-
நான் வணங்கும் தெய்வம் - Part I
தயாரிப்பு:- சத்யநாராயணா பிக்சர்ஸ்
இயக்கம்: - K சோமு .
வெளியான தேதி - 12.04.1963
திருச்சிக்கு அருகே ஒரு சிற்றூர். அங்கே வசித்து வருகிறார்கள் ருக்மணியும் அவள் சகோதரன் கோபாலும். கோபால் பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருக்கின்றான். அவர்கள் இருவரின் மாமன் சுந்தரம். நகரில் ஒரு ஆலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ருக்மணி கோபால் இருவரும் பொருளாதார ரீதியாக சுந்தரத்தை நம்பி இருக்கின்றனர். அவனும் அவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருகின்றான். அது மட்டுமல்லாமல் சுந்தரம் ருக்மணியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஏற்கனவே பெரியோர்களால் பேசி வைக்கப்பட்டிருக்கின்றது .
சுந்தரம் வேலை செய்யும் ஆலையில் வேலை சரியாக நடக்கவில்லை. அதன் காரணமாக சம்பளம் சரியாக வருவதில்லை என்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ருக்மணிக்கு சுந்தரத்தால் சரியான நேரத்தில் பணம் அனுப்ப முடியவில்லை. சுந்தரத்தின் சக தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். சுந்தரத்தையும் அவர்கள அழைக்க சுந்தரம் நலிந்த நிலையில் இருக்கும் நிறுவனத்தை விட்டு செல்வது முறையான் செயல் அல்ல என்று மறுக்கிறான்.
இதற்கிடையில் ஊரில் ஒரு கல்யாண தரகர் ருக்மணி மற்றும் கோபாலிடம் சுந்தரம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான் என்றும் ஆகவே ருக்மணிக்கு தான் ஒரு வரன் பார்த்திருப்பதாகவும் சொல்கிறார். அவர் சொல்வதை நம்பாத கோபால் கோவை சென்று சுந்தரத்தை நேரில் சந்திக்கிறான். சுந்தரத்திடமே வேறு கல்யாணத்தைப் பற்றி கேட்க தரகர் சொன்னது பொய் என்று தெரிகிறது. தன மாமா சுந்தரத்திடம் தன் ஹால் டிக்கெட் நம்பரை சொல்லிவிட்டு ஊருக்கு திரும்புகிறான் கோபால் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வரும் தரகர் ருக்மணி கல்யாணத்தைப் பற்றி பேச, மனைவியை இழந்த ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரம் அந்த வரன் என அறியும்போது கோபால் கோவ்மடைந்து தரகரை விரட்டி விடுகிறான். ருக்மணியிடம் சுந்தரம் பற்றிய உண்மையை கூறுகிறான்.
பரீட்சை ரிசல்ட் வருகிறது. கோபால் பாஸாகி விடுகிறான். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தும் பொருளாதார சூழலால் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுக்கிறான். கோபால் பாஸாகி விட்ட செய்தியை தெரிந்துக் கொண்டு ஊருக்கு வரும் சுந்தரம் அவன் தொடர்ந்து படிக்க வேண்டும் என வற்புறுத்துகிறான். தன் அக்கா ருக்மணியை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கோபால் வற்புறுத்த சுந்தரம் ருக்மணி திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து மனைவியையும் கோபாலையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்படும் நேரத்தில் நிறுவனம் மூடப்பட்டு விட்டது எனவே வரவேண்டாம் என்று கடிதம் வந்து விடுகிறது. சற்று இடிந்துப் போனாலும் மனம் தளராமல் ஊருக்கு மூவரும் கிளம்புகிறார்கள்.
அங்கே சென்று முயற்சித்தும் சுந்தரத்திற்கு வேலை கிடைக்கவில்லை அதனால் கோபால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க சுந்தரம் ஒப்புக் கொள்ள மறுத்து ஒரு சில நகைகளை விற்று கல்லூரிக்கு பணம் கட்டுகின்றான்.
