நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்
Printable View
நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்
பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
..பேதை நானும் உனக்கென்று
அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
…அழகி இவளும் உனக்கென்று
பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
…பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
இதமாய் இளமை பூத்திருக்க
…இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்
வந்தேன் மாமா உமைத்தேடி
..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
…சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
பெண்ணில் நானும் அழகிலையா.
..பெரிய படிப்புப் படிக்கலையா
எண்ணந் தன்னில் இன்னொருத்தி
..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..
செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
.கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
பொய்யோ என்னும் இடையா என்றால்
…மெய்யே என்னும் பார்வை வீச்சு
சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை
வந்தால் எண்ணம் ஆட்டங் காண
.;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
உன்னை மறந்தே இருப்பது என்றால்
..ஊரை என்னை மறந்தாற் போல
திண்ணம் வேலை சிலமா தத்தில்
..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
…கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!
முத்தம் தந்தான் வம்பாய் வெறியுடன்
விடவில்லை என் கன்னமிரண்டையும்
கண்ணயர்ந்த என் மேல் படர்ந்தான்
முகத்தை முழுதாய் நனைத்துவிட்டான்
எழ விடவும் மறுக்கிறான் போக்கிரி மகன்
வேலை குவிந்து கிடக்கென நான் தவிக்க
ரசித்து மகிழ்கிறான் பெரிய கள்ளன்
இரவு லீலையின் பொல்லாத கண்ணன்
கண்ணன் சொன்னது கீதையில்
குணத்ரய விபாக யோகத்தில்
குணங்கள் மூன்று மாந்தரில்
குன்றியோ கூடியோ இருக்குமாம்
சத்வம் ரஜஸ் தமஸ் என்று
சாகச கண்ணன் சாதித்தது
சத்வ குணம் அதிலே சிறந்தது
சாத்வீகம் சத்தாயதில் பொதிந்தது
சத்துவ குணம் முனிவர் குணம்
சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
ராஜச குணம் அது ராட்சச குணம்
கோபம் தாபம் குழப்பம் உண்டாம்
தாமச குணமோ சோம்பியின் இனம்
தள்ளும் கீழே எந்நாளும்
தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
தமோ குணம் அதுவே அஞ்ஞானம்
அஞ்ஞானம் தான்..
என்ன பண்றது…
ரோசிச்சா
பலவருஷம் முன்னால
தாவணி போட்டப்ப
அம்மம்மா சொல்லுவாக
நேரத்தோட பள்ளிக்கோடம் போய்
நேரத்தோட வா..
இளந்தாரிகளப் பாக்காதே
பேசாத
சிரிக்கக்கூடசிரிக்காத
குனிஞ்ச தல நிமிராதம்பாக
இளவட்டப் பொண்ணுக்கு
எதுக்கு இத்தினி அலங்காரம்..
ஜிம்ப்பிளா இரு புள்ள
கல்யாணங் கட்டற்வரைக்கும்னாக
அம்மா ஒண்ணும் சொல்லாது
பாட்டி சொல்றதக் கேளு
ஒன் நல்லதுக்குத் தானேம்பாக
எப்ப நான் ஆச்சி பத்தி
கம்ப்ளோண்டு பண்ணாலும்..
ம்ம்
எல்லாம் ஆச்சு
கல்யாணங்கட்டி
ஆறு பெத்து
ரெண்டப் பறிகொடுத்து
நாலையும் வளத்து
ஆளாக்கி கல்யாணமும் பண்ணி
அதுகளுக்கும் பொறந்து
அதுங்களையும் வளத்தாச்சு
அதுவும் மூத்த பேத்தி இருக்கே
கோல்ட்ல பண்ண சிற்பம் மாரி..
தகதகன்னு இருக்கு
ப்ளஸ்டூ படிக்கப் போகுது
சாக்ரதையா இருபுள்ள
ரோட்ல நடந்துக்கிட்டே
அந்த குட்டிப் போனை நோண்டாத..
வெரசா நட
கலகலன்னு சிரிக்காதேன்னு
சொன்னா
மூத்த மருமவ
என்னத்திட்டறா..
சும்மா கிடங்க அப்பத்தா
அதுங்களுக்குத் தெரியும்
ஒங்க காலமில்ல இது
அதுவும்
கராத்தே கிளாஸ்லாம் போய்ருக்கா
ஸ்கூல்ல கிரிக்கெட்டீம் காப்டன்
சிம்ல போய் எக்ஸர்ஸைலாம் பண்ணுதா..
எம் பொண்ணுபத்தி எனக்குத் தெரியும்
சும்மா சும்மா குத்தம் சொல்லாதீய
பாவம்
ராவானா கண்ணால ஜலம் சொட்டுது
நா என்ன தப்புப் பண்ணிட்டேன்னு
பாட்டி திட்டுதுன்னு புலம்பறா…
இந்தாங்க ஒங்க கேப்பக்கஞ்சி
டிவி போடறேன்
நீங்க பாக்கற சீரியல் பாருங்க..
