நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 8
http://i1087.photobucket.com/albums/...Engay00001.jpg
படம்: தர்மம் எங்கே?
வெளிவந்த ஆண்டு:1972
தயாரிப்பு: பெரியண்ணா (சாந்தி பிலிம்ஸ்)
சண்டைப் பயிற்சி: A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் (மும்மூர்த்திகள்)
http://i1087.photobucket.com/albums/..._000085520.jpg
இயக்கம்: A.C.திருலோகசந்தர் M.A
http://i1087.photobucket.com/albums/...8bb4cde521.jpg
கொடுங்கோலாட்சி புரியும் கொடியவனின் கொட்டத்தை அடக்க எரிமலையென எழுகிறான் சேகர். ஊருக்காகப் போராடும் அவன் வழக்கம் போல ஊர்மக்கள் ஆதரவின்றி வில்லனின் ஆட்களால் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப் படுகிறான். சிறைக்காவலரும், யானை பலம் கொண்ட பயில்வான் ஒருவனும் சேகரைப் புரட்டி எடுக்கின்றனர். எரியும் தீயில் அவன் முகத்தைப் பொசுக்குகின்றனர் எதிரிகள். அனல் தாங்க மாட்டாமல் அலறுகிறான் அவன். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! எரிமலையாகி வெடிக்கிறான். எதிரிகளைத் தூக்கிப் போட்டுப் பந்தாடுகிறான். துவம்சம் செய்கிறான். சிறையிலிருந்து தப்பித்து சென்று ஆற்றில் குதித்தவன் ஒரு நாடோடிக் கும்பலால் காப்பாற்றப்பட்டு, கொடியவனுக்கெதிராக கொடி பிடித்து, புரட்சிப்படை அமைத்து, வில்லனை தவிடு பொடியாக்கி, தானே ஆட்சியையும் பிடிக்கிறான்.
புரட்சி வீரனாக நம் சிங்கம். சிறையில் வீரர்கள் அடைக்க வருகையில் ஆரம்பிக்கும் அனல் கக்கும் சண்டைக்காட்சி. சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைக்குக் கைதியாய் கொண்டுவரப்படும் போதே அந்த நடையிலேயே உக்கிரம் தெரிய ஆரம்பித்து விடும். மூன்று காவலர்களும், ஒரு பயில்வானுமாய் சுற்றி நின்று மாறி மாறித் தாக்க, ஒவ்வொரு அடிக்கும் நம்மவர் அலறித் துடிப்பது பார்ப்பவர் அடிவயிற்றைக் கலங்க வைக்கும். வாயில் ரத்தம் ஒழுக, கழுத்தில் சங்கிலியுடன் அவர் போராடும் போது மெய் சிலிர்க்கும். அடிகளைப் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாமல் ஒரு காவலனை கழுத்தை விடாப்பிடியாய் இறுக்கி (அவன் இறக்கும் வரை) மற்ற காவலர்கள் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவ்வளவு அடிகளையும் தாங்கிக் கொண்டு தன் காரியத்தை வெற்றி வெறியுடன் செய்து முடிப்பது அமர்க்களம். பின் சங்கிலியை ஆயுதமாக்கி சண்டமாருதமாய் சண்டையிடும் போது இன்னும் அமர்க்களம். பயில்வானும், ஒரு காவலனும் தன்னை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் முகத்தையையும், முடியையும் பொசுக்குகையில் அனல் பட்ட புழு போல அவர் அலறும் அலறு பாறை நெஞ்சையையும் பதைபதைக்க வைத்து விடும். முடியெல்லாம் கருகி, முகமெல்லாம் பொசுங்கி முகத்தில் அவர் காட்டும் வலிகளின் பிரதிபலிப்பு பிரமாதப்படுத்திவிடும். அந்த அவலட்சண ஒப்பனை ரத்தக் கண்ணீர் ராதாவை ஒத்திருக்கும். பின் பழி உணர்ச்சி மேலிட அதே சங்கிலியால் ஆசாத் பயிவானை மலையைக் கட்டி இழுப்பது போல பிணைத்து அதே நெருப்பில் தன்னை பொசுக்கியது போலவே பொசுக்கிப் பழி தீர்ப்பது கைத்தட்டல்களை அள்ளும். பின் தப்பித்து செல்கையில் அங்கு சங்கிலியால் தூணில் கட்டப்பட்டு நிற்கும் ஒரு அப்பாவிக் கைதியை அவ்வளவு வலி வேதனைகளிலும் விடுவித்து விட்டுச் செல்வது அவரது மனிதாபிமானத்தைக்காட்டும். அவருக்குள்ளிருக்கும் மானுடத்தை வெளிப்படுத்தும்.
மிக மிக அற்புதமான சண்டைக்காட்சி. வாயடைத்துப் போகச் செய்யும், மூக்கின் மேல் விரல் வைக்க செய்யும் கலக்கல் பைட். இந்த சண்டைக்காட்சியில் பெரும்பாலும் டூப்பே போடாமல் அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். (ஒரு சில லாங் ஷாட்களில் மட்டும் டூப்)
மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் அவரை அலாக்காகத் தூக்கும் போதும், மற்றும் நெருப்பின் அருகில் அவர் முகத்தைக் காட்டும் போதும் எப்படி இவரால் இவ்வளவு துணிச்சலாக நடிக்க முடிகிறது என்ற கேள்விக்கணை நம் மனதில் எழாமல் இருக்காது. முகமும், உடலும் வேறு நெருப்பில் சிதைந்தது போல ஒப்பனை வேறு. அதையும் maintain செய்ய வேண்டும். மேலும் இந்த சண்டைக்காட்சியின் பிரதான அம்சம் சுறுசுறுப்பு... விறுவிறுப்பு... எதிர்பாராத பல நிகழ்வுகள் திடுமென திருப்பங்களை ஏற்படுத்தி நம்மை இருக்கையின் நுனிகளில் இருக்க வைத்துவிடும். A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் என்ற மூன்று ஜாம்பவான்களின் சண்டைப்பயிற்சி, நடிகர் திலகத்தின் ராட்சஷ ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளரின் ஒப்பில்லா ஒளிப்பதிவு இந்த மூன்றும் இந்த சண்டைக்காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடடது
இந்த அமர்க்களமான சண்டைக் காட்சியை நம்மில் பலர் மறந்திருக்கக் கூடும். சிலர் காணாமலும் இருந்திருக்கலாம். இப்படம் சற்று சரியாகப் போகாததினால் எடுபடாமலும் போய் இருக்கலாம். இப்போது பாருங்கள் எப்பேர்பட்ட சண்டைக் காட்சிகளில் நம் இதயதெய்வம் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று!
இணையத்தில் இந்த சண்டைக்காட்சியை முதன் முதலாக தரவேற்றி தெள்ளத் தெளிவான காணொளியாக தங்கள் எல்லோருக்கும் வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு Ganpat சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=9-HE9...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.