Today Dinamalar - Varamlar thinnai paguthi
கருணாநிதியை, ஒருநாள், மாலை நேரத்தில் சந்தித்தேன். ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சத்துணவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். கருணாநிதி, இதுபற்றி, எங்களிடம் கருத்து கேட்டார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்... 'இது, பெற்றோர்களை குழந்தைகளுக்காக, உழைக்கும் கடமையிலிருந்தும், எண்ணத்திலிருந்தும், பொறுப்புணர்வினை மறக்கச் செய்து, சோம்பேறித்தனத்திற்கு தள்ளக்கூடும். இருப்பினும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்கள், தங்கள் குழந்தைகள் ஒரு வேளையாவது சாப்பிடும் போது, எம்.ஜி.ஆரை வாழ்த்துவதை தவிர்க்க முடியாது...' என்றேன்.
மேலும், கருணாநிதியிடம், நம்மிடம் இருக்கிற, அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, சத்துணவு திட்டத்திற்காக தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, காசோலை பெற்று, முதல்வர் எம்.ஜி.ஆரிடம், அந்தக் காசோலையை கொடுக்கலாம். ஒரு வேளை, அதை அவர் வாங்க மறுத்தால், ஒரு முறை புயல் நிவாரண நிதிக்காக, தி.மு.க., திரட்டிய நிதியை தலைமைச் செயலராக இருந்த கார்த்திகேயனிடம் கொடுத்த போது, அவர் அதை நிராகரித்ததை, பெரிய அரசியலாக்கியதை போல், இதையும் மக்கள் முன்னால் வைத்து, பிரச்னை ஆக்கலாம்...' என்று நானும், அங்கிருந்த மற்றவர்களும் கூறினோம்.
'நல்ல கருத்து' என்று கூறிய கருணாநிதி, எங் களுக்கு விடை கொடுத்தார். சற்று நேரத்தில், வேறு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கருணாநிதியிடம் ஏதோ கூறி, அவர் மனதை மாற்றி விட்டனர். பின், கருணாநிதி, அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை.
மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம், சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல், 'சத்துணவில் பல்லி இருக்கிறது; பத்து மாணவர்கள் மயக்கம், சத்துணவை சாப்பிட்ட நூறு மாணவர்கள் வாந்தி...' என்று நையாண்டி செய்து, எழுத ஆரம்பித்தனர். இது போன்ற செயல், தி.மு.க.,வின் வெற்றிக்கு, பின்னடைவு ஏற்படுமென்று, அன்றே உணர்ந்தேன்.
அப்போது, நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை, தி.மு.க., இழந்தது. 'டிவி' முன் அமர்ந்து, தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில், வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன். 'என்ன கலாநிதி... இப்படி ஆகிவிட்டது...' என்று, என்னிடம் சொன்ன போது, நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன். பின், அவரே, 'நீ சொன்னது சரியா போச்சு. இத்தனைக்கும் காரணம், சாப்பாடுதானா...' என்றார்.
— 'அரசியல் அனுபவங்கள்' நூலில், டாக்டர்.அ.கலாநிதி.