அதே ஊரில் பெரிய பணக்காரர் பிள்ளை. அவரின் ஒரே மகள் லீலா. மனைவியை இழந்த அவர் பெண்ணை பாசமாக வளர்கிறார். ஆனால் அதே நேரத்தில் பணப் திமிர் பிடித்தவர். படிப்பை பாதியில் நிறுத்திய கோபால் இவரிடம் கணக்குப் பிள்ளையாக வேலைக்கு சேர்கிறான். லீலா கோபால் மேல் விருப்பம் கொள்கிறாள் ஆனால் மனதுக்குள் விருப்பம் இருப்பினும் கோபால் அதை வெளிக்காட்டவில்லை.
குடும்பத்தை காப்பற்றுவதற்காக சுந்தரம் கூலி வேலைக்கு போகிறான். ஓரிருமுறை மூட்டை சுமந்து செல்லும்போது கோபால் எதிரே வந்துவிட அவனுக்கு தெரியாமல் ஒளிந்துக் கொள்கிறான்.
கோபாலும் லீலாவும் வீட்டில் உட்கார்ந்து சிரித்துப் பேசுவதை காணும் லீலாவின் தந்தை கோபாலை வேலையிலிருந்து தூக்கி விடுகிறார். அடுத்து என்ன செய்வது என்று மனம் உடைந்து வீட்டில் இருக்கும் கோபாலை சந்திக்கும் லீலா தன்னால்தான் அவனுக்கு வேலை போனது என்பதனால் ஆயிரம் ருபாய் அவனிடம் தருகிறாள். முதலில் வாங்க மறுக்கும் கோபாலை கட்டாயப்படுத்தி பணத்தை கொடுக்கிறாள்.
இதற்கிடையில் கோபாலுக்கு வேலை போய்விட்டது என்ற விஷயம் கேள்விப்பட்டு அவன் முதலாளி வீட்டிற்கு செல்லும் சுந்தரத்திடம் ரூபாய் ஆயிரத்தை திருடிக் கொண்டு கோபால் ஓடிவிட்டதாக முதலாளி சொல்கிறார். கோபால் திருடியிருக்க மாட்டான் என சுந்தரம் வாதிக்க கோபாலை கூட்டிக் கொண்டு ருக்மணி அங்கே வருகிறாள். முதலாளியும் அவர் உதவியாளரும் கோபாலை சோதனை செய்ய ஆயிரம் ரூபாய் அகப்படுகிறது. .
தன் மருமகன் திருடி விட்டான் என்றதும் கோவத்தை அடக்க முடியாமல் கோபாலை சுந்தரம் அடித்து எங்கேயாவது போய் விடு என விரட்டி விட மனம் வெறுத்து போகிறான் கோபால். அந்நேரம் அங்கு வரும் லீலா நடந்ததென்ன என்று விளக்க ருக்மணி சுந்தரத்திடம் அநியாயமாக என் தம்பியை அடித்து விரட்டி விட்டீர்களே, அவனைப் போய் கூட்டி வாருங்கள் என்று சொல்ல சுந்தரம் கோபாலை தேடி செல்கிறான். யாரோ ஒருவன் கோபால் சென்னைக்கு சென்றிருப்பதாக சொல்ல சுந்தரமும் சென்னை செல்கிறான்.
ஒரு முறை தெருவில் மயக்கம் போட்டு விழுந்துவிட்ட ஒரு ஏழையை சுந்தரம் ஒரு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அந்த நபருக்கு ரத்தம் கொடுக்க நேர்கிறது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுந்தரத்தை வைத்து ஒரு பரிசோதனை முயற்சி நடத்த முடிவு செய்கிறார். தான் கண்டுபிடித்த ஒரு வீர்ய மருந்தை ஊசி மூலம் சுந்தரத்திற்கு செலுத்த அவன் முகம் விகாரமாகி அவன் உடலில் அசுர பலம் ஏறுகிறது. .
அசுர பலம் என்றால் மிருங்கங்களை கூட சர்வ சாதாரணமாக தூக்கி வீசக் கூடிய பலம். சோதனை முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர் காவல்துறையின் உதவியை நாட அவர்கள் சுந்தரத்தை பிடித்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் மீண்டும் சேர்க்க மாற்று மருந்து செலுத்தி அவனை நார்மலாக்குகிறார் அந்த தலைமை மருத்துவர். தன் கண்டுபிடிப்பு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாட அந்த அளவிட முடியா ஆனந்தம் அவருக்கு கடுமையான மாரடைப்பை ஏற்படுத்த அவர் உயிர் துறக்கிறார். ஆனால் அதற்கு முன்னரே தன் சொத்துகளையும் மருத்துவமனையையும் பராமரிக்கும் பொறுப்பை தன் உதவியாளரிடம் ஒப்படைக்க அந்த உதவியாளர் சுந்தரத்தையும் அங்கே தங்கி விடுமாறு வற்புறுத்தி இருக்க வைத்துவிடுகிறான்.