இது நல்லாஇருக்கே
இவ சொன்னா
நாஞ்சும்மா இருக்க முடியுமா
அஞ்ஞானம் இருக்க விடுமா
நா அப்படித்தான் சொல்லுவேன்
போடி இவளே
எனக்கொண்ணும் ஒண்ணோட
கஞ்சி ஓணாம்னு ரூமுல ஒக்காந்தா
உள்ள கிளாஸோட வந்து முறைக்கா..
குடிங்கம்மா.. ந்னு கொஞ்சம் தன்மையா
சொன்னதுனா குடிக்க ஆரம்பிச்சேனா
கிழவிக்கு வயசாய்டுச்சுன்னு முணுமுணு..
சொல்லட்டுமே…எனக்கென்னா…!
எனக்கென்னா குறைச்சல் இப்போ வயசா ஆச்சு
என்ன ஆறுதானே ஆகுது அது கூட ஒரு அறுபது
முன்னாடி உள் நாட்டுக்குள்ள அடிக்கடி பறந்ததுண்டு
மகன்கள் வீடுகளுக்கு வான்வழியாய் சென்றதுண்டு
மொதமொதலா இன்னும் அதிக உசரம் அதிக நேரம்
பறந்தா மூட்டு கொஞ்சம் அல்லது அதிகம் நோகும்
பரவாயில்ல பேராண்டிகளுடன் உல்லாசமாய் விடுமுறை
அடுத்த மாதம் இந்த தேதி அமெரிக்காவில் மகள் வீட்டில்
மகள் வீட்டில் இப்போது முதியோர் இல்லம் செல்லும் நாளை எண்ணி
மகளுக்கு வீடொன்று ஒன்று மகனுக்கில்லை மருமகளுக்கே கேரள
பாரம்பரிய மருமக்கள் தாயம் மருமகள் வடிவாய் நண்பர்களும் மகள்களுடன்
ஆரம்ப நாட்களில் மனைவி சொன்னது நமக்கென்று ஒரு வீடு வீடென்று எதனை
சொல்வீர் அதில்லை வீடு அதொரு ஆதிகால குகை உனக்கென்றே உள்ள அரண்
செல்வீர் அதனுள் ஓய்வு நிலையில் அந்நியர்கள் அனுமதிக்க படார் உமதே அது
அது ஒரு அந்தஸ்து மகனுக்கும் மகளுக்கும் வரன் பார்க்கும் போது வந்தவர்கள்
பொதுவில் கேட்டது சொந்த வீடா விடையின்றி குன்றிய நாட்களில் நிலைதெளிவு
வாடகை வீடுகளில் பிறந்து முதல் பிறந்தது முதலாய் சொந்தம் என்பது சுற்றோர் மட்டும்
பூடகமாய் பேசி வீட்டின் சொந்தம் குடிக்கூலி ஏற்றும் கால் ஒழுகல் பணி தனதில்லை
சுவர்களில் ஆணி கிறுக்கல்கள் என கூறி அனுமதியின்றியே அடுத்தோற்கு சுற்றி காட்டி
எவர் இவர் என்றரரிய கூட விடாமல் மறுநாள் தகவல் வெளியேறு என்று மகனின்
சொந்த வீட்டில் கால் மேல் கால் போட்டு செய்தி தாளுடன் தேநீர் திட்டம் தவிடு பொடி
இந்த இடம் உனதில்லை என உரைக்கவில்லை மருமகள் ஒரு படுக்கறையே எங்கப்பாம்மா
நாளை வருகை நீங்கள் போகலாமே மகளின் இல்லம் சொல்லி அனுப்புறோம் அறை காலியாகி
வேளை வருங்கால் மகள் வீட்டில் மூன்று வருடமாய் அறைதான் இன்னும் காலியில்லை
பாவம் மாப்பிள்ளையின் பெற்றோரும் மகள் வீட்டிலே அறிக்கை காத்திருப்பு சமன் ஆக
தேவைஒரு முதியோர் இல்ல அறை விவசாய குடி போல மகனை மூலதனமாய் கண்டு
திட்டமிடா ஓய்வில் நாள்தோறும் தேவையில்லா ஜீவனம் புழு போன்ற ஏளனம் வருடம்
தட்டாமல் பிறந்த நாள் வருங்கால் கிழிந்த ஆடைகளுக்கு ஓய்வுவருமா என குலுக்கல்சீட்டு
கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய
வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்
மதியுங்கள் எனச்சொன்னார் பாட்டி
மனமார உதாரணங்கள் காட்டி
பேரன்கள் படபடத்து
பெரிதாக யோசித்து
கத்தினரே ஓசைதனைக் கூட்டி
சொன்னவிதம் புரியலையா கூறு
பெரியவங்க வயசைத்தான் பாரு
பலவிதமாய் அனுபவங்கள்
பக்குவமா உழைச்சிருந்தார்..
மூளைக்குள் ஏற்றிப்போய்ச் சேரு..
