக்கிறது.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
******
கன்னையனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சிவகங்கையில் அமுதா என்றொரு திரையரங்கம் இருந்தது. மனித வாழ்க்கையை, அதன் இன்ப, துன்பங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல எல்லோரையும் பார்த்துக் கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் படங்களையும் அந்த திரையரங்கம் காட்டியது.
அந்த வரிசையில் அது "பாகப்பிரிவினை"யைக் காட்டிய போதுதான் கன்னையன் என் கண்களின் வழியாக மனசுக்குள் வந்தான்.
நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனிடமிருந்து வெளிப்பட்டு, தனது தனித்தன்மையை இழந்து விடாமல் ரங்கனாய், ராமனாய் நம் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்பவர்களில் இதோ.. இந்த
கன்னையனும் ஒருவன்.
திறமையாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், காலத்தை மீறி ஏதோ நம் நெருக்கமான சொந்தக்காரன் போல் வாழ்நாள் முழுதும் நம்முடன் வரும் அதிசயம், நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்வது.
கன்னையன் தன் ஊனத்தை நினைத்து வெகுவாக வருந்துகிற போதும், சூடான பானம் தரப்பட்ட ஒற்றைக் கையின் சூடு தாங்காமல் தவிக்கிற போதும், அவனுடைய வேகத்திற்கு அவனது ஊனமே தடை போட்டாலும், அதையெல்லாம் தாண்டி அவனது நம்பிக்கை அவனை வேகமாக செலுத்துவதும், "நம்பிக்கையோடு இருங்கள். ஜெயிக்கலாம்" என்று கன்னையன் உணர்த்துவதும் அந்தச் சின்ன வயதிலிருந்தே எனக்கு புரிதலானது. பிடித்தமானது.
திருவிழா என்று ஆட்டமும்,பாட்டமுமாய் ஊர் ரெண்டுபட, இயலாமையை முன்னிறுத்தி
வீட்டோடு முடங்கி விடாது,மடங்கிப் போன இடது கையும், இயங்காமல் விறைத்துப் போன
இடது காலும் ஒரு புது வித நடனம் உண்டு பண்ண, தானும் களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்தக் களத்தையும் தனதாக்கிக் கொள்கிற என் கன்னையனை மிகவும் பிடிக்கும்.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
http://youtu.be/0zGNRIswveM
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு- 33
--------------------------------
கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை நமக்குப் பிடிப்பதில்லை.
******
அருகிலிருந்த மாணவன் செய்த குறும்பைக் கண்டித்த என்னை, நான் தவறு செய்து விட்டதாகக் கருதி, இரண்டு காதுகளையும்
பிடித்து தன் தலைக்கு மேலே தூக்கிய என் இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மேல் இன்று வரை கோபமிருக்கிறது எனக்கு.
அவர் உயரத்தில் தூக்கிய போது நான் கீழே உணர்ந்த அவமானப் பள்ளம், மிக ஆழமானது. அந்த அவமானத்தில் உந்தப்பட்ட என் கண்ணீர், வருஷங்கள் தாண்டி நீளமானது.
கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை நமக்குப் பிடிப்பதில்லை.
******
ஆனால்...
திரைப்படம் என்கிற பெயரில் ஒரு மகாகலைஞனின் மாசற்ற திறமைகளை நமக்கு முன் திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது...
அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப் பார்த்த போது...
"அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள் திண்மையாய் இறுகிக் கிடந்த அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது.
ஒற்றை ஆள் ஒரு முறை அழ வைத்தாலே ஜென்மத்துக்கும் பிடிக்காமல் போகுமே.. முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல.. இருவரல்ல..ஆறு பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள்.
ஆனால்... அத்தனை பேரையும் பிடிக்கிறது.
'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய் ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி அழ வைக்கிறார். பிடிக்கிறது.
பாடலில் காட்டப்படும் விரிந்து பரந்த அந்த ஆலயத்தில் ஒரு அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
"பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த "வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று
உச்சஸ்தாயியில் உயர்த்தும் குரலில் அமரர் சீர்காழியார் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
இப்படி ஒரு உணர்ச்சிமயமான உருக்கும் பாடலை, கற்பனை செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ .சி . திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அம்மா வேஷமே போடுவதால் "பண்டரிபாய்" இல்லை, " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக் கண்டித்திருக்கிறேன். சொல்லத் தெரியாத பிள்ளைப் பாசத்தை,நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது.
