Originally Posted by saradhaa_sn
முதலில் பானுமதியையும், சௌகார்ஜானகியையும் போட்டியிலிருந்து கழட்டி விடுங்கள். அவங்க நடிகர்திலகத்துக்கு மட்டுமல்ல, யாருக்குமே பெர்ஃபெக்ட் மேட்ச் ஆக மாட்டாங்க. தனி ஆவர்த்தனம் செய்யக்கூடியவங்க. (இருகோடுகளில் கூட கலெக்டர் ஜானகியை விட, குடும்பப்பெண் ஜெயந்தியே ஜெமினிக்கு பாந்தமாக பொருந்தினார்).
அடுத்து ஒரே பட (சிவந்த மண்) ஜோடியான காஞனா லிஸ்ட்டில் இருக்கிறார், ஆனால் ஐந்து பட ஜோடியான (பொன்னூஞ்சல், மனிதனும் தெய்வமாகலாம், கௌரவம், என்னைப்போல ஒருவன், ராஜபார்ட் ரங்கதுரை) உஷாநந்தினியை லிஸ்டில் காணோம். (இருந்தாலும் யாரும் ஓட் போட மாட்டார்கள் என்பது வேறு விஷயம்).
நல்லவேளை சாவித்திரியை லிஸ்ட்டில் காணோம். அவரை மக்கள் சிவாஜியின் ஜோடியாக எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை. தங்கை (பாசமலர்), அண்ணி (படித்தால் மட்டும் போதுமா), நண்பனின் மனைவி (கர்ணன்) என்றுதான் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஜோடியாக நடித்த படங்களான எல்லாம் உனக்காக, இரத்தத்திலகம், பிராப்தம் போன்றவை மக்களால் புறக்கணிக்கப்பட்டன (நவராத்திரி விதிவிலக்கு)
சரோஜாதேவியுடன் நடித்த பாகப்பிரிவினை, ஆலயமணி, பாலும் பழமும், இருவர் உள்ளம், புதிய பறவை போன்றவை அபார வெற்றியடைந்த போதிலும், இவருக்கு 'எம்.ஜி.ஆரின் சிறந்த ஜோடி' என்ற முத்திரை உண்டு.
ஜெயலலிதா: எங்கஊர் ராஜா, கலாட்டா கல்யாணம், தெய்வமகன், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, ராஜா, பட்டிக்காடா பட்டணமா என்று ஏராளமான படங்களில் நடித்திருந்தபோதிலும், இவருக்கும் "எம்.ஜி.ஆரின் ஜோடி" என்ற அழுத்தமான முத்திரை விழுந்துவிட்டது. (1968-ல் எம்.ஜி.ஆர் நடித்த எட்டு படங்கள் (!) வெளிவந்தன. (ரகசிய போலீஸ் 115, தேர்த்திருவிழா, காதல் வாகனம், குடியிருந்த கோயில், புதிய பூமி, கண்ணன் என் காதலன், கனவன், ஒளிவிளக்கு. இந்த எட்டு படங்களிலும் ஜெயலலிதாவே ஜோடியாக நடித்திருந்தார். எப்படி அலுக்காமல் மக்கள் பார்த்தார்களோ).
கே.ஆர்.விஜயா நிறைய படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் மட்டுமே பொருந்தினார் என்பது உண்மை (உதாரணம்: தங்கப்பதக்கம்). மற்றபடி ஊட்டிவரை உறவு போன்ற படங்களில் கூட அப்படி ஒன்றும் கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை.
இவர்களைத் தவிர்த்துப்பார்த்தால் ஓட்டுச்சீட்டில் மிச்சமிருப்பவர்கள் பத்மினி, தேவிகா, வாணி (கொஞ்சம் விட்டால் வாணிக்காக ஷக்திபிரபா வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பார் போல தெரிகிறது)
இவர்களில் தேவிகாவும், வாணியும் 'ஒன்டே மேட்ச்' ஆடியவர்கள் (அதாவது தொடர்ச்சியாக), ஆனால் பத்மினி டெஸ்ட் மேட்ஸ் ஆடினார் (இரண்டு இன்னிங்ஸ்). முதல் இன்னிங்ஸில் உத்தமபுத்திரன், தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, புனர்ஜென்மம் படங்களில் சோபித்த அளவுக்கு இரண்டாவதில் (தி, மோகனாம்பாள் மற்றும் வியட்நாம் வீடு தவிர) சோபிக்கவில்லை. இருதுருவம், விளையாட்டுப்பிள்ளை எல்லாம் பத்தோடு பதினொன்றாக வந்து போயின.
ஆக, இப்போது மல்லுக்கு நிற்பவர்கள் தேவிகாவும் வாணியும்தான்.
நிறைய பேர் ஓட்டளித்து விட்டார்கள். ஆனாலும் இதுவரை ஓட்டளிக்காதவரக்ளுக்காக இருவரின் பட்டியல் (நடிகர்திலகத்தின் ஜோடியாக மட்டும்)
தேவிகா:
பாவமன்னிப்பு, பலே பாண்டியா, முரடன் முத்து, அன்னை இல்லம், கர்ணன், ஆண்டவன் கட்டளை, நீலவானம், சாந்தி, (பிற்காலத்தில்) சத்யம்.
வாணி:
நிறைகுடம், உயர்ந்த மனிதன், வசந்தமாளிகை, சிவகாமியின் செல்வன், ரோஜாவின் ராஜா, வாணி ராணி, இளைய தலைமுறை, புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம்.
அதெல்லாம் சரி, என்னுடைய ஓட்டு யாருக்கு என்கிறீர்களா?. 'சிவாஜிக்கு ஜோடியே வேண்டாம்' என்ற ஒரு ஆப்ஷன் இருந்தால் அதுக்குத்தான் போட்டிருப்பேன்.
ஏன்னா, அவருடைய ரேஞ்சே தனிங்க.