சின்னவங்க நாங்கதானே பாட்டி
சிறுவிஷமம் செய்வதனால் நாட்டி..
எங்களுக்குப் புரியாத
ஏதேதோ கதைகளையே
சொல்லலாமா நீயேசொல் பாட்டி
பாட்டி என்றால் பல் போய் பரிதாபமாய்
கோல் ஊன்றி சுருங்கின கொட்டையாய்
இளம் வயதில் பார்த்த புத்தகச் சித்திரங்கள்
தந்த ஒரு படிமம் மூளையில் அழியாதிருக்க
போகுமிடமெல்லாம் 'மரியாதை' மிகுந்த இந்த
மாநகரில் எனை பாட்டி என சிறு பெண்களழைக்க
கோபந்தான் வருகுதே மனம் வருந்துதே துவளுதே
என்றும் பதினாறாய் நிற்கும் என் இளம்மனத்தாலே
இளம் மனத்தாலே
ஐஷ்வர்யாவை அபிஷேக்கிடமிருந்து அள்ளி சென்று சுவைக்க முடியும்
ஐஸ்யர்வத்தை அம்பானிகளிடமிருந்து ஒரே நொடியில் கவர முடியும்
வேற்று கிரகங்களுக்கு நொடியில் சென்று அங்கு தரையில் பாயிட முடியும்
மாற்று வாழ்வில் புகுந்து காலிலிருந்து தலை வரை மாறி இன்பவாழ்வில் திளைக்கமுடியும்
சற்றே மாற்றி மாற்றி முடிவெடுத்து எப்போதுமே சரியான திசை காண முடியும்
சுற்றும் பூமியை நில் என்று ஆணையிட்டு அனைத்து வாழ்வையும் மாற்ற முடியும்
கற்றும் பிறழ்ந்து வாழும் சுற்றோரை மற்றோரை கல்லெறிந்து கொல்ல முடியும்
நினைத்தவுடன் கனவில் நினைத்த பெண்ணை அணைத்து பிணைந்து இணைய முடியும்
வினை விதைத்து வினை அறுத்த பலன்களை கற்பனையில் கண்டு தீயோரை தீயில் இடலாம்
இளம் மனம் இருக்கும் அறுதி இறுதி அவனவன் உள்ளத்திலே பதினாரிலும் எண்பதாவதும் மாற்றி வாழ்வதும்
தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம்
உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய்
கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.
வாழ்வில் வேண்டும் கொஞ்சம் துன்பம்
வருத்தம் வானை வளைக்க முயன்று
வெட்கம் சமூக அக்கரை குறைகையில்
வேதனை வெட்டி முறிக்க முடியாமையில்
வீணாய் போன நல்நோக்கு திட்டங்களில்
விழவேண்டும் மீண்டும் எழுந்து நிற்பதற்கு
வியர்வை விரயமாய் போய்விட்டபோதும்
விரும்புவாயோ உப்பில்லா பத்திய சோற்றை
விருந்தென்றால் வேண்டாமோ அறுசுவை
வெடித்து முளைக்கும் விதைக்குள் ஆலமரம்
ஆலமரத்தின் பழம் சிறிதே
அதிலே உண்டு ஆயிரம் விதை
அதனுள் ஒன்று வித்தாகி
அகல மரமாய் அதை ஆக்கி
அனேக விழுது அதை தாங்கி
ஆயிரம் பறவைக்கு அடைக்கலமே
அரிக்கும் கரையான் அடிமரத்தை
ஆனால் ஆலோ தழைத்தோங்கும்
ஆயிரம் விழுது ஊன்றியதால்
அதுபோல் மனிதா ஆவாயே !
ஆல் போல் தழைத்து வாழ்வாயே !
வாழ்வாயே மனிதா கொஞ்சம் ஆன்மாவிற்காய்
வயிறு பிரதானம்தான் இல்லையெனவில்லை
ஐம்புலன் சுகங்கள் இன்பந்தான் ஐயமில்லை
திரவியம் தேடி தேடியதை கண்டபடி இறைத்து
தடைகள் பல தாண்டி பந்தயத்தில் ஓடி வென்று
களைக்கையில் உள்மன தாகம் தீர் அறம் செய்து
அறம் செய்து வாழ வழியென்று அன்றே
அறுத்திட்ட மறை ஒழுக்கம் - அஃதே
விழுப்பம் தருமாம் வள்ளுவன் வாக்கு -அதை
அகம் கொண்டு சொல் செயலினில் நாட்டு
செயலினில் நாட்டு கண்கள் சிவக்க கத்தினாள்
ஓடும் தண்ணீரில் எழுதவேண்டுமுன் பேச்சை
பெற்றவளுக்கும் பின் வந்த ஒரு மற்றவளுக்கும்
நடுவில் விழி பிதுங்கும் கணவனொரு கோழை
கோழை இல்லை நான் மோழையும் இல்லை
ஏழையென் சொல் அம்பலத்தில் ஏறவில்லை
எதிர்த்து பார்த்தேன் எந்த பயனுமில்லை
எடுபட்டவனே விட்டேனா பார் என்றனர்
எடுத்தேன் ஓட்டம் வெட்ட வரும் போது
வெட்டி வீரம் வேண்டாம் வீண் அது இப்போது
இன்று வெற்றி இல்லையெனில் நாளை உண்டு
எருமை போல் பொறுமை எனக்கென்றுமே உண்டு
வென்று காட்டினார் வீழ்த்தினார் வாலியை அன்று
வெகு எளிதாக இராமன் மறைவினில் நின்று
மறுபடி எதிர்ப்பேன் இம்முறை ஒளிந்து கொண்டு
மறம் உண்டு எனை வெல்ல இனி எவருண்டு ?
