Quote:
‘காதல் டாட் காம்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ருதி. அடுத்தடுத்து வந்த ஒன்றிரெண்டு படங்களும் பெரிதாக பேர் வாங்கிக் கொடுக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் கவனம் திருப்பினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது, ‘தென்றல்’ தொடர் மூலம். தென்றலில் துளசி என்றகேரக்டரில் கணவனுக்கு அன்பான மனைவி, மாமியாரை எதிர்த்துப் பேசாத மருமகள், அப்பாவிடம் உயிரையே வைத்திருக்கும் மகள் என நடிப்பில் பல பரிமாணம் காட்டும் ஸ்ருதி, இப்போது விஜய் டிவியில் வரும் ‘ஆபீஸ்’ சீரியலில் ராஜி என்ற கேரக்டரிலும் வெளுத்து வாங்குகிறார். இந்த கேரக்டர் காதலனுடனான ஊடல், அதேநேரம் அப்பாவுக்கு அடங்கிய பெண் என்று இரு வேறு கோணங்களில் பிரகாசிக்கிறது.
‘‘சீரியலில் இப்படி விதவிதமான நடிப்பில் அசத்துகிறீர்கள். சினிமாவை மறுபடியும் தொடர்ந்தால் என்ன?’’
–ஸ்ருதியை கேட்டபோது...‘‘சின்னத்திரை என்னை நன்றாகவே வைத்திருக்கிறது. துளசி கேரக்டரிலும் ராஜி கேரக்டரிலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் வெளியிடங்களில் என்னை சந்திக்கும்போது காட்டும் நேசம் புதிது. குறிப்பாக பெண்கள் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே நினைக்கிறார்கள். இந்த அன்பு போதும். இனி மறந்தும் சினிமா பக்கம் எட்டிப் பார்ப்பதாக இல்லை. சூர்யா, விஜய் படங்களில் ஹீரோயினாக நடிக்க அழைப்பு வந்தாலும் கூட அந்த அழைப்புக்களை ஏற்பதாக இல்லை.’’
–ரொம்பத் தெளிவாகவே சொல்லும் ஸ்ருதி, வீட்டுக்கு ஒரே வாரிசு.