ஊமையில்லை.. ஆனால் பேச, பாட வார்த்தையில்லை. ஒரு இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே
தன்னிலிருந்து வெளிக்காட்டும் திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன்.
தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே பெற்ற தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று காட்டுகிறார். பிடிக்கிறது.
அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அய்யன் தன் முகத்தை ஒரு பாத்திரம் போலாக்கி, அன்பை யாசித்து அழ வைக்கிறார். பிடிக்கிறது.
வரிசையில் கடைசியில் நின்று கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித்
தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக அழகை மனசுள் சேகரிக்கிற பாச யதார்த்தத்தில் அய்யா அழ வைக்கிறார். பிடிக்கிறது.
http://youtu.be/5Gflh-H2Mzc
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு -34
----------------------------------
"வெள்ளிக் கிண்ணந்தான்" -
இவர்கள், பாடிக் காதலிக்கிறார்கள்.
நாம், பாடுபவர்களைக் காதலிக்கிறோம்.
பாடலைக் காதலிக்கிறோம்.
*****
நாயகரின் கம்பீர வீற்றிருப்பை ஒரு நாற்காலி
ஏந்தியிருக்கிறது.
கால் மேல் கால் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் கலை நாயகர், காதல் நாயகியின்
வரவு கண்டு மலர்ந்து, மெல்லக் கால்கள் பிரித்து,
லாவகமாய் நாற்காலியின் கைப்பிடியில் கையூன்றி எழுவதாய் பாடலின் துவக்கத்திலே
ஒரு பாவனை.
அதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது..
அய்யன் தன்னை விலகி எழுந்து போனதும் அந்த
நாற்காலி இவ்வாறு புலம்பியிருக்குமோ?
"தெரியாத்தனமாக நான் சிக்கி விட்டால், ஆண்டாண்டு காலங்களாய் என் மீது ஏறிக் கொண்டு, நான் அழுக்காகி, தேய்ந்து, உடைந்து போகிற வரைக்கும் என்னை விடாதவர்கள் எண்ணற்றோர். அவர்களுக்கெல்லாம் என் மீது
இருந்த பற்று, அவர்கள் மீது எனக்குக் கொஞ்சமும் கிடையாது. நான் விரும்பும் தலைவா..
எனக்குப் பெருமையான உன் சில நிமிட அமர்வு
காலகாலத்திற்கும் எனக்குக் கிடைத்து விடலாகாதா?"
*****
நல்லவர்களிடம் ஆசை இருக்கும். பேராசை இருக்காது. "எனக்கு.. எனக்கு" என்கிற அலையல்
இருக்காது.
தனக்குத் தேவையானது தவிர்த்து வேறெதையும்
விரும்பாத நல்ல காதலனாய் இதில் வரும் நடிகர்
திலகத்திடம் இவற்றை உணரலாம்.
வெள்ளிக் கிண்ணங்களில் பால் நிரப்பிக் கொண்டு காதல் மனைவி சிரித்து வருகிறாள்..
முதலிரவு அறைக்குள். அவன் முன் அவள் நீட்டிய
வெள்ளித் தம்ளர் பாலை அவன் ஏறெடுத்தும்
பார்க்கவில்லை. தனக்கு எதையோ தந்தாளே..
அதை வாங்கி ஓரமாய் வைத்தோமே.. அது என்ன?
..ம்ஹூம்.. அந்த மாதிரிக் கேள்விகளை அவன்
சிந்தனையில் சேர்க்கவில்லை.
அவனுக்குத் தேவையில்லை பால் என்கிற திரவம்.
அவன் விரும்புவது திரவம் சுமந்து வரும் அழகான
உருவம்.
*****
முகத்தில் செயற்கையாக ஒப்பனை போலில்லாமல், கண், மூக்கு, உதடு போன்று
ஒரு அவயமாகவே புன்னகையைப் பொருத்துவது
நடிகர் திலகத்தாலேயே ஆகும். இந்தப் பாடலிலும்
ஆக்கியிருக்கிறார்.
*****
கட்டில் உண்டு். கட்டிப் பிடித்தல் உண்டு. கன்ன
முத்தம் உண்டு். மறந்தும் காமமாகி விடாத மகத்தான வியப்பு மட்டுமே அத்தனையிலும் உண்டு.
*****
நீர் நிலைக்கு மேலே ஒரு பாலம். பாலத்தின் மீது
காதலர் இருவர். அவர்களும் உருவாக்குகிறார்கள்
ஒரு நேசப் பாலம். அதில் காதல் நடக்கிறது.