சென்னையில் கோபாலை தேடி அலையும் சுந்தரத்தால் அவனை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு முறை ஒரு பூங்காவில் ஒருவர் ஏராளமான பணம் அடங்கிய பையை விட்டு சென்று விட அதை உரியவரிடம் சேர்கிறான் கோபால். ஒரு சாரிட்டி டிரஸ்ட் நடத்தும் அந்த மனிதர் கோபாலுக்கு அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு வேலை போட்டு தருகிறார்.
இதற்கிடையில் கணவன் சகோதரன் இருவரும் இல்லாத சூழலில் ருக்மணி ஒரு அரிசி மில்லில் வேலைக்கு செல்கிறாள். அவளின் சூழ்நிலையை புரிந்துக் கொள்ளும் ஆலை முதலாளி அவளை அடைய திட்டம் போடுகிறான். மாற்று சேலை கூட இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்பதை தெரிந்துக் கொண்டு புது சேலை வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கே இரவு வருகிறான். ருக்மணி ஆவேசம் கொண்டு அவனை அடித்து விரட்டுகிறாள். ஆனால் இரவு முதலாளி வருவதையும் சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி போவதையும் பார்க்கும் அக்கம் பக்கத்தினர் ருக்மணியை தவறாக பேசுகின்றனர்.
தன் மனைவி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள், எனவே அவளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சுந்தரம் சொல்ல அதன்படி மருத்துவமனையிலிருந்து ருக்மணிக்கு பணம் அனுப்புகிறார்கள். ஊரார் பழிசொல்லால் தவிக்கும் ருக்மணி அப்படிப்பட்ட ஒரு அவப்பெயரோடு தன் கணவனிடம் சேர வேண்டாம் என நினைத்து தானும் தன் குழந்தையும் தற்கொலை செய்துக் கொண்டதாக தபால்காரரிடம் சொல்லிவிட மணியார்டர் திரும்ப போய்விடுகிறது, ஆனால் மருத்துவமனையில் இது சுந்தரத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.
மனைவியையும் குழந்தையையும் தேடி ஊருக்கு வரும் சுந்தரம் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர் என்பதைக் கேட்டு நிலைக் குலைந்து போகின்றான். ஆனால் அவனை பார்த்துவிடும் ருக்மணி தூங்கிக் கொண்டிருக்கும் சுந்தரத்திற்கு தெரியாமலே குழந்தையை அவன் பக்கத்தில் போட்டு விட்டு போய் விடுகிறாள். அனாதை குழந்தை என நினைத்து சுந்தரம் தன்னுடன் எடுத்துச் சென்று வளர்கின்றான்.
குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப் போகும் ருக்மணியை தடுத்து காப்பாற்றும் ஒரு பெண்மணி தான் செய்யும் கைத்தொழிலில் ருக்மணியையும் சேர்த்துக் கொள்கிறாள். விரைவில் ருக்மணி தானே அப்பளம் தயாரிக்கும் தொழிலில் கைதேர்ந்து விடுகிறாள்.
சில வருடங்கள் கழித்து சுந்தரமும் கோபாலும் தற்செயலாய் சந்திக்க அதன் மூலம் ருக்மணி இறக்கவில்லை என்று தெரிந்து சுந்தரம் திருச்சிக்கு செல்ல அங்கே ருக்மணியை சந்திக்க அவள் குற்றமற்றவள் என்று ஆலை முதலாளியே ஒப்புக் கொள்ள தன்னிடம் வளர்பவள்தான் தன் மகள் என சுந்தரம் தெரிந்துக் கொள்ள, கோபால் லீலா இருவரும் இணைய, சுபம்!
