நாள் - 3rd January 2010, 06:48 PM
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post462153
டியர் முரளி,
'என் தம்பி' திரைப்பட திறனாய்வு மிக, மிக அருமை. பலமுறை பார்த்த படமாயினும், உங்கள் எழுத்து வடிவில் பார்த்தபோது புதிய பரிமாணத்தில் பார்க்க முடிந்தது. நடிகர்திலகம் ஸ்டைல் ராஜாங்கம் நடத்திய படங்களில் இதுவும் ஒன்று. ஒரு சின்ன குறை. பாடல்களைப்பற்றி மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டீர்கள். இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
'தட்டட்டும் கை தழுவட்டும்
திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ... ஏனோ... ஏனோ...'
பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதிலும் அதில் ஒலிக்கும் படு வேகமான பாங்கோஸ், மன்னரின் முத்திரை.
இந்தப்படத்தில், நாடகத்தில் வரும் 'நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே' பாடல் மெட்டும், இதையடுத்து வெளியான தில்லானா'வில் மனோரமாவின் நாடகப்பாடல் மெட்டும் ஒரே மெட்டாக அமைந்தது எப்படி என்பதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும் வெவ்வேறு இசையமைப்பாளரகள். வெவ்வேறு இயக்குனர்கள்..?.
ரோஜாரமணி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அவர் அருகில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. ஏராளமான நட்சத்திரங்கள் தென்பட்டனர். அப்போது, இருக்கைகளின் எண்களைப்பார்த்து அமர வைத்துக்கொண்டிருந்தவரால் அழைத்து வரப்பட்ட ரோஜாரமணி, எங்கே அமரப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனது வலப்புற இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் (அறிமுகப்படுத்திக்கொள்ள என்ன இருக்கு) , ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்துவங்கி விட்டார்.
நடிகர்திலகம் பற்றி அதிகம் பேசினார். அவரைப்பற்றிக்குறிப்பிட்டபோதெல்லாம் ஒன்று கண்கலங்கினார், அல்லது உணர்ச்சி வசப்பட்டார். 'ஒரு காலத்தில் நான் இல்லாத சிவாஜி அங்கிள் படமே கிடையாது. அப்படி எல்லாப்படத்திலும் நான் இருந்திருக்கிறேன்' என்றார். அவர் நடித்த பல படங்களைப்பற்றி ஒவ்வொன்ன்றாக நினைவூட்டினேன். ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகப் பேசினார். 'சிவாஜி அங்கிள் இல்லைங்கிறதை நினைச்சுப் பார்க்கவே முடியலை' என்று கலங்கினார். மேடையில் நிகழ்ச்சி பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. இருவருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. 'யார் இந்தப்பொம்பளை, ப்ரோக்ராம் பார்க்க விடாமல் இடைஞ்சலாக?' என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் ஆர்வமாகப்பேசினார். 'ஸாரி, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?' என்று (சும்மா சம்பிரதாயத்துக்காகக்) கேட்டேன். 'நோ.. நோ.. அதெல்லாமில்லை. நீங்க பேசுங்க' என்றார். எங்கள் உரையாடல் மற்றவர்களுக்கு இடஞ்சலாக இருக்குமோ என்று நினைத்த நேரங்களில், குனிந்து என் காதோடு பேசினாரே தவிர பேச்சை நிறுத்தவில்லை.
எனது பேவரிட் பாடலான 'அன்னமிட்ட கைகளுக்கு' (இரு மலர்கள்) பாட்டைக் குறிப்பிட்டபோது, ஒரு சின்னக்குழந்தையின் குதூகலத்தோடு என் கையைப் பிடித்துக் கொண்டவர், 'ஐயோ, அது எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுங்க' என்றார் (அச்சமயத்தில் தருணே வளர்ந்த பையனாக இருந்திருப்பான்). நடிகர்திலகத்தின் படம அல்லாது நாங்கள் பேசிய ஒரே வெளிப்படம் 'வயசுப்பொண்ணு' மட்டுமே.
போகும்போது, அவருடைய போன் நம்பரைத் தந்து 'ஒரு நாளைக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க' என்றார். என்னால் போக முடியவில்லை. சமயம் வாய்க்காதது ஒருபுறம் என்றால், நாங்கள் சந்தித்தால் பேச வேண்டிவற்றை ஏற்கெனவே பேசிவிட்டோம் என்பது இன்னொரு காரணம். வீட்டுக்கு அழைப்பார் என்று தெரிந்தால், அத்தனை விஷயங்களையும் அரங்கிலேயே பேசியிருக்க மாட்டேன். ரோஜாரமணியை சந்தித்து உரையாடியது என்னால் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.
முரளி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘Third Party Distribution’ பற்றிய விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளன. இது எப்படி?. சென்னை காஸினோ சந்திலுள்ள 'மீரான் சாகிப் தெரு' விநியோகஸ்தர்கள் போலவா?.