எவருண்டு எனக்கேட்டால் என்ன செய்வாள்
…ஏந்திழையின் மனதுள்ளே நுழைந்த காதல்
பயிரதுவும் வெட்டிவிட்டு எரித்திடு வாரோ
..பாவையவள் நெஞ்சுள்ளே நடுக்கம் மேலும்
விழிகளிலே ஆச்சர்யம் தன்னைக் கூட்டி
…விறுவிறுப்பாய்க் கேட்டாளே தந்தை முன்னர்
விவரந்தான் கூறுங்கள் இந்தக் கேள்வி
..விவரிக்கும் காரணமும் புரிய வில்லை..
பாலாய்த் தேனாய்ப் பாசங்கள்
..பலவாய்க் கூட்டி வளர்த்தமகள்
யாரோ வயதுப் பையனிடம்
…ஏனோ சிரித்தே நின்றிருந்தாள்
ஊரார் பார்த்தே சொல்லத்தான்
..ஓடி வந்தே தான்கேட்டால்
பாவ முகமாய் நிச்சலனப்
..பாவம் கூட்டிக் கேட்கின்றாள்
அன்பே மகளே அருங்கனியே
..அழகாய்த் தானே நான்வளர்த்தேன்
எண்ணும் எழுத்தும் எண்ணவொண்ணா
..ஏற்றங் கொடுக்கும் நற்சிந்தை
இன்னும் பலவும் நீகேட்க
…எளிதாய்க் கொடுத்தேன் உண்டிலையா
பொன்னே பெண்ணே பூந்தளிரே
..புவிநீ இன்னும் அறியவிலை..
இன்னும் பேச்சு எதற்கப்பா..
..என்ன விஷயம் சொல்லுங்களேன்
உங்கள் மகள்தான் வாரிசுநான்
..உணர்வில் மயங்க மாட்டேனே..
கன்னஞ் சிவக்கும் யாரேனும்
..களிப்பாய் என்னை நெருங்கவுந்தான்
திண்ண புத்தி எனக்குண்டு
..சொல்வீர் உமது கேள்வியினை
அந்தக் கடைப்பக்கம் ஆடவன் ஒருவனுடன்
…அழகுப் பெண்ணிலவு உன்மகள் பேசுகிறாள்
சொந்தம் போல்சிரித்து கண்ணில் கனவுகளும்
..சொர்க்கம் போல்விரிய நின்றபடி தானிருந்தாள்
இன்னும் பலவாகச் சொன்னவர் எத்தனையோ..
…ஏற்றம் தரும்படியும் இனிமையாய் இல்லையம்மா
மென்மைக் காதலென்று பலர்சொலும் விஷமுந்தான்
..மேவி உனைச்சேர்ந்து விட்டதா சொல்லம்மா..
சிரிப்பலை கொஞ்சம் மெல்ல
…சிற்சில வாகக் கூடி
விரிந்ததே இதழு மங்கு
..விவரணை சொல்ல வொண்ணா
புரிதலும் இல்லா நோக்கு
..புனைந்தது கண்கள் மெல்ல
வரிவரி யாக நெற்றி
..வாகாகக் கோடு போட
சின்ன விஷயம் இதுதானா
..சீர்மிகும் உங்கள் சோகந்தான்
எண்ணம் சொல்ல ஏந்தயக்கம்
..எனக்கோ காதல் எதுமில்லை
வண்ண மாக நான்பேசி
..வாகாய்ச் சிரிப்பும் சொல்லியவர்
உள்ள விஷயம் சொலவில்லை
..உங்கள் தயக்கம் புரிகிறது..
பேசிச் சிரித்த நல்மனிதர்
..பெரிய மனிதர் என்னுடைய
நேசிப் புக்கும் உரியவளாம்
.. நேகா வுடைய அண்ணனவர்
பூசி மெழுகும் பழக்கம்தான்
..பூவை எனக்குக் கிடையாது
சேதி தவறு என்தந்தாய்
.. செல்வீர் என்றே தான்சிரித்தாள்..