(தொடரும்)
அன்புடன்
-
நான் வணங்கும் தெய்வம் - Part II
படத்தின் கதையைப் படித்தாலே ஏராளமான திருப்பங்களுடன் ஒரு நீண்ட நெடிய கதையாக தோன்றும். இன்றைய இயக்குனர்கள் இந்தப் படத்திலிருந்து குறைந்தது ஐந்து knot-களை எடுத்துக்கொண்டு ஐந்து படங்களை எடுத்துவிடுவார்கள். ஒரு டாக்டர் தன் ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடித்த மருந்தை ஒரு மனிதனுக்கு செலுத்தினால் அவன் மிருக பலம் பெறுவான் என்பது இந்தப் படத்தின் நடுவில் வரும் ஒரு சின்ன திருப்பம். ஆனால் அதே knot-தானே "ஐ" என்ற மூன்று மணிநேரப் படத்தை எடுக்க ஷங்கருக்கு உதவியிருக்கிறது.
[இயக்குனர் ஷங்கர் தன் பெற்றோர்கள் சிவாஜி ரசிகர்கள்.என்றும் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தன் தாய் சிவாஜி படம் பார்த்துவிட்டு வந்த அன்று தான் பிறந்ததால் அந்த படத்தில் வந்த சிவாஜி கதாபாத்திரத்தின் பெயரான சங்கர் என்பதையே தனக்கு சூட்டி விட்டார்கள் என்று விஜய் டிவியின் செவாலியே சிவாஜி விருது பெறும் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். அதனால்தான் என்னவோ நடிகர் திலகத்தின் நாம் பிறந்த மண் படத்தை இந்தியனாக்கினார். தர்மம் எங்கே படத்தை முதல்வன் ஆக்கினார். இந்த நான் வணங்கும் தெய்வம் படத்திலிருந்து இந்த கருவை எடுத்து "ஐ" படத்தை உருவாக்கியிருக்கிறார்].
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை மிக மிக இயல்பாக நடித்த படம் என்றே சொல்லலாம். தொடக்கம் முதல் இறுதி வரை ஏமாற்றம் சோகம் போன்றவற்றை மட்டுமே சுமந்து நிற்கும் ஒரு பாத்திரம். எப்போதும் ஒரு சோகம் இழையோடும் முகம் என்ற அளவில்தான் படம் முழுக்க வருவார். ஆனால் அந்த கண்கள், அவரது சுருண்ட கேசம் முகத்தில் மின்னி மறையும் பல்வேறு உணர்வுகள் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சின்ன வட்டத்திலும் நடிப்பில் தன்னால் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதை நிரூபித்திருப்பார்.
இதுவரை மோட்டார் சுந்தரம் பிள்ளை தில்லானா மற்றும் எதிரொலி போன்ற படங்களில்தான் நடிகர் திலகத்திற்கு பாடல்கள் இல்லை என்று நினைத்திருந்தோம். இந்த நான் வணங்கும் தெய்வம் படம் பார்க்கும் போதுதான் இந்த படத்திலும் அவருக்கு பாடல்கள் இல்லை என்பது தெரிந்தது. இந்தியப் படங்களில் நாயக வேடம் ஏற்கும் ஒருவருக்கு அவர் நாயகனாக நடித்த படங்களில் பாடல்கள் இல்லை என்பதிலும் நடிகர் திலகமே சாதனை புரிந்திருக்கின்றார்.
கோபாலாக வரும் T R ராமச்சந்திரனுக்குத்தான் கிட்டத்தட்ட நாயகன் போன்ற ரோல் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க வரும் ரோல் அவருடையது. அவருக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது. ராகினியுடன் காதல் காட்சிகள் போன்றவையும் இருக்கின்றன. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை காரணம் நடிகர் திலகத்தின் படமல்லவா அனைத்தும் தனக்கே வேண்டும் என பிடிவாதம் பிடிக்காமல் கதைக்கு எது தேவையோ அந்தந்த பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை தடுக்காமல் படம் நன்றாக வருவதற்கு சப்போர்ட் செய்பவரல்லவா அவர்.
பத்மினிக்கும் ஒரு சில காட்சிகளை தவிர மற்றவை அனைத்தும் சோகமான காட்சிகளே! அவரை விட ராகினி துள்ளலும் உற்சாகமுமாய் ஆடலும் பாடலுமாய் வலம் வருகிறார். ராகினியின் அப்பாவாக வரும் சாரங்கபாணி வில்லன் போன்ற பாத்திரம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் டாக்டராக வரும் நாகையா இதுவரை பார்க்காத ஒரு aggressive கேரக்டர் ஆக வருகிறார். அய்யா தெரியாதையா ராமராவ் மருத்துவமனையில் வேலை செய்பவராகவும் நடிகர் திலகத்திற்கு உதவி செய்பவராகவும் வருகிறார். அவரின் மைத்துனராக நாகேஷ். நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக நாகேஷ் இடம் பெற்றது இந்தப் படத்தில்தான் என நினைக்கிறேன்.