*****
அவசியத்திற்கென்று வந்ததும் அழகாகிறது அய்யனிடம். குளிருக்கென்று அணியும் ஸ்வெட்டர்
நம் கண்களுக்குக் கொண்டு வருகிறது குளிர்ச்சி.
*****
கைகளைக் கத்தி போல் நீட்டிக் கொண்டு ஒரு
ஒயிலான முன் பின் நகர்தலோடும், மெலிதாய்ச் சுழன்று தோள் குலுக்கலோடும் ஆடும் பாடலின் இடையிசைக்கான நடனம், காதல் பாடல்களுக்கு
இப்படித்தான், இவ்வளவுதான் ஆட வேண்டும்
என்பதான அறிவுறுத்தல்.
*****
பாத்திரம் நிறைய பாயசம் இருந்தால்தான் தம்ளர்களில் நிரப்பி அடுத்தவர்களுக்குத் தர முடியும். ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவனாலேயே
பணம் கேட்டவனுக்கு ஐநூறாவது தர முடியும்.
சொல்வதற்கு இன்பமான விஷயங்கள் ஏராளமாக
வைத்திருப்பவனாலேயே "இன்னும் சொல்லவோ"
என்று ஆனந்திக்க முடியும். "இன்னும் சொல்லவோ" என்று அய்யா பாடும் போது முக
நிறைவைக் கவனியுங்கள்.. புரியும்.. நிறைய வைத்திருப்பவனின் நிறைவு.
*****
"காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?"
ஒரே வரி.
தன்னுடையவள் காலத்தை நிறுத்திப் பார்க்கிற மாயக்காரி என்பதைச் சொல்ல வருகிற ஒரு பெருமித பாவனை.
காலத்தையே நில்லென்று சொல்லி விட்டவள்
தன்னுடையவள் என்று கண்களால் காட்டுகிற
கர்வ பாவனை.
ஒரே வரி். இரண்டு பாவனை.
உயரக் கை தூக்கிக் குவித்து வணங்குகிறேன்..
என் உள்ளக் கோயில் வாழ்கின்ற தேவனை.
http://youtu.be/4J52KO9Is7o
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு - 35
---------------------------------
வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
செய்யப்படுகிறதாமே?
அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
பஞ்சம்?
*****
மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
கிடைக்க மாட்டாள்.
நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,
நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
அரசி,
பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,
அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
கலைச் செல்வி,
வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
வாணிஸ்ரீ...
சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.
நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
*****
" ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.
எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.
வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.
ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.
அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.
தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.
"ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
*****
அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
பாடலுக்காகத்தான்.
நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
ஜெயித்து விட்டது.
"கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?
"கவனிக்க ஆளில்லையோ"...
கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.
சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.
கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
திரை இசைத் திலகம்.
நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.
"உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
உனக்குள் ஆயிரம் கீதங்களே..
இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"
- அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.
"நான் யார் உன்னை மீட்ட?
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
ஏனோ துடிக்கின்றேன்..
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"
- சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
பரிதாபம்.
"சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."
- ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
நிற்கிற பெருமை.
*****
சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
போதை.
*****
சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..
வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
நிற்கும் அழகை விடுங்கள்..
"இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
விடுங்கள்..
"ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
கொண்டாட..!?
http://youtu.be/hx8VqmStqaE
-
சிவாஜி பாட்டு -36
--------------------------------
ரசிக்கத்தக்க நல்ல பாடல்கள், அழகான குழந்தைகளைப் போல.
எந்தக் குழந்தையும் "என்னைக் கொஞ்சு" என்று
விளம்பரப் பலகை வைத்துக் கொண்டு கெஞ்சுவதில்லை.
கொஞ்சத் தூண்டும் அதன் அழகே, 'வேறு வழியில்லை.. கொஞ்சியே ஆக வேண்டும்' என்கிற அந்த அழகின் கர்வமிகு நிலைப்பே நாம்
கொஞ்சுவதற்கான அழைப்பாகிறது.
இந்தப் பாடலும் ஓர் அழகான குழந்தை. நம் நினைவு வாசல்களில் ஆர்ப்பரித்து விளையாடும்
குழந்தை. குறும்பு மாறாத, துள்ளலும், வேகமும் மிகுந்த குழந்தை.
"கொஞ்சாமல் போய் விடு.. பார்ப்போம்" என்று
செல்லமாய் மிரட்டும் குழந்தை.
*****
"தன் நிழலையும்
தள்ளாட வைக்கிறான்...