உளத்தினில் கொண்ட காதல்
..உணர்வையும் மறைத்து வைத்தாள்
வழக்கமாய் அவனும் வந்தால்
..வருத்தமாய் முகத்தை வைத்து
பழக்கமும் வேண்டாம் என்றே
..பக்குவ மாகச் சொல்ல
உரமென நினைத்துக் கொண்டாள்
…உருக்குமா காதல் நாளை..
நாளை என்னாகுமோ இந்நாடு
களை மண்டிய காடானதின்று
சொல்லவொணாத் துயரச் சுமைகள்
சொகுசறியா அனந்த கோடி பெண்கள்
உண்மை உணராமல் போக்கிரியாய்
மலிவு விளம்பரத்தில் பகட்டுகிறாள்
பதறிட பலபேர் பாராட்டிடவும் பலபேர்
பெண் சுதந்திரம் இதுவென்று பகர்கிறாள்
பொல்லாத பொருந்தாத பேச்சுக்கள்
பேசுகிறாள் பொறுப்பில்லாத மின்மினி
மின்மினி பூச்சி ஒளியினை போல்
மின்னும் விண்மீன்கள் ஏராளம்
அண்டத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம்
அருணனின் வெப்பம் கொட்டும் – ஆயின்
தரணிக்கு தாரகையால் பயனுமில்லை
தண்மதியின் வெண்ணொளி அதற்கில்லை
தங்கமும் வெள்ளியும் தங்காத செல்வமும்
தரமில்லா கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் !
கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் ஆனதே
வஞ்சியிவளிடம் வந்த வார்த்தைகள்
வக்கில்லை சொல்லுக்கு வெறும் சாடைகள்
விளங்குவதில்லை அவற்றின் அர்த்தங்கள்
கடுப்பா களிப்பா குழப்புகின்ற கருவிழிகள்
கிண்டலா ரசிப்பா கனி உதட்டின் சுழிப்புகள்
ம் என்றும் ஓ என்றும் உதிரும் முத்துக்கள்
உணர்த்தவில்லை அவள் உள்ளக்கிடக்கைகள்
உள்ளக்கிடக்கைகள் ஒன்றா இரண்டா
ஓராயிரம் உண்டு மாறுபட்ட மனனங்கள்
மழையோ இல்லை மக்களவை தேர்தலோ
சாதியோ இல்லை சமய சண்டையோ
சாகா காதலோ இல்லை செத்துப் போதலோ
வேண்டும் இல்லை இல்லை வேண்டாம் என்று
வெறி கொண்டு அலையும் மாந்தர்- இவர் தம்
வேண்டுதல் கண்டு வெட்கியே இறையும்
முரண்பட்ட வேண்டுதலை மொத்தமாய்
மூடமனிதர் என மறுத்தானோ ?
காற்றாய் கரைந்து மறைந்தானோ இல்லை
கல்லாய் அவனியில் உறைந்தானோ?
https://encrypted-tbn0.gstatic.com/i...RJTLR5ZX5wcL1A
உறைந்தானும் அவனே
உயிர்தானும் அவனே
வெறுப்பும் அவனே
விருப்பும் அவனே
அவனின் ஒரு துகல்
நாமெனில் இதை
உரைப்பானும் அவனே.
-
கிறுக்கன்.
அவனே தொலைத்தான் தன் நிம்மதியை
அறியாது கலைத்தான் குழவிக்கூட்டை
சும்மா இராமல் குறை சொன்னான் அவளை
சம்சாரிக்கு புத்தியில் ஏன் உறைக்கவில்லை
ஒரு தொப்பியை இரு தலை சுமப்பதில்லை
விளைவெண்ணாது தாண்டலாமோ எல்லை
எல்லை இல்லா உறவில் என்றும்
நிம்மதி என்பது இல்லை.
-
கிறுக்கன்.
இல்லை இல்லவேயில்லை
வாய் நிறைய பொய்கள்
மண் தின்ற கண்ணன்கள்
காட்டுவர் ஈரேழு நரகங்கள்
நரகங்கள் எனநினைத்தால் அஃதே என்று
... நாலிரண்டு திசையிலுள்ள தேவி சொல்வர்
சுரங்கூட்டி நல்லனவை நெஞ்சில் ஓட்ட
...சுழ்ந்துவிடும் சொர்க்கமுந்தான் உன்னை என்று
கரகரத்த குரலினிலே பாட்டி அன்று
...கனிவாகச் சொன்னவிதம் மனதி னுள்ளே
சுகமாக நிற்கிறதே இந்த நாளில்
..சொர்க்கங்கள் காண்கிறதே எந்தன் சிந்தை..