இசை மாமா. சொல்லிக் கொள்ளும்படியான பாடல்கள் எதுவும் இல்லை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியானவர் வசனகர்த்தா ரா. வெங்கடாசலம். வெகு வெகு இயல்பான வசனங்கள். நன்றாக எழுதியிருக்கிறார். ஏன் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரியவில்லை.
இயக்கம் கே. சோமு. நான் பெற்ற செல்வம் முதல் நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு சற்று நீண்டு போய்விட்டது. திருமணம் முடிந்து பத்மினி அமெரிக்காவிற்கு சென்றுவிட்ட பிறகு வெளியாகியிருக்கிறது. கதையின் போக்கு அல்லது திரைகதையின் போக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு எப்படி எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் குழம்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஊசி போட்டதால் உருமாறிப் போன பிறகு வரும் சில காட்சிகளில் நடிகர் திலகத்திற்காக டூப் போடப்பட்டிருக்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
புதுமையான ஒரு சிந்தனையை புகுத்திய இயக்குனர் அதை வைத்து படத்தை முன்னெடுத்து சென்றிருக்கலாம் என தோன்றுகிறது. வெளியீட்டில் ஏற்பட்ட காலதாமதம், ஒரு பக்கம் என்றால் இருவர் உள்ளம் போன்ற காவியம் வெளியாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்தப் படம் வெளியானது போன்றவை இந்தப் படத்தை மேலும் பாதித்தன. இந்தப் படம் தனது அதிகபட்ச ஓட்டத்தை வழக்கம் போல் மதுரையில் பதிவு செய்தது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறு வெளியீட்டிலும் வெளிவராத சூழல் இவையெல்லாம் சேர்ந்து இந்தப் படத்தைப் பற்றி பலருக்கும் தெரியாமல் போனது.
இப்போது நெடுந்தகட்டில் கிடைக்கும் இந்தப் படம் YouTube-லும் தரவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் எனக்கும் இதுவரை பார்க்காத ஒரு படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் எழுத வாய்ப்பும் கிடைத்தது.
அன்புடன்
-
Best wishes for the trailor function of evergreen classic of VKPB. Hope it will definitely surpass the benchmark
set by Karnan.
-
திரு rks சார் அவர்களே தங்கள் கட்டுரை மிகஅருமை.பந்தம்,பாசம்,குடும்பம் ,நல்லஉறவுகள்,அன்பு,அறிவு,பக்தி,பணிவு மற்றும் எல்லாஅம்சங்களும் நிறைந்தது நமது
நடிகர்திலகம் படங்கள் மட்டும் தான்.,அதை அனுபவிக்கும் போது தான் அதன் வெளிப்பாடு தெரியும்.
-
முரளி,
உங்களின் அணுகுமுறையில் எனக்கு பிடித்ததே நீங்கள் அவ்வளவாக பேச படாத,கொண்டாட படாத படங்களை எடுத்து அணுகும் முறை.
வெங்கடாசலம்,கொத்தமங்கலம் சுப்பு,வலம்புரி சோமநாதன்,போன்றோர் வசனங்கள் நடிகர்திலகத்தின் படங்களை மிளிர செய்துள்ளன.
நிச்சயமாக, இதில் இடம் பெற்ற சிறிய கற்பனை பகுதி, சங்கரின் படத்திற்கு inspiration ஆக இருக்க வாய்ப்புகள் உண்டு.
1963 இன் நடிகர்திலகம் படங்களின் முக்கிய ஜீவன் மாமா. இந்த படத்தில் அவருக்கு பெரிய scope இல்லை. ஆனால் யோசித்து பாருங்கள். குங்குமம்,அன்னை இல்லம்,ரத்த திலகம்,இருவர் உள்ளம் ,குலமகள் ராதை என்று ந.தி- மாமா இணைவில் எப்பேர்பட்ட magic வருடம் !!!!