குடிகாரன்"
- முன்பு நானெழுதிய கவிதை.
பெரிசாய் தாடி வளர்த்துக் கொண்டு, எந்நேரமும்
சோகித்துக் கொண்டு, எதையோ பறிகொடுத்தாற்
போல் எப்போதும் விட்டம் வெறித்துக் கொண்டு
இருப்பதற்காகத்தான் குடிக்கிறார்கள் என்று நான்
நினைத்திருந்தது இந்தப் பாடல் பார்த்து மாறியது.
உறவென்று யாருமற்ற வேதனையை, நல்லதெது,
கெட்டதெது என்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல்
வளர்ந்த கொடுமையை, மதுப் புட்டி, லாரி, இரவு
ராணிக்காக தியாகித்த இரவுகள் என்று தன்னைச்
சுற்றி ஒரே மாதிரியாகச் சுழலும் உலகத்தினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதற்காக இனிமையாகத் தன்னை தண்டித்துக் கொள்ளவும் கூட குடிப்பார்கள் என்பது
இந்தப் படம் பார்த்து புரிந்தது.
*****
"ஒரு இளைஞன் குடித்திருக்கிறான். அத்துடன்
விடாமல் விலைமாது வீட்டுக்குப் போகிறான் .. ஆட்டம் போடுகிறான்" என்றொரு பாட்டுச் சூழலை
ஒரு இயக்குநர் சொல்லி, பெண்கள் மிகுதியாகப்
பார்க்கும் தன் படத்தில் அதை இடம் பெறச் செய்ய
ஒத்துக் கொண்டு, கொஞ்சமும் விரசமின்றி அதை
வெற்றியாக்கிச் சாதிக்க நடிகர் திலகமன்றி யார்
இங்கே?
*****
இசைக்கேற்றாற் போல் ஆடுவதும், பாடல் வரிகளுக்குச் சரியாக வாயசைப்பதும் மட்டுமே
போதும் என்று நாயகன் இருந்திருந்தால் இந்தப் பாடல் ஜெயித்திருக்காது.
அந்த அழகியோடு அங்கே பாடி, ஆடுவது சும்மா
ஒரு பொம்மையல்ல. உணர்வுகள் மிகுந்த ஒரு
உயிர்ப்பான மனிதன். தன்னுடைய வாழ்வின்
வெம்மைக்காக கவலை கொண்டு சோர்ந்து
போகாத, தன்னை நோக்கி வரும் இன்ப நிமிஷங்களை வீணாக்கப் பிரியமில்லாத புத்திசாலி. வாழ்வின் கோர முகங்களையும் சந்தித்து வந்த அனுபவசாலி. இரவில் விழித்து
ஆர்ப்பரிக்கும் ஒரு வீட்டுக்குள்ளிருந்து இந்த
அவல உலகை விமர்சிக்கும் தைரியசாலி.
சும்மா ஆடுகிற, பாடுகிற கதாநாயகன் இங்கே
தேவைப்படமாட்டான்.
அந்தப் பாடலில் நடிக்க ஒரு வேகம் வேண்டும்.
வாழ்க்கை மீதும், சக மனிதர்கள் மீதும் பெரிய
மரியாதை ஏதும் வைத்திராத ஒரு அலட்சியம்
அந்த முகத்தில் தெரிய வேண்டும்.
குடியும், காமமும் அப்படியொன்றும் தப்பில்லை
என்று சொல்ல வருகிற துணிச்சலைக் காட்ட வேண்டும்.
தனக்குப் பழக்கமான அவலமான வாழ்வை கிண்டலாகவும், கர்வமாகவும் ஆராயும் திறமை
காட்ட வேண்டும்.
ஒரு தேர்ந்த கஜல் பாடகனின் கையசைப்பு பாவனைகள்..
வாழ்வின் மீது எவ்வித மரியாதையும் இல்லாததை
உணர்த்தும் அந்தக் கர்வக் கண்கள்...
தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து கவலைப்படாததைக் காட்டும் அந்த முகத்தின்
அலட்சியங்கள்...
துள்ளலான அந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தின் முழுமைத்
தன்மை ...
இவற்றை வைத்துக் கொண்டு நம்மை இந்தப்
பாடல் வழி வசீகரிக்க ஒரே ஒரு நடிகர் திலகம்
இருக்கிறாரே..?
அந்த நாயகனின் ரசிகரென்கிற பெருமை நம் ஆயுசுக்கும் வேண்டும்.
http://youtu.be/tmnhS1KSK9k