Quote:
கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.
சரி! கதைக்கு வருவோம்.
அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.
முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.
தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.
ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.
தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.
சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.
தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.
எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.
மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.
தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.
இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.
வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.
இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....
வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!
அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.
அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.
'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.
மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.