சிந்தை மூளையாம் இரவல் சிந்தனையில் திளைக்க பல்லாசிரியர்கள்
நிந்தை செய்தே நிறைய சூத்திரங்கள் தேர்வுக்கு வாயிலெடுக்க
தந்தை தன்னுழைப்பை தந்து ஈந்த செல்வமனைத்தும் எடுத்த
வாந்திக்கான மதிப்பெண்ணாய் அப்பனுக்கு அப்பனுக்கு அப்பனுக்கு
கந்தை கசக்கியவனின் பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளை சவாலாய்
விந்தை கூற்றோடு உன்னுடைய நூறு எந்தன் முப்பதுக்கு சமன்
சந்தையை திறந்தாயிற்று உலகுக்கு எந்தை தவறுக்கு எனக்கு தண்டனை
சொந்தங்களின் சொகுசுக்கு சோக வாழ்வு இன்றெனக்கு குற்றமென செய்தேன்
தொந்தரவு ஏன் ஒதுக்கல் முறையில் பலன் அவனுக்கு ஒதுக்கல் தீண்டாமை
முந்தி போனாலும் நிந்தை செய்வார் நானே போடாத அடையாள சாதி அரசின் தயவில்
பந்தியில் பாகுபடுத்திய பழங்கால கதைக்காய் வேந்தர்கள் இன்றென்னை தண்டிப்பது
சந்தியில் விடுவது சகட்டு மேனிக்கு சவட்டி செல்வம் கண்ட மேன்மக்கள் பிள்ளைக்கு
தந்தாரே தாழ்த்த பட்ட பட்டயம் ராசாக்களின் பிள்ளைகளுக்கு பலகோடி கண்ட
சந்ததிக்கு சந்ததி வாழையடி வாழையாய் சலுகை ஏணிகாண வறுமையின் கோட்டில் நான்
செந்நீர் குருதி சிந்த கல்வியுடன் தந்த ஒழுக்கமும் பிறர் செல்வம் வேண்டா உஞ்சவிருத்தி
கண்ணீர் மட்டுமே கண்ட எந்தன் நிலையை எங்குரைப்பேன் கேளா அமைச்சுக்கா
வெந்நீரூற்றி வேரறுக்க விரையும் பாவனை கண்டதென்னவோ சாதிவாரி கணக்கெடுப்பு
தந்தார் கையில் சாதியுடன் கூடிய அடையாள அட்டை ஏற்க மறுப்பு சொன்னால்
விந்தை கூற்று மேல்சாதி சதிகாரன் மீண்டும் தாழ்த்த வருகிறான் என்று ஆட்டு
மந்தைகளாய் களபலிக்கு நாங்கள் சாதி பேர் சொல்லி நிந்தித்தாலும் இல்லை ஒருநீதி
ஏந்தினேன் கையை இன்னொரு நாட்டின் கருணைக்காய் வருகை அழைப்புக்காய்
முந்தினேன் முச்சந்தி கானா தப்பிப்புக்காய் இன்றென் அடையாளம் வாழா (வெட்டி)இந்தியன்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய தமிழ் மண்ணில் தவழ மண்ணின் மைந்தனுக்கு
செந்தமிழ் பேச செம்மையும் காண சந்ததிக்கு கொடுத்து வைக்கா அமெரிக்க அயல்வாழ்வு
அயல்வாழ்வு
வற்றாத ஜீவநதியின் அக்கரை போல
உறவுச்சங்கிலியின் பிணைப்பினை
உறுதிசெய்வது இருகரைகளும்தான்
இரண்டும் ஒரேநதியின் இருபக்கங்கள் என்றாலும்
இரண்டுமே வெவ்வேறுவித வாழ்க்கைப் போக்கு
ஒவ்வொரு கரையும்
தனக்கென ஒரு நாகரிகம்
தனக்கென ஒரு தொழில்முறை
தனக்கென ஒரு கலாச்சாரம்
ஆற்றை நீந்திச்செல்கையில் தான் புலப்படும்
விட்டுச்செல்லும் கரையின் மீதான பற்றினை
பற்றினை விட்டது காய்ந்த சருகு
பக்குவம் வாய்த்தது வயதோடு
கழன்று விழுந்தது கிளையிலிருந்து
காற்றோடு சென்றது பாரமிழந்து
பாரமிழந்து பயணிக்க பற்றினை விடு
ஆசை கொள் ஆண்டவனில் மட்டும் -ஆஸ்திகர்
அத்தனைக்கும் ஆசைப்படு அவனை விடு
ஆண்டவனே இல்லை அறிவாய் நீ -நாஸ்திகர்
விடிய விடிய வாக்கு வாதம்
விடிந்த பின் வென்றது யார்
பற்றினை விட்டார் நாஸ்திகர் !
பரமனை விட்டார் ஆஸ்திகர் !
பற்றினை அறுக்க சொன்னார் வான பிரஸ்தம் சந்நியாசம்
பற்றினேன் பரமனின் தாழ் எச்சுவையும் வேண்டேன் இனி
வற்றிப்போன வாய்க்கு ஒரு வாய் கொக்கு மாக்கு கோக்கு
முற்றிப்போன பசிக்காய் பர்கர் பிஸ்ஸா டபாஸ்கோ ஸாஸ்
வற்றிப்போன புரத குறைவு கால்களை காட்டி அரைநிஜார்
சுற்றிபோன சுற்றம் துறந்து அமர்ந்தேன் கணினி மேசை
பெற்றுபோட்ட ஒரே மகளின் வலை மடல் மூன்று மாதம்
சற்றுவிரைவில் அனுப்ப படும் உயர்வகுப்பு சீட்டு இரண்டு
சுற்றினேன் பிரகாரம் சூழ உறவினருடன் அர்ச்சனை
கற்றறிந்த நல்லோருடன் பெருமை பொங்க பயண விவரம்
சுற்றவேண்டிய காண வேண்டிய இடங்கள் பற்றி கூகல்தேடல்
வற்றாத சுரங்கமாய் செல்ல காண இடங்கள் சென்றேன்
முற்றாக காணாமல் வெந்தேன் வந்தேன் பதினெட்டு மாதசிறை
பெற்றவள் வடிச்சுகொட்ட துணி துவைக்க பாத்திரம் விளக்க
உற்றவனோ சுற்றுவேலை வேலை வால்மார்ட் வாங்குபணி
பற்றறுத்தேன் பாசமறுத்தேன் அடுத்த அழைப்பு வரும்வரை.
இதுதான் பாதையெனப் பயணித்து வாழ்ந்து முடித்தவர்கள்
இயல்பாய் சிரித்தவண்ணம் சுவற்றில் தொங்க
எதுதான் பாதையெனத் தேடியே ஓடிக்கொண்டிருக்கும்
எந்திரமனிதர்கள் இளைப்பாற இடமில்லாமல் தவிக்க
காலச் சக்கரமோ இரு தலைமுறைகளுக்குமே சமச்சீராய்
பெருவெளியில் இயங்கிக் கொண்டே இருக்கிறது
ஆஸ்திகர் வேட ஒப்பனை இப்போ பிரபலம்
திருத்தமாய் தீற்றிய திருநீறு நெற்றியில்
சிலருக்கு குங்குமத் திலகமும் நடுவினில்
விரைந்து கும்பிடும் கரங்களின் பணிவில்
அசந்துதான் போகிறேன் வேட பொருத்தத்தில்
நடிக்கத்தெரியாத நானோயிங்கு மக்கு மாணவி
மக்கு மாணவி தான் அவள்..
எதைச் சொன்னாலும்
குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
ஏறும் என்றால் அதுவுமில்லை
முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
விடையில் தப்பு பண்ணுவாள்..
தனிக்கல்வி தான் என்றாலும்
கோபம் எனக்கு வந்ததால்
நன்றாகக் காதைத் திருக
பரவாயில்லை மிஸ்
எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
பண்ணிடுவாங்க
எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
அது போதும்
சொன்னாற்போல
ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
அவளுக்குக் கல்யாணம்
பெற்றோர் அழைப்பை வைக்க
போனபோது குட்டியாய்ப் புன்னகை
எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
அறிமுகம்
கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…
திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
இவ தான் மூத்தவளாம்
சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
அவர் கவலை
எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
வீடுவரை இருந்தது..
சில வருடங்கள் கழித்து
வேறு ஊருக்கு மாற்றலாகி
சென்னை எதற்கோ சென்றபோது
சந்தித்தேன் அவளை..
அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
மின்னும் பேசரி..
பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
அவள்தானா..இல்லை..
அவள் தான்..
ஹாய் மிஸ்..
அதே புன்னகை..
என்னடி இவளே எப்படி இருக்க
நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
நல்லா இருக்கேன் மிஸ்..
நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
ஒருத்தன் பெங்களூரு
பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
நாலு கடை..
ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
அட்மினும் நல்லா செய்றேனாம்..
குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
இப்பத் தான் நாலுமாசம்..
எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
இருந்தோமா..இப்பத் தான் வேளை..
நீங்க செளக்கியமா..
என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
கண்ணாடியைத் துடைத்த போது
அவளைக் காணோம்
பார்த்தால்
அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
மிஸ் ட்ராப் பண்ணட்டா..
வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..
பை மிஸ்
ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..
நானும்…..!
நானும் நாணும் படி ஒரு நற்காதல் பருவம் தவறி
காணும் யாவரும் தவறாக எண்ணவே இயலாமல்
ஊரும் உறவும் அறிய இயலா ஒன்று இதற்கு
ஆறும் அற மீறல் என்றில்லை விடலை மனதுடன்
உடலை நாடா உன்மத்தம் பித்து இத்தனைக்கும்
விடலையவள் அழகில்லை குணவதியும் இல்லை
முப்பது வருட வித்யாசம் காதலை சொல்ல விடவில்லை
தப்பாது அறிவு தப்பது என்று சொன்னாலும் இதயம் தள்ளும்
ஒருநாள் காணுதல் இல்லையேல் மனமெங்கும் அவளே
மறுநாள் கண்டதும் மொழிமோ பார்வையில் ஓராயிரம்
இந்த அலுவல் மனைவி என்னை அறிவாள் என் எண்ணம்
சொந்தமில்லை என்றாலும் சொக்கிநிற்பாள் சுணங்குவாள்
எப்போதுமே இற்று போகும் ஒட்டுத்துணி உறவு கழலும் கணம்
தப்புத்தான் என்றாலும் கணமதை மனதோடு இணைத்து இளமை
காணும் முகமும் மாறும் உடையில் நடையில் உல்லாச இளமை
பேணும் கணங்கள் இலவச இன்ப சுற்றுலா காணும் வளமை
என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்
வெறுமையாக நானிருந்த காலமென்று கேட்டால்
…வெகுளியாய்த்தான் பேசிடுவேன் எதுவென்று நானே
பொறுமையுடன் கற்றிருந்த இலக்கணத்தின் பாடம்
…போடுதற்குக் கற்பனையும் வந்திடுமா என்று
எருமையெனச் சோம்பிநின்று மோட்டுவளை பார்த்தால்
..ஏகடியம் செய்துகொஞ்சம் நகர்ந்துவிட்ட பல்லி
உறைந்துவிட்ட பயத்தினிலே ஒடுகின்ற பூச்சி
…உளமாரச் சிரித்திட்ட நேரம்தான் அன்றோ..