எல்லாவற்றையும் மீறி சித்ரா பவுர்ணமி, நான் சொல்லும் ரகசியம் என்று தாங்கள் எழுதுபவை என் பிரத்யேக ரசனையை மீறி ,நான் உங்கள் எழுத்துக்காக ரசிக்கும் ரகம்.
-
தெனாலி ராஜன்,
நீங்கள் பூரண நலம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். சிறிது காலம், வேறெந்த சிந்தனையும்,உணர்ச்சி வச படுதலும் இன்றி ஓய்வெடுக்கவும்.காலமும்,பற்றற்ற ஓய்வும் பல அற்புதங்களை சாதிக்கும் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
வினோத்,
தங்கள் தாயார் உடல் நிலை எப்படி உள்ளது? தங்கள் உடல்-மன நிலையிலும் கவனம் செலுத்தவும்.
-
நடிகர் திலகத்தின் ''ஞான ஒளி 11.3.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் பகிர்ந்தவண்ணம் இருந்தார்கள் .நடிகர் திலகத்தின் ஸ்டைல் காவியம் ''ராஜா '' 6 வது வாரமாக தமிழகமெங்கும் வசூல் பிரளயத்துடன் ஓடிகொண்டிருந்தது . நடிகர் திலகத்தின் அழகும், ஆண்மையும் ஸ்டைலும் ஒரே சேர கலந்து விஸ்வரூபம் எடுத்த மற்றொரு காவியம் ராஜா.
ஞான ஒளி திரையிட்ட தினமே "தர்மம் எங்கே" மற்றும் "பட்டிகாடா பட்டணமா" செய்திகள் வலம் வர தொடங்கியது.
ராஜா - ஞானஒளி - பட்டிகாடா பட்டணமா மூன்று நடிகர் திலகத்தின் வண்ண மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் ஒரே நேரத்தில் [ ஜனவரி - மே ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .
"ராஜா " தமிழகம் மற்றும் இலங்கையில் மிகபெரிய வசூல் பிரளயத்தை ஏற்படுத்தியது. 100 நாட்களை கடந்தது.
இரண்டு கதா பாதிரத்தைவைத்து பின்னப்பட்ட "ஞானஒளி " பெரிய வெற்றி அடைந்தது . சென்னை பிளாச திரை அரங்கில் 25 வருட அனைத்து பட வசூலையும் முறியடித்த பெருமை கண்டது. 100 நாட்களை கடந்து ஓடியது.
ஞான ஒளி வெளிவந்து வெறும் 55 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை படம் "பட்டிக்காடா பட்டணமா" ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இரெண்டாவது படம் இருவரும் எதிர்மறையான கதாபாத்திரம்.
திரையிட்ட நாள் முதலே திரைப்படம் மிகபெரிய வெற்றியடைந்தது. தமிழகமெங்கும் 6 வாரத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கருப்பு வெள்ளை படங்களிலயே அதிகபட்ச வசூல் செய்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மதுரையில் அதற்க்கு முன் வெளிவந்த இதர நடிகர்களின் பல வண்ண படங்களின் வசூலை குறைந்த நாட்களில் முறியடித்தது. தமிழகமெங்கும் பல இடங்களில் 100 நாட்களை கடந்த பட்டிகாடா பட்டணமா 175 நாட்களையும் கடந்து 182 நாட்கள் மேல் ஓடிய மிகபெரிய வெற்றிகாவியமாக வலம் வந்தது.
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா - தினத்தந்தி - நவசக்தி - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் நடிகர் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்தது.
நடிகர் திலகம், தர்மம் எங்கே - வசந்தமாளிகை- தவப்புதல்வன் - நீதி - பாரத விலாஸ் - ராஜ ராஜ சோழன் - பொன் ஊஞ்சல் - எங்கள் தங்க ராஜா - கௌரவம் போன்ற படங்களில் கொண்டிருந்தார்
உலகெங்கிலும் உள்ள சிவாஜி மன்றங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்தது .
-
https://www.facebook.com/pages/%E0%A...79890958953687
Digitally Restored VeeraPandiya Kattabomman 2015 - Facebook. Log in For More Details
-
In my opinion the trailer release function of vpkb should be attended by any current generation hot favourite actors/directors along with veterans so that it creates more awareness about the movie among the younger generation through facebook/twitter/whatsapp
-