அன்றோ நான் கனவுகளை மென்றவன் அதிலேயே நின்றவன்
இன்றோ நான் கனவுகளை தின்றவன் மிச்சத்தையும் கொன்றவன்
வையத்துள் வாழ்வாங்கு வாழ கம்யுன் கனவு இடதுசாரி விடலைக்கு
கையதில் அடங்கா பொருள் குவித்த அதிபதியாம் சுடலைக்கு நிற்பவன்
அக்கினி குஞ்சாக சமூகம் காக்க முதல் நிலையில் மூச்சடக்கி நின்றவன்
திக்கினி இல்லை என்று தன் மக்களுக்கு சொத்து தந்து பேச்சடங்கி வென்றவன்
அன்றொரு நாள் அதே நிலவில் கடற்கரை மணலில் வீதிநாடகம் விடுதலைக்காய்
இன்றொருநாள் இதே நிலவில் விலைமகளுடன் மன இறுக்க விடுதலைக்காய்
பூர்ஷ்வாக்களை சாடி எல்லாரும் எல்லாமும் பொதுவுடைமை பேசி கையுயர்த்தி
கார்சாவிகளுக்கு புது அலமாரி தேடி தேவைக்காய் விற்கப்படும் மனைகள் கைகாட்டி
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ என்ற காரிகைகளின் நெஞ்சம் தஞ்சமானவன்
மாறியது மஞ்சம் மாற்றியது நானே என காரிய மங்கைகளின் கொஞ்சும் பொருளானவன்
கனவு சாகாமல் தினமும் செத்தேன் இருள் வந்ததும் விரிப்பு கண்டதும் உலகு துறந்தேன்
நினைவு சாகாமல் நித்திரைக்கு வேண்டி மாத்திரை நாடி இருளில் கனவுக்கு ஏங்கி மதுவுடன்
இளமை வாழ்க்கையில் கடவுள் பிறப்புடன் தந்த சேமிப்பு செல்வம் செலவழியா கனவுகள்
வளமை கண்டும் வாழ்க்கையில் வென்றும் கனவு சேமிப்பை கரைத்து தின்று வடிவம் மட்டும் வாழ்கிறது
வாழ்கிறது சாம்பல்
விசித்திரமான உலகில்
எரிமலை பொங்குகிறது
அக்னி ஆறு வழிகிறது
எதுவும் பொசுங்கவில்லை
அகங்காரம் அழியவில்லை
அநீதி இறக்கவேயில்லை
சுடுகாட்டில் பூஞ்சோலை
பூஞ்சோலை ஒன்று பொன்மாலை பொழுது
பூங்கா என பொய்யான போர்டு போட்டு
போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
போனேன் உள்ளே வந்தேன் வெளியே
பொத்திக்கொண்டே கண் மூக்கு காது
போதாது போதாது மரஞ்செடி கொடி அங்கே
புதர்கள் நிறைய புதரிடை மனிதர் பதராய்
போகிற போக்கில் இருந்தது நிறைய
பூப்பாய் காணுமிடமெல்லாம் கழிப்பிடம் தவிர
குடிமன்னர் குப்பியும் சூதுமாய் கொண்டாட்டம்
கொண்டதே கோலமாய் கோலாகலமாய்
குறைவேயில்லை நமக்கு இத்திருநாட்டில் !
இத்திருநாட்டில் எங்கெங்கும் மாந்த ரெல்லாம்
..ஏற்றமிகு நற்சிந்தை நெஞ்சில் கொண்டு
வித்தைகளும் வேலைகளும் கற்று மேலும்
..வீரமுடன் பலசெயல்கள் செய்து இங்கே
பத்திரமாய் அனைவ்ருமே வாழ்வ தற்கு
..பலவிதமாய்த் துணைநிற்க அடடா நன்று
நிச்சலனம் மக்க்ளவர் நன்மை என்று
..நேர்மையுடன் ராமன்வாழும் கால்ந